எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

தற்போதைய தருணத்தில் இலங்கைக்கு வெளிமட்டத் தலையீடு அவசியமில்லை – ஆசிய பாதுகாப்பு மாநாட்டில் பீரிஸ்

gl.jpgஇலங் கையில் இடம்பெற்று வரும் நல்லிணக்க நடவடிக்கைகளில் வெளிநாட்டுத் தலையீட்டுக்கு எதிரான கருத்தை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் முன்வைத்திருக்கிறார்.”இந்தக் கட்டத்தில் இறைமையுள்ள அரசாங்கத்துக்கு தீய நோக்கத்துடனான எந்த சுமைகளையும் ஏற்றக்கூடாது” என்று அவர் கூறியுள்ளார்.

லண்டனை தளமாக கொண்ட கேந்திரோபாயக் கற்கைகளுக்கான சர்வதேச நிறுவனத்தால் சிங்கப்பூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 9 ஆவது ஆசிய பாதுகாப்பு மாநாட்டின் அமர்வின் போதே பீரிஸ் இதனை கூறியுள்ளார்.”கிளர்ச்சி எதிர்ப்பும் ஆட்சியை வலுப்படுத்துவதும்” என்ற கருப்பொருளில் அமைச்சர் பீரிஸ் உரையாற்றிய பின்னர் கேள்விக்கணைகள் சரமாரியாக தொடுக்கப்பட்டதாக இந்துப் பத்திரிகை குறிப்பிட்டது.

“இந்தக் கட்டத்தில் வெளிமட்ட தலையீட்டுக்கான எந்தவொரு தேவையும் இருப்பதாக நாங்கள் நினைக்கவில்லை”  என்று அவர் குறிப்பிட்டார்.”நாங்கள் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது குறைபாடுகள் தேவைகள் ஏற்பட்டால் நிச்சயமாக எமக்குத் தேவைப்படும் ஆதரவு குறித்து ஐ.நா. முறைமையிலிருந்து பெற்றுக்கொள்வது தொடர்பாக பேசாமல் இருக்க மாட்டோம்” என்று கூறியுள்ளார்.

நீதியான தீர்வை அமுல்படுத்துவது தொடர்பாக சிங்கள மக்களின் மனநிலை முழுமையாக உள்வாங்கிக்கொள்ளக்கூடிய நிலைமையில் இருப்பதாக மேலும் குறிப்பிட்ட அமைச்சர் பீரிஸ், 25 வருடங்களில் முதல் தடவையாக முயற்சிகளை மேற்கொள்ளக்கூடியதாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.அரசியலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சட்டரீதியான ஆற்றலையும் அரசாங்கம் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

மோதலுக்குப் பின்னரான தற்போதைய கட்டத்தில் தமிழ் அரசியல் கட்சிகள், அரசியல் மறுசீரமைப்புக்கான நடவடிக்கைகளுக்கு வலுவான பங்களிப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.கடந்த கால யோசனைகளுக்கு அப்பால் மேலும் விடயங்களை சேர்த்துக் கொள்ள நாங்கள் விரும்பவில்லை. மேற்குலகிலும் ஏனைய இடங்களிலுமுள்ள புலம்பெயர்ந்தவர்களுக்கு நாங்கள் விடுக்கும் செய்தியானது அவர்களும் பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதாகும். இலங்கையின் வட,கிழக்கில் தற்போது மேற்கொள்ளப்படும் உள்சார் கட்டமைப்பு திட்டங்களில் அவர்களையும் பங்கேற்குமாறு நாங்கள் அவர்களுக்கு கூறுகின்றோம்.

அரசியல் தீர்வு மற்றும் பொருளாதார மறுமலர்ச்சி தொடர்பாக உள்நாட்டு மட்டத்திலான பொறிமுறையே இப்போது மேற்கொள்ளப்படுகிறது. எந்தவொரு வெளிமட்ட அழுத்தமும் இல்லாமல் இது இடம்பெறுகிறது. “அவசரகால ஒழுங்குவிதிகளில் 70 சதவீதமானவற்றை நாம் நீக்கியுள்ளோம்” என்றும் பீரிஸ் தெரிவித்திருக்கிறார்.

முன்னாள் போராளிகளை சமூகத்துடன் மீள ஒருங்கிணைப்பது தொடர்பான யோசனையை அரசாங்கம் கொண்டிருந்தது.அவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரமாகும். 9 ஆயிரம் பேர் உடனடியாக விடுதலை செய்யப்படக்கூடியவர்களாகும். இவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய தேவை இல்லை என்பது அரசாங்கத்தின் தீர்மானமாகும்.மீதிப் பேரைப் பொறுத்தவரை அவர்களை மீண்டும் சமூகத்துடன் ஒருங்கிணைப்பது தொடர்பாக மிகவும் கவனமாக தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சித் திட்டத்தை கொண்டுள்ளோம் என்றும் பீரிஸ் தெரிவித்திருக்கிறார்.

பல்கலைக்கழகங்களுக்கு ஒரே நாளில் மாணவர்களை அனுமதிக்க தீர்மானம் – அமைச்சர் எஸ். பி. திஸாநாயக்க

பல்கலைக்கழக தெரிவுக்கான ‘இஸட் ஸ்கோர்’ வெட்டுப் புள்ளிகள் நேற்று பல்கலைக்கழக மானிய ஆணைக் குழுவினால் வெளியிடப்பட்டன. இதன்படி 22 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் சகல பல்கலைக்கழகங்களுக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இம்முறை சகல பல்கலைக்கழகங்களுக்கும் ஆகஸ்ட் மாதத்தில் ஒரே நாளில் மாணவர்களை அனுமதிக்க முடிவு செய்துள்ளதாகவும் ஆங்கிலப் பாடநெறியில் சித்திபெறும் மாணவர்களே பாடநெறிகளுக்கு சேர்க்கப்படுவர் எனவும் உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திஸாநாயக்க கூறினார்.

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவது தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு நேற்று (7) பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது :-யுத்தம் முடிவடைந்துள்ளதால் நாடு பூராவும் உள்ள சகல பல்கலைக்கழகங்களுக்கும் இம்முறை மாணவர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர்.

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் மாணவர்களுக்கு 6 மாத கால ஆங்கில பயிற்சி வழங்கப்படும். ஆங்கில பரீட்சையில் தோற்று பவர்களே பல்கலைக்கழக பாட நெறிகளுக்கு அனுமதிக்கப்படுவர். பல்கலைக்கழகங்களில் இருந்து பகிடிவதையை முற்றாக ஒழிக்க சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இதற்கு சகல தரப்பினரும் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

பல்கலைக்கழகங்களின் வசதிகளை மேம்படுத்துவதற்கு தேவையான நிதியை வழங்குவதற்கு முன்னுரிமை வழங்குமாறு ஜனாதிபதி திறை சேரிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

பல்கலைக்கழகங்களில் காணப் படும் பாடநெறிகளையும் மாற்ற உள்ளோம். மாணவர்களின் வருகை கட்டாயம் 80 வீதமாக இருக்க வேண்டும். இது குறித்து கவனம் செலுத்தப்படும். ஒழுங்காக பரீட்சை எழுதாதவர்கள் சித்தியடைய தவறியவர்களாகவே கருதப்படுவர்.

இம்முறை மருத்துவ பீடத்துக்கு 1147 பேரும் பொறியியல் பீடத்துக்கு 1223 பேரும் முகாமைத்துவ பீடத்துக்கு 3270 பேரும் கலைப் பிரிவுக்கு 3802 பேரும் தெரிவு செய்யப்படுவர். யாழ் பல்கலைக்கழகத்துக்கு 100 மருத்துவ மாணவர்கள் தெற்கிலிருந்து அனுப் பப்படுவர் என்றார்.

IIFA சர்வதேச இந்திய திரைப்பட விழா வெற்றிகரமாக நடந்து முடிந்தது. எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுக்கு அரசு மறுப்பு

iifa-awards-logo.jpgபொலிவுட் சினிமாவின் விமரிசையானதும் பாரியதுமான விருது வழங்கல் விழா என கருதப்படும் ஐஃபா எனப்படும் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கல் விழா இலங்கையில் வெற்றிகர மாக நடந்து முடிந்துள்ளது.

இலங்கையில் இந்த விழா சிறப்பாக நடப்பதை தடுக்கும் நோக்கில் இந்தியாவிலிருந்து பிரபல சினிமா நட்சத்திரங்கள் இங்கு வருவதை தடுப்பதற்கு முயற்சித்த பயங்கர வாத நிகழ்வாக இருந்து வந்த பிரிவினை வாத சக்திகளுக்கு இது மோசமான தோல்வியை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை இந்த விழா தொடர்பாக இலங்கையின் பிரதான எதிர்க்கட்சி கூறிய மோசமான குற்றச்சாட்டுகளை அரசாங்கம் வன்மையாக நிராகரிக்கிறது என்று அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடக அறிக்கையொன்று கூறுகிறது.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட் டுள்ளதாவது,

ஐஃபா விருது வழங்கும் நிகழ்வினை இலங்கையில் நடத்துவதற்கு அந்த விழா ஏற்பாட்டாளர்கள் கடந்த மார்ச் 23ஆம் திகதியே தீர்மானித்தனர். அச்சமயம் இவ் விழாவை தமது நாட்டில் நடத்துமாறு தென் ஆபிரிக்கா, சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா உள்ளிட்ட பல நாடுகள் விண்ணப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

விழாவை நடத்த மிகவும் சிறந்த நாடு இலங்கை என விழா ஏற்பாட்டுக் குழு தீர்மானித்ததும் 2 மாத கால குறுகிய காலத்தில் விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் இலங்கை செய்து முடித்தது. இதன் மூலம் இலங்கையின் பொருளாதார, சுற்றுலா, வர்த்தக துறைகளுடன் உள்ளூர் சினிமாத் துறையும் பல நன்மைகளை பெற முடிந்தது. ஐஃபா விழா போன்ற சர்வதேச மட்ட விழாவை நடத்துவதற்காக சுகததாச உள்ளக விளையாட்டரங்கு நவீனமயப்படுத்தப்பட்டது.

இந்த விழா நடைபெற்றபோது ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும் ஒரு முறை இலங்கையைப் பற்றிய செய்தியொன்று பிரசாரம் செய்யப்பட்டது. இந்த செய்தியினால் இலங்கையின் அபிமானமும் தற்போதைய சமாதான சூழலையும் அடங்கிய விழாவின் முழுமையான ஒளிப்பதிவு எதிர்வரும் 11ஆம் திகதி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்தியாவில் உள்ள 600 மில்லியன் பேர் உட்பட. உலகளாவிய ரீதியில் 130 நாடுகளில் உள்ள மக்கள் இந்த ஒளிபரப்பினை பார்த்து ரசிப்பார்கள்.

மூன்று தசாப்த கால யுத்தத்துக்கு பின்னர் சமாதான சூழலில் இலங்கையில் சுற்றுலாப் பயணம் மேற்கொள்ள உகந்த இடம் என்பதை முன்னணி நாடுகள் பல கூறிவந்துள்ளன. இந்நிலையில் இலங்கை தொடர்பான இந்த செய்தி 120 நாடுகளில் இலவசமாக பிரசாரம் செய்ய முடிந்தமை இலங்கைக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பமாகும்.

சுற்றுலா செயற்பாடுகள் தொடர்பாக இலங்கையினால் இவ்வாறான பிரசாரம் ஒன்றை மேற்கொள்வதானால் குறைந்த பட்சம் 4500 கோடி ரூபாவை விட அதிகமாக செலவிட வேண்டியிருந்திருக்கும்.

அத்துடன் ஐஃபா விழா நடைபெற்ற அதேவேளை ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ தலைமையில் கொழும்பில் இடம் பெற்ற வர்த்தக சந்திப்பு மிகவும் வெற்றிகரமாக அமைந்துள்ளது. இது இலங்கையின் முதலீடு மற்றும் வர்த்தக வாய்ப்புகளை விஸ்தரித்துள்ளதுடன் பல தொழில் வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது.

உலகில் இன்று பல நாடுகள் சர்வதேச விளையாட்டு மற்றும் விழா நிகழ்வுகளை அல்லது மாநாடுகளை தமது நாடுகளில் நடத்துவதற்கு முன்வருவது அதன் மூலம் தமது நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்து கொள்ளும் நோக்கத்தினாலாகும். குறிப்பாக சொல்வதானால் 1976ஆம் ஆண்டு அணிசேரா நாடுகளின் உச்சிமாநாட்டை இலங்கையில் நடத்தியதால்தான் சர்வதேச மாநாட்டு மண்டபம் எமக்கு கிடைத்தது.

அதேபோன்று பொதுநலவாய அமைப்பு நாடுகளின் உச்சிமாநாட்டை 2013 இல் இலங்கையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டமை இலங்கையில் அமைதியான சூழல் ஏற்பட்டுள்ளதன் காரணமாகவேயாகும். 11ஆவது ஐஃபா விருது வழங்கும் விழா இலங்கையில் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதையடுத்து அடுத்த விழாவை கனடாவில் நடத்த ஏற்பாட்டாளர்கள் இப்போதே தீர்மானித்துள்ளதாக அரச தகவல் திணைக்களத்தின் ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் அகில இலங்கை தமிழ் மொழித் தினப் போட்டி

2009ம் ஆண்டிற்கான அகில இலங்கை தமிழ் மொழித் தின தேசிய மட்டப் போட்டிகள் இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளன.

இப்போட்டிகள் எதிர்வரும் ஜூன் மாதம் 19ம், 20ம் திகதிகளில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி ஆகிய இரு பாடசாலைகளில் நடாத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட் டுள்ளன. இப்போட்டிகள் தொடர்பான அறிவுறுத்தல்கள் போட்டியாளர்களுக்கும் குறித்த பாடசாலை அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இலங்கை அதிகாரிகளுக்கு ஜப்பான் புலமைப் பரிசில்

இலங்கை அரசின் பொதுத்துறையைச் சேர்ந்த 60 இளம் அதிகாரிகளுக்கு ஜப்பானிய அரசாங்கம் ஐந்து ஆண்டு புலமைப்பரிசில் திட்டமொன்றை அமுல் செய்யவுள்ளது.  இதற்காக இரண்டாயிரத்து 290 இலட்சம் ஜப்பானிய யென் நிதியை நன்கொடையாக ஜப்பான் ஒதக்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நான்கு அமைச்சுக்களில் இருந்து முதல் தொகுதியாக 15 இளம் அதிகாரிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இரண்டு வருடங்களுக்கு ஜப்பானில் முதுமாணிப் பட்டப்படிப்பினை ஜப்பான் சர்வதேச பல்கலைக்கழகம், கிறிஸ்ரியன் பல்கலைக்கழகம், ஹிரோசிமா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மேற்கொள்வர். பொதுக்கொள்கை, பொது நிதி, பொது நிர்வாகம், பிராந்திய அபிவிருத்தி, வறுமை ஒழிப்பு, பொருளாதார அபிவிருத்தி ஆகிய துறைகளில் இந்த முதுமாணிப் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

வவனியா நகரில் உள்ள விடுதி ஒன்று ‘சீல்’ வைக்கப்பட்டது!

வவுனியா நகரிலுள்ள தனியார் விடுதி ஒன்று நேற்று நீதிமன்ற உத்தரவின் பேரில் மூடப்பட்டுள்ளது. இவ்விடுதியில் விபசார நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தெரியவந்ததையடுத்தே மூடப்பட்டது. இவ்விடுதியில் விபசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக வவுனியா மாவட்ட நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து நீதித்துறை உடனடியாக நடவடிக்கையில் இறங்கியது. இதன்படி அவ்விடுதி உரிமையாளர் உட்பட அங்கு பணிபுரிந்த அனைவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு. விடுதி ‘சீல்’ வைத்து மூடப்பட்டது.

இறுதி யுத்தத்தில் வன்னியில் பணிபுரிந்த மருத்துவர் ஒருவர் கொழும்பில் கைது!

வன்னியில் இறுதி யுத்தத்தின் போது முல்லைத்தீவில் பணியாற்றிய மருத்துவர் கைலைநாதன் சுதர்சன் என்பவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் (TID) இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இறுதி யுத்தத்தின் போது மக்களோடு மக்களாக முள்ளிவாய்க்காலில் இருந்து வெளியேறிய அவர் நீண்ட நாட்களாக  தன்னை ஒரு மருத்தவர் என வெளிக்காட்டாது நிவாரண முகாமிலிருந்து வெளியேறி தனது குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்று, அங்கிருந்து இந்தியா சென்றிருந்தார்.

அங்கு தனது மேற்படிப்பு தொடர்பான விடயங்களை கவனித்திருந்த வேளை, ‘கியூ’ பிரிவினருக்கு இவர் ஒரு மருத்துவர் என்றும், இறுதி யுத்தம் வரை மருத்துவராக பணியாற்றியவர் எனவும் தகவல் கிடைத்தது.  இதனையடுத்து இவரிடம் சென்று பல தடவைகள் விசாரணை நடத்திய ‘கியூ’பிரிவுப் பொலிஸார் நாட்டை விட்டு வெளியேறுமாறு கடுமையான அழுத்தங்களைக் கொடுத்தனர். 

இந்நிலையில் ஏற்கனவே இரண்டு தடவைகள் சிங்கப்பூர் சென்றிருந்த அவர் மீண்டும் தமிழகத்திலிருந்து குடும்பத்துடன்  சிங்கப்பூர் சென்றார். எனினும், ‘கியூ’ பிரிவு பொலிஸார் சிங்கப்பூர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து விமான நிலையத்தில் வைத்தே அவரையும் அவரது குடும்பத்தினரையும் சிங்கப்பூர் பொலிஸார் இலங்கைக்கு நாடு கடத்தினர். பின்னர் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினருக்கு சிங்கப்பூர் புலனாய்வுப்பிரிவினர் வழங்கிய தகவலையடுத்து  கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடுப்புப்பிரிவின் இரண்டாம் மாடியில் விசாரணகளுக்குள்ளாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் இந்தியா விஜயம்

ep-cm.jpgஇந்திய உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிரூபமா ராவின் அழைப்பின் பேரில் இவ்விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் டில்லி விஜயத்தின்போது 5 உடன்படிக்கைகளில் கைச்சாத்திட ஏற்பாடு

Mahinda Rajapaksaஇந்தியா விற்கு நாளை செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இராஜாங்க விஜயத்தை மேற்கொள்ளும் தருணத்தில் இரு நாடுகளுக்குமிடையில் குறைந்தது 5 உடன்படிக்கைகளில் கைச்சாத்திடப்படுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இரு நாடுகளுக்குமிடையில் இருதரப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக 11 உடன்படிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் ஜனாதிபதியின் விஜயத்தின் போது 5 உடன்படிக்கைகளில் கைச்சாத்திடப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏனைய 6 உடன்படிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. அவை இந்த வருட இறுதியில்கைச்சாத்திடப்படக்கூடும்.

செவ்வாய் மாலை புதுடில்லியை ஜனாதிபதி சென்றடைவார். எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடு திரும்பவுள்ளார். புதன்கிழமை இந்திய ஜனாதிபதி மாளிகையின் முன்றிலில் அரச மரியாதையுடனான வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. இந்த வைபவத்தில் இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சிரேஷ்ட அமைச்சர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். அதன் பின்னர் ஜனாதிபதி ராஜபக்ஷ ராஜ்காட்டில் மகாத்மா காந்தியின் சமாதிக்கு அஞ்சலி செலுத்துவார்.

ஜனாதிபதியும் அவரின் தூதுக் குழுவினரும் தங்கியிருக்கும் ஐ.ரி.சி. மயூரியா ஹோட்டலில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஜனாதிபதியை சந்திப்பார். ஹைதராபாத் இல்லத்தில் இந்தியப் பிரதமருக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான பேச்சுவார்த்தைகள் இடம்பெறும். புதன்கிழமை பிற்பகல் ஜனாதிபதியை காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் சிதம்பரம் உட்பட முக்கியஸ்தர்கள் சந்திக்கவுள்ளனர். ஜனாதிபதியுடன் அவரின் பாரியார் சிரந்தி ராஜபக்ஷ,வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் சஜித்வால் குணவர்தன மற்றும் சிலர் இந்த விஜயத்தில் இடம்பெற்றுள்ளனர். இதேவேளை, வெளிவிவகாரச் செயலாளர் ரொமேஷ் ஜெயசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் ஞாயிறு இரவு டில்லிக்கு பயணமாகவிருந்தனர்.

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான ஒத்துழைப்பு உடன்படிக்கை, தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை இடம் மாற்றுவதற்கான உடன்படிக்கை, குற்றவிடயங்களில் பரஸ்பர சட்ட உதவியைப் பெற்றுக்கொள்வது தொடர்பான உடன்படிக்கை, கலாசார ஒத்துழைப்புக்கான உடன்படிக்கை, இலங்கையில் சிறிய அபிவிருத்தித் திட்டங்களுக்கான இந்தியாவின் உதவி தொடர்பான உடன்படிக்கை ஆகியவற்றிலேயே ஜனாதிபதி விஜயத்தில் கைச்சாத்திடப்படவிருப்பதாக ஆங்கிலப் பத்திரிகையொன்று நேற்று தெரிவித்தது.

இதேவேளை, தலைமன்னாருக்கும் தூத்துக்குடிக்குமிடையிலும் மற்றும் கொச்சிக்குமிடையிலான கப்பல் போக்குவரத்துத் தொடர்பான உடன்படிக்கை மேற்கொள்ளப்படுவதில் மேலும் காலமெடுக்குமெனத் தெரிவிக்கப்படுகிறது.

இதே காலநிலை தொடரும்; மழை அதிகரிக்கும்

தற்போதைய மழைக்காலநிலை அடுத்துவரும் சில தினங்களுக்கு நீடிப்பதுடன், மழையும் அதிகரிக் கும் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் நந்தலால் பீரிஸ் நேற்றுத் தெரிவித்தார்.

நேற்றுக்காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சி பதிவுப்படி அதிகூடிய மழைவீழ்ச்சி 90.7 மி. மீ. கினிகத்தேனவில் பதிவானதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய காலநிலை காரணமாக மேல், தென், சப்ரகமுவ, மத்திய ஆகிய மாகாணங்களில் இடையிடையே மழை பெய்யும்.