எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

தேசம்நெற் ஈழ நண்பர்கள் திரைக்கலை ஒன்றியத்தின் 7 வது திரையிடல் நிகழ்வில் 5 குறும்படக் காட்சிகள்

Film_Screeningதேசம் நெற் இணையத்தளமும் ஈழ நண்பர்கள் திரைக்கலை ஒன்றியமும் இணைந்து வழங்கும் 7வது திரையிடல் நிகழ்வு சேர்பிற்றன் சறேயில் இடம்பெறவுள்ளது. யூன் 12 மாலை ஆறு மணிக்கு ஆரம்பமாகவுள்ள இத்திரையிடல் நிகழ்வில் சதா பிரணவனின் இடி முழக்கம், பொன் சுதாவின் நடந்த கதை, பிரேமா சந்தானகுலத்தின் நோய் வீதி, ஜ வி ஜனாவின் மூன்று இரவு நாலு பகல், பாஸ்கரின் நதி ஆகிய படங்கள் திரையிடப்பட உள்ளது. இத்திரைப்படங்கள் இந்தியாவிலும் ஜரோப்பிய திரைப்பட விழாக்களிலும் பரிசில்கள் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

2008 முதல் தேசம்நெற்றும் ஈழ நண்பர்கள் திரைப்படக் கழகமும் ஏற்பாடு செய்துவரும் குறும் திரைப்பட முயற்சிகளின் 4வது காட்சி நிகழ்வாக இது அமைகிறது. புலம்பெயர் சினிமாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்பட்டு வரும் மற்றுமொரு குறுந்திரைப்படக் காட்சி இதுவாகும்.

தேசம்நெற் ஈழநண்பர்கள் திரைப்படக் கழகத்தின் காட்சியிடலில் உங்கள் படைப்புகளையும் காட்சிப்படுத்தி கலந்துரையாடலை மேற்கொள்ள விரும்புபவர்கள் தேசம்நெற்றுடன் தொடர்பு கொள்ளவும்.

7வது திரையிடல் நிகழ்வு:
     காலம்: 12.06.2010
     நேரம்:  மாலை 6 மணி
     இடம்: The Cornerhouse, 116 Douglas Road, Surbiton, Surrey.

    படத்தின் பெயர்                              நேர அளவு         இயக்குனர்

1) இடி முழக்கம்                                  21 நிமிடம்            சதா பிரணவன்

2) நடந்த கதை                                    23 நிமிடம்            பொன் சுதா

3) நோய் வீதி                                       20 நிமிடம்            பிரேமா சந்தானகுலம்

4) மூன்று இரவு – நாலு பகல்     21 நிமிடம்            ஜ.வி. ஜனா

5) நதி                                                         8 நிமிடம்            பாஸ்கர்

படங்கள் குறித்த நேரத்திற்கு ஆரம்பிக்கப் படும். சிற்றுண்டி- பானம் அத்துடன் இராப் போசனமும் வழங்கப்படும்.

கடந்த திரையிடல் நிகழ்வில் இலாபமாக வந்த £50.00  மன்னாரில் உள்ள பார்வை குறைந்த சிறுவர்களுக்கு கண்ணாடி வழங்குவதற்காக அனுப்பி வைத்துள்ளோம்.

அன்பளிப்பு: £5.00  தனிநபர். சிறுவர்கள் அனுமதி இலவசம்.

தொடர்புகளுக்கு: ஆர் புதியவன்     07988  589 923
                                     த ஜெயபாலன்    07800  596 786

இரவு 9.30 முதல் மு.ப. 9.30 வரை பயன்படுத்தினால் சலுகை – சட்டவிரோத மின்பாவனைக்கு கடும் தண்டனை

9chnpika.jpgஅதிக பயன்பாடு குறைந்த நேரங்களில் மின்சாரத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு சலுகைக் கட்டணம் வழங்கவும் மின்சாரப் பட்டியலை முழுமையாக ஒரு மாதத்துள் செலுத்துபவர்களுக்கும் சலுகை வழங்கவும் மின்சார சபை தீர்மானித்துள்ளதாக மின்சக்தி அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

அதிக மின்பாவனை குறைந்த நேரங்களான இரவு 9.30 மணி முதல் காலை 9.30 மணி வரையிலான காலப் பகுதியில் மின்பாவனையை மேற்கொள் ளுமாறு தொழிற்சாலைகளிடமும் கோரவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். மின்சக்தி அமைச்சில் நேற்று விசேட செய்தியாளர் மாநாடு நடைபெற்ற போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கையில் சுமார் 4 மில்லியன் பேர் மின்சார சபைக்கு வாடிக்கையாள ர்களாகவுள்ளனர். ஒரு கோடி மக்கள் மின்சாரத்தை பாவிக்கின்றனர். சாதாரணமாக வீட்டுப் பாவனைகள் இரவு 8.30க்குப் பின்னர் மின் பாவனை குறைவடைகின்றன. குறிப்பிட்ட மின்பாவனை குறைவான காலப் பகுதிக்குள் நீர் வழங்கல் சபை நீர்வழங்கலுக்காக மின்சாரத்தை பயன்படுத்துமேயானால் அவர்களுக்கும் மின் கட்டணத்தில் சலுகை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். தொழிற்சாலைகளில் அதிக பயன்பாடு நேரங்களில் மின்சாரத்தைப் பாவிப்பார்களேயானால் மின் கட்டணத்தை அதிகரிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

இலங்கையில் கூடுதலாக மின் பாவனையை மேற்கொள்ளும் தேசிய நீர் விநியோக சபை, ஹோட்டல்கள் மற்றும் குளிர்சாதனம் போன்ற வகைகளுக்கு அதிக மின்சாரம் பயன்படுத்தப்படு கின்றது. இவை அதிக பயன்பாடு நேரங் களில் மின்சாரப் பாவனையை தவிர்த்து அதிக பாவனையற்ற நேரங்களில் பயன் படுத்துமாறும் இலங்கை மின்சார சபை அறிவுறுத்தவும் உள்ளது. 2012ம் ஆண்டில் நாட்டில் உள்ள சகல வீட்டுப் பாவனையாளருக்கும் மின்சாரத்தை வழங்குவதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மின்சார பட்டியலிலுள்ள கட்டணத்தை 2 1/2 மாதத்துக்குப் பின்பே பாவனையாளர்கள் செலுத்துகின்றனர். ஒரு மாதத்துக்குள் பட்டியலிலுள்ள தொகையை முற்றாக செலுத்துபவருக்கும் சலுகையொன்றை வழங்கத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை கிழக்கு மாகாணத்தில் சட்டவிரோதமாக மின்சாரத்தைப் பெற்ற 293 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களிடமிருந்து 4.5 மில்லியன் ரூபா தண்டப் பணமாக அறவிடப் பட்டுள்ளதாகவும் மின்சார சபையின் தலைவர் வித்தியாகொடை தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களில் சட்டவிரோத மின் பாவனையாளர்கள் கண்டு பிடிக்கப் பட்டனர். சட்டவிரோத மின் பாவனையாளர்களை கண்டறிந்து தண்டப் பணம் அறவிடும் திட்டம் எதிர்வரும் ஜுலை மாதம் 10ஆம் திகதி நாடு முழுவதும் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் மின்சார சபையின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த ஜூன் (1)ம் திகதி ஜூன் (3) திகதி வரை காலப் பகுதியிலேயே மின்சார சபையின் திடீர் சோதனைக் குழுவொன்று மேற்கொண்ட நட வடிக்கையின் பேரிலேயே இவை கண்டுபிடிக்கப்பட்டன. பொலிஸாரின் அனுசரணையுடன் சம்பந்தப்பட்டோருக்கு, எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டே உடனுக்கு உடன் தண்டப் பணம் செலுத்தக்கூடிய வகையில் இத்திட்டம் அமுல்படுத்தப்பட்டது.

அவர் மேலும் தகவல் தருகையில் :- கிளிநொச்சியிலிருந்து சுன்னாகம் வரை செல்லக்கூடிய மின்சாரத் திட்டமொன்று அடுத்த மாதம் அமுல்படுத்துவதற்கு வெளிநாட்டு நன்கொடை நிறுவனமொன்றுடன் ஒப்பந்தம் கைச்சாத் திடப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கடன் அட்டை பாவனைமுறை தொடர்பில் சட்டத் திருத்தம் – மோசடியைத் தடுக்க திட்டம்

கடன் அட்டை (கிரடிட் காட்) மோசடிகளைத் தடுப்பதற்கு காத்திரமான செயற்திட்டமொன்றினை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ளது.

இதற்கிணங்க கடன் அட்டைப் பாவனைமுறை தொடர்பில் திருத்தம் கொண்டு வரப்படவுள்ளதுடன் அவ்விபரங்களை வர்த்தமானியில் வெளியிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பதில் பேச்சாளர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் விளக்கமளித்த அமைச்சர்; கடனட்டை மோசடிகளைத் தடுக்கும் ஒரு அம்சமாக கடனட்டை சேவை வழங்குநர்கள் தமது விபரங்களை மத்திய வங்கியில் பதிவது கண்டிப்பானதாக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையே ஏழு உடன்படிக்கைகள் நேற்று கைச்சாத்து

man-raja.jpgஇந்தியா வுக்கும் இலங்கைக்குமிடையே பொருளாதாரம், சமூகத்துறை, நீதித்துறை, மகளிர் விவகாரம், மின்சாரம், போக்குவரத்து ஆகிய துறைகளுடன் சம்பந்தப்பட்ட ஏழு உடன்படிக்கைகள் நேற்று கைச்சாத்திடப்பட்டன.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு புதுடில்லி சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கும் நேற்று (09) மாலை ஹைதராபாத்திலுள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து உரையாடினார். இந்தச் சந்திப்பின் போதே மேற்படி உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.

சிறுகைத்தொழில் தொடர்பாக ஏற்கனவே இருந்துவந்த உடன்படிக்கையை புதுப்பிக்கும் புரிந்துணர்வு உடன்படிக்கை முதலில் கைச்சாத்தானது.

இலங்கை வெளியுறவு அலுவல்கள் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா ஆகியோர் இதில் கைச்சாத்திட்டனர். தண்டனை விதிக்கப்பட்ட சிறைக் கைதிகளை பரிமாறிக் கொள்ளும் புரிந்துணர்வு உடன்படிக்கை மற்றும் நீதித்துறை உதவிகள் தொடர்பான உடன்படிக்கை ஆகியவற்றில் இலங்கை யின் சார்பாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் இந்தியாவின் உள் துறை அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஸ்ரீ. ஜீ. கே. பிள்ளையும் கைச்சாத்திட்டனர்.

மகளிர் வர்த்தக நிலையம் மற்றும் சமூக ஆய்வு நிலையம் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை, இரு நாடுகளுக்கு மிடையிலான கலாசார பரிமாற்றம் தொடர்பான உடன்படிக்கை, மற்றும் இந்தோ – லங்கா மின்சார கட்டமைப்பு தொடர்பான சாத்திய ஆய்வு உடன்படிக்கை ஆகியவற்றில் இலங்கையின் சார்பில் இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் பிரசாத் காரியவசமும் இந்தியாவின் சார்பில் வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவும் கைச்சாத் திட்டனர்.

மன்னாரில் இருந்து மடு வரையிலான ரயில் பாதைக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் இலங்கையின் சார்பாக ரயில்வே பொது முகாமையாளர் பி. பி. விஜேசேகரவும் இந்தியாவின் சார்பில் ரயில்வே பாதை முகாமைத்துவ பணிப்பாளர் ஸ்ரீமோஹன் திவாரியும் கைச்சாத்திட்டனர்.

மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு உணவு நிவாரணப் பொருட்கள் நிறுத்தப்பட்டுள்ளது,

வவுனியா அகதி முகாம்களிலிருந்து வெளியேறிய மக்களுக்கான உணவு நிவாரணம் நிறுத்தப்பட்டுள்ளது. முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்ட  மக்களுக்கு ஆறு மாத காலமே  உணவு நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு மீள்குடியேற்றப்பட்டு ஆறு மாதங்கள் கடந்த நிலையிலுள்ள மக்களுக்கே இந் நிவாரணம் நிறுத்தப்பட்டுள்ளது.

வவனியா மற்றும், யாழ்.குடாநாட்டிலுள்ள அகதி முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்ட மக்கள் யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் தங்கள் உறவினர் நண்பர்கள் வீடுகளில் இன்னமும் வசித்து வருகின்றனர். இவ்வாறானவர்களில் முல்லைத்தீவுப் பகுதிகளில் இன்னமும் மீள் குடியேற்றப்படாதவர்களுக்கு கிளிநொச்சிப் பகுதிகளில்  அழிவடைந்த. சேதமுற்ற தங்கள் வீடுகளை மீளமைத்துக்கொள்ள முடியாதவர்களும் அடங்குகின்றனர்.

ஆறுமாத காலத்திற்குள் அம்மக்களுக்கான இழப்பீடுகள் வழங்கப்பட்டு அவர்களுக்கான தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் எனவும், இதனடிப்படையில் ஆறுமாத காலத்திற்குப் பின்னர் அவர்களுக்கான  உணவு நிவாரணம் நிறுத்தப்படும் எனவும் முன்னர் வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தன.

ஆனால், எவ்வித இழப்பீடுகளோ, தொழில்களுக்கான உதவிகளோ அம்மக்களுக்கு வழங்கப்படவில்லை. இந்நிலையில், உணவு நிவாரண உதவியிலேயே அவர்கள் பெரிதும் தங்கியிருந்தனர். தற்போது இந்நிவாரணம் நிறுத்தபட்ட நிலையில் பாதிக்கப்பட்ட இம்மக்கள் மேலும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.

யாழ்.மாவட்டத்தின் கல்விநிலையை மேம்படுத்த ‘அமெரிக்கன் கோனர்’ அமைக்கப்படும்! – அமெரிக்கத் தூதுவர்

Patricia_A_Butenisயாழ்ப்பாண மாவட்டத்தில் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்த ‘அமெரிக்கன் கோனர்’ எனப்படும் அமெரிக்க நிறுவனம் விரைவில் அமைக்கப்படும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றிசியா புட்டெனிஸ் தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக நேற்று (09-06-2010) யாழ். வந்துள்ள இவர் யாழ். அரச அதிபர் கே.கணேஸிடம் இதனைத் தெரிவித்தார். நேற்று அமெரிக்கத் தூதுவர் யாழ். அரச அதிபரை அவரது யாழ். செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். 

Ganesh_GA_Jaffnaஇது குறித்து அரசாங்க அதிபர் கே.கணேஸ் தெரிவிக்கையில்: மீள்குடியேற்றம், அபிவிருத்தி நடவடிக்கைகளின் முன்னேற்றம், யாழ்.நிலவரங்கள், யாழ்.பல்கலைக்கழகச் செயற்பாடுகள், உட்பட பலவேறு விடயங்கள் இச்சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாகவும், யாழ்ப்பாணத்தில் கல்வி நடவடிக்கைளை மேம்படுத்தும் வகையில் அமெரிக்க நிலையம் (அமெரிக்கன் கோனர்) ஒன்றை விரைவில் ஆரம்பிப்பது தொடர்பாக ஆராயப்பட்டதாகவும் கூறினார்.

இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் பற்றிசியா புட்டெனிஸ் நேற்று மாலை யாழ்ப்பாணம் பெரிய பள்ளிவாசலுக்குச் சென்று முஸ்லிம் மக்களின் நிலமைகள் தொடர்பாக ஆராய்ந்தார். தொடர்ந்து யாழ். மறை மாவட்ட ஆயர் வண. தோமஸ் சௌத்தரநாயகம் அடிகளாரை சந்தித்து கலந்துரையாடினார். இன்று யாழ்.மாவட்டத்தில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பகுதிகளை பார்வையிடுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பெண்ணின் கையைத் துண்டித்து அவரது நகைகள் கொள்ளை. மீள்குடியமர்த்தப்பட்டுள்ள நெடுங்கேணியில் சம்பவம்!

நெடுங்கேணியில் மீளக்குடியமர்ந்த பெண்ணொருவரின் கைகள் வெட்டித் துண்டிக்கப்பட்டு அவரது நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. நேற்றிரவு (Jun 09 2010) இந்த பீதியூட்டும் சம்பவம் நடைபெற்றுள்ளது. அண்மையில் மீள் குடியமர்த்தப்பட்ட நெடுங்கேணிப் பகுதியில் வசிக்கும் பெண்ணொருவருக்கே இந்நிலை ஏற்பட்டது.

சொந்த இடத்தில் மீளக்குடியமர்ந்த இப்பெண்ணும் அவரது கணவரும் தங்கள் பாதுகாப்பிற்காக அயலில் தெரிந்த ஒருவரின் விட்டிற்குச் சென்று தங்குவது வழக்கம். சம்பவதினம் அவ்வாறு தமது கொட்டிலில் இருந்து சற்றுத் தொலைவிலிருந்த வீட்டிற்கு பாய், தலையணையுடன் சென்ற போது பற்றைகள் மிகுந்த ஓரிடத்தில் அவர்களை வழிமறித்த சிலர் பெண்ணின் கையிலிருந்த மோதிரத்தையும், அவர் அணிந்திருந்த காப்புகளையும் கழற்ற முற்பட்டனர். பெண்ணும், அவரது கணவரும் கூக்குரலிட்ட போது அப்பெண்ணின் விரல்களை கத்தியால் வெட்டித் துண்டித்து மோதிரத்தை அபகரித்ததுடன், அவரது கைகளை முழங்கைக்கு கிழாக வெட்டி காப்புகளையும் அபகரித்துள்ளனர். அதே சமயம் அப்பெண்ணின் கணவர் மீது துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டது. அதனால், அவரும் காயமடைந்துள்ளார். அப்பெண் அணிந்திரந்த நகைகளுடன் தலையணைக்குள் மறைவாக வைத்து எடுத்துச்செல்லப்பட்ட நகைகளும் கொள்ளையர்களால் பறித்துச் செல்லப்பட்டன.

நெடுங்கேணி நாவலர் வீதியைச் சேர்ந்த ராசலிங்கம் விக்னேஸ்வரி, வயது 52. அவரது கணவர் ராசலிங்கம் வயது 64 ஆகியோருக்கே இந்நிலை ஏற்பட்டது. இவ்விருவரும் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப் பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதிகளில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, கொள்ளையர்கள் துப்பாக்கிப்பிரயோகம் செய்ததான தகவல் பல சந்தேகங்களையும் தோற்றுவித்துள்ளது.

இதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன்பு விசுவமடுவில் இரு குடும்பப் பெண்கள் மீது இராணுவத்தினர் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டமை நிரூபிக்கப் படுமானால், சந்தேக நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு இது குறித்து விடுத்துள்ள அறிக்கையில் இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் எஸ்.ஏ.பி.பி. சமரசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் அ.மயூரனின் “இராமாயணத்தின் வரலாற்று நம்பகத்தன்மை” நூல் வெளியீட்டு விழா

Mayooran_Bookகடந்த 05.06.2010. சனிக்கிழமை லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலய மண்டபத்தில் இராமாயணத்தின் வரலாற்று நம்பகத்தன்மை என்ற நூலின் வெளியீட்டு விழா, லண்டன் சுடரொளி வெளியீட்டகத்தினரின் அனுசரணையுடன் நடைபெற்றது. இதில் ஊடகவியலாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள் என நூற்றிஐம்பதிற்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர். சுடரொளி வெளியீட்டகத்தின் செயலாளர் ஐ.தி.சம்பந்தன் தனது துணைவியாரை இழந்ததனால் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.

கடந்த சனிக்கிழமை லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலய மண்டபத்தில் மாலை 3மணியளவில் நூல்தேட்டம் வாசகர் வட்டத்தினரின் ஏற்பாட்டில் ஈழத்துப் பதிப்பகங்களின் புதிய நூல்களின் கண்காட்சி நிகழ்வு இடம்பெற்றது. சுமார் 135 தலைப்புகளில் இந்நூல்கள் இடம்பெற்றிருந்தன. கண்காட்சியுடன் மலிவு விலையில் நூல்விற்பனையும் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து மாலை 5மணியளவில் நூல் வெளியீட்டுவிழா நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இந்த நூல் வெளியீட்டுவிழாவிற்கு லண்டன் புவுஏ தொலைக்காட்சியின் அறிவிப்பாளர் தினேஷ்குமார் அவர்கள் தலைமைதாங்கினார். அதனைத் தொடர்ந்து ஆரம்ப நிகழ்வுகளான மங்கள விளக்கேற்றல், அகவணக்க நிகழ்வு, தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் என்பன நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர் திபாகரன் அவர்களின் வரவேற்புரையும் தினேஷ் அவர்களின் தலைமையுரையும், சிவஸ்ரீ கனக பாலகுமாரக்குருக்களின் ஆசியுரையும் இடம்பெற்றன. அதன் பின்னர் நாட்டிய விஷாரத் ஸ்ரீமதி ஜெயந்தி யோகராஜாவின் மாணவியான நாட்டியக் கலாயோகி செல்வி ஷஸ்ரியா யோகராஜா அவர்களின் தனிநடன நிகழ்வு இடம்பெற்றதனைத் தொடர்ந்து வாழ்த்துரைகள் இடம்பெற்றன. வாழ்த்துரைகளை திரு. ஸ்ரீரங்கன், திரு. யோகநாதன், திரு. ஜோய் பூரணச்சந்திரன், திரு. பரந்தாமன் ஆகியோர் நிகழ்த்தினர்.

இதன்பின்னர் கவிஞர் நிலா அவர்களின் நூலின் மீதான் பார்வை என்ற கவிதையும், சற்குணராஜா கனகசபையின் பாடல் நிகழ்வும், ஸ்ரீமதி ஜெயந்தி யோகராஜாவின் மாணவிகளின் குழுநடனமும் இடம்பெற்றது. இதனைத்தொடர்ந்து நூல் வெளியீட்டுவிழா இடம்பெற்றது. இந்த நூல் வெளியீட்டு விழாவினை நூலகவியலாளர் என். செல்வராஜா அவர்கள் சிறப்புரையாற்றி வெளியீட்டுவைக்க, நூலின் முதற்பிரதியை இந்த நூலுக்கு அணிந்துரை எழுதிய பிரபல வரலாற்றாய்வாளர் சிவ தியாகராஜா அவர்கள் பெற்றுக்கொண்டார்.

இதன் பின்னர் நூல் விமர்சன நிகழ்வு இடம்பெற்றது. இந்த நூல் விமர்சன நிகழ்வினை மாதவி சிவலீலன், மூத்த ஊடகவியலாளர் இளையதம்பி தயானந்தா, வேலன் இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த திரு. கருணானந்தராஜா ஆகியோரும் நிகழ்த்தினர். உன்மையில் இந்த நூல் விமர்சனம் ஒரு காத்திடமான நிகழ்வாகவே காணப்பட்டது. ஒரு காரசாரமான, சுவாரஸ்யம் நிறைந்த நிகழ்வாக இவை இடம்பெற்றதனைக் குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்விற்கு தனது உடல்நிலை காரணமாக வரமுடியாமல் போனாலும் தனது எழுத்துக்கள் மூலம் விமர்சன உரையினை சமூகவியல் ஆய்வாளர் சி.யோ பற்றிமாகன் அவர்கள் சமர்ப்பித்திருந்தார். அதேபோல்த்தான் சுடரொளி வெளியீட்டகத்தின் நிறுவனர் ஐ.தி. சம்பந்தன் அவர்களும் தனது உரையினை எழுத்துக்கள் மூலம் சமர்ப்பித்திருந்தார். இந்த எழுத்துமூலமான உரையினை ஸ்ரீரங்கன் அவர்கள் வாசித்தார்.

Mayooran_BookLaunchஅதன்பின்னர் திருமதி சுகதினி பாணுகோபன் அவர்களின் கவிதை நிகழ்வென்றும் திருமதி ஜெயந்தி யோகராஜாவின் மாணவியி;ன் நடனநிகழ்வும் இடம்பெற்றன. இந்நிகழ்வின் இறுதியாக இந்நூலின் ஆசிரியர் ஊடகவியலாளர் அ.மயூரன் அவர்களின் ஏற்புரையினை நிகழ்த்தினார். இவ்ஏற்புரை விமர்சனஉரைகளில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் விடையளிப்பனவாக அமைந்திருந்தன. கிட்டத்தட்ட மாலை 9.15 மணியளவில் இந்நூல் வெளியீட்டுவிழா இனிதே நிறைவுபெற்றது.

17வது திருத்தச் சட்டத்தை மீண்டும். திருத்தி அமுல்படுத்த வேண்டும்

2001ம் ஆண்டு பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட 17வது திருத்தச் சட்டம் மீண்டும் திருத்தப்பட்டு அவை அமுல்படுத்தப்பட வேண்டு மென்ற தீர்மானமொன்று நேற்று முன்தினம் (08) மத்திய மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டது.

குறித்த தீர்மானத்தை மத்திய மாகாண சபை மத்திய அரசுக்கு பிரேரணையாக முன்வைக்கவும் முடிவு செய்யப்பட்டது. மத்திய மாகாண சபையின் 5வது சபைக் கூட்டம் நேற்று முன்தினம் பள்ளேகலையில் அமைந்துள்ள மத்திய மாகாண சபையின் சபைக் கூட்ட மண்டபத்தில் பிரதித் தலைவர் டப்ளியூ. எம். யசமான தலைமையில் இடம்பெற்றது.

மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ். இராஜரட்ணத்தினால் கடந்த 18ம் திகதி சபைக்கு முன் வைக்கப்பட்ட குறித்த பிரேரணை நேற்று முன்தினம் சபை கலந்துரையாடலுக்கு கொண்டு வரப்பட்டதையடுத்து இப்பிரேரணைக்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சியினர் ஆதரவு வழங்கினர்.

அரசின் அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தில் மலையக மக்கள் சார்ந்த சரத்து முன்வைப்பு

அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள அரசியலமைப்பு திருத்தத்தில் மலையக மக்கள் சார்ந்த சரத்தொன்றையும் முன்வைப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மலையகத்திலுள்ள அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புகள் ஆகியவற்றின் கருத்துக்கள், ஆலோசனைகள் திரட்டப்பட்டு ஒரு பொதுவான கோவையாக கருத்துக்கள் இதில் முன்வைக்கப்படவுள்ளன. தேர்தல் மாற்றம், உள்ளூராட்சித் துறை சீர்த்திருத்தம் உள்ளிட்ட மலையக மக்கள் சார்ந்த முக்கிய பல விடயங்கள் இதில் உள்ளடக்கப்படுமென இதற்கென நியமிக்கப்பட்டுள்ள விதந்துரைக் குழுவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பி.பிடி. தேவராஜ் தெரிவித்தார்.

மேற்படி சகல அமைப்புகளுடனும் தனித்தனியாகக் கலந்துரையாடிய பின் அனைத்து அமைப்புக்களையும் ஒன்றாக கூட்டி அதனூடான பொதுக் கருத்தே அரசியலமைப்புக்கான சரத்தாக முன்வைக்கப்படுமென குறிப்பிட்ட அவர், அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இதற்கென கடந்த வாரங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, மனோகணேசன் தலைமையிலான கட்சி, திகாம்பரம் எம்.பி. தலைமையிலான கட்சி மற்றும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்களுடனும் பேச்சு நடத்தியுள்ளதாகத் தெரிவித்த அவர், ஏனைய அமைப்புக்களுடனும் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.

சமுதாய ஆலோசனைக் குழு என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள மேற்படி குழுவில் முன்னாள் அமைச்சர் பி.பி. தேவராஜ் தலைவராகவும் தொழிலதிபர் தெ.ஈஸ்வரன், குமார் நடேசன் ஆகியோரும் அங்கத்தவர்களாக உள்ளனர்.

அரசியலமைப்பு திருத்தத்தில் தேர்தல் மாற்றம், உள்ளூராட்சித் துறை மாற்றம் உள்ளிட்ட மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சார்ந்த விடயங்களும் ஆலோசனைகளாக முன்வைக்கப் படவுள்ளன.

இது தொடர்பில் பல அரசியல் கட்சிகள், தொழிற் சங்கங்களின் ஆலோசனைகள் அறிக்கைகளாகக் கிடைக்கப்பெற்றுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.