எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

அமெரிக்க யுத்தக் கப்பல் திருமலையில்

war.jpgஅமெரிக்க யுத்தக் கப்பல் பேர்ள் ஹார்பர் எல்.எஸ்.டி. 52 திருகோணமலைக்கு வருகை தந்துள்ளது. நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (13) காலை 11.00 மணியளவில் இக்கப்பல் திருகோணமலை சீனக்குடா அஷ்ரப் இறங்கு துறையில் நங்கூரமிட்டுக் கொண்டது. இதில் 800 படையினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பசுபிக் பிராந்திய கடற்படைக்குச் சொந்தமான இக்கப்பல் இலங்கைக்கு வருகை தருவது இதுவே முதல் தடவை. திருகோணமலைக்கு வருகை தந்த இக்கப்பல் நாளை வெள்ளிக்கழமை (16) வரை தரித்து நிற்கும். இக்கப்பலில் வந்தோர் திருகோணமலையில் பல வேலைத்திட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

திருகோணமலை கடற்படைத்தள வீதியில் அமைந்துள்ள மெதடிஸ்த சிறுவர் இல்லத்திற்கு சென்ற இவர்களுள் ஒரு பகுதியினர் அச்சிறுவர் இல்லத்திற்கு வேண்டிய வர்ணங்களை பூசியதோடு துப்புரவுப் பணிகளிலும் ஈடுபட்டனர். மற்றொரு குழுவினர் திருகோணமலையின் வடக்கே அமைந்துள்ள திரியாய் கிராமத்திற்கு சென்று திரியாய் தமிழ் மகா வித்தியாலயத்தில் சுத்திகரிப்பு பணிகளில் ஈடுபட்டனர். திருகோணமலைக்கு வந்துள்ள படையினரை இலங்கை கடற்படையினர் வரவேற்று இவ் இடங்களுக்கு அழைத்துச் சென்றனர். திருகோணமலையில் இவர்கள் சமூக அபிவிருத்தி வேலைகள், மருத்துவ முகாம்கள், என்பனவற்றை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொக்கட்டிச்சோலையில் ஆயுதங்கள் மீட்பு

கொக்கட்டிச்சோலை பகுதியிலுள்ள கடலேறிக்கருகில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ரி-56 ரக துப்பாக்கியொன்றும் மெகசின் ஒன்றும் 20 ரவைகளும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு பொலிஸார் நேற்று முன்தினம் மாலை நடத்திய தேடுதலின் போதே இந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருத்துவமாது தர்சிகாவின் மரணம் தொடர்பில் வைத்திய பொறுப்பதிகாரி கைது!

வேலணை வைத்தியசாலையில சுருக்கிட்ட நிலையில் மரணமான மருத்துவமாது ச.தர்சிகாவின் மரணம் தொடர்பாக அவ்வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டொக்ரர் பிரியந்த செனவிரட்னவை கைது செய்து நேற்று (14-07-20100) நீதிமன்றில் முற்படுத்துமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் ஆர்.வசந்தசேனன் பொலிஸாருக்கு  உத்தரவிட்டுள்ளார். மேற்படி பெண்ணின் மரணம் தொடர்பான விசாரணைகள் நேற்று ஊர்காவற்றுறை நீதவான் நிதிமன்றில் நடைபெற்றது. மரணமான தர்சிகாவின் சகோதரி, வேலணை வைத்தியசாலையில் கடமையாற்றிய தாதி உத்தியோகத்தர்கள், சம்பவ தினத்தன்று சடலம் மீட்கப்பட்ட விடுதி அறைக்கதவை உடைத்துத் திறந்தவர்கள் ஆகியோரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டன.

இதன்படி தர்சிகாவின் மரணம் தொடர்பாக சந்தேகம் உள்ளதாகவும், டொக்ரர் பிரியந்த செனவிரட்னவை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறும் பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார். அத்துடன் தர்சிகாவின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட வைத்தியப் பொறுப்பதிகாரியை எதிர்வரும் 24ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, மருத்துவமாது தர்சிகாவின் கொலை தொடர்பான விசாரணைகளை குற்றப்புலனாய்வுப் பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நடாளுமன்ற உறுப்பினர் அ.விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார். இந்த மரணம் தொடர்பாக பலர் வாக்குமூலமளிக்க முன்வந்த போதிலும், பொலிஸார் அவற்றைப் பெற மறுத்துவிட்டதாகவும், அதனால் இது தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் கையளிக்கப்பட வேண்டும் எனவும் நேற்று பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஒன்றை அவர் அனுப்பியுள்ளார்.

‘நாட்டு மக்கள் எல்லோருமே ஒன்று தான் அனைவருக்கும் அனைத்தும் கிட்ட வேண்டும்!’ கிளிநொச்சியில் ஜனாதிபதி

Rajaparksa_in_Killinochieநேற்று (14 June) கிளிநொச்சியில் ஜனாதிபதி கலந்து கொண்ட அமைச்சரவைக் கூட்டமும், பொதுமக்கள் மத்தியில் உரையாற்றும் நிகழ்வும் நடைபெற்றுள்ளது. முற்பகல் வேளையில் அமைச்சரவைக் கூட்டம் இரணைமடுக் குளத்திற்கருகே  அமைந்துள்ள கிளிநொச்சி மாவட்ட இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்றது. தமிழ்ச்செல்வனின் இல்லம் என்றும் விடுதலைப் புலிகளின் அரசியல் செயலகம் என்றும் ஊடகங்களில் வெளிவந்திருந்த போதும், உண்மையில் அது நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு சொந்தமான கட்டடம் ஆகும் தற்போது அது கிளிநொச்சி மாவட்ட இராணுவத் தலைமையகமாகவுள்ளது.

Rajaparksa_in_Killinochieபிற்பகல் கிளிநொச்சியில் பொதுமக்கள் மத்தயில் ஜனாதிபதி உரைநிகழ்த்தினார். ஆனால், பொதுமக்கள் அனைவரும் அக்கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை என கிளிநொச்சி மக்கள் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தில் பணியாற்றும் அரச ஊழியர்கள் மற்றும் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே இதில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தவேளை, பொதுமக்கள் ஏ-9 பாதையுடாக பயணிப்பது தடைசெய்யப்பட்டிருந்ததாகவும் பலத்த பாதுகாப்பு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்ததாகவும் கிளிநொச்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வன்னிப்பிரதேசத்தில் அபிவிருத்திப்பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும், நாட்டு மக்கள் எல்லோருமே ஒன்று தான் அனைவருக்கும் அனைத்தும் கிட்ட வேண்டும் எனவும் ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் கொழும்பிற்கு வெளியே கூட்டப்பட்ட முதலாவது கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

வடமராட்சியில் பெண் படுகொலை! உடமைகள் கொள்ளை!

வடமராட்சியில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டு அவரது உடமைகள் கொள்ளையிடப்பட்டு உள்ளன. 13-07-2010 வடமராட்சி இமையாணன் கிழக்கு, உடுப்பிட்டியில் முற்பகல் 11 மணியளவில்  40 வயதான திருமணமாகாத பெண்ணான ஜெயகௌரி என்பவரது சடலம் வல்வெட்டித்துறை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இவரை கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்த (July 11 2010) காணவில்லை என அயலவர்களினால் தெரிவிக்கப்பட்டிருந்தது. நேற்று இவரின் சடலம் கிணறு ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

இவரின் தலையில் அடிகாயங்கள் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவரது விட்டிலிருந்த தொலைக்காட்சிப் பெட்டி, கைத்தொலைபேசி மற்றும் இவரது நகைகள் யாவும் கொள்ளையிடப்பட்டுள்ளன. இவரது நான்கு சகோதரர்கள் வெளிநாட்டிலுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவரது கொலை தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

வன்னியில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் மழைபெய்யும் வேளைகளில் அவலங்களை எதிர்கொள்கின்றனர்.

Rehabilitation_Wanniதற்போது இடைக்கிடையே பெய்து வரும் மழை காரணமாக வன்னியில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். கூரைகளற்ற வீடுகளிலும் தறப்பாள் கூடாரங்களிலும் வசிக்கும் மக்கள் மழை பெய்யும் போது பெரும் அவலங்களுக்கு உள்ளாகின்றனர். கூரைகளற்ற வீடுகளின் உள்ளேயும், தறப்பாள் கூடாரங்களுக்குள்ளும் மழைநீர் புகுந்து விடுவதால் சிறுகுழந்தைகள், வயோதிபர்கள் உள்ள குடும்பங்கள் பெரும் துன்பங்களை அனுபவிக்க நேரிடுகின்றது. அவர்களது நிவாரண உணவுப்பொருட்களும் மழையில் நனைந்து நாசமாகின்றன.

Rehabilitation_Wanniமுன்னர் மீள்கடியேற்றப்பட்ட  மக்கள் தற்காலிகக் கூடாரங்களை அமைத்துக்கொள்ள பன்னிரண்டு கூரைத் தகரங்கள் வழங்கப்பட்டு வந்தன. தற்போது மீள்குடியேற்றப்படும் மக்களுக்கு அவை வழங்கப்படுவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை. எதிர்வரும் பருவமழைக்கு முன்பாக இம்மக்களுக்கான வீடுகள் ஒழுங்கமைக்கப்படா விட்டால் பாரிய அவலங்களுக்கு அவர்கள் முகம் கொடுக்க வேண்டிவரும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

ரயில் சேவை ஓமந்தை வரை நீடிக்கப்படும்

sri-lanka-railway.jpgயாழ்தேவி ரயில் சேவை எதிர்வரும் ஓகஸ்ட் மாத முடிவுக்குள் ஓமந்தை வரை நீடிக்கப்படும் என்று போக்குவரத்து பிரதியமைச்சர் ரோஹண திஸாநாயக்க நேற்றுத் தெரிவித்தார்.

யாழில் பெற்றோல், டீசல் விலை குறைப்பு

sri-lanka-petroleum.jpgஅமைச்சரவை தீர்மானத்தின்படி இன்றிலிருந்து யாழில் பெற்றோல் மற்றும் டீசலின் விலை குறைக்கப்படவுள்ளது. இதன்படி பெற்றோல் ரூபா 2.40 த்தாலும் . டீசல் மற்றும் மண்னெண்ணை ரூபா 1.90 த்தாலும் விலை குறைக்கப்படவுள்ளது.

வைகோ, நெடுமாறன் கைது

yko_03.jpgசென்னை யில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகத்தை மூடக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா பாண்டியன், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழநெடுமாறன், பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன், புதிய பார்வை இதுழாசிரியர் மா நடராசன் உட்பட ஏராளமானோரை தமிழ் நாடு பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படுகின்றமையைக் கண்டித்தும், ஐ.நா நிபுணர் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க மறுக்கும் மஹிந்த அரசுக்கு தமிழகத்தில் தூதரகம் இயங்கக் கூடாது என்று தெரிவித்தும் இலங்கை அரசுக்கு எதிராக சென்னை மைலாப்பூர் பகுதியில் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

அசின் அரசியல் – அரசியல்ரீதியில் சரியா? (Political Correctness) – அசினின் யாழ்-வன்னி விஜயமும் நடிகர் சங்கத்தின் U turn உம்

Sarathkumar_ActorAsin_Actressஇலங்கையில் இடம்பெற்ற இந்திய திரைப்பட விழாவில் ஆரம்பமான தமிழக சினிமாச் சலசலப்பு இன்னமும் ஓயவில்லை. திரைப்பட விழாவின் பின் வன்னி மக்களின் அவலங்களுக்கு உதவும் – மக்கள் உறவைப் பலப்படுத்தும் முயற்சியில் இறங்கிய தென்னிந்திய திரைப்பட நடிகை அசின், சல்மன்கான் ஆகியோர் தங்கள் முயற்சிகளில் குறிப்பிடத்தக்க வெற்றியைக் கண்டுள்ளனர். அவர்கள் விஜயம் செய்த பகுதிகளில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் அவர்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளனர்.

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராதராவி தங்கள் தீர்மானத்தை மீறி இலங்கை சென்றதற்காக அசினுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து இருந்தார். இலங்கையில் தமிழர்களின் நிலைக்கு இலங்கை அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், படப்பிடிப்புக்காக திரைப் படவிழாவிற்காக நடிகர் நடிகைகள் இலங்கை செல்ல வேண்டாம் என்றும் தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பு கேட்டுக்கொண்டது. இந்த வேண்டுகோளை ஏற்று தமிழ் நடிகர் நடிகைகள் படப்பிடிப்புக்காக இலங்கைக்கு செல்லவில்லை.

ஆனால் தென்னிந்திய நடிகையும் தமிழ் திரையுலகில் முன்னணிக் கதாநாயகியுமான அசின் இதனையும் மீறி திரைப்பட விழாவில் கலந்து கொண்டதுடன் ‘ரெடி’ என்ற ஹிந்திப்படத்தின் படப்பிடிப்பிலும் கலந்துகொண்டுள்ளார். தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை வன்மையாக மறுத்துள்ள அசின் அதற்காக அஞ்சப் போவதில்லை என்றும் தெரிவித்து உள்ளார்.

வவுனியா யாழ்ப்பாணத்தில் நலத்திட்டங்களை முன்னெடுக்கும் நடிகை அசின் யாழ்ப்பாணத்தில் கண் சிகிச்சை முகாமை நடத்தி உள்ளதுடன் பாதிக்கப்பட்ட பெண் பிள்ளைகளையும் தத்தெடுக்கப் போவதாக அறிவித்து உள்ளார்.

தனது யாழ் விஜயம் பற்றி அளித்துள்ள பேட்டியில் வன்னி யாழ்ப்பாண மக்கள் தன்னைப் பரிவோடு அக்கா என்று அழைத்ததாகவும் விஜய் அண்ணாவையும் சுரியா அண்ணாவையும் வரச்சொல்லிக் கேட்டதாகவும் அசின் தெரிவித்துள்ளார்.

நடிகை ஆசினுடைய யாழ்ப்பாண விஜயமும் அவர் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஏற்படுத்திய உறவும் தென்னிந்திய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் முடிவில் யூ ரேன் – U Turn எடுக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது. இது இலங்கை அரசின் மக்கள் தொடர்பு – மக்கள் உறவு விடயத்தில் அதற்கு சாதகமாக அமைந்துள்ளது. இலங்கை அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பவர்கள் இன்னமும் பழைய பஞ்சாங்க போராட்ட முறைகளையே கைக்கொள்வதால் அவர்களுக்கு இலங்கை அரசின் அரசியல் நகர்வை எதிர்கொள்வதில் இவ்வாறான சிரமங்கள் ஏற்பட்டு விடுகின்றது

இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிடுவது பற்றி நடிகர் சங்கம் கூடி ஆராயவுள்ளதாக அதன் தலைவர் சரத்குமார் தெரிவித்து உள்ளார். ‘நடிகர் நடிகைகள் அனைவரும் இலங்கை செல்வது பற்றி நடிகர் சங்க செயற்குழுவில் ஆலோசித்து முடிவு செய்யப்படும்’ என்று அவர் கூறியுள்ளார்.  அவர் மேலும் தெரிவிக்கையில் ‘இலங்கையில் நடந்த சர்வதேச பட விழாவுக்கு செல்லக்கூடாது என்று தான் தடை விதிக்கப்பட்டது.’ என்றும் ‘அசின் தொழில்ரீதியாகத்தான் இலங்கை சென்றுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கும் முடிவை மறுபரிசீலனை செய்வோம்’ என்றும் அறிவித்துள்ளார்.

நடிகை அசினுடைய இலங்கை விஜயம் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ள போதும் புலம்பெயர் நாடுகளில் அதற்கு கடுமையான எதிர்ப்பு இருந்து கொண்டே உள்ளது. மேலும் அரசியல் ரீதியாக இப்பயணம் சரியானதா என்ற விவாதமும் இதற்கு மேலாக எழுப்பப்படுகின்றது. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரை அவர்கள் அரசியல் ரீதியாக இதன் சரி பிழைகளை ஆராயும் நிலையில் இல்லை. அரசியல் ரீதியாக சரி என்று முன்னெடுக்கப்பட்ட முடிவுகளே அவர்களை இந்நிலைக்குத் தள்ளியும் இருந்தது.

நடிகை அசினுடைய இலங்கை விஜயமோ அல்லது தமிழக நடிகர் நடிகைகளின் இலங்கை விஜயமோ இலங்கைத் தமிழர்களின் புரையோடிப் போயுள்ள பிரச்சினைக்குத் தீர்வாக அமையப் போவதில்லை. ஆனால் அவை அம்மக்களுக்கு ஒரு கொஞ்சநேர சந்தோசத்தை அளிக்கும். சிறு ஆறுதலைக் கொடுக்கும். அது அரசியல் ரீதியில் தவறா சரியா என்பதை விவாதிக்கும் அடிப்படைச் செழிப்பு அவர்களிடம் இல்லை.