எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

யாழ். தேவி ரயில்சேவையில் கட்டண குறைப்பும், நேர மாற்றமும்

வடக்கிற்கான யாழ். தேவி ரயில் சேவையில் நேர மாற்றமும் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் கட்டணக் குறைப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கிணங்க எதிர்வரும் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் புதிய நேர அட்டவணையின் பிரகாரம் காலை 5.45 மணிக்கு கோட்டையிலிருந்து புறப்படும் இந்த ரயில் பகல் 11.10க்கு தாண்டிக்குளத்தை வந்தடைவதுடன் வவுனியாவிலிருந்து பகல் 12.45 மணிக்கு புறப்படும் யாழ். தேவி மாலை 5.40 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்தினை சென்றடையும் என வவுனியா ரயில் நிலைய அதிபர் தெரிவித்தார்.

அத்துடன் சாதாரண கட்டணமே அறவிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை அரசு தனது விசிறிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாக MIA. குற்றச்சாட்டு

mia.jpgபொப் இசை உலகில் முன்னணிப் பாடகர்களில் ஒருவர். MIA. என அழைக்கப்படும் மாதங்கி அருள்பிரகாசம் . மாயாவின் பாடல்களில் பெரும்பாலானவற்றில் ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது என தெரிவித்து YouTube  இருந்து நீக்குமாறு இலங்கை அரசு தனது விசிறிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாக MIA. தெரிவித்துள்ளார்.

அச்சுவேலியில் கைத்தொழில் பேட்டையில் நாற்பது பாரிய தொழிற்சாலைகள்

யாழ்ப்பாணம் அச்சவேலியில் 40 தொழிற்சாலைகளை உள்ளடக்கிய பாரிய கைத்தொழில் பேட்டையொன்றை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள இக் கைத்தொழிற் பேட்டைக்கான உட்கட்டமைப்பு வசதிகளுக் கென 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படவுள்ளன.

இந்நிதிக்கான அங்கீகாரத்தை தேசிய திட்டமிடல் திணைக்களம் வழங்கியுள்ளதாக பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி தெரிவித்தார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலில் இக் கைத்தொழில் பேட்டைக் கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வுள்ளதுடன், இதில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான இணக்கத்தினையும் முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். யாழ்.

அச்சுவேலி பகுதியில் ஆடைத்தொழிற்சாலைகள் மற்றும் கைத்தொழில் பேட்டைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கென 65 ஏக்கர் காணி பெறப்பட்டுள்ளதுடன் இதில் 25 ஏக்கர் காணியில் ஆடைத் தொழிற்சாலைகளும் 40 ஏக்கர் கணியில் கைத்தொழில் பேட்டையும் அமைக்கப்படவுள்ளன.

வற்றுக்கான செயற்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு வடபகுதி அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி மற்றும் தேசிய திட்டமிடல் திணைக்களத்திற்கும் கையளிக்கப்பட்டு அதன் அங்கீகாரத்தையும் பெற்றுக்கொண்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

கைத்தொழிற் பேட்டைகளை ஆரம்பிப்பதற்கு முன்னோடியாக அப்பகுதியில் நீர், மின்சாரம் மற்றும் கட்டடங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு மற்றும் பொது வசதிகளையும் ஏற்படுத்தவென 10 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி செலவிடப்படவுள்ளதுடன் கைத்தொழில் பேட்டையில் அமையவுள்ள 40 தொழிற்சாலைகளை நிர்மாணித்து வழங்குவதற்கு வெளிநாடுகளின் நிதியுதவி யைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

உட்கட்டமைப்பு நடவடிக் கைகள் நிறைவடைந்ததும் உடனடியாகவே கைத்தொழில் பேட்டைக்கான நிர்மாணப் பணிகள் ஆரம்பமாகுமென குறிப்பிட்ட அவர், இவ்வருட இறுதிக்குள் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க உத்தேசித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

சமுர்த்தி அதிகாரிகளுடன் நாளை அமைச்சர் பசில் பேச்சுவார்த்தை – மேர்வின் சில்வா கலந்துகொள்வாரா?

gggg.jpgபிரதிய மைச்சர் மேர்வின் சில்வாவின் நடவடிக்கைகளினால் ஏற்பட்ட சர்ச்சைக்கு தீர்வுகாண்பதற்காக நாளை புதன்கிழமை பேச்சுவார்த்தைக்கு வருமாறு சமுர்த்தி அதிகாரிகளுக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அழைப்பு விடுத்திருக்கிறார்.

இந்தப் பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் பலர் கலந்துகொள்வார்களென எதிர்பார்க்கப்படுவதாகவும் ஆனால், பிரதியமைச்சர் மேர்வின் சில்வா சமுகமளிப்பாரா என்பது குறித்து நிச்சயப்படுத்திக்கொள்ள முடியாதெனவும் சமுர்த்தி கூட்டுத் தொழிற்சங்க ஏற்பாட்டாளர் நிசந்த உடவத்த டெய்லிமிரர் பத்திரிகையின் இணையத்தளத்திற்குத் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டத்திற்கு சமுர்த்தி அதிகாரியொருவர் சமூகமளிக்காததையடுத்தே அந்த அதிகாரியை மாமரத்தில் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா கட்டிவைத்ததையடுத்து எதிர்ப்புத் தெரிவித்து சமுர்த்தி அதிகாரிகள் டெங்குத்தடுப்பு செயற்பாடுகளில் கலந்துகொள்ளாமல் பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர்.

நாளை புதன்கிழமை இடம்பெறும் பேச்சுவார்த்தையின்போது தமது நடவடிக்கைகளுக்காக பிரதியமைச்சர் மேர்வின் சில்வா பகிரங்கமாக மன்னிப்புக்கேட்க வேண்டுமென வலியுறுத்தி அரசாங்கத்திற்கு காலக்கெடு விதிக்கவுள்ளதாக நிசந்த உடவத்த கூறியுள்ளார். பிரதியமைச்சர் மன்னிப்புக் கேட்காவிடின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.

றுகுணு பல்கலை. மாணவன் மரணம் தொடர்பாக உண்மையைக் கண்டறிய தனிநபர் ஆணைக்குழு

றுகுணு பல்கலைக்கழக மாணவர் சுசந்த பண்டாரவின் மரணம் தொடர்பான உண்மை நிலைகளைக் கண்டறியும் பொருட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனிநபர் ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளார். ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜகத் பாலபட்டபெந்தி  இதற்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்.

கடந்த ஜூலை மாதம் 22 ஆம் திகதி பதுளையில் வைத்து மரணமான இந்த மாணவனின் மரணம் தொடர்பில் முரண்பட்ட முறைப்பாடுகளும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு வருவதால் அவற்றை விசாரித்து சிபாரிசு அறிக்கையொன்றை தயாரிக்கும் பொறுப்பு இந்த ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மரணம் தொடர்பிலும் பொலிஸ் விசாரணைகள் தொடர்பிலும் முரண்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கண்டறிந்து முழுமையான அறிக்கையை மூன்று மாத காலத்துக்குள் பெற்றுத்தருமாறு ஜனாதிபதி மேற்படி ஆணைக்குழுவுக்குப் பணித்துள்ளார்.

கிளிநொச்சி மாணவர்களுக்கு 120,000 அப்பியாசக் கொப்பிகள்

namal.jpgகிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 82 பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவ/ மாணவியருக்கென ஒரு இலட்சத்து இருபதினாயிரம் (1,20,000) அப்பியாசக் கொப்பிகளைப் பகிர்ந்தளிக்கும் வேலைத் திட்டம் நேற்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவரும், அம்பாந்தோட்டை மாவட்ட எம்.பியுமான நாமல் ராஜபக்ஷ தலைமையில் கிளிநொச்சியில் இவ்வேலைத் திட்டம் நேற்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவ/ மாணவியரின் கல்விக்கு உதவும் வகையில் அப்பியாசக் கொப்பிகளை இலவசமாக வழங்கும் வேலைத் திட்டத்தை இளைஞர்களுக்கான நாளை அமைப்பு செயற்படுத் தியுள்ளது.

இவ்வேலைத் திட்டத்தின் நிமித்தம் இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவரான நாமல் ராஜபக்ஷ எம்.பி, ஒவ்வொரு பாடசாலைக்கும் நேரில் சென்று அப்பியாசக் கொப்பிகளை பகிர்ந்தளித்து வருகின்றார்.

ஒவ்வொரு பாடசாலையிலும் நாமல் ராஜபக்ஷ எம்.பிக்கு மாணவ/ மாணவியர் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களால் மகத்தான பெருவரவேற்பு நேற்று அளிக்கப்பட்டது.

இவ்வேலைத் திட்டம் நேற்று முதல் ஐந்து நாட்களுக்கு தொடராக நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இவ்வேலைத் திட்டம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட நேற்றைய தினம் பாரதி மகா வித்தியாலயம், ராமநாதபுரம் மகா வித்தியாலயம், வட்டக்கச்சி மகா வித்தியாலயம், பன்னங்கண்டி வித்தியாலயம் உட்பட 13 பாடசாலைகளுக்கு எம்.பி நாமல் ராஜபக்ஷ நேரில் விஜயம் செய்தார்.

இந்நிகழ்வுகளில் உதித்த லொக்கு பண்டார எம்.பி. வட மாகாண கல்வி அமைச்சு செயலாளர் இளங்கோபன், கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் குருகுலராஜா, ஜெனரல் ராஜகுரு, பிரிகேடியர் விக்கிரமசூரிய உட்பட அதிபர்கள், ஆசிரியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

சீனப் பிரஜை தவறி விழுந்து பலி

புத்தளம் நுரைச்சோலையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் அனல் மின் நிலையத்தில் நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த சீனப் பிரஜையொருவர் இன்று காலை மின் நிலைய கட்டிடமொன்றிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக கல்பிட்டி பொலிசார் தெரிவித்தனர்.

வைப்பாளர்கள் ஒரே நேரத்தில் பணம் கேட்டதால் நாட்டை விட்டு ஓடினேன் -சக்வித்தி இரகசிய பொலிஸாரிடம் தெரிவிப்பு

sakvithi.jpgபணத்தை வைப்புச் செய்தவர்கள் ஒரே நேரத்தில் பணத்தை திருப்பிக் கேட்டதன் காரணமாக அதனை திருப்பிச் செலுத்த முடியாதிருந்ததாலேயே நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக சக்வித்தி ரணசிங்க இரகசிய பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

வைப்புச் செய்யப்பட்ட பணத்துக்கு முறையாக வட்டியை கொடுத்து வந்ததாகவும் அவர்களில் ஒரு சிலருக்கு அவர்கள் கேட்டுக் கொண்டதையடுத்து முழுத் தொகையையும் பெற்றுத் தர நடவடிக்கை எடுத்ததாகவும் ஆனால் வைப்புச் செய்தவர்கள் அனைவருக்கும் கொடுப் பதற்கு தனது நிதி நிறுவனத்தில் போதிய பணம் இல்லாதிருந்ததாகவும் அவர் கூறினார்.

ஒரு சில தொழில்களில் தான் வைப்புப் பணத்தை முதலீடு செய்திருந்ததாகவும் அதில் இருந்து வைப்பாளர்களின் வட்டியை கொடுத்து வரமுடிந்ததென்றும் ஆனால் ஒரு சிலருக்கு மொத்த வைப்புத் தொகையையும் கொடுத்ததால்தான் வங்குரோத்து நிலையை அடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு தப்பிச்சென்று போலிப் பெயரில் மீண்டும் திரும்பி வந்த சக்வித்தி அவரது மனைவியின் வீட்டில் வைத்து கடந்த 6ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

சக்வித்தி மற்றும் அவரது குடும்பத்தினர் இலங்கைக்கு வருவதற்கு தமிழ்ப் பெயர்களில் கடவுச்சீட்டுகளை பயன்படுத்தியிருந்தனர். இந்த போலி கடவுச் சீட்டுகள் வத்தளை ஹேகித்தயில் அவர்கள் தங்கியிருந்த வீட்டை சோதனை போட்ட போது பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டன.சக்வித்தியிடம் இரகசிய பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் எனினும் அவரது சொத்து தொடர்பாக எந்தவொரு தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என்று குற்றப்புலனாய்வு திணைக்களம் கூறுகிறது.

ஈரான் அரசால் 15 மெற்றிக் தொன் பேரீச்சம்பழம் அன்பளிப்பு

நோன்பு காலத்தையொட்டி இலங்கை முஸ்லிம்களுக்கென 15 மெற்றிக் தொன் பேரீச்சம்பழத்தை ஈரான் இஸ்லாமிய குடியரசு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

இலங்கையின் ஈரான் நாட்டுக்கான தூதுவர் எம். எம். ஸ¤ஹைர் அந்நாட்டு அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பயனாக இந்தப் பேரீச்சம் பழம் கிடைக்கப் பெற்றிருக்கின்றது.

இமாம் கொமெய்னி நிவாரண மன்றத்தின் ஊடாக இந்த பேரீச்சம்பழம் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. இந்த மன்றம் இலங்கை முஸ்லிம்களுக் கென தொடராக நாளாவது வருடமாகவும் பேரீச்சம்பழத்தை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

மனோ கணேசனை தேசியப் பட்டியல் எம்.பி.யாக ஐ.தே.க. நியமித்தால் அரசியலை துறக்கத் தயார் – சவால் விடுக்கிறார் பிரபா கணேசன்

mano.jpgஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனை தேசியப் பட்டியல் எம்.பி.யாக ஐ.தே.க. நியமிக்க முன்வந்தால் தான் அரசியலை விட்டு வெளியேறுவதாக பிரபா கணேசன் எம்.பி. சவால் விடுத்துள்ளார்.

மனோ கணேசனின் சகோதரரும் ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் கடந்த வாரம் எதிரணியிலிருந்து அரச தரப்புக்கு மாறியிருந்தார். தற்போதைய நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியால் (மனோ கணேசனுக்கு தேசியப்பட்டியலில் எம்.பி. பதவி) இதனைச் செய்ய முடியாதென்பதை

 தாம் அறிவாரென்று இணையத்தளச் செய்திச்சேவையொன்றுக்கு பிரபா கணேசன் நேற்று கூறியுள்ளார். ஐ.தே.கட்சி ஐந்தில் நான்கு பேருடன் சிறு சிறு துண்டுகளாகி தலைமைத்துவத்திற்கு போராடிக் கொண்டிருப்பதாகவும் இந்த நிலையில் ரணில் விக்கிரமசிங்கவால் எதனையும் செய்ய முடியாத நிலைமையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சிரேஷ்ட ஐ.தே.க. உறுப்பினர் உட்பட ஐந்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் தன்னுடன் ஏற்கனவே கலந்துரையாடியிருப்பதாகவும் அரசாங்கத்தில் இணைந்துகொள்ளத் தயாராகவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்துடன் தொடர்ந்து இணைந்திருப்பது தொடர்பான தனது தீர்மானத்தில் மாற்றமில்லையெனவும் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு வாக்களித்தோருக்கு தான் சேவை செய்யப்போவதாகவும் அவர் கூறியுள்ளார். அரசாங்கத்திலிருந்து அவர்களுக்கு தன்னால் சேவையாற்ற முடியும் என்பது குறித்து தான் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் எதிரணிக்கு திரும்பிச் செல்லப்போவதாகத் தெரிவிக்கப்படும் வதந்திகளில் உண்மை கிடையாதெனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.