எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

தேறி வருகிறார் ஆரியவதி

ariyawathi_main.jpgஆணிகள்,  ஊசிகளை சூடுகாட்டி உடலில் ஏற்றப்பட்டிருந்த மாத்தறையைச் சேர்ந்த ஆரியவதி (49 வயது) எனும் பெண் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சத்திரசிகிச்சையின் பின்னர் குணமடைந்து வருகிறார். அவர் நேற்று பேசக்கூடிய நிலையில் இருந்ததாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க நேற்று ஆரியவதியை பார்வையிட்டுள்ளார். அத்துடன் அப்பெண்ணுக்கு வீடொன்றையும் வழங்குவதாக அவர் தெரிவித்திருக்கிறார். உடலில் மீதமாக இருக்கும் 5 ஊசிகளையும் உடனடியாக அகற்ற முடியாதிருப்பதாகவும் ஏனெனில் அப்பெண்ணின் நரம்புகள் பாதிக்கப்பட்டு விடும் என்பதால் உடனடியாக அவற்றை அகற்றவில்லை எனவும் கம்புறுப்பிட்டிய மருத்துவமனை பணிப்பாளர் பிரபாத் கஜதீர தெரிவித்தார்.

இப்பெண்ணுக்கு 3 ஆயிரம் டொலர்களை அரசாங்கம் வழங்கும் என்று அதிகாரிகள் கூறினர். ஆஸ்பத்திரியில் வைத்து 1 இலட்ச ரூபாவுக்கான காசோலை வழங்கப்பட்டுள்ளதாகவும் மீதித் தொகை ஆரியவதி ஆஸ்பத்திரியை விட்டு சென்ற பின் கொடுக்கப்படும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பேச்சாளர் கூறினார்.

தனது குடிசையை வீடாக நிர்மாணிக்கும் நோக்கத்துடனேயே ஆரியவதி சவூதிஅரேபியாவுக்கு சென்றிருந்தார். கடந்த மார்ச்சில் அங்கு சென்றிருந்த ஆரியவதியை வேலைக்கு அமர்த்திய குடும்பம் கொடுமைப்படுத்தியுள்ளது. கணவனும் மனைவியும் தன்னை அடிப்பதாகவும் அவர்களின் ஏழு பிள்ளைகளும் தன்னை கொல்லப் போவதாக மிரட்டுவதாகவும் ஆரியவதி கூறியுள்ளார். மூன்று மாதங்கள் சித்திரவதைக்குள்ளான இவரை அவருக்கு வேலை பெற்றுக் கொடுத்த முகவரிடம் தொழில் வழங்கியவர்கள் ஒப்படைத்துள்ளனர். ஆரியவதியை இலங்கைக்குத் திருப்பி அனுப்பிவிடுமாறு முகவரிடம் அவர்கள் கூறியுள்ளனர்.

ஆணிகளை சூடுகாட்டி பெண் (எஜமானி) தனது கணவரிடம் கொடுக்க அவர் தனது உடலில் அவற்றை அறைந்ததாக ஆரியவதி கூறியுள்ளார். நான் வலியால் சத்தமிட்டால் அவர்களின் பிள்ளைகள் என்னை கொல்லப் போவதாக கத்தியைக் காட்டி மிரட்டுவார்கள் என்று அவர் கூறியிருக்கிறார். பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்

அமைச்சர் எஸ்.பி இன்று யாழ். பல்கலை விஜயம்

University_of_Jaffna_Logoஉயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க இன்று காலை யாழ். பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் என். சண்முகலிங்கன் தலைமையில் அமைச்சருக்கு வரவேற்பளிக்கப்படவுள்ளது. இங்கு விஜயம் செய்யும் அமைச்சர் பல்கலைக்கழகத்தில் 30 மில். ரூபாயில் நிர்மாணிக்கப்படவுள்ள சுகாதார, விஞ்ஞான கட்டடத்திற்கு அடிக்கல்லையும் நாட்டி வைப்பார்.

பணிப்பெண்களை ஜோர்தானுக்கு அனுப்புவதற்கு தொடர்ந்தும் தடை

இலங்கைப் பெண்களை ஜோர்தானுக்கு பணிப் பெண்களாக அனுப்புவதற்கு இலங்கை வேலை வாய்ப்பு பணியகம் தடை விதித்துள்ளமை தொடர்ந்தும் அமுலில் இருக்கிறது என பணியகத்தின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸிலி ரணவக்க தெரிவித்தார்.

இலங்கை பணிப் பெண்களுக்கு 200 டினாரை மாதாந்த சம்பளமாக வழங்க வேண்டும். அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை களை ஏற்றுக் கொண்டாலேயே ஜோர் தானுக்கு பணிப்பெண்களாக இலங்கையரை அனுப்ப முடியும் என பணியகத்தின் தலைவர் அறிவித்திருந்தார்.

இலங்கை அணி 74 ஓட்டங்களால் வெற்றி

malinga.jpgஇலங்கை, இந்தியா, நியூஸிலாந்து ஆகிய மூன்று நாடுகள் பங்கேற்ற முத்தரப்பு கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி 74 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இந்த முத்தரப்பு ஒரு நாள் போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று தம்புள்ளையில் இலங்கை, இந்திய அணிகளுக்கு இடையில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித் தலைவர் சங்கக்கார துடுப்பெடுத்தாட முடிவு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக தில்சானும், ஜயவர்தனவும் களம் இறங்கினார்கள். முதல் ஓவரை பிரவீன் குமார் வீசினார்.

முதல் ஓவரில் 3 ஓட்டங்கள் எடுக்கப்பட்டன. 3 ஆவது ஓவரில் தில்சான் 2 பவுண்டரி விளாசினார். அதன் பின் இருவரும் அடித்து விளையாடினார்கள். இதனால் இலங்கை
அணியின் புள்ளிகள் மளமளவென உயர்ந்தன. 9.1 ஓவரில் இலங்கை அணி 50 ஓட்டங்களை தொட்டது. சிறப்பாக விளையாடிய தில்சான் அரை சதம் அடித்தார். அவர் 36 பந்தில் 8 பவுண்டரி 1 சிக்ஸருடன் இந்த ஓட்டங்களை எடுத்தார். 15.4 ஓவரில் இலங்கை அணி 100 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணி 20.2 ஓவரில் 121 ஓட்டங்கள் எடுத்திருக்கும் போது முதல் விக்கெட்டை இழந்தது. ஜயவர்தன 39 ஓட்டங்களில் இசாந்த் சர்மா பந்தில் தி. கார்த்திக்கிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தரங்க 6 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து சங்கக்கார களம் இறங்கினார். சிறப்பாக விளையாடிய தில்சான் அதிக பட்சமாக 115 பந்துகளில் 110 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 12 பவுண்டரிகளும் ஒரு சிக்கஸரும் அடங்கும். சங்கக்கார 62 பந்துகளில் 7 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 71 ஓட்டங்கள் எடுத்தார். பந்து வீச்சில் இசாந்த் சர்மா, முனாப் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 299 ஓட்டங்களை எடுத்தது.

இந்தப் போட்டியில் அதிக பட்சமாக தில்சான் சதம் அடித்தார். அவர் 115 பந்துகளில் 110 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 12 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும். சங்கக்கார 62 பந்துகளில் 7 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 71 ஓட்டங்களை எடுத்தார்.

பந்து வீச்சில் இசாந்த் சர்மா, முனாப் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை எடுத்தனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 46.5 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 225 ஓட்டங்களை எடுத்தது.

யாழ்ப்பாணத்திலிருந்து மலேசியா செல்லும் பெண் சாரணியர்கள்

jaffna.jpgஉலக பெண் சாரணிய அமைப்பின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் முகமாக மலேசியாவில் நடைபெற இருக்கும் கூடலில் பங்குபற்றுவதற்காக யாழ். மாவட்டத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் 36 பெண் சாரணியர்கள்  நேற்று யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டனர். யாழ். மாவட்ட ஈ.பி.டி.பி. எம்.பி. சில் வேஸ்த்திரி அலன்ரின் உதயனும் காணப்படுகிறார்.

யாழ், முல்லை, கிளிநொச்சியிலும் நல்லிணக்க குழுவின் அமர்வுகள்

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக் குழுவின் விசாரணைகள் அடுத்த மாத நடுப்பகுதியில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் நடைபெறவுள்ளன. பொது மக்களிடம் சாட்சியங்களைப் பெறுவதற்காக திறந்த அமர்வாக இங்கு விசாரணைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆணைக் குழுவின் இணைப்புச் செயலாளர் ஜீ.ஏ. குணவர்தன தெரிவித்தார்.

ஆணைக்குழு முன்னிலையில் பொதுமக்கள் சாட்சியம் அளிப்பதற்கான ஏற்பாடுகளை அந்த மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள் மேற்கொள்வார்கள். எதிர்வரும் செப்டெம்பர் 17 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பொதுமக்களிடம் சாட்சியங்கள் பெறப்படும். அதேவேளை ஒக்டோபர் மாதம் ஒன்பதாந் திகதி முதல் 11 ஆந் திகதி வரை யாழ்ப்பாணத்தில் விசாரணைகள் நடைபெறும்.

ஆணைக் குழு முன் சாட்சியமளிக்க விரும்பும் பொதுமக்கள் குறித்த அரசாங்க அதிபர் அலுவலகத்துடனோ அல்லது ஆணைக்குழுவுடனோ தொடர்புகொள்ளலாமென அறிவிக்கப் பட்டுள்ளது. கொழும்பு- 7, ஹோட்டன் பிளேஸிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் எதிர்வரும் செப்டெம்பர் மூன்றாந்திகதி நடைபெறும் அமர்வில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எம். ஐ. எம். மொஹிதீன், பீ. எம்.டி. பெர்னாண்டோ ஆகியோர் சாட்சியமளிப்பர்.

செப்டெம்பர் ஆறாந்திகதி கலாநிதி அநுர ஏக்கநாயக்க, சுசந்த ரத்னாயக்க, கே.ரி. இராஜசிங்கம் (ஏஷியன் ரிபியூன்) ஆகியோர் சாட்சியமளிப்பார்கள். செப். 13ஆம் திகதி நடைபெறும் விசாரணையில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், மனிக் டி சில்வா, காந்தி நிலையத்தின் ஒரு பிரதிநிதி ஆகியோர் சாட்சியம் வழங்குவார்கள். 15 ஆம் திகதிய விசாரணையில் முன்னாள் சமாதான செயலகத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஜோன் குணரத்ன, அருட் தந்தை துலிப் டி. சிக்கேரா ஆகியோரும் 24 ஆம் திகதி முன்னாள் அமைச்சர் திருமதி பேரியல் அஷ்ரப், மத நிறுவனமொன்றின் பிரதிநிதி ஆகியோர் சாட்சியம் அளிப்பர். 29 ஆம் திகதி பேராசிரியர் அர்ஜுன்அலுவிகார, கலாநிதி சமன், பீ. ஹெட்டிகே ஆகியோர் சாட்சியம் வழங்குவர்.

பெற்ற குழந்தையை அநாதரவாக விட்டு விட்டு தாய் தலைமறைவு. கிளிநொச்சி மருத்துவமனையில் சம்பவம்!

கிளிநொச்சிப் பொது மருத்துவமனையில் பிறந்த குழந்தையொன்று அநாதரவாக கைவிடப்பட்டுள்ளது. இக்குழந்தையைப் பெற்றெடுத்த பெண் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கடந்த 10ம் திகதி மேற்படி மருத்துவமனையில் பிறந்த குந்தையை கைவிட்டு விட்டு அதன் தாய் தலைமறைவாகியுள்ள நிலையில் அக்குழந்தையை அம்மருத்துவமனையின் வைத்தியர்கள். தாதிகள் பராமறித்து வருகின்றனர். இக்குழந்தையைப் பெற்றெடுத்த பெண்ணைத் தேடிக்கண்டு பிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதும், குறித்த பெண் போலியான  பெயர் விபரங்களை மருத்துவமனையில் கொடுத்துள்ளதால் அப்பெணணைத் தேடிக் கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 வறுமை மற்றும், தவறான உறவுகள் காரணமாக தென்னிலங்கைப் பகுதிகளில், பெற்ற குழந்தைகளை கைவிட்டு விட்டு தலைமறைவாகும் பெண்கள் தொடர்பான செய்திகளை அடிக்கடி பார்க்கக் கூடியதாக இருந்த நிலையில் தற்போது போரின் பின்னான சூழலில் வன்னியில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது

இந்தியாவினால் 50 ஆயிரம் வீடுகளைக்கட்டும் பணிகளை இந்திய நிறுவனம் ஒன்றே பொறுப்பேற்றுள்ளது.

வடக்கு மக்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் அமைத்துக் கொடுக்கப்படவுள்ள 50 ஆயிரம் வீடுகளை இந்திய நிறவனம் ஒன்றே பொறுப்பேற்று அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்தியா வடக்கில் அமைப்பதற்கு திட்டமிட்டுள்ள 50 ஆயிரம் வீடுகளுக்கான நிதி நேரடியாக இலங்கை அரசாங்கத்திடம் கையளிப்பது தொடர்பான சாச்சைசகள் இந்திய அரசியல் வட்டாரங்களிலிருந்தும் தமிழக வட்டாரங்களிலிருந்தும் வெளியாகியிருந்த நிலையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

இவ்வீடமைப்பு குறித்து ஆராய குறித்த நிறுவனத்தின் மூன்று பிரதிநிதிகள் நேற்று யாழ்ப்பாணம் வந்திருந்தனர்.   யாழ்ப்பாணத்தில் வீடுகள் அமைக்கவிருக்கும் இடங்களை அவர்கள் நேரில் பார்வையிட்டனர்.

முதற்கட்டமாக யாழ்ப்பாணம் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய பகுதிகளில் ஆயிரம் வீடுகள் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் இரண்டாம் கட்டமாக குறிப்பிட்ட நான்கு மாவட்டங்களிலும் மேலும் ஆயிரம் வீடுகள் கட்டுவதெனவும்,அடுத்ததாக ஏனைய வீடுகளைக் கட்டம் கட்டமாக கட்டுவதெனவும் திட்டமிடப்பட்டுள்ளது.

 இவ்வீடமைப்புக்காக இந்தியா வழங்கும் நிதியைக் கையாளவதற்காக இந்திய வங்கியின் கிளை ஒன்று யாழ்ப்பாணத்தில் விரைவில் திறக்கப்படவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்திய வெளியுறவுச்செயலர் வடபகுதிக்கு விஜயம்.

Nirupama_Raoஇலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிருபமாராவ் எதிர்வரும் 31ம் திகதி செவ்வாய் கிழமை வடபகுதிக்கு விஜயம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெலிகப்ரர் மூலம் இப்பகுதிகளுக்கு செல்லும் இவர் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்து பிற்பகல் 2மணிக்கு யாழ்பாணம் செல்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் துரையப்பா விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வொன்றில் கலந்து கொள்வதோடு, பொது நுலகத்தில் நடைபெறவுள்ள கலந்துரையாடலிலும் அவர் கலந்து கொள்ளவுள்ளார். வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, யாழ்.அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் யாழ்.மேயர் திருமதி யோ.பற்குணராஜா ஆகியோரும் இந்நிழ்வில் கலந்து கொள்ள வுள்ளனர். யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் மீள்குடியமர்வு, ஏற்கனவே மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து இக்கலந்துரையாடலில் முக்கியமாக ஆராயப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பசில் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கூட்டம்.

basil.jpgகிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தலைமை தாங்குவார் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தில் இக்கூட்டம் நiபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும், மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்பான விடயங்கள் என்பன ஆராயப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வரை மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவர்களுக்கு தேவைப்படும் வசதிகள் போன்ற விடயங்களும் இதன்போது ஆராயப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.