தூத்துக் குடிக்கு இன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகட்ஜி அரசு விழா சம்பந்தமாக வருகை தருகிறார்.
இவர் இலங்கை தமிழர்களை காக்க முயற்சி எடுக்கவில்லை என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் பிரணாப்புக்கு கறுப்புக்கொடி காட்ட முடிவு செய்துள்ளனர். இதனால் தூத்துக்குடியில் பதட்டம் நிலவுகிறது. இப்பதட்டத்தை தணிக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
எழுத்தாளர்கள்
எழுத்தாளர்கள்
இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டு திரும்பியுள்ள ஐக்கிய நாடுகளின் மனிதாபிமானத்துறை பிரதிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ் நேற்று தமது விஜயம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். இதன்போது அவர் இலங்கையில் தாம் கவனித்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள அதுவும் இந்த வருட ஆரம்பம் முதல் ஏற்பட்டுள்ள நிலைமை பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாக அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார். படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெறும் யுத்த சூழலில் வன்னியில் அதிகமான மக்கள் சிக்குண்டுள்ளனர். அத்துடன் அங்கிருந்து அவர்களை வெளியேறுவதற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் தடுத்து வருவதற்கான உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளதாக ஹோம்ஸ் தமது உரையின் போது தெரிவித்தார்.
இந்த நிலையில் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள சுமார் 14 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் அவர்கள் தற்போது தங்கியுள்ளனர்.அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்தில் 70 ஆயிரம் மக்களே உள்ளதாக அரசாங்கம் கூறுகிறது. எனினும் ஐக்கிய நாடுகள் சபையும் ஏனைய தமிழ் தரப்புகளும் வன்னியில் 2 லட்சம் முதல் 3 லட்சம் வரையிலான மக்கள் சிக்குண்டுள்ளதாக தெரிவித்துள்ளன. யுத்தத்தினால் அதிகம் பொதுமக்களே அங்கு பாதிக்கப்படுவதாக நம்பப்படுகிறது. எனினும் தன்னார்வு நிறுவனங்கள் மற்றும் ஊடகங்கள் அங்கு செயற்படாமை காரணமாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை பெறமுடியவில்லை. எனினும் நாள் ஒன்றுக்கு குறைந்தது பல பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர்; பலர் காயமடைகின்றனர் எனத் தாம் நம்புவதாக ஹோம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
தமது விஜயத்தின் போது அரசாங்க தரப்பு ஜனாதிபதி மற்றும் முக்கியமான தமிழ்க் கட்சி ஒன்றின் தலைவர் ஆகியோரை சந்தித்ததாகத் தெரிவித்த ஹோம்ஸ், இணைத்தலைமை நாடுகளின் பிரநிதிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியதாகக் குறிப்பிட்டுள்ளார். இடம்பெயர்ந்து வருபவர்களுக்கு மேலும் 400 ஏக்கர் நிலத்தில் தற்காலிக இருப்பிடங்கள் ஒதுக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. தற்போது 25 ஏக்கர் நிலப்பரப்பிலேயே 25 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வன்னியில் இருந்து வெளியேறுவோரை கண்காணிப்பதற்காக ஐ.நாவின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தினரை (UNHCR) அனுமதிப்பது என அரசாங்கம் தம்மிடம் உறுதியளித்துள்ளதாக ஹோம்ஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் இடம்பெயர்ந்த நலன்புரி முகாமில் தங்கியுள்ளவர்களில் 60 வயதுக்கும் மேற்பட்டோரை சுதந்திரமாக நடமாடுவதற்கும் அரசாங்கம் உறுதியளித்துள்ளது. அதேவேளை யுத்தம் முடிவடையும் நிலையில் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்று காணப்படவேண்டும் என தாம் வலியுறுத்தியுள்ளதாகவும் ஹோம்ஸ் குறிப்பிட்டார்.
இலங்கை யில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க இந்திய டாக்டர்கள் குழு செல்லவிருப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சக செயலாளர் விஷ்ணு பிரகாஷ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கைக்கு உடனடியாக முழு அளவிலான அவசரகால மருத்துவ உதவி குழு ஒன்று அனுப்பி வைக்கப்படுகிறது.
மருத்துவர்கள், அறுவைசிகிச்சை நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர்கள், தேவையான மருத்துவ உபகரணங்களுடன் இந்த குழு இலங்கை செல்கிறது. இந்தக் குழுவுக்கு தேவையான உதவிப் பொருட்களும் உடனுக்குடன் இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்கப்படும். வடக்கு மற்றும் கிழக்கு இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுநிர்மாணம் செய்யவும், மறுவாழ்வு அளிக்கவும் இலங்கை அரசுடன் இந்தியா தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை யின் வடக்கே விடுதலைப்புலிகளிடம் எஞ்சியுள்ள கடைசி நகரமாகிய புதுக்குடியிருப்பு பகுதியை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக இலங்கை இராணுவம், ஐந்து படையணிகளை அந்தப் பகுதியில் நடவடிக்கையில் ஈடுபடுத்தியிருப்பதாக இலங்கை இராணுவ தலைமையகம் தெரிவித்திருக்கின்றது.
கடந்த 24 மணிநேரத்தில் புதுக்குடியிருப்பு கிழக்கு, அம்பலவன் பொக்கணை பொதுப் பிரதேசம், சாலை, திருமுறிகண்டி ஆகிய பகுதிகளில் உக்கிர சண்டைகள் இடம்பெற்றதாகவும், அதில் விடுதலைப்புலிகளுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டதாகவும், இராணுவத்தரப்பில் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டதாகவும் இராணுவ தலைமையகம் கூறியிருக்கின்றது.
சென்னை உயர்நீதிமன்றம் முன்பு ஆயுதப்படை காவலர் ரவிக்குமார் என்பவர் நேற்று திடீரென தீக்குளித்தார். இதனால் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல்களுக்கும், போலீஸாருக்கும் இடையே பெரும் கலவரம் மூண்டது. இந்த கலவரத்தில் சிக்கி படுகாயமடைந்தவர் ரவிக்குமார். ஆயுதப்படையில் இவர் காவலராக உள்ளார். கலவர தினத்தன்று இவர் உயர்நீதிமன்றத்திற்கு வெளியே பணியில் இருந்தார். அப்போது வக்கீல்கள் அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். பிளேடுகளால் அவரது உடலில் கீறியதில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது.
சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் ரவிக்குமார். சில நாட்களுக்கு முன்பு அவர் கமிஷனர் அலுவலகத்திற்கு ஆட்டோவில் வந்து வக்கீல்களுக்கு எதிராக கோஷமிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில், நேற்று மாலை, திடீரென உயர்நீதிமன்றத்திற்கு வந்தார். நீதிமன்றத்தின் முன்பாக மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்தார்.அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் ரவிக்குமாரை மீட்டுக் காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர் கொடுத்த வாக்குமூலத்தில், வக்கீல்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள், ஆனால் போலீசாரிடம் ஒற்றுமை இல்லை. போலீசாரும், வக்கீல்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்பது என் ஆசை. ஆனால், தொடர்ந்து எல்லா சம்பவங்களிலும் போலீஸ்காரர்கள் தான் தாக்கப்படுகிறார்கள். போலீஸ்காரர்கள் மீது தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இப்போது ஐகோர்ட்டு சம்பவத்தில் 5 உயர் போலீஸ் அதிகாரிகளை உடனே மாற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு போட்டுள்ளது. ஆனால் கல்வீசி தாக்கிய வக்கீல்கள் மீதும், போலீஸ் நிலையத்தை எரித்த வக்கீல்கள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சட்டம் எல்லோருக்கும் பொதுவானது.
வக்கீல்கள் கல்வீசி தாக்கியதையும், போலீஸ் நிலையத்தை எரித்ததையும் பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் ஆதாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டன. ஆனால், போலீஸ் அதிகாரிகளை மட்டும் மாற்ற வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.
போலீசாருக்கு பாதுகாப்பு கொடுப்பது யார்? என்று தெரியவில்லை. இதனால் மன ரீதியாக நான் வருத்தம் அடைந்தேன். எனது வருத்தத்தை தெரிவிப்பதற்காக தீக்குளித்து உயிரைவிட முடிவு செய்தேன் என்று கூறியுள்ளார் ரவிக்குமார்.
ரவிக்குமாருக்கு தொடை மற்றும் காலில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. போலீஸ்காரர் தீக்குளித்த சம்பவம் சென்னை காவல்துறையில் மேலும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கா சிய பிராந்தியத்தில் பயங்கரவாதிகளின் வன்முறைகளுக்கு எந்தவொரு தனிப் பிரஜயையேனும் பாதிக்கவிடக் கூடாதென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். எனவே, இந்த நெருக்கடிக்கு ஏதுவாக வெவ்வேறாகவும், கூட்டாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தெரிவித்த ஜனாதிபதி, பயங்கரவாதத்திற்கு எதிராகக் கடுமையான செயற்பாடுகளை முன்னெடுப்பதிலிருந்து நாம் தவிர்த்திருக்க முடியாதெனவும் கூறினார்.
தெற்காசிய பிராந்திய நாடுகளின் (சார்க்) வெளிவிவகார அமைச்சர்களின் 31 வது அமர்வு நேற்றுக் காலை (27) 10 மணிக்கு கொழும்பு சிலோன் கொன்ரினன்றல் ஹோட்டலில் ஆரம்பமானது. அமர்வின் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தெற்காசிய பிராந்தியத்திற்கு பயங்கரவாதமும், உலக பொருளாதார நெருக்கடியும் இரண்டு பாரிய சவால்களாகும் என்று தெரிவித்த ஜனாதிபதி, பிராந்தியத்தில் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கு அனைத்து உறுப்பு நாடுகளும் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
“உலக பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட ஸ்திரமற்ற தன்மையானது, எமது பிராந்தியத்திற்குப் பயங்கரவாதத்தால் ஏற்பட்ட அச்சுறுத்தலுக்குச் சமமானதாகும். அபிவிருத்தியடைந்த நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையின் தாக்கத்தை சம காலத்திலோ அல்லது சற்றுக் காலந் தாழ்த்தியோ அனுபவிக்க நேரிடும். எனவே, அந்தந்த நாடுகள் சில முன்னேற்பாடான கொள்கைகளைக் கடைப்பிடிக்கின்றன. நாம் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். உறுதியான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், அது எமது பொருளாதாரத்திலும் மக்களின் வாழ்வாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். உலக பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், நமது பிராந்தியத்தில் பொருளாதாரம் வலுவாகப் பேணப்படுகிறது என்றாலும் முற்றிலும் ஸ்திரமடைந்துவிட்டது என்று கருதிவிட முடியாது.
15 வது சார்க் உச்சி மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட பிரகடனத்தை நடைமுறைப்படுத்துவது பற்றிய மீளாய்வினை செய்வதற்காக சார்க் செயலாளர் நாயகமும், உறுப்பு நாடுகளின் அமைச்சர்களும் எமக்கு பெறுமதிமிக்க ஒரு வாய்ப்பினைத் தந்துள்ளார்கள்.
தெற்காசியாவில் பிராந்திய ஒத்துழைப்பு உயர்ந்த மட்டத்தில் உள்ளது. கடந்த சார்க் உச்சி மாநாட்டைப் போன்று எட்டு உறுப்பு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயற்படுவதில் பற்றுறுதியுடன் உள்ளன. மிகவும் விரிவான மட்டத்தில் பிராந்திய ஒத்துழைப்பைக் கட்டியெழுப்பக்கூடிய வல்லமை எமது மக்களிடம் உண்டு. ஆனால், அதனை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள நாம் தவறியிருக்கிறோம்.
தேசிய மற்றும் பிராந்திய ரீதியிலான அபிவிருத்திக்குத் தேவையான வல்லமை நிறைந்த மக்கள் வாழும் கிராமப்புறங்களை நாம் ஒதுக்கிவிடக் கூடாது. வலுசக்தி, சுற்றாடல், நீர்வளம், வறுமையொழிப்பு, தகவல் தொடர்பாடல் அபிவிருத்தி, விஞ்ஞான தொழில் நுட்பம், சுற்றுலாத்துறை, கல்வி, பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து கடந்த உச்சி மாநாட்டில் நாம் கவனம் செலுத்தினோம்.
சார்க் உணவு வங்கியை ஸ்தாபித்தல், கொழும்பு பிரகடனத்தை நடைமுறைப்படுத்தல் போன்றவற்றை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அவ்வாறு இணக்கப்பாடு காணப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டத்திற்கு நாம் வந்துள்ளோம். நாம் வாழ்கின்ற சமூகத்தில், நகரத்தில், கிராமப்புறங்கள் உள்ளிட்ட பகுதிகளில் எமது மக்கள் அச்சமும் பீதியும் இன்றி வாழக்கூடிய சூழலைத் தோற்றுவிக்க வேண்டும்.
ஜனநாயகத்துக்கு மதிப்பளிப்பதுடன், பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தாம் இங்கு குறிப்பிட்டுக் கூறிய இரண்டு சவால்களையும் எதிர்கொள்வதற்கான செயற்பாடுகளைப் பரிந்துரைப்பதுடன், அதனை சர்வதேச மட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கான யோசனைகளை முன்வைக்குமாறு சார்க் வெளிவிவகார அமைச்சர்களிடம் கேட்டுக் கொள்வதாகக் கூறினார்.
நேற்று ஆரம்பமான சார்க் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டுக்கு வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம தலைமை தாங்கினார். அவர் வரவேற்புரை நிகழ்த்தியுடன், செயலாளர் நாயகம் கலாநிதி ஷர்மாவும் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றினார்.
நேற்று ஆரம்பமான நிகழ்வில், பங்களாதேஷ், பூட்டான், மாலைதீவு, நோபாளம் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும், இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் பிரதி வெளிவிவகார அமைச்சர்களும் கலந்து கொண்டனர். சார்க் வெளிவிவகார அமைச்சர்களின் 31 வது அமர்வு இன்று (28) மாலை நிறைவடைவதுடன் மேற்கொண்ட தீர்மானங்களும் அறிவிக்கப்படும்.
புதுக் குடியிருப்பில் அம்பலவன் பொக்கணை, மற்றும் முள்ளியவளை, சாலை ஆகிய பகுதிகளில் தேடுதல் நடத்தி வரும் படையினர் பெருந்தொகை ஆயுதங்களை கைப்பற்றியுள்ளனர். இதேவேளை புலிகளின் முக்கியஸ்தர்கள் பயன்படுத்தி வந்த பங்கர்களையும் படையினர் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார கூறினார்.
இதேவேளை, படையினர் நேற்றுமுன்தினம் மாலை புதுக்குடியிருப்புப் பகுதியில் மேற்கொண்ட தாக்குதலில் புலிகளின் முக்கிய தலைவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர் பயணித்த வாகனம் படைகளின் தாக்குதலுக்குள்ளாகி முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-
விடுதலைப் புலிகள் தற்போது பெரும் ஆயுதப் பற்றாக்குறைக்கும் ஆட்பற்றாக்குறைக்கும் முகம்கொடுத்து வருகின்றனர். அண்மைக் காலமாக இடம்பெற்று வரும் மோதல்களில் பெருமளவான விடுதலைப்புலி உறுப்பினர்கள் பலியாகியுள்ளதுடன், இராணுவத்தினர் புலிகளின் பெருமளவு ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
புலிகளின் உளவுத்துறைத் தலைவர் உட்பட தலைவர்கள் மட்டத்திலுள்ள சகலரும் களமுனைக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னேறிச் செல்லும் படையினரின் தாக்குதலுக்கு முகங்கொடுக்க முடியாத புலிகள் புதுக்குடியிருப்புப் பிரதேசத்தின் காட்டுப் பகுதிக்குள் தப்பியோடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய, வட மேல் மாகாண முதலமைச்சர்கள் மற்றும் இரு மாகாண சபைகளுக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ள அமைச்சர்களும் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
மத்திய மாகாண முதலமைச்சராக சரத் ஏக்கநாயக்கவும் வடமேல் மாகாண முதலமைச்சராக அதுல விஜேசிங்கவும் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதுடன் இந் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்றது.
மத்திய மாகாண முதலமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட சரத் ஏக்கநாயக்க அம்மாகாண சபையின் நிதி, திட்டமிடல், சட்டம் ஒழுங்கு, உள்ளூராட்சி மற்றும் மாகாண நிர்வாகம், மனிதவலு, கல்வி கலாசாரம், உல்லாசத்துறை, போக்குவரத்து, காணி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு பாதுகாப்பு விநியோகம் மற்றும் முதலீட்டு இணைப்பு அமைச்சராகவும் பதவியேற்றுள்ளார்.
வடமேல் மாகாண முதலமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட அதுல விஜேசிங்க அம்மாகாணத்தின் நிதி திட்டமிடல், சட்டம் ஒழுங்கு, உள்ளூராட்சி மற்றும் மாகாண நிர்வாகம், மனித வலு, கல்வி மற்றும் கலாசார அலுவல்கள், காணி, போக்குவரத்து, சூழல், சுற்றுலாத்துறை, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு பாதுகாப்பு மற்றும் விநியோகம் மற்றும் முதலீட்டு இணைப்பு அமைச்சராகவும் பதவியேற்றுள்ளார்.
மத்திய மாகாண சுகாதாரம், சுதேச மருத்துவம் சமூக நலன்புரி, சிறுவர் நன்னடத்தைச் சேவை அமைச்சராக எதிரிவீர வீரவர்தனவும், விவசாயம், சிறுநீர்ப்பாசனம், கால்நடை அபிவிருத்தி கமநல அபிவிருத்தி, சூழல், சமுத்திர வள அமைச்சராக நிமல் பியதிஸ்ஸவும், நெடுஞ்சாலை அபிவிருத்தி, மின்வலு எரிசக்தி, வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராக பந்துல யாலேகமவும், கைத்தொழில் விளையாட்டுத் துறை, மகளிர் விவகாரம், கிராமிய அபிவிருத்தி, தோட்ட உட்கட்டமைப்பு, இந்து கலாசாரம், கல்வி, இளைஞர் விவகார அமைச்சராக வீ. இராதாகிருஷ்ணனும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
வடமேல் மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி மற்றும் அபிவிருத்தி, சிறு நீர்ப்பாசனம், கமநல அபிவிருத்தி அமைச்சராக கே. டபிள்யூ. சாந்த பண்டாரவும், சமூக நலன்புரி சிறுவர் நன்னடத்தை மகளிர் விவகாரம் கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி, மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சராக நிரஞ்சன் விக்கிரமசிங்கவும், நெடுஞ்சாலை அபிவிருத்தி, மின்வலு, வீடமைப்பு நிர்மாணத்துறை கடற்றொழில் அமைச்சராக அருன்திக பெர்னாண்டோவும் சுகாதார, சுதேச மருத்துவ, விளையாட்டு, இளைஞர் விவகார அமைச்சராக அசோக வடிமங்காவவும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சகல மாகாண சபை பிரதிநிதிகளும் தம்மைத் தெரிவு செய்த மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற தம்மை அர்ப்பணிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
நேற்று நள்ளிரவு முதல் சமையல் எரிவாயுவின் விலைகள் மேலும் குறைக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி 12.5 கிலோ கிறேம் கொண்ட லாப் எரிவாயு சிலிண்டர் ஒன்று 334 ரூபாவினாலும் ஷெல் எரிவாயு சிலிண்டர் ஒன்று 310 ரூபாவினலும் குறைக்கப்படும்
கூட்டுறவு மொத்த விற்பனை தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை அறிவித்தார் கடந்த ஆறு மாத காலத்துக்குள் லாப் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை 790 ரூபாவினாலும் ஷெல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை 554 ரூபாவினாலும் அரசாங்கம் குறைத்துள்ளதாகவும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.
வவுனியா நிவாரணக் கிராமங்கள், இடைத் தங்கல் முகாம்களில் சின்னம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கென பூவரசன் குளம் அரசினர் வைத்தியசாலை ஒதுக்கப்பட்டுள்ளதுடன், நேற்று வரை அங்கு சுமார் 143 நோயாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், மேலதிக மருந்துகள், தாதியர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
புலிகளின் பிடிக்குள் சிக்கியிருந்த பொது மக்கள் பல நாட்களாக காட்டுக்குள் ஒளிந்தும், புழுதியில் படுத்துறங்கியும், நீராட வசதியின்றியுமே அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வந்தனர். இதனால், அவர்களுக்கு சின்னம்மை வைரஸ் தொற்றியுள்ளது. முகாம்களுக்குள் வந்தவுடனேயே சின்னம்மை வைரஸ் தலைதூக்கியிருக்கலாம் என சுகாதார அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் இவர்களை முகாம்களில் வைத்திருக்காமல் வேறுபடுத்தி வவுனியா பூவரசன்குளம் அரசினர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர் என்றும், தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக வவுனியா பூவரசன்குளம் அரசினர் வைத்தியசாலை பொறுப்பதிகாரி தெரிவிக்கையில், சின்னம்மையினால் பாதிக்கப்பட்ட 143 நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என வைத்தியசாலையில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் நோயாளர்களை தங்கவைக்க தற்காலிக கொட்டகைகளை அமைக்க மாவட்ட செயலகத்தின் அனுமதி கிடைத்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வன்னி பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்து நலன்புரி நிலையங்களில் வசித்தவர்கள்.
வவுனியாவில் பகலிலும் இரவிலும் கடும் வெப்பமான காலநிலை உள்ளது. கூடாரங்களிலும், தகர கொட்டகையிலும் தங்கியுள்ள மக்களே சின்னம்மை நோய்க்கு இலக்காகிவருகின்றனர் எனவும் செட்டிகுளம் வைத்தியசாலையிலும் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட மக்கள் அனுமுதிக்கப்பட்டுள்ளனர்.
தடுப்பு நடவடிக்கைகள் யாவும் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சுகாதார அமைச்சிலிருந்து வவுனியாவிற்கு வந்துள்ள மருத்துவ குழுவினர் நிவாரணக் கிராமங்களில் தமது பணிகளை மேற்கொண்டுள்ளனர். தொற்று நோய்கள் பற்றிய விழிப்புணர்வை பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்டுள்ளனர்.

