ஜெயபாலன் த

ஜெயபாலன் த

தமிழ் செய்தியாளர் மாநாடு 2010 ஒரு பார்வை: த ஜெயபாலன்

IATAJ Conference 2010 - Audienceதமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் இரண்டாவது மாநாடு ஒக்ரோபர் 23ல் லண்டனில் வெஸ்ற்மினிஸ்ரர் பல்கலைக்கழகத்தின் ஹரோ கம்பஸில் இடம்பெற்றது. ‘உலகமயமாகி உள்ள உலகில் தமிழர் பிரச்சினையும் ஊடகங்களும்’ என்ற தலைப்பில் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. ( லண்டனில் வன்னிப் போரில் மக்களை பணயம் வைத்த தமிழ் ஊடகங்களின் 2010 மாநாடு! – அருள் சகோதரர் எழிலனும் ஒரு பேச்சாளர்! : த ஜெயபாலன் ) இந்த மாநாடு இரு அமர்வுகளாக ஒன்றில் பிரச்சினையான விடங்களையும் இரண்டாவதில் ஊடகக் கொள்ளளவு பற்றியும் ஆராய்ந்தது.

இந்த மாநாடு துரதிஸ்டமாக உலகத் தமிழ் சமூகத்தை பல்வகைப்பட்ட மக்கள் குழு என்று கூறிய போதும் இதில் உள்ள இருபெரும் பிரிவு இந்திய – இலங்கை தமிழ் சமூகங்கள் என்ற அளவிலே மட்டுமே பார்க்கப்பட்டது. தமிழ் மக்களுக்குள் உள்ள பன்முகத்தன்மையை புரிந்துகொள்வதில் இருந்து இந்த மாநாடு வெகுதொலைவிலேயே இருந்தது. அதனால் பிரச்சினையான விடயங்கள் என்று ஆராயப்பட்ட ‘பார்வைக்குத் தெரியாதவை – மறக்கப்பட்டவை – கைவிடப்பட்டவை’ என்ற அம்சங்கள் வெறுமனே சர்வதேச ஊடகங்கள் இலங்கைத் தமிழர்களுடைய பிரச்சினையை ஏன் கவனத்தில் கொள்ளவில்லை என்பதன் அடிப்படையிலேயே பார்க்கப்பட்டது.

Mayooran_Vevegananthanஇப்பார்வையானது இம்மாநாட்டின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட அடிப்படைத்தவறு. தமிழ் சமூகம் பன்மைத்துவ சமூகம் என்பதனையோ ஏனைய சமூகங்கள் போன்று தமிழ் சமூகமும் பன்மைத்துவமான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றது என்பது பற்றியோ இம்மாநாடு கவனம் செலுத்தத் தவறியது. ‘யூரொப்’ ஆசிரியர் மயூரன் மட்டுமே இவ்விடயத்தைத் தொட்டுச் சென்றிருந்தார். ஆனாலும் ரமேஸ் சுட்டிக்காட்டியது போல் ‘வெளியிலும் சிந்தனையிலும் தனியதான வலயமாக்கப்பட்டு’ உண்மைகளை வெளிப்படுத்துவது கடினமானதாகவே இருந்தது. இலங்கைத் தமிழ் சமூகத்தை ஒற்றைப் பரிமாணம் கொண்ட சமூகமாகவும் எது எதிர்கொள்கின்ற பிரச்சினையும் ஒற்றைப்பரிமாணம் கொண்டது என்ற வகையிலுமேயே இந்த மாநாடு பிரச்சினைகளை அணுகியது.

வி தேவராஜா, வினோதினி கணபதிப்பிள்ளை, ஆனந்தி சூரியப்பிரகாசம், அருள்எழிலன் ஆகியோரின் பேச்சுக்கள் மே 18 2009யை நோக்கி தமிழ் மக்களை வழிநடத்திய அதே கருத்தியல் – புலியியல் அம்சங்களின் பாதிப்பில் இருந்து இன்னமும் விடுபட்டு இருக்கவில்லை என்பதனையே காட்டியது. வன்னிப் போரில் மக்களைப் பணயம் வைத்த இந்த ஊடகங்கள் அது பற்றிய எவ்வித மீளாய்வும் இன்றி சர்வதேச ஊடகங்கள் தமிழ் மக்களைப் புறக்கணிப்பதாக குற்றச்சாட்டுக்களை வைத்தன. தமிழ் ஊடகங்களின் நம்பகத்தன்மை கேலிக் கூத்தாகி ஊடகத்தின் அடிப்படை விதிகளையே கைவிட்டு வெறும் பொய் பிரச்சார ஊடகங்களாக ஆன பின்னர் வினோதினி கணபதிப்பிள்ளை தமிழ் ஊடகங்களின் நம்பகத்தன்மையைப் புகழ்ந்து கொண்டார். மயூரனின் சேரனனின் மேலோட்டமான மிக மென்மையான விமர்சனங்களைக் கூட வினோதினி ஏற்றுக்கொள்ள முடியாதவராகவே காணப்பட்டார்.

இம்மாநாட்டில் தமிழ் ஊடகங்கள் என்று பொதுப்படையாகப் பேசப்பட்டாலும் இம்மாநாடு முற்றிலும் புலியியலுக்கு ஆதரவான ஊடகங்களின் மாநாடே. இங்கு தமிழ் ஊடகங்கள் எனும் போது புலி ஆதரவு ஊடகங்களையே அது குறித்து நின்றது. மேலும் இம்மாநாட்டு அமைப்பாளர்களாக பேச்சாளராக கலந்துகொண்டவர்களில் அம்ரித் லால், ஹீதர் பிளேக், ரமேஸ் கோபாலகிருஸ்ணன் தவிர்ந்த அனைவருமே வேறு வேறு காரணங்களுக்காக புலியியல் கருத்தை ஏற்றுக்கொண்டவர்களாகவே இருந்தனர். இவர்களில் அருள்எழிலன் ஒருபடி மேலே சென்று, ‘விடுதலைப் புலிகளே தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்கள். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் நிறையவே இருக்கின்றது. நான் (புலிகளைத் தவிர) யாருக்கும் விலை போக மாட்டேன்’ என்று உறுதிமொழியும் எடுத்துக்கொண்டார்.

புலியியல் கருத்தியல் மீதோ அதனை மணம் முடித்த ஊடகங்கள் பற்றியோ காத்திரமான விமர்சனமோ மதிப்பீடோ மேற்கொள்ளப்படாமலேயே இம்மாநாடும் முடிவடைந்தது. 2008ல் இடம்பெற்ற மாநாடும் எவ்விதமான சாதகமான பாதிப்பையும் அந்த ஊடகங்களில் ஏற்படுத்தவில்லை. மாறாக எதிர்மறைவிளைவையே அது ஏற்படுத்தியது. தமிழ் தேசியத்தின் பெயரால் உண்மையை மறைக்கவும் பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொள்வதிலும் இந்த ஊடகங்கள் முன்நின்றன. மே 18 2009 விளைவுகளுக்கு இந்த ஊடகங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. இவற்றில் இருந்து எவ்வித படிப்பினைகளும் இன்றி 2010 மாநாடு நடந்து முடிந்துள்ளது. மீண்டும் தமிழ் தேசியத்தின் பெயரால் ஒரு குடையின் கீழ் அணிசேர அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியமும் இந்த மாநாட்டின் பெரும்பாலான பேச்சாளர்களும் மட்டுமல்ல இதில் கலந்து கொண்டவர்களுமே ஒற்றைப்பரிமாண புலியியல் அரசியலைக் கொண்டவர்களே. சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியமும் மாநாடும் ஒரு பேப்பர், தமிழ் கார்டியன், ஜரிவி என்பனவற்றைச் சுற்றியே இருந்தது. 2008ல் ரிரிஎன் இருந்த இடத்தை தற்போது ஜீரிவி மாற்றீடு செய்ததைத் தவிர குறிப்பிடப்படும் படியான மாற்றங்கள் இருக்கவில்லை.

Nimalan_and_Kaviபத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி வாசிப்போர், கேட்போர், பார்ப்போர் அவற்றில் வந்து கருத்துச் சொல்வோர், தேவாரம், கவிதை பாடுவோர் எல்லோரும் ஊடகவியலாளர் என்றால் இம்மாநாட்டில் கலந்து கொண்ட அனைவருமே ஊடகவியலாளர்கள். ஆனால் முழுநேரமாகவோ பகுதிநேரமாகவோ சுயாதீனமாகவோ ஊடகத்துறையில் பணியாற்றுபவர்கள் என்ற அடிப்படையில் பார்த்தால் கலந்துகொண்ட 100 வரையானவர்களில் 10 வீதமானவர்கள் கூட ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் அல்லர். கலந்துகொண்டவர்களில் ஊடகவியலாளர்களிலும் பார்க்க நாடுகடந்த தமிழீழப் பாராளுமன்றப் பிரதிநிதிகளும் அத்தேர்தலில் போட்டியிட்டவர்களும் அதிகம். தேசம்நெற், லண்டன் குரல் ஆசிரியர் குழுவில் இருந்து த ஜெயபாலனும் ரிபிசி பணிப்பாளர் வி ராம்ராஜ் உம் மட்டுமே இம்மாநாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மாற்றுக் கருத்துடைய தளத்தில் இருந்து பங்குபற்றி இருந்தனர். சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் என்றும் அதன் மாநாடு என்றும் ஏற்பாடு செய்யப்படும் போது லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்குகின்ற பிபிசி தமிழோசை, தீபம் தொலைக்காட்சி, சண்றைஸ் வானொலி, காலைக்கதிர், புதினம் போன்ற ஊடகங்களின் ஊடகவியலாளர்களே கலந்துகொள்ளவில்லை. இம்மாநாட்டில் இருந்த பல்வேறு பலவீனங்களில் இதுவும் முக்கியமான பலவீனமாகும்.

சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் அதன் பெயருக்கேற்ற சர்வதேச தமிழ் ஊடகப் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருக்கவில்லை. தமிழ் மக்களினதும் ஊடகங்களினதும் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கவில்லை. இதே போக்கில் மற்றுமொரு மாநாட்டை 2011ல் நிகழ்த்துவது அர்த்தமற்றது. coperate நிறுவனங்களின் பிடியில் உள்ள ஊடகங்களை விடுவிக்க றடிக்கல் லிபரல் டெமொகிரசியைக் உருவாக்கக் கேட்கும் சேரன் புலி ஆதரவுப் பிடியில் இருக்கும் இந்த தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தை விடுவித்து தமிழ் ஊடகங்களின் பன்முகத்தன்மைக்கு வழிவிட முயற்சிப்பது யதார்த்தமானதாகவும் பயன்மிக்கதாகவும் இருக்கும்.

தமிழ் ஊடகங்கள் பல்வேறு விடயங்களில் குறைநிலையில் இருப்பதை சரியாகவே இனம் கண்ட சேரன் தான் வழங்கிய நீண்ட presentationல் குறைந்தபட்ச தொழில்நுட்பத்தைக் கூடப் பயன்படுத்தவில்லை. குறைந்தபட்சம் தனது உரையை கணணிப்படுத்தி அதன் பிரதிகளைக் கூட வழங்கவில்லை. இது சேரனின் தவறு மட்டுமல்ல இந்நிகழ்வை ஏற்பாடு செய்தவர்களதும் தவறு. 10க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் வழங்கிய அத்தனை பேச்சுக்களையும் பார்வையாளர்கள் முழுமையாகக் கிரகித்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்க முடியாது. அதனால் அவர்களுடைய உரைகளை முன்னதாகவே பெற்று அவற்றினை நூலாகவோ அல்லது பிரதிஎடுத்தோ பார்வையாளர்களுக்கு வழங்கி இருக்க வேண்டும். குறைந்தபட்சம் எவ்வித செலவும் இன்றி மின் அஞ்சல் மூலமாகவோ அல்லது தங்கள் இணையத்திலோ பிரசுரித்து இருக்கலாம். கடந்த மாநாட்டிலும் இந்நடைமுறை கடைப்பிடிக்கப்படவில்லை. இம்மாநாட்டிலும் கடைப்பிடிக்கப்படவில்லை. எதிர்வரும் காலங்களில் ஏற்பாட்டாளர்கள் இது பற்றிக் கூடியகவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பல்வேறு விமர்சனங்கள் இருந்த போதும் இவ்வாறான ஊடக அமைப்பு ஒன்று அவசியமானது. அதற்கான முன்முயற்சியை எடுத்துக் கொண்டமைக்காக சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் பாராட்டப்பட வேண்டும். அவர்கள் முன் பலதடைகள் உள்ளது. அதனைத் தாண்டுவதற்கு இளமைத் துடிப்பும் புதிய சிந்தனையும் உத்வேகமும் உடைய மயூரன் விவேகானந்தன் போன்ற இளம்தலைமுறை ஊடகவியலாளர்கள் சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் முக்கிய பொறுப்புகளுக்கு வரவேண்டும். இம்மாநாட்டில் ஊடகவியலாளர்கள் தங்களை இணைத்துக்கொள்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. எவ்வாறான முரண்பாடுகள் இருந்தபோதும் ஊடகவியலாளர்கள் தங்களை இவ்வமைப்புடன் இணைத்துக் கொள்வதும் இவ்வமைப்பு ஜனநாயக அடிப்படையில் செயற்படுவதை உறுதிப்படுத்துவதும் தமிழ் ஊடகங்களினதும் ஊடகவியலாளர்களினதும் கடமையும் கூட.

சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் 2010 மாநாடு

சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் செயலாளர் கோபி ரட்ணத்தின் வரவேற்புரையுடன் மாநாடு ஆரம்பமானது. இரு அமர்வுகளாக இந்நிகழ்வு இடம்பெற்றது.

Panel_01‘பார்வைக்குத் தெரியாதவை – மறக்கப்பட்டவை – கைவிடப்பட்டவை’ என்ற விடயங்கள் முதல் அமர்வில் ஆராயப்பட்டது. ‘உலகமயமாகி உள்ள உலகில் தமிழ் தேசியப் பிரச்சினையும் ஊடகங்கள் எதிர்கொள்ளும் சவாலும்’ என்ற தலைப்பில் வி தேவராஜா உரையாற்றினார். றோஹித பாசன அபயவர்த்தன மாநாட்டில் தொலைத் தொடர்பு மூலமாக கருத்துக்களை முன் வைத்தார். ‘ரைம்ஸ் ஒப் இந்தியா’ பத்திரிகையின் இலங்கைப் பிரிவுக்கான பொறுப்பாளர் அம்ரித் லால் ஆகியோர் இவ்வமர்வில் உரையாற்றினர். (நிகழ்வுக்கு காலதாமதமாகிச் சென்றதால் இவர்களின் உரைபற்றிய குறிப்பை எடுக்கவில்லை.)

Heather_Blakeஎல்லைகளற்ற செய்தியாளர் அமைப்பு:
எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பின் சார்பில் ஹீத்தர் பிளேக், ‘இலங்கையில் வன்முறைகள் குறைந்திருக்கின்றது. ஊடகவியலாளர்களின் தரவரிசையில் இலங்கை முன்னேறி இருக்கின்றது. ஆனாலும் வழமையான சூழலில் இருந்து இலங்கை வெகு தொலைவில் இருக்கின்றது’ எனத் தெரிவித்தார்.

ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்த இலங்கை பின்வரும் விடயங்களைக் கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டினார்:
1. காணாமல் போன ஊடகவியலாளர்கள் பற்றி விசாரணை மேற்கொள்ள வேண்டும்
2. 2000 ஆண்டு முதல் 25 ஊடகவியலாளர்கள் வரை கொல்லப்பட்டு உள்ளனர். அவர்களின் கொலைகள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
3. ஊடகவியலாளர்கள் சித்திரவதைக்கு உள்ளாவது நிறுத்தப்பட வேண்டும்.
4. ஊடகவியலாளருக்கு எதிரான வன்முறைகள் மற்றும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.
5. ஊடக சுதந்திரத்தைப் பாதிக்கின்ற சட்டவிதிகள் நீக்கப்பட வேண்டும்.
6. ஆயுதக் குழுக்களிடம் இருந்து ஆயுதங்கள் களையப்பட வேண்டும்.

Ramesh_Gopalkrishnanரமேஸ் கோபாலகிருஸ்ணன்:
முன்னாள் பிபிசி ஊடகவியலாளரும் சர்வதேச மன்னிப்புச் சபையின் இந்தியப் பிரிவுக்குப் பொறுப்பானவருமான ரமேஸ் கோபாலகிருஸ்ணன் ‘மாறுபட்ட கூறுகளின் சேர்க்கை உங்களுடைய உலகங்கள் – ‘ என்ற தலைபில் உரையாற்றினார். ‘நான் உங்களுடைய தலைவர்களின் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் கண்டவன். நான் சென்னையில் ஊடகவியலாளராக இருந்த போது நேர்கண்டவர்கள் பலர் இப்போது இல்லை. எல்லாம் மைனஸாகிக் கொண்டு வருகின்றது’ என்றார் ரமேஸ்.

‘வெளியிலும் சிந்தனையிலும் தனியதான வலயமாக்கப்பட்டு’ இருப்பதைச் சுட்டிக்காட்டிய ரமேஸ் ‘உண்மைகள் ஒழிந்திருக்கின்றது. அதனைச் சொல்வது கடினமாக உள்ளது’ எனத் தெரிவித்தார். ‘இன்றைய உலகில் தமிழர்களுக்கு நண்பர்கள் எவரும் இல்லை’ என்பதைச் சுட்டிக்காட்டிய அவர் தனக்கு நடந்து முடிந்த யுத்தம் தொடர்பாக இலங்கை அரசு மீதும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும் விமர்சனங்கள் உண்டென்பதை அங்கு வெளிப்படுத்தினார்.

தமிழ் ஊடகங்கள் பற்றிக் குறிப்பிட்ட அவர் எப்போதுமே செய்திகளை சூடாகவே வழங்கிப் பழக்கப்பட்டு உள்ளது என்றும் இதமாக செய்திகள் வழங்கப்படுவதில்லை என்றும் செய்திகளின் உள்ளடக்கம் சூடானதாகவே அமைக்கப்படுவதாகவும் தெரிவித்தார். அதனால் செய்திகள் பற்றிய உள்ளடக்க மதிப்பீடு குறைந்ததாகவே காணப்படுவதாகவும் கூறினார்.

இந்திய ஊடகங்களின் போக்கை ஆராய்ந்த ரமேஸ் இந்திய ஊடகங்கள் ஈழப்பிரச்சினை பற்றி மட்டுமல்ல காஸ்மீர் பிரச்சினையிலும் மேம்போக்கான ஒரு நிலையையே கொண்டிருப்பதாகக் குற்றம்சாட்டினார். இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் போது 2 மில்லயன் மக்கள் கொல்லப்பட்டதைக் குறிப்பிட்ட ரமேஸ் இந்திய அரசியல் அமைப்பில் இந்தியா பிறந்து சொல்லப்பட்டு உள்ளது ஆனால் எவ்வாறு பிறந்தது என்பதும் அதன் வலியும் சொல்லப்படவில்லை என்றார். அவர் தொடர்ந்தும் கூறுகையில் ‘இந்திய அரசியல் அமைப்பு வரலாற்றை மறந்துவிட்டது’ எனத் தெரிவித்தார். தமிழ், காஸ்மீர் வரலாறுகளும் அவ்வாறே ஆகும் என்பதை அவர் உணர்த்திச் சென்றார்.

கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த ரமேஸ் இலங்கைக்கும் இந்தியாவிற்குமான வர்த்தகத் தொடர்புகள் அதிகரித்து இருப்பதையும் இந்திய முதலாளிகள் பாரிய முதலீடுகளைக் கொண்டிருப்பதையும் சுட்டிக்காட்டினார். தற்போது இலங்கையின் பெற்றோலியச் சந்தையை நடாத்துகின்றவை இந்திய நிறுவனங்களே என்பதைச் சுட்டிக்காட்டிய ரமேஸ், இந்தியாவால் பங்களாதேஸ் இலங்கை போன்ற நாடுகளையே வாங்க முடியும் என்பதையும் சுட்டிக்காட்டினார். இவ்வாறான தமிழகத்தில் உள்ள முதலீட்டாளர்களும் தமிழ் தலைநகரத்தில் இருப்பதாகக் கருதுவதில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர், இவர்கள் உல்லாசப் பயணமாக இலங்கை செல்வதையும் குறிப்பிட்டார். முதலீடுகள் தேசிய எல்லைகளை மீறி பரந்து விரிவதை அவர் அங்கு சுட்டிக் காட்டினார்.

Panel_02‘உணர்நிலை – புதுமைகள் – கொள்ளளவு’ என்ற தலைப்பில் இடம்பெற்ற இரண்டாவது அமர்விற்கு சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் துணைத் தலைவரும் ஜிரிவி நிகழ்ச்சி வழங்கனருமான தினேஸ் குமார் தலைமை தாங்கினார்.

மயூரன் விவேகானந்தன்:
‘ஊடக வெளியை விரிவுபடுத்தல்’ என்ற தலைப்பில் மயூரன் விவேகானந்தன் தனது ஊடக அனுபவங்களினூடாக விடயங்களைப் பகிர்ந்து கொண்டார். நோர்வேயில் இருந்து வெளியாகும் பல்கலாச்சார இதழான ‘யூரொறப்’ இன் ஆசிரியரான இவர் தமிழ் ஊடகத்துறை எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் வெளியிட்டார். ‘தமிழில் எழுதுபவர்கள் மட்டுமல்ல தமிழ் தவிர்ந்த மொழிகளில் எழுதபவர்களும் தமிழ் ஊடகவியலாளர்களே’ என்றும் நோர்வேஜிய மொழியில் எழுதும் தானும் ஒரு தமிழ் ஊடகவியலாளனே எனத் தெரிவித்தார். இளம்தலைமுறை எழுத்தாளரான இவர் தனக்கான புளொக் ஒன்றை ஆரம்பித்து எழுதத் தொடங்கி, தற்போது ‘யூரொப்’ இதழின் ஆசிரியராக வளர்ந்துள்ளார். ஏனைய நாடுகளில் உள்ள ஊடகவியலாளர்களும் தங்கள் நாடுகளில் உள்ள ஊடகங்களில் இணைந்து பணியாற்றுவதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

தங்கள் ஊடகத்தில் அரிதாகவே இலங்கைப் பிரச்சினைகள் பற்றி எழுதுவதாகத் தெரிவித்த அவர், தமிழ் ஊடகங்கள் இலங்கைப் பிரச்சினையை எழுதுகையில் பிரச்சாரத் தன்மையுடன் எழுதுவதாகத் தெரிவித்தார். உண்மைகளிலும் பார்க்க பிரச்சாரம் மேலோங்கும் போது அவை தரமற்றுப் போவதை மயூரன் சுட்டிக்காட்டினார். சார்பு நிலையற்று உண்மைகளை வெளிப்படுத்துவதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

மயூரன் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், தமிழ் ஊடகங்களில் இந்த அரங்கிலும் கூட பெண்களின் பங்குபற்றுதல் மிகக் குறைவாகவே காணப்படுவதைச் சுட்டிக்காட்டிய மயூரன் சர்வதேச செய்தியாளர் ஒன்றியம் போன்ற ஊடக அமைப்புகளிலும் பெண்களின் பங்குபற்றுதல் அவசியம் என்பதை வலியுறுத்தினார்.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கான கருத்துக் கணிப்பை தங்கள் ஊடகமே முன்னின்று மேற்கொண்டதைச் சுட்டிக்காட்டிய அவர் இவ்வாறு உண்மைகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் செயற்பாடுகள் ஊடகங்களுக்கு அவசியம் என்றார்.

மேலும் தமிழ் ஊடகங்கள் உலகின் பல்வேறு பாகங்களில் இருந்து வந்தாலும் அவை எப்போதும் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகள் பற்றிய செய்திகளை மட்டுமே தாங்கி வருவதாகத் தெரிவித்த அவர், தங்கள் நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சினைகளைக் கவனிப்பதில்லை எனத் தெரிவித்தார். தாயகச் செய்திகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் சமூகப் பிரச்சினை தொடர்பான செய்திகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Cheranபேராசிரியர் சேரன்:
‘உலகமயமாக்கல் காலத்தில் ஜனநாயகம், தொழில்நுட்பம், மாற்று ஊடகம்’ என்ற தலைப்பில் பேராசிரியர் சேரன் உரையாற்றினார். உலகமயமாக்கலில் ஊடகங்கள் பெரும் ஸ்தாபனங்களினால் கட்டுப்படுத்தப்படுவது பற்றியும், அவையே தீர்மானிக்கின்ற சக்தியாக அமைவதையும் சேரன் சுட்டிக்காட்டினார். தொழில்நுட்பத்தின் விளைவாக உருவான இணையங்களும் ஏனைய தொழில்நுட்ப அம்சங்களும் கூட பெரும் ஸ்தாபனங்ககளின் நோக்கங்களுக்கே சேவகம் செய்வதாக சேரன் குற்றம்சாட்டினார்.

தற்போதுள்ள லிபரல் ஜனநாயகம், தனிமனித உரிமைகள், மேற்கின் நடைமுறை என்பன உண்மையான ஜனநாயகத்தை வெளிப்படுத்தவில்லை எனக் கூறிய சேரன் நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவுகள் மனித உரிமைகளுடன் சமரசம் செய்யப்படுவதையும் சுட்டிக்காட்டினார்.

இவற்றில் இருந்து விடுபடுவதற்கு புதிய மாற்றத்துடனான லிபிரல் ஜனநாயகத்தின் அவசியத்தை சேரன் வலியுறுத்தினார். இவ்வாறான ஒரு ஜனநாயகப் பண்பே உண்மையான சுதந்திரம், சமத்துவம் வேறுபாடுகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவம், மாற்றுக் கருத்து, மேலாதிக்கம் அற்ற நிலை, தொடர்பாடல் ஜனநாயகம் என்பவற்றை உறுதிப்படுத்தும் என சேரன் குறிப்பிட்டார்.

தமிழ் ஊடகங்கள் உள்ளடக்கம், வடிவமைப்பு என பல்வேறு அம்சங்களிலும் குறைபாடுடையவையாக இருப்பதாகவும் சார்பு நிலையுடன் செயற்படுவதாகவும் தெரிவித்தார். தமிழ் ஊடகங்களிலும் செய்தியைப் பார்க முன் மரண அறிவித்தல் விளம்பரத்தைப் பார்த்த பின்னரே செய்திக்குள் செல்லும் நிலை இருப்பதையும் அவர் குறிப்பிட்டார். குறிப்பாக வீரகேசரி பத்திரிகையை உதாரணத்திற்கு எடுத்த அவர் செய்தி ஆசிரியர்களை விளம்பரப் பகுதியினர் மேலாண்மை செய்வதையும் சுட்டிக்காட்டினார்.

Vinothini_Kanapathypillaiவினோதினி கணபதிப்பிள்ளை
‘தகவலும் பரப்பலும்’ என்ற தலைப்பில் உரையாற்றிய தமிழ் கார்டியன் பத்திரிகையின் ஆசிரியர் வினோதினி கணபதிப்பிள்ளை பெரும்பாலும் மயூரன், சேரன் ஆகியோரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டிய நிலைக்கே தள்ளப்பட்டார். மிகவும் அரசியல் மயப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு தகவல்களையும் செய்திகளையும் வழங்கும் ஊடகங்கள் காத்திரமான முறையிலேயே செயற்பட்டு வருவதாகவும் முன்னேற்றத்திற்கான இடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழர்களுடைய போராட்டத்தைப் பொறுத்தவரை பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டிய தேவையும் அவசியமும் இருந்ததாகத் தெரிவித்த வினோதினி ஆனால் உண்மைகள் எப்போதும் சமரசம் செய்யப்படவில்லை எனத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில் தமிழ் மக்கள் தங்கள் தகவல் – செய்தித் தேடலுக்கு ஒரு ஊடகத்தில் மட்டும் தங்கி இருப்பதில்லை எனத் தெரிவித்த வினோதினி, அவர்கள் ஏனைய ஊடகங்களுடன் ஒப்பிட்டே செய்திகைள உறுதிப்படுத்திக் கொள்வதாகத் தெரிவித்தார். அதனால் தமிழ் ஊடகங்கள் தங்கள் உண்மைத் தன்மையைப் பேண வேண்டிய கட்டாயம் உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழபேசத் தெரியாத தமிழர்கள் மீது தமிழ் சமூகத்திடம் ஒரு கீழான பார்வை இருந்தது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த வினோதினி தமிழர்களுடைய அடையாளம் வளர்ந்து வருவதாகவும் முன்னர் தமிழ்பேசத் தெரியாதவர்கள் மீது இருந்த அவ்வாறான பார்வை, இப்போது இல்லை எனவும் தெரிவித்தார். தமிழர்கள் கட்டாயம் தமிழ் பேசத் தெரிந்திருக்க வேண்டும் என்ற நிலை இப்போது இல்லை என்றார் வினோதினி.

Thomas_Arulelilanதோமஸ் அருள்எழிலன்:
‘தமிழர் பிரச்சினையும் ஊடகங்களின் நிலையும்’ என்ற தலைப்பில் உரையாற்றிய குங்கும் சிரேஸ்ட ஆசிரியர் அருள்எழிலன் சபையில் இருந்தவர்களுக்கு, ‘இந்தியா மீது கோபமும் இருக்கு. எதிர்பார்ப்பும் இருக்கு’ என்றார். ‘அரசு ஒரு போதும் போராடும் சக்திகளுக்கு ஆதரவாக இருக்காது’ எனக் குறிப்பிட்ட அருள்எழிலன் மாவிலாறு சம்பவத்திற்குப் பின் ஐந்தாறு தடவைகள் தான் தமிழ்ச்செல்வனுடன் தொடர்பு கொண்டு பேசியதாகத் தெரிவித்தார். அப்போது தமிழ்ச்செல்வன் மாவிலாறை சாதாரண ஒரு பிரச்சினையாகவே சுட்டிக்காட்டியதாகத் தெரிவித்தார். ‘அந்தப் பிரச்சினையின் ஆழத்தை அறிந்திருக்க வேண்டும் ஆனால் அறிந்திருக்கவில்லை’ என்றார் அருள்எழிலன்.

‘தமிழ் மக்களுடைய பிரச்சினையில் தமிழ் மக்களே முடிவெடுக்க வேண்டும். அதற்கு என்னுடைய முழு ஆதரவு இருக்கும்’ எனத் தெரிவித்த அருள்எழிலன், ‘நான் ஒரு போதும் விலை போகமாட்டேன்’ என உறுதி அளித்தார். ‘தமிழ் மக்களைப் பொறுத்தவரை இலங்கை அரசாங்கத்துடன் செல்வதிலும் பார்க்க விடுதலைப் புலிகளுடன் இருப்பதே சரியானது. வன்னி யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளை தமிழ் மக்களை விடுவிக்கும்படி கேட்டிருக்க முடியாது’ என்றவர், ‘விடுதலைப் புலிகளே தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தினர்’ எனத் தெரிவித்தார்.

சேந்தன் செல்வராஜா:
‘புதிய ஊடகம்: எல்லைகடந்த தமிழ் அரசியலின் சக்தி’ என்ற தலைப்பில் சேந்தன் செல்வராஜா உரையாற்றினார்.

தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் தலைவி ஆனந்தி சூரியப்பிரகாசம் நடந்தவற்றைப் பற்றி பேசாமல் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக தமிழர்கள் ஒற்றுமைப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் கருத்து வெளியிட்டார். இவருடைய பேச்சு நன்றியுரையாக அமைந்த போதும் அருள்எழிலனுக்கு முன்னதாகவே இடம்பெற்றது. சேந்தனின் உரையுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.

‘மனுசி ஒரு பொம்பிளை’ ஆக இருப்பது ரொறன்ரோ மேயருக்கான தகுதி! – சிரிபிசி வானொலியின் சர்ச்சைக்குள்ளான விளம்பரம் : த ஜெயபாலன்

George_Smitherman_Mayoral_Candidate_TorontoRob_Ford_Mayoral_Candidate_Torontoதற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கனடாவின் ஒன்ராரியோ மாநிலத்திற்கான உள்ளுராட்சி சபைக்கான தேர்தலில் தமிழ் மக்கள் செறிந்துவாழும் ரொறன்ரோ மேயர் பதவிக்கான தேர்தலும் நடைபெறுகிறது. ரொறன்ரோ சனத்தொகையும் நிதிவருவாயும் அதிகமுள்ள கனடாவின் ஆறாவது பெரும் அரசாங்கமாகும். இதனைக் கைப்பற்ற Rocco Rossi, George Smitherman, Joe Pantalone, Rob Ford ஆகிய நால்வர் போட்டியிடுகின்றனர். முன்னாள் கவுன்சிலர் றொப் போர்ட், ஒன்ராரியோவின் முன்னாள் துணை முதல்வர் ஜோர்ஜ் ஸ்மிதர்மன் ஆகியோருக்கும் இடையே கடும் போட்டி உள்ளது. புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் அரசியல் ரீதியாகச் செல்வாக்குச் செலுத்துகின்ற உலகத் தலைநகர்களில் ரொறன்ரோ முக்கியமானது.

இந்தத் தேர்தலில் வலதுசாரியான றொப் போர்ட் க்கு சார்பான நிலைப்பாட்டைக் கொண்ட சிரிபிசி வானொலி லிபரல் கருத்தியல் உடையவரும் ஒத்தபாலுறவைக் கொண்டவருமான ஜோர்ஜ் ஸ்மிதர்மன் க்கு எதிராக அவருடைய பாலுறவை கொச்சைப்படுத்துகின்ற விளம்பரம் ஒன்றை வெளியிட்டு உள்ளது. தேர்தலில் றொப் போர்ட்க்கும் ஜோர்ஜ் ஸ்மிதர்மன் க்கும் இடையே கடுமையான போட்டி நிலவுககையில் அவர்களுக்கு இடையே ஒரு வீத வாக்கு வித்தியாசமே காணப்படுவதாக வாக்களிப்பைத் தொடர்ந்து எடுக்கப்படும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. ரொறன்ரோவில் 40 வீதமானவர்கள் தென்னாசியாவையும் ஆபிரிக்காவையும் சேர்ந்தவர்கள். இவர்களது சமய கலாச்சாரக் கூறுகள் ஒத்தபாலுறவுக்கு எதிரானது ஆகையால் இத்துருப்புச்சீட்டு லாவகமாகப் பயன்படுத்தப்பட்டு உள்ளது. 

வலதுசாரியான றொப் போர்ட் சிறுபான்மை இனங்களிடையே காணப்படுகின்ற ஒத்தபாலுறவுக்கு எதிரான சமய கலாச்சாரக் கூறுகளைக் குறி வைத்து இவ்வாறான விளம்பரங்களுக்கு துணையாக நின்றிருக்கலாம் என கனடியப் பத்திரிகைகள் சந்தேகம் வெளியிட்டுள்ளன. ஆனால் ‘மற்றையவருடைய வாழக்கைத் தெரிவு பற்றி எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. நான் பன்மைத்துவத்தை ஆதரிப்பவன். அந்த விளம்பரத்திற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை’ என்கிறார் றொப் போர்ட்.

தேர்தல் முடிவுகள் ஜோர்ஜ் ஸ்மிதர்மன் க்கு எதிரானதாக அமைந்தால் ஒத்தபாலுறவுக்கு எதிரான இவ்விளம்பரம் பாரிய சட்டச் சிக்கலுக்கு உள்ளானதாகலாம். ஜோர்ஜ் ஸ்மிதர்மன் இத்தேர்தலில் வெற்றி பெற்றாலும் ஒரு குறிப்பிட்ட பாலியல் சமூகத்திற்கு எதிரான இவ்விளம்பரம் ஒரு அலையை ஏற்படுத்தும் என்பதில் வியப்பில்லை. ஒத்த பாலுறவுச் சமூகத்தை பிரிதிநிதித்துவப்படுத்துகின்ற ‘எக்ஸ்ரா’ என்ற அமைப்பு ஏற்கனவே இவ்விளம்பரத்தை கடுமையாகக் கண்டித்து உள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் என்று சிரிபிசி வானொலியில் ஒலிபரப்பப்பட்ட விளம்பரம்:
‘முதலாமவர்: மணியன்னை மேயர் எலக்சனில யாருக்கு உங்கள் வோட்டுக்கள்?
இரண்டாமவர்: (நளினச் சிரிப்புடன்) இதென்ன கேள்வி. நான் தமிழனடா. எங்களுக்கு சமயம், கலாச்சாரம் என்று இருக்கு. ரொப் போட்டை எடுங்கோ அவற்றை மனுசி ஒரு பொம்பிளை.
அதுமட்டுமல்ல வீடு வேண்டேக்க மாற்று வரி மற்ற வரிகளையும் குறைப்பாராம்.

முதலாமவர்: அப்ப இமிகிரேசன்?
இரண்டாமவர்: (மீண்டும் நளினச் சிரிப்புடன்) அது பெடரல் கவுமன்ற் விசயம். வெள்ளையன்ர வோர்ட்டை எடுக்க வாக்கும்.
முதலாமவர் அப்ப நானும் ரொப் போரட் க்குத் தான் போடப்போறன்.’

இந்த விளம்பரத்தில் ரொறன்ரோ மேயர் ஆவதற்கு வேட்பாளரின் ‘அவற்றை (றொப் போர்ட் இன்) மனுசி பொம்பிளை’ யாக இருப்பது முக்கிய தகுதியாகக் காட்டப்படுகின்றது. ஏனெனில் எதிராக நிற்கின்ற வேட்பாளர் ஜோர்ஜ் ஸ்மிதர்மன் ஒத்தபாலுறவுடையவரை மணந்து ஒரு குழந்தையையும் தத்தெடுத்து வளர்க்கின்றார்.

வலதுசாரியான றொப் போர்ட்டை ஆதரிக்கின்ற அதே வலதுசாரிக் கருத்துக்களைப் பரப்புகின்ற சிரிபிசி வானொலி ஜோர்ஜ் ஸ்மிதர்மன் யை ‘அலி’ எனவும் விமர்சித்துள்ளார். ஒருவருடைய பாலியல் தன்மை தொடர்பாக மெலினத் தன்மையைக் கடைப்பிடித்த இவ்வானொலி, மேற்படி விளம்பரம் தொடர்பாக எதனையும் குறிப்பிடவில்லை. அதேசமயம் இவ்வாறான ஒரு விளம்பரம் ஒரு கிறிஸ்தவ அமைப்பினரூடாக தங்களுக்கு வந்ததாகவும் அதனை விளம்பரப்படுத்த தாங்கள் மறுத்துவிட்டதாகவும் சிரிஆர் வானொலியின் சார்பில் ராகவன் பரஞ்சோதி தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக தேசம்நெற் சிரிபிசி வானொலியுடன் தொடர்பு கொண்ட போதும் எமது அழைப்பிற்குப் பதில் இல்லை.

‘வெள்ளையன்ரை வோர்ட்டை எடுக்கவாக்கும்’ போன்ற இனவாதமான கருத்துக்களும் வெளியிடப்பட்டு உள்ளது. வெள்ளையர்கள் குடிவரவாளர்களுக்கு எதிரானவர்கள் என்பதை கட்டமைத்துக் கொண்டே அவ்வாறு குடிவரவாளர்களுக்கு எதிரானவருக்கே வாக்களிக்குமாறு அத்தமிழ் விளம்பரம் கோருகின்றது. அண்மையில் கனடாவிற்கு கப்பலில் வந்த நூற்றுக் கணக்காண தமிழர்களுக்கு எதிராக றொப் போர்ட் கருத்து வெளியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் புதிய குடிவரவாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவும் றொப் போர்ட் கோரி உள்ளார். அவ்வாறு இருந்தும் அண்மையில் குடியேறிய தமிழ் சமூகத்தின் வானொலி குடிவரவுக்கு எதிரானவரை ஆதரிக்குமாறு விளம்பரப்படுத்தியது முரண்நகையாக உள்ளது.

அதற்கு முக்கியமாக எதிர்த்தரப்பு வேட்பாளரின் பாலியல்தன்மை காரணமாகி உள்ளது. வட அமெரிகாவிலேயே ஒத்தபால் திருமணங்களை ஏற்றுக்கொண்ட நாடு கனடா. பாலியல் தொடர்பாக லிபிரல் கருத்துக்களை உடையநாடு. அங்கு ஒருவருடைய பாலியல் தன்மை அடிப்படையில் பாரபட்சம் காட்டுவது சட்டத்திற்கு முரணாணது. உள்ளுணர்விற்கு ஒவ்வாதது.

இந்த விவகாரம் தொடர்பாக வானொலி, தொலைக்காட்சியை கண்காணிக்கின்ற சிஆர்ரிசி அமைப்புக்கு குற்றச்சாட்டுக்கள் சென்றுள்ளது. சிஆர்ரிசி அமைப்பும் விசாரணைகளை ஆரம்பிக்கலாம் எனத் தெரிய வருகின்றது.

இவ்விளம்பரத்துக்கு எதிராக கனடிய தமிழர்கள் மத்தியில் பரவலான எதிர்க் கருத்துக்களும் கிளம்பி உள்ளது. இவ்விளம்பரத்தை வெளியிட்டமை இனவாதமானது, ஒத்த பாலுறவுக்கு எதிரானது, எவ்வாறான அரசியல் முரண்பாடுகள் இருந்தாலும் இவ்வாறான மோசமான விளம்பரங்களை வெளியிட முடியாது என பலர் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

‘புத்தனின் பெயரால் திரைப்பட சாட்சியம்’ நூல் வெளியீடும் ஆவணப்பட திரையிடலும்

Yamuna Rajendiranஒக்ரோபர் 24 இல் சினிமா விமர்சகர் யமுனா ராஜேந்திரனின் ‘புத்தனின் பெயரால் திரைப்பட சாட்சியம்’ என்ற நூலும் ஆர் ஆர் சீனிவாசனின் ‘அண்ணா நூறு: ஒரு வரலாற்றுப் பார்வை’ என்ற ஆவணப்படத் திரையிடலும் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள உயிர்மை பதிப்பகத்தின் இந்நூலை ஈழ நண்பர்கள் திரைக்கலை ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது இந்நிகழ்வு ரொல்வேர்த் கேர்ள்ஸ் ஸ்கூலில் நடைபெற உள்ளது.

( நிகழ்வு விபரம்: 24 ஒக்ரோபர் 2010 மதியம் 13:00 முதல் 17:00 வரை. Tolworth Girls School Hall, Fullersway North, Tolworth, KT6 7LQ )

‘முப்பது ஆண்டுகால ஈழப்போராட்டத்தின் விளைவாக ஈழமக்கள் வந்தடைந்திருக்கும் உளவியல் சிக்கல் உக்கிரமான படைப்பு நிலைக்கு அவர்களைக் கொண்டு சேர்த்திருக்கின்றது. வரலாற்று நூல்களின் வழி எவரும் வந்தடையும் புரிதலை விடவும் ஈழப்போராட்டம் குறித்துப் பேசும் இந்த நூலில் விவரிக்கப்படும் திரைப்படங்கள் அளிக்கும் என்பதனை நாம் நிச்சயமாகவே சொல்ல வேண்டும்.’ என ஈழ திரைக்கலை ஒன்றியம் இந்நூல் வெளியீடு தொடர்பான தமது பிரசுரத்தில் குறிப்பிட்டு உள்ளனர். 

இந்நிகழ்விற்கு கண குறிஞ்சி தலைமை தாங்குகின்றார். ஆர் புதியவன் யமுனா ராஜேந்திரனின் ‘புத்தனின் பெயரால்: திரைப்பட சாட்சியம்’ நூல் அறிமுகத்தை மேற்கொள்ள மு புஸ்பராஜன் எஸ் வேலு ஆகியோர் நூலை வமர்சனம் செய்கின்றனர்.

ஆர் ஆர் சீனிவாசனின் ‘அண்ணா நூறு: ஒரு வரலாற்றுப் பார்வை’ பற்றி ஈழ நண்பர்கள் திரைக்கலை ஒன்றியம், ‘இந்தியாவில் நிலவும் சமூக ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்துக் காலம் காலமாக எப்போதுமே மக்களாட்சிக்கான போராட்டம் இருந்து வருகிறது. அதில் தமிழகத்தின் திராவிட இயக்கம் உலக சமூகநீதி வரலாற்றில் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், மற்றும் திராவிட இயக்கம் வழியாக அறிஞர் அண்ணாவின் அரசியல், மனிதாபிமான சிந்தனைகளை அறிய முற்படுகிறது இந்த 133 நிமிட ஆவணப்படம்” என்று குறிப்பிட்டு உள்ளது.

நிகழ்வின் இறுதியில் யமுனா ராஜேந்திரன் தொகுப்புரை வழங்க எஸ் சிறிதரன்நன்றியுரை வழங்குவார்.

மனிதநேயன் வை சி கிருபானந்தனுக்கு தேசம்நெற் இன் கண்ணீர் அஞ்சலி!

Kirubananthan_Vai_Siதேசம்நெற் இணையத்தின் நீண்ட நாளைய கருத்துப்பதிவாளர் வை சி கிருபானந்தன் காலமானார். பார்த்தீபன் என்ற புனைப்பெயரில் தனது கருத்துக்களை பதிவிட்டுவரும் வை சி கிருபானந்தன் ஒரு மனிதநேயன். நேற்று ஒக்ரோபர் 18 2010ல் மரடைப்பால் கிருபானந்தன் உயிரிழந்தார். அவருக்கு தேசம்நெற் இன் கண்ணீர் அஞ்சலிகள்.

யாழ் அச்சுவேலியைப் பிறப்பிடமாகக்கொண்ட இவர் சுவிஸ்நாட்டில் நீண்டகாலமாக வாழ்ந்து வருகின்றார். காலம்சென்ற சிவஞானம் சரஸ்வதி தம்பதிகளின் புதல்வரான வை சி கிருபானந்தன் சத்தியபாமா(Eriswil) அவர்களின் அன்புக் கணவரும் பிரதீபன், கௌரிசங்கர்(கௌசி), பிரியங்கா ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவார். வை சி கிருபானந்தனின் பிரிவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கு தேசம்நெற் இணையத்தின் சார்பிலும் அதன் வாசகர்கள் கருத்தாளர்கள் சார்பிலும் எமது ஆழந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.

‘கட்சி அரசியல் எதனிலும் ஈடுபாடற்ற இவர் மிகுந்த அரசியல் ஆர்வலர். சுவிஸில் நடைபெறுகின்ற அரசியல் கூட்டங்களில் பங்குபற்றி தனது கருத்துக்களை வெளிப்படையாகத் தெரிவித்து வருபவர்’ என்கிறார் அவருடைய நண்பர் அஜீவன். ‘அவருடைய இழப்பு நல்ல நண்பனின் நல்ல மனிதனின் இழப்பு’ எனத் தன் துயரைப் பகிர்ந்து கொண்டார். அஜீவன் மேலும் குறிப்பிடுகையில், ‘மிகவும் சமூக அக்கறை கொண்ட இவர் புறூக்டோர்ப் தமிழ் பள்ளியை நடத்துவதிலும் உதவி வருவதாகத் தெரிவித்தார்.

Kirubananthan_Vai_Siடயஸ்பொரா டயலொக் ஜேர்மனியில் ஏற்பாடு செய்த சந்திப்பில் நான் (த ஜெயபாலன்) வை சி கிருபானந்தனை முதற்தடவையாகச் சந்தித்தேன். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு புனைபெயரில் தான் கருத்துப் பதிவிடுவதையும் குறிப்பிட்டு தேசம்நெற் இன் பணிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார். அதன் பின்னர் சுவிஸ் மாநாட்டுக்குச் சென்றிருந்த போதும் சந்தித்துக்கொண்டோம். முகமறியாது இணையத்தில் உரையாடிய போதும் முகமறிந்து நேரில் உரையாடிய போதும் அவருடைய மனிதநேயத்தில் மாற்றம் இருக்கவில்லை.

இந்த துயரச் செய்தியை வை சி கிருபானந்தன் (பார்த்தீபன்) யூலை 01 2009ல் பதிவிட்ட கருத்துடன் நிறைவு செய்கிறேன்.

”இலங்கை சுதந்திரம் அடைந்த பின் சிங்களத் தலைமைகளும், தமிழ்த் தலைமைகளும் அரசியலை இன ரீதியாக வளர்த்து பிளவுகளை ஏற்படுத்தி வந்ததே, நாட்டின் இன்றைய இவ்வளவு சீரளிவுகளுக்கும் காரணம். அதே தவறுகளை தொடர்ந்தும் செய்வதைத் தவிர்த்து, இனங்களுக்கிடையேயான ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தி எல்லா இன மக்களும் சமத்துவமாகவும், சகோதர மனப்பான்மையுடனும் சேர்ந்து வாழும் நிலையை அரசும் அனைத்து மக்களும் சேர்ந்து ஏற்படுத்த முன்வர வேண்டும். அப்போது தான் இலங்கையில் புரையோடிப் போயுள்ள இனப்பாகுபாடுகள் ஒழிந்து, எல்லோரும் இலங்கை மக்கள் என்ற பொதுவான எண்ணம் தாமாக உருவாகும்.”
பார்த்தீபன், யூலை 01 2009 தேசம்நெற்.

யாழ் பல்கலையின் உபவேந்தர் தெரிவுக்கு பேராசிரியர் ஹூலுக்கு ஆதரவாக மேற்கொண்ட கையொப்ப ஆவணம் அமைச்சர் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டது : த ஜெயபாலன்

Constantine_T_and_Minister_DDயாழ் பல்கலைக்கழக உபவேந்தராக பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் யைத் தெரிவு செய்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆதரவளிக்க வேண்டும் என்று கோரி இணைய வலையில் மேற்கொள்ளப்பட்ட கையெழுத்துப் போராட்டத்தின்  ( யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன் ) பிரதிகளை ‘டயஸ்பொறா டயலக்’ அமைப்பின் சார்பில் ரி கொன்ஸ்ரன்ரைன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளித்தார். நேற்று (ஒக்ரோபர் 17 2010) கொழும்பில் உள்ள அமைச்சரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே இவ்வாவணம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டது.

அதன் பின்னர் இடம்பெற்ற உரையாடலில் புலம்பெயர்ந்தும் தாயகத்திலும் வாழும் யாழ் பல்கலைக்கழக்தின் நலன்விரும்பிகளின் நிலைப்பாட்டை தான் அமைச்சருக்கு எடுத்துக் கூறியதாகவும் அவர்களுடைய எண்ணப்பாடுகளைக் கவனத்தில் கொள்வதாகவும் அமைச்சர் தெரிவித்ததாக ரி கொன்ஸ்ரன்ரைன் தெரிவித்தார்.

பேராசிரியர் ரட்னஜீவன் ஹூலை யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக தெரிவுசெய்யும்படி கோரும் போராட்டம் இத்துடன் முடிவடையவில்லை எனத் தெரிவித்த ரி கொன்ஸ்ரன்ரைன் நலன்விரும்பிகள் தொடர்ந்தும் கையெழுத்துக்களைப் பதிவு செய்யும்படி கேட்டுக்கொண்டார். http://digitechuk2.co.uk/petition/ProfessorHoole.htm இக்கையொப்பப் போராட்டத்தின் பிரதிகள் கல்வி அமைச்சர் எஸ் பி திஸ்ஸநாயக்காவிடம் ஒக்ரோபர் 21ல் கையளிக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

._._._._._.

யாழ் பல்கலையில் பொறியியல் பீடம் அமைப்பது பற்றி வடமாகாண கற்கைநிலைய பொறியியலாளர்கள் குழு அமைச்சருடன் சந்திப்பு:

இந்நிகழ்வுக்கு முன்னதாக வடமாகாண கற்கைநிலைய பொறியியலாளர்கள் (Institution of Engineers Sri Lanka – North)  குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்தது. யாழ் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தை விருத்தி செய்வது தொடர்பாக இக்குழு இச்சந்திப்பை மேற்கொண்டது. இச்சந்திப்பின் போது அமைச்சரின் அழைப்பில் ரி கொன்ஸ்ரன்ரைன்,  மற்றும் பேராசிரியரும் ஒக்ரோபர் 6 பட்டமளிப்பு விழாவில் கௌரவ கலாநிதிப்பட்டம் பெற்றவருமான  பாலசுந்தரம்பிள்ளை ஆகிய இருவரும் கலந்துகொண்டனர். வடமாகாண கற்கைநிலைய பொறியியலாளர்கள் குழுவிற்கு இலங்கை மின்சாரத் திணைக்களத்தின் ஜிஎம் ஆர் முத்துராமநாதன் தலைமை தாங்கினார். இக்குழுவில் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல், டொக்டர் அற்புதராஜன், டொக்டர் பிரபாகரன், தர்மேந்திரா ஆகியோர் கலந்துகொண்டனர். பேராசிரியர் நவரட்ணராஜா கலந்துகொள்வதாக இருந்த போதும் அவரால் இச்சந்திப்பில் கலந்துகொள்ள முடியவில்லை.

Minister_DD_17Oct10_Colomboஇச்சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பாராம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் அபிவிருத்தி அமைச்சின் விசேட ஆலோசகர் திருமதி விஜயலக்ஸ்மி ஜெயராஜசிங்கம், சந்திரமோகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இச்சந்திப்பின் போது, 2006ல் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் யைத் பலத்த சிரமங்களுக்கு மத்தியில் உப வேந்தராக தெரிவு செய்ய தான் போராடியதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆனால் அவர் அப்பதவியை ஏற்று செயற்பட முற்பட்ட போதும் கொலை அச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறியதை ஒரு குற்றச்சாட்டாகவே தெரிவித்தார். இக்குற்றச்சாட்டை அமைச்சர் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் அழுத்தமாகவே தெரிவித்தார்.

அதற்குப் பதிலளித்த பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல், ”என்னுடைய மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் தொடர்ந்து மிரட்டல்களை விட்டனர். எனது மகளுக்கு அவளுடைய தம்பியை துண்டு துண்டாக வெட்டப் போவதாக மிரட்டினர். மனைவியை வெள்ளைச் சேலை அணிய வேண்டி வரும் என மிரட்டினர். உங்களைப் போன்ற தைரியம் எனக்கில்லை. அதனால் நான் நாட்டைவிட்டு வெளியேறி விட்டேன். ஆனால் இப்போது திரும்பி வந்திருக்கிறேன்” என்றார்.

இச்சந்திப்பில் தற்போதைய யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் பற்றிய அதிருப்தி அமைச்சரவைக் குழுவில் வெளிப்பட்டது. அண்மையில் யாழ் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் யாழ் பல்கலைக்கழகத்தில் பெண்களின் தற்கொலை முயற்சிகள் அதிகரித்து இருப்பதாகவும் அதற்கு அங்கு கடமையாற்றுகின்ற பேராசிரியர்களே காரணம் என்றும் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. அதன் பின்னணியிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அதிருப்தியும் வெளிப்பட்டது.

வடமாகாண கற்கைநிலைய பொறியியலாளர்கள் குழு யாழ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம் அமைக்கப்படுவதற்கான அவசியத்தை வலியுறுத்தியதுடன் அதற்கு அமைச்சரின் ஒத்துழைப்பையும் கோரினர். யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் பொறியியல் பீடத்தை அமைக்க வேண்டும் என்று சில அறிக்கைகளை வெளியிட்டதற்கு அப்பால் எவ்விதமான காத்திரமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. யாழ் பல்கலைக்கழகப் பொறியியல் பீடத்தை அமைக்கும் முயற்சி நீண்டகாலமாக கிடப்பிலேயே உள்ளது. அதனால் வடமாகாண கற்கைநிலைய பொறியியலாளர்கள் குழு தங்கள் ஆர்வமேலீட்டால் பொறியியல் பீடம் அமைக்கப்படுவதற்கான அழுத்தத்தை மேற்கொண்டனர்.

”பொறியியல் பீடத்தை விருத்தி செய்வது என்பது சாதாரண விடயமல்ல” என்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதற்கான திட்ட ஆவணங்களையும் திட்ட வரைபுகளையும் தயாரித்து தன்னிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொண்டார். பொறியியல் பீடத்திற்கான திட்ட ஆவணங்களும் திட்ட வரைபுகளும் யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்தினாலேயே மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் யாழ் பல்கலைக்கழகம் அது பற்றி கவனம் கொள்ளாததால் அமைச்சர் தன்னைச் சந்தித்த பொறியியலாளர் குழுவிடம் அவற்றை சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்திற்கான நிதி ஒதுக்கீடு பற்றி கருத்து வெளியிட்ட விஜயலக்ஸ்மி ஜெயராஜசிங்கம், ”முறையான திட்ட ஆவணங்கதை தயாரித்து வந்தால் 2011 – 2012 நிதி ஆண்டிலேயே அந்த நிதிக் கோரிக்கையை வைக்கமுடியும்” என்பதைச் சுட்டிக்காட்டினார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ”உலகம் முழுவதுமே அரசாங்கங்கள் பொதுத்துறைக்கான நிதியை குறைக்கின்ற நிலையில் யாழ் பல்கலைக்கழகத்தின் கோரிக்கை அதனை ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அமைய வேண்டும்” என்பதை வலியுறுத்தினார்.

இலங்கை அரசாங்கத்தின் நிதிநிலமை மோசமாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சரவைக் குழு இந்தியாவினதும் சர்வதேச அணுசரனையுடனும் மட்டுமே யாழ் பல்கலைக்கழகத்திற்கான உதவியைப் பெற முடியும் என்பதையும் சுட்டிக்காட்டினர்.

”ஊடகங்களில் யாழ் பல்கலைக்கழகத்திற்கு உதவிகள் வழங்கப்படுவதாக செய்திகள் வந்த போதும் அவ்வாறான உதவிகள் வருவதில்லை” என பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை குறிப்பிட்டார். ”இந்தியா உதவி அளிப்பதாக செய்திகள் வந்ததைச் சுட்டிக்காட்டிய பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை தான் அங்குள்ள கல்வியியலாளர்களுடன் பேசும்போது அவர்கள் அவ்வாறான எவ்வித உதவியும் வழங்கப்படுவது பற்றி அறிந்திருக்கவில்லை” எனச் சுட்டிக்காட்டினார்.

Minister_DD_17Oct10_Colomboஇது பற்றிக் கருத்து வெளியிட்ட அமைச்சரவைக் குழு உறுப்பினர் சந்திரமோகன், ”அரசாங்கம் யாழ் பல்கலைக்கழகத்திற்கு உதவ வேண்டும் என்ற அரசியல் ரீதியான கோரிக்கைகள் பலனளிக்காது” எனத் தெரிவித்தார். ”இலங்கையில் இவ்வளவு மோசமான அழிவுக்கு வித்திட்டதில் யாழ் பல்கலைக்கழகத்திற்கு முக்கிய பொறுப்பு உள்ளது” எனவும் அவர் குற்றம் சாட்டினார். ”பல்கலைக்கழகத்தினுள்ளேயே பொங்குதமிழ் கொண்டாடி விட்டு, இப்போது பல்கலைக்கழகத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்று இடித்துக் கேட்க முடியாது” எனவும் சந்திரமோகன் குறிப்பிட்டார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம் அமைக்கப்படுவதற்கு தான் முழு முயற்சி எடுப்பேன் என உறுதியளித்த அமைச்சர் வேண்டிய அவணங்கள் தயாரிக்கப்பட்டதும் அமைச்சரவையில் முன்வைத்து வேண்டிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக உறுதி அளித்தார்.

(தகவல் ரி கொன்ஸ்ரன்ரைன்)

._._._._._.

லண்டன் குரல் (ஒக்ரோபர் 07 2010) இதழ் 36ல் வெளியான செய்தி:

தமிழ் கல்விச் சமூகத்தை யாழ் பல்கலைக்கழகத்தை மீட்டெடுக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வர வேண்டும்!

யாழ் பல்கலையின் நலன்விரும்பிகள் இணைய வலையில் கையொப்பப் போராட்டம்!!!

University_of_Jaffna”யாழ் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் வெற்றிடங்களை நிரப்புகின்ற போது முறைகேடான நியமனங்கள் இடம்பெற்றுள்ளது. பல ஆண்டுகளாக இதைச் சுட்டிக்காட்டிய போதும் இதனைச் சீர்செய்வதற்கு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.”
எஸ் சுவர்னஜோதி, ஓடிறர் ஜென்ரல், ஓடிற் 2009 

இது மலையெனக் குவிந்துள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் சீரழிவின் ஒரு சிறு பகுதியே.

யுத்த சூழலில் இருந்து மீண்டுள்ள தமிழ்க் கல்விச் சமூகம் தமது கல்விக் கட்டமைப்புகளில் உள்ள சமூகவிரோத சக்திகளின் செயற்பாடுகளினால் அதிர்ந்து போயுள்ளனர். தமிழ் சமூகத்தினை வேரறுக்கும் அளவிற்கு கல்விக் கட்டமைப்புகளில் குறிப்பாக யாழ் பல்கலைக்கழகத்தில் நிர்வாகச் சீர்கேடு, ஊழல், மோசடி, பாலியல் பலாத்காரம் என்பன மலிந்து போயுள்ளன. யாழ் பல்கலைக்கழகம் வழங்கும் பட்டங்கள் அர்த்தமற்றவையாகிக் கொண்டுள்ளது.

யாழ் பல்கலைக் கழகத்தைச் இச்சீரழிவில் இருந்து மீள்விக்க அமைச்சர் தேவானந்தாவும் பல்கலைக்கழக கவுன்சில் உறுப்பினர்களும் முன்வரவேண்டும் என்று நலன்விரும்பிகள் இணையப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

நவம்பரில் நடைபெறவுள்ள யாழ் பல்கலையின் உபவேந்தர் பதவிக்கான போட்டியில் இப்பல்கலைக்கழகத்தை ஆசியாவின் சிறந்ததொரு பல்கலைக் கழகமாக்க கனவு கண்ட பேராசிரியர் கைலாசபதியின் கனவை நனவாக்கக் கூடிய ஒருவரையே அமைச்சர் தேவானந்தாவும் கவுன்சில் உறுப்பினர்களும் தெரிவு செய்ய வேண்டும் என்கிறார் இப்போராட்டத்தை முன்னெடுக்கும் ரரின் கொன்ஸ்ரன்ரைன்.

இப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவிக்காக யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து தற்போதைய உப வேந்தர் பேராசிரியர் என் சண்முகலிங்கம், கலைப்பீடத்தின் தலைவர் பேராசிரியர் என் ஞானகுமரன், வரலாற்றுத்துறையின் தலைவர் பேராசிரியர் சத்தியசீலன் ஆகியோர் முக்கியமாகப் போட்டியிடுகின்றனர். யாழ் பல்கலைக்கழகம் சீரழிந்து கீழ்நிலைக்குச் சென்றதற்கு மிகமுக்கிய பொறுப்புக்களில் இருந்த இவர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. மேலும் பல நிர்வாகச் சீர்கேடுகளுக்கு இவர்களே காரணமாகவும் இருந்தள்ளனர்.

அதனால் யாழ் பல்கலைக்கழகத்தை மீள்விக்க சிரழிவுக்கு வெளியே இருந்து கல்வித் தகமையும், நிர்வாகத் திறனும் உடைய ஒருவரைக் கொண்டுவருவதே பொருத்தமானது என போராட்டத்தில் இணைந்து கையொப்பம் இட்டுள்ள பலரும் கருத்து வெளியிட்டு உள்ளனர். அந்த வகையில் உபவேந்தர் பதவிக்கு போட்டியிடுகின்ற சர்வதேச பல்கலைக்கழக அனுபவமும் தகமையும் நிர்வாகத் திறனும் உடைய பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் அவர்களே இப்பதவிக்கு பொருத்தமானவர் எனக் கருதப்படுகிறார்.

Douglas_and_Studentதமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டு தமிழ் கல்விச் சமூகத்தை 21ம் நூற்றாண்டின் தேவைக்கு ஏற்ப கட்டியெழுப்ப விரும்பினால் அமைச்சர் தேவானந்தா பேராசிரியர் ரட்னஜீவன் ஹூலுக்கு தனது ஆதரவை வழங்க வேண்டும் என்று அமைச்சருக்கு நீண்டகாலம் தம் அரசியல் ஆதரவை வழங்கிவரும் வி சிவலிங்கம், எம் சூரியசேகரம், ராஜேஸ் பாலா உட்படப் பலர் தெரிவித்துள்ளனர். பேராசிரியர் ஹூல் இலங்கையிலேயே தகமைபெற்ற ஒருவர் என்றும் அவர் யாழ் பல்கலைக்கழகத்திற்குச் சென்று பணியாற்றுவதற்கு வாழத்துக்கள் என்றும் ஈபிடிபி கட்சியின் முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் தவராஜா ரிபிசி வானொலியில் தெரிவித்து இருந்தார்.

தமிழ் மக்களின் அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்ற அமைச்சர், பரிசு பெறும் மாணவி தன் காலத்தில் யாழ் பல்கலையில் பாதுகாப்பாகவும் பெருமிதத்துடனும் கற்க வழிசெய்வார் என நம்புவோம்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பான முன்னைய பதிவுகளைப் பார்க்க:

முருகையன் (1935-2009) – நகலும் நாடகமும் : நட்சத்திரன் செவ்விந்தியன்

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் உடனான நேர்காணல்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்

‘Tamillain-Barre’ Syndrome’ மும் தமிழ் சமூகத்திற்கான புதிய அரசியல் கலாச்சாரத்தின் அவசியமும் : த ஜெயபாலன்

யாழ் பல்கலைக்கழகம் – முப்பத்தாறு வருடங்கள் – முழுமையான சீரழிவு : நட்சத்திரன் செவ்விந்தியன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன்

தவித்துக் கொண்டிருக்கும் நமது சமூகத்திற்காய் உழைப்போம்: யாழ் பல்கலை. மாணவர் ஒன்றியம்

பேராசிரியர் கைலாசபதி: ஒரு பெரு விருட்சமும் சில சிறு செடிகளும் : கரவை ஜெயம்

‘யாழ் பல்கலைக்கழக மாணவிகள் தற்கொலை முயற்சி!’ யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் – அரச அதிபர் சுயாதீன விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். : த ஜெயபாலன்

யாழ் பல்கலையின் உபவேந்தர் தெரிவுக்கு பேராசிரியர் ஹூலுக்கு ஆதரவாக மேற்கொண்ட கையொப்ப ஆவணம் அமைச்சர் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டது : த ஜெயபாலன்

Student Visa மோசடி பல்லாயிரம் பவுண் பணத்தையும் இழந்து கல்வி வாழ்வையும் தொலைக்கும் இலங்கை – இந்திய மாணவர்கள்!

UK_Student_Visa_Advertலண்டன் கல்லூரிகளில் பெரும் தொகைப் பணத்தைக் கட்டி வரும் நூற்றுக் கணக்கான மாணவர்கள் லண்டன் வந்திறங்கியதும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றனர். இவர்கள் படிக்க வந்த கல்லூரிகள் உள்துறை அமைச்சின் விதிமுறைகளுக்கு அமையாததால் மூடப்பட்ட நிலையில் கட்டிய பணம் இழக்கப்படுகிறது.

2006ல் London Reading Collegeக்கு 3 ஆண்டுகள் பட்டப்படிப்பான Business Managment படிப்பதற்கு 3000 பவுண்வரை கட்டி விசா பெற்றுவந்த எஸ் கணேஸ்வரன் 2007ல் இரண்டாவது ஆண்டுக்கு வந்த போது அக்கல்லூரி உள்துறை அமைச்சின் தரப்பட்டியலில் இருந்த நீக்கப்பட்டது. அதனால் அம்மாணவன் London School of Business and Computing என்ற மற்றுமொரு கலலூரியில் மேலும் ஒரு 3000 பவுணைக் கட்டித் தன் படிப்பைத் தொடர்ந்தார். அதுவும் நீடிக்கவில்லை. 2008ல் அக்கல்லூரியும் தரப்படிட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இன்னுமொரு கல்லூரிக்குப் இன்னுமொரு 3000 பவுண் கட்டி விசாவைப் புதுப்பிக்க முடியாத மாணவன் ஊரில் பட்டுவந்த கடனை அடைக்க முடியாது உள்துறை அமைச்சுக்கு ஒழித்து சட்டத்திற்குப் புறம்பாக வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளார்.

இவர் படிக்க வந்த இரு கல்லூரிகளில் மட்டும் 200 இலங்கை இந்திய மாணவர்கள் வரை கற்றுக்கொண்டிருந்தனர். உள்துறை அமைச்சின்  தரப்பட்டியல் இறக்கத்தினால் 50ற்கும் மேற்பட்ட கல்லூரிகளில் படிக்க வந்த பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் இருந்து 1000 பவுண் கட்டி CECOS College க்கு கணணித் தொழில்நுட்பம் கற்க ஓகஸ்ட் 31 09ல் லண்டன் வந்தார் எஸ் ஹரிகரன். வந்து 7 நாட்களில் செப்ரம்பர் 7 09ல் அவர் படிக்க வந்த கல்லூரி உள்துறை அமைச்சால் மூடப்பட்டது. கட்டிய பணத்தை இழந்தார். இதே கல்லூரிக்கு வர 3500 பவுண்களை கட்டிய ஹரியின் மூன்று நண்பர்களுக்கு கல்லூரி மூடப்பட்டது, தூதரகத்திற்கு அறிவிக்கப்பட்டதால் விசா  வழங்கப்படவில்லை. ஆனால் பயண ஏற்பாட்டை மேற்கொண்ட முகவர் அவர்கள் கட்டிய தொகையின் 50 வீதத்தையே பலத்த போராட்டத்தின் பின் மீளக்கையளித்தார்.

மாணவருக்கான விசா உத்தியைப் பயன்படுத்தி பல கல்லூரிகள் லண்டனிலும் புறநகர்ப் பகுதிகளிலும் முளைத்துள்ளன. குறைந்த கட்டணத்தை காட்டி மாணவர்களைக் கவரும் இக்கல்லூரிகள் அப்பாவி மாணவர்களின் வாழ்க்கையை சீரழிக்கின்றன.

மேலும் மாணவர்கள் தங்கள் விசாவைப் புதுப்பிக்கும் போது 350 பவுண்களை உள்துறை அமைச்சு அறவிடுகிறது. குறிப்பிட்ட கல்லூரிக்கு விசா மறுக்கப்பட்டால் கட்டணத்தையும் இழக்கின்றனர். இன்னொரு கல்லூரிக்கு விண்ணப்பித்து விசாவைப் புதுப்பிக்க மீண்டும் 350 பவுண்கள் செலுத்த வேண்டும். தெற்காசிய நாடுகளின் மத்திய தர உயர் மத்தியதர குடும்பங்களில் இருந்து வரும் இம்மாணவர்கள் பலர் தங்கள் இளமைக் கல்வி வாழ்வைத் தொலைக்கின்றனர்.

இவ்வாறான மோசடியான கல்லூரிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு அரசு அனுமதிப்பதன் மூலம் பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.