விஸ்வா

விஸ்வா

வடமாராட்சியில் நல்லிணக்க ஆணைக்குழுவில் சாட்சியமளிக்காதவர்கள் எழுத்து மூலம் சாட்சியங்களை சமர்ப்பிக்கலாம் என தெரிவிப்பு.

கடந்த 13ஆம் திகதி வடமராட்சிப் பிரதேசத்தில் இடம்பெற்ற கற்றறிந்த பாடங்கள் மற்றும், நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக நடைபெற்ற சாட்சியங்களில் கலந்து கொள்ளாதவர்கள் தங்களது சட்சியங்களை எழுத்து மூலமாக வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் குறிப்பிட்ட அமர்வில் சாட்சியமளிக்க முடியாமல் போனவர்கள் தங்களது சாட்சியங்களை எழுத்து மூலமாக தங்கள் பிரிவின் கிராமசேவையாளர் மூலம் உறுதிப்படுத்தி பிரதேசச் செயலகங்களில் ஒப்படைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதஉரிமைகள் தினமான இன்று சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்.

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தங்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்படவேண்டும் எனக்கோரி உண்ணாவிரதம் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் தினமான இன்று வெள்ளிக்கிழமை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 800 தமிழ் அரசியல் கைதிகள் இவ்வாறு உண்ணாவிரத்தில் ஈடுபடப்போவதாக நேற்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

பொது மன்னிப்பு வழங்கப்படவேண்டும் இல்லையேல் பிணையில் விடுவிக்கப்பட வேண்டும் என இக்கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மனித உரிமைகள் தினமான இன்று சர்வதேசத்தின் கவனத்தைப் பெறும் நோக்கில் இப்போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இக்கைதிகளின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

நீண்ட காலமாக எதுவித விசாரணைகளும் இன்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இக்கைதிகள் தம்மீதான வழக்கு விசாரணகள் நடைபெற வேண்டும் அல்லது, விடுதலை செய்யப்பட வேண்டும் என்ககோரி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளனர். அரசியல்வாதிகளிடமும் வேண்டுகோள் விடுத்து வந்துள்ளனர். இவற்றிக்கு சாதகமாக எதுவும் நடைபெறவில்லை. எனவே மனித உரிமைகள் தினமான இன்று உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் கவனயீர்ப்பினைப் பெறும் நோக்கில் அடையாள உண்ணாவிரதத்திலீடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இலத்திரனியல் நுட்ப முறையிலான அடையாள அட்டைகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

மோசடி செய்யப்படாத வகையில் நவீன இலத்திரனியல் நுட்பத்துடனான அடையாள அட்டைகள் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் ஜகத் பீ.விஜேவீர தெரிவித்துள்ளார். பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைய இந்த அடையாள அட்டைகள் தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய நபரின் தகவல்கள் நுண்இலத்தரனியல் பொறிமுறையில் பதிவு செய்யப்படுவதால் இதில் மோசடிகள் மேற்கொள்ள முடியாது எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.

ஏற்கனவே அடையாள அட்டைகள் வைத்திருப்போருக்கு இந்த அடையாள அட்டைகள் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை தொடர்பான மோசடிகள், போலியான அடையாள அட்டைகளை தயாரிக்கும் முயற்சிகள் யாவும் இப்புதிய அடையாள அட்டை நடைமுறைக்கு வரும்போது அற்றுப்போகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்முனை மின்சாரஅதியட்சகர் சடலமாக மீட்பு.

கல்முனை மின்சார சபைக்கட்டத்தில் தூக்கிடப்பட்ட நிலையில் மின் அதியட்சகரின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சாரசபையின் கல்முனைக்கிளையில் கடமையாற்றி வந்த சிரேஸ்ட மின்அத்தியட்சகரான பிரேமதாச (வயது 53) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவரின் சடலம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வைப்பட்டுள்ள நிலையில் இவரது மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குடாநாட்டில் ரயில் பாதைகள் அமைக்கும் பணி ஆரம்பமாகியுள்ளது.

யாழ்.குடாநாட்டிற்கான ரயில் பாதைகளை அமைக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கபட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் பாதைகள் மற்றும், ரயில் நிலையங்கள் இருந்த இடங்கள் நில அளவை செய்யப்பட்டு அடையாளமிடும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ருயில்வே திணைக்களத்திற்குச் சொந்தமான இடங்களில் அத்துமீறி குடியேறியிருக்கும் மக்களை அப்பகுதிகளிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளபட்டு வருகின்றன.

கடந்த ஜனவரி மாதம் யாழ்.குடாநாட்டிலுள்ள ரயில் பாதைகளை மீளமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதும் தற்போதே அதன் ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வன்னியில் பொதுமக்களால் கைவிடப்பட்ட வாகனங்களின் பாகங்கள் களவாடப்பட்டு வருகின்றன.

இறுதிக்கட்டப் போரின் போது வன்னியில் பொதுமக்களால் கைவிடப்பட்ட வாகனங்கள் கிளிநொச்சியில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றின் உதிரிப்பாகங்கள் நாளுக்கு நாள் களவாடப்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். கைவிடப்பட்ட வாகனங்களில் மோட்டார் சைக்கிள்களே பெருமளவில் காணப்படுகின்றன. நாளுக்கு நாள் அவற்றின் உதிரிப்பாகங்கள் கழற்றப்படுகின்ற நிலை காணப்படுகின்றது.

பொது மக்கள் தங்களின் வாகனங்களை அடையாளம் கண்டு அவற்றை எடுத்துச் செல்வதற்கான பொலிஸ் முறைப்பாட்டுக் கடிதம் பெறுவது தொடக்கம் பல்வேறு ஆவணங்களை ஒழுங்கு படுத்துவதற்கிடையில் குறித்த வாகனங்களின் பாகங்கள் கழற்றப்பட்டு விடுவதாக தெரிவிக்கின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து கொண்டுவரப்பட்டு கிளிநொச்சியில் வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் சுமார் ஏழாயிரம் மோட்டார் சைக்கிள்கள் காணப்படுகின்றன. இவற்றில் மூவாயிரம் மோட்டார் சைக்கிள்களின் விபரங்கள் கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தின் மோட்டார் வாகனப்பிரிவில் கணனியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏனைய வாகனங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தைக்கு வருமாறு தமிழ் கட்சிகளின் அரங்கத்திற்கு கூட்டமைப்பு அழைப்பு.

பத்து தமிழ் கட்சிகள் இணைந்துள்ள தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு தமிழ்தேசியக் கூட்டமைப்பிற்கு தமிழ்கட்சிகளின் அரங்கம் பலதடவைகள் அழைப்பு விடுத்திருந்த நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்ததை நடத்த வருமாறு தமிழ் கட்சிகளின் அரங்கத்திற்கு கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனதிராஜா இந்த அழைப்பினை விடுத்துள்ளதாக தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்தேசிய விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய தமிழ்தேசியக் கூட்டமைப்பின் கொழும்பு அலுவலகத்தில் எதிர்வரும் சனிக்கிழமை மாலை சந்திப்பு இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக தமிழ் கட்சிகள் ஒருமித்து செயற்படுவதன் முக்கியத்துவம் குறித்து இச்சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர் இன்றும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

Jaffna_Hospitalயாழ். போதனா வைத்தியசாலை தாதியர்கள் ஆறு அம்சக்கோரிகிகயை முன்வைத்து மீண்டும் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். கடந்த 2ஆம் திகதி ஒரு மணி நேரம் பணிப்பறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இன்று வியாழக்கிழமையும் ஒருமணித்தியாலம் பணிப்புறக்கணிப்பில் அவர்கள் ஈடுபட்டனர்.

இன்று முற்பகல், 11.30 மணியிலிருந்து 12.30 வரை அவர்கள் மிண்டும் தங்கள் கோரிக்கையை முன்வைத்து ஒரு மணிநேரம் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உலக உணவுத்திட்ட அலுவலகங்கள் கிழக்கு மாகாணத்தில் மூடப்படுகின்றன.

உலக உணவுத்திட்ட நிறுவனத்தின் அபிவிருத்திப் பணிகள் கிழக்கு மாகாணத்தில் இம்மாதம் 31ஆம் திகதியுடன் நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கிழக்கு மாகாணத்திலுள்ள அதன் அலுவலகங்களையும் அது மூடியுள்ளது.

திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும், மொனராகலை அலுவலகங்கள் இதற்கமைய மூடப்பட்டுள்ளன. உலக உணவுத்திட்ட நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வந்ததிட்டங்கள் தொடர்பாக எஞ்சிய தகவல்களை சேகரிப்பதற்கு மட்டும் மட்டக்களப்பில் அதன் உப அலுவலகம் ஒன்றை வைத்திருப்பதற்கு உலக உணவத்திட்ட
நிறுவனம் தீர்மானித்தள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக உணவுத்திட்டத்தின் கிழக்கு மாகாண அபிவிருத்திப் பணிகளுக்காக உதவி வழங்கி வந்த நாடுகள் தற்போது உதவிகளை நிறுத்தியுள்ளமையினாலேயே இவற்றை மூடுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் உலக உணவுத்திட்டப் பணிகள் நிறுத்தப்பட்டாலும் வடக்கு மாகாணத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருவதாக உலக உணவுத்திட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.

யாழ்.குடாநாட்டில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு.

யாழ்.குடாநாட்டில் மழையினால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. குடாநாட்டில் மட்டும் 8,363 குடும்பங்களைச் சேர்ந்த 30,452 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 744 குடும்பங்களைச் சேர்ந்த 5 760 மக்கள் பொது இடங்களில் தங்கியுள்ளனர். வெள்ளம் காரணமாக யாழ்.குடாநாட்டில் 156வீடுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளன.

2,138 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. நெடுந்தீவிலும் நல்லூரிலும் இருவர் வெள்ளப்பெருக்கில் அகப்பட்டு காயமடைந்துள்ளனர். இத்தகவல்களை யாழ். மாவட்டச்செயலகம் தெரிவித்துள்ளது. கடந்த இரு தினங்களில் பாதிக்கப்பட்டவர்களின் தொகை இரு மடங்காக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை நிலவுவதால் இம்மாதம் நடுப்பகுதிவரை மழை தொடரும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.