விஸ்வா

விஸ்வா

கிளிநொச்சியில் மீட்கப்பட்ட சடலங்கள் பெண்களுடையவை? யுத்தகாலத்தில் கொல்லப்பட்டவர்களுடையவை?

கிளிநொச்சி நகரை அண்டியுள்ள கணேசபுரம் பகுதி மலக்குழியிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் பெண்களுடையவை என தெரியவருகின்றது. ஆனால் இத் தகவல் சரியாக உறுதிப்படுத்தப்படவில்லை. நேற்று முன்தினம் (29-05-2010) மீள் குடியேற்றப்பட்ட கணேசபுரம் பகுதி வீடொன்றின் மலசலக்கூடக் குழியிலிருந்து கறுப்பு நிறப் பொலித்தீன் பைகளில் கட்டப்பட்ட நிலையில் ஐந்து சடலங்கள் காணப்பட்டுள்ளன. இது தொடர்பாக பொலிஸாருக்கு அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்ததையடுத்து நேற்றுவரை ஐந்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் பல சடலங்கள் அப்பகுதியில் இருக்கலாம் என்கிற அச்சம் அப்பகுதியில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது. கிளிநொச்சியிலிருந்து எமக்கு கிடைத்துள்ள பொது மக்களின் தகவலின்படி போர் நடவடிக்கைகளின் போது கொல்லப்பட்டவர்களின் சடலங்களாக இவை இருக்கலாம் எனவும், மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டதன் பின் நடைபெற்ற சம்பவமாக இது இருக்க சாத்தியமில்லை எனவும் தெரிய வருகின்றது.

எது எவ்வாறிருப்பினும், வன்னிப் பகுதிகளில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில் இச்சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளமை மக்கள் மனங்களில் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

யாழ் பொலிஸ் சேவைக்காக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு களுத்துறையில் பயிற்சி!

யாழ்.மாவட்டத்தில் பொலிஸ் சேவைக்காக தேர்வு செய்யப்பட்ட 266 இளைஞர் யுவதிகள் நேற்று (May 30 2010) பொலிஸ் பயிற்சிக்காக களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரிக்கு  அழைத்துச் செல்லப்பட்டனர். இச்சேவைக்கு யாழ். மாவட்டத்திலிருந்து நேர்முகப்பரிட்சை மூலம் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு கடந்த 18ஆம் திகதி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்கள்  களுத்துறை பயிற்சிக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லபட்டனர்.

இவர்கள் May 30 காலை 9.00 மணியளவில் வேம்படி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற சம்பிரதாய நிகழ்வு ஒன்றின் பின்னர் 11 பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். யாழ்ப்பாணம் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பத்மரட்ண தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

வெளிநாட்டில் உள்ள மணமகனின் தாயார் கரவெட்டியில் படுகொலை செய்யப்பட்டு பணம், நகைகள் கொள்ளை!

வெளிநாட்டில் உள்ளவரின் தாயார் கரவெட்டியில் படுகொலை செய்யப்பட்டு பணம், நகைகள் கொள்ளை. வடமராட்சி கரவெட்டிப் பகுதியில்  பெண்ணொருவர் கழுத்து நெரித்துப் கொலை செய்யப்பட்டு அவரது நகைகள் பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன. நேற்று (29.05.2010) முற்பகல் 11.15 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இச்சம்பவத்தில் கட்டைவேலி கரவெட்டியைச் சேர்ந்த ஜெயபாலன் விஜயலட்சுமி வயது 54 என்பவரே கொலை செய்யப்பட்டவராவார். இவரது கணவரும் ஒரேயொரு மகனும் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், தனது தாயாருடன் இப்பெண் அவரது விட்டில் வசித்து வந்துள்ளார். தனது மகனுக்குத் திருமண ஏற்பாட்டை மேற்கொண்டு வந்த நிலையிலேயே இவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 22 பவுண் நகையும் பல இலட்ச ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பிட்ட பெண் வீட்டிலிருந்த வேளை மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவர் இப்பெண்ணைக் கொலை செய்து விட்டு அவரது நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்குச் சென்ற பருத்தித்துறை  நீதிமன்ற நீதிபதி திருமதி ஜோய் மகாதேவா விசாரணைகளை மேற்கொண்டார். நெல்லியடி பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். வடமராட்சியில் ஒரு மாத காலத்திற்குள் நடந்த மூன்றாவது கொலைச் சம்பவம் இதுவெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இது இவ்வாறிருக்க, கடந்த 28ஆம் திகதி புங்குடுதீவில் வைத்து ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். புங்குடுதீவை சொந்த ஊராகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் சுப்பிரமணியம் என்பவரே கொல்லப்பட்டுள்ளார். புங்குடுதீவிலுள்ள உறவினரைச் சந்தித்து விட்டுத் திரும்பும் வழியில், புங்குடு தீவு அலடிச்சந்தியில் வைத்து அங்கு நின்ற சிலரிடம் சாராயம் எங்கு வாங்கலாம் என விசாரித்துள்ளார். அங்கிருந்த இருவர் சாராயம் வாங்கித்தருவதாக் கூறி அவரை அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அவரது சடலம் அடிகாயங்களுடன் தெங்கன் திடல் பிள்ளையார் கோவிலுக்குப் பின்புறமாக காணப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபரிடம் 10 ஆயிரம் ருபா பணம் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.  இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

யாழ்.குடாநாட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக நடைபெற்று வந்த குற்றச்செயல்கள் சற்று குறைந்திருந்த நிலையில், தற்போது இடம்பெற்றுள்ள இக்கொலைச் சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கிளிநொச்சிக்கான நீர் விநியோகம் முழுமையாக்கப்பட்ட பின்னரே இரணைமடு நீர் யாழ்.இற்கு விநியோகம்

Iranaimadu_Tankகிளிநொச்சி இரணைமடுக் குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு நீர் விநியோகம் மேற்கொள்வது குறித்து கடந்த சில காலமாக ஆராயப்படுட்டு வரும் நிலையில், கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கான நீர் விநியோகம் முழுமையாக மேற்கொள்ளப்பட்ட பின்பே யாழ். குடாநாட்டிற்கு இரணைமடுக் குளத்திலிருந்து நீர்பெறும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தீhமானிக்கப்பட்டுள்ளது.

Iranaimadu_Tankஇரணைமடுக்குளத்திலிருந்து யாழ்.மாவட்டத்திற்கு குடிநீர்  விநியோகம் மேற்கொள்வது தொடர்பாக நேற்று (29 May 2010) யாழ். மாவட்டச்செயலக மாநாட்டு மண்டபத்தில் அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கருத்துப் பரிமாறல் சந்திப்பு ஒன்று நடைபெற்றது. இதில் நடாளுமன்றக் குழுக்களின் தலைவர் மு.சந்திரகுமார், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், அ.விநாயகமூர்த்தி, ஐக்கிய தேசயக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி சு.பரமராஜா, யாழ். அரச அதிபர் கே. கணேஸ், யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை, யாழ். பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், தேசிய நீர்வழங்கல் அதிகாரசபை நிர்ப்பாசனத்திணைக்கள அதிகாரிகள். யாழ். மாநகர முதல்வர் திருமதி. ப. யோகேஸ்வரி, நல்லை ஆதீன குரு முதல்வர் ஞானசம்பந்த பராமாச்சாரிய சுவாமிகள் ஆகியோர் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி உட்பட ஏனைய பகுதி  மக்களுக்கான நீர் விநியோகம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் யாழ். குடாநாட்டுக்கு இரணைமடுக் குளத்திலிருந்து நீர்விநியோகம் செய்வது குறித்து ஆராய்வதே முக்கியமானது என்கிற கருத்து அக்கூட்டத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து வெளிப்படுத்தப்பட்டது. யாழ். குடாநாட்டிற்கான குறித்த நீர்விநியோகத் திட்டத்தை இரண்டு வருடங்களுக்கு ஒத்தி வைப்பது தொடர்பாகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பலரது கருத்துக்களின் நிறைவில் தொகுப்புரை நிகழ்த்திய அமைச்சர் டக்லஸ் தேவானந்தா கிளிநொச்சி மக்களுக்கான நீர்விநியோகம் முழுமையாக்கப்படாமல் இரணைமடுக் குளத்திலிருந்து யாழ்.மாவட்டத்திற்கான நீர்விநியோகத்திட்டம் நடைமுறைப்படுத்துவதற்கு இடமளிப்பதில்லை என்பதில் உறுதியாக உள்ளோம் எனத் தெரிவித்தார். அத்துடன் இக்கூட்டத்தில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் உள்வாங்கப்படும் எனவும், கிளிநொச்சி மக்களுடன் இணைந்து மற்றுமொரு கூட்டத்தை ஏற்பாடு செய்து இது தொடர்பில் ஆராயப்படும் எனவும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் மீளக்குடியமர்ந்த முஸ்லிம்களுக்கு பள்ளிவாசல் நிலங்களை வழங்க திட்டம்!

Jaffna_Mosqueயாழ்ப் பாணத்தில் மீள்குடியமர்ந்து வருகின்ற முஸ்லிம் மக்களில் காணி இல்லாதவர்களுக்கு பள்ளிவாசல் காணிகளை வழங்கி குடியயேற்றம் செய்யப்படவுள்ளதாக யாழ். மாநகர சபை உறுப்பினர் மௌலவி ஏ.சுபியான் தெரிவித்துள்ளார். ஏ-9 பாதை திறக்கப்பட்டதன் பின் யாழ்ப்பாணத்தில் இது வரை 59 முஸ்லிம் குடும்பங்கள் யாழ.செயலகத்தில் பதிவுகளை மேற்கொண்டு மீள்குடியமர்ந்துள்ளதாகவும், இது தவிர மேலும் 100 குடும்பங்களும் குடியேறியுள்ளதாகவும், இதில் சொந்தக் காணியுள்ளவர்களுக்கு நிரந்தர வீடுகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருவதாகவும் அவர் குறிப்பட்டுள்ளார்.

அத்துடன் காணிகளற்றவர்களுக்கு 2002 ஆம் ஆண்டு முதல்  யாழ்ப்பாணத்தில் வசிக்கின்ற குடும்பங்கள் என்கிற முன்னுரிமை அடிப்படையில் சுமார் 20 குடும்பங்களுக்கு யாழ். சின்னப்பள்ளி வாசலின் பின்பறமாக மையவாடிப் பகுதியிலும், 50 குடும்பங்களுக்கு வேலணை சாட்டி பள்ளிவாசல் பகுதியிலும் காணிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும், காணிகள் வழங்குவது தொடர்பாக அரசாங்க அதிபரின் அனுமதி கிடைத்ததும், அவை பகிர்ந்தளிக்கப்பட்டு தற்காலிக வீடுகளும் அமைத்துக்கொடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

போரினால் சேதமடைந்த கிளிநொச்சி வைத்தியசாலை புனரமைக்கப்பட்டு மீண்டும் இயங்குகின்றது.

Killinochee_Hospitalபோர் நடவடிக்கைகளால் சேதமடைந்த கிளிநொச்சி வைத்தியசாலை 2கோடியே 50இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு 28 May 2010 முதல் செயற்பட ஆரம்பித்துள்ளது. இவ் வைத்தியசாலை புனரமைப்பிற்கான நிதி யுனிசெவ் நிறுவனத்தால் வழங்கப்பட்டிருந்தது. ஒரு கோடியே 50 இலட்சம் ரூபா கட்டட புனரமைப்பிற்கும், ஒரு கோடி ரூபா உபகரணங்கள் கொள்வனவிற்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Killinochee_Hospitalஅத்துடன் இவ்வைத்தியசாலைக்கான விசேட வாகனங்கள் ஐந்தும் யுனிசெவ் நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளது. புனரமைக்கப்பட்ட கிளிநொச்சி வைத்தியசாலையின் ஆரம்ப நிகழ்வில் அமைச்சர்களான பசில் ராஜபக்ச, டக்ளஸ் தேவானந்தா, சம்பிக்க ரணவக்க, றிசாத்பதியுதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இறுதி யுத்தத்தின் போது கிளிநொச்சி வைத்தியசாலையின் விடுதிகள், உபகரணங்கள் பலவும் சேதமாகின. எனினும் கிளிநொச்சியில் மக்கள் மீளக்குடியமர ஆரம்பித்ததும் ஓரளவிலான பணிகளை பொதுமக்களுக்கு இவ்வைத்தியசாலை மேற்கொண்டு வந்தது. தற்போது புனரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் முன்னரைப் போல் இவ்வைத்தியசாலை செயற்படக் கூடியதாகவிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் நாளை 1800 பேர் மீள்குடியேற்றப்படவுள்ளனர்.

வவுனியா ‘மெனிக்பாம்’ முகாமில் தங்கியுள்ள கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 1800 பேர் நாளை (30-05-2010) அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படவுள்ளனர் என கிளிநொச்சி மாவட்ட  அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். 480 குடும்பங்களைச் சேர்ந்த 1800 பேரே இவ்வாறு மீள்குடியமர்த்தப்படவுள்ளனர். கண்டாவளை பிரதேசச் செயலகப் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி, பிரபந்தனாறு, ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களே மிள்குடியமர்த்தப்படவுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 22ஆயிரம் பேர் இன்னமும் மீள்குடியேற்றப்படாது எஞ்சியுள்ளதாகவும் அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

இனிமேல் சகல பொலிஸ் நிலையங்களிலும் தமிழ் மொழி மூலமான முறைப்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்படும் – பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரிய

Mahinda_Balasuriya_IGPஇலங்கையில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் இனிமேல் தமிழ் மொழி மூலமான முறைப்பாடுகள் கொடுப்பது ஏற்றுக்கொள்ளப்படும் என பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் 26 May 2010 இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

”பொலிஸ் திணைக்களத்தை மக்களுக்குரியதாக மாற்ற முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன். அத்தோடு பொலிஸார் தமிழ் மொழி கற்பதை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளது.  கடந்த காலங்களில் மக்களிடமிருந்து எமக்கு சரியான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. ஆனால் மக்களின் முறைப்பாடுகளை பெறுவதற்கு விசேட நாட்களை ஒதுக்கியுள்ளோம் அதனால், மக்களிடமிருந்து எமக்கு நல்ல பதில் கிடைத்துள்ளது. பொலிஸாருக்கு ‘டிப்ளோமா’ போன்ற பாடநெறிகளை வழங்கவதற்காக பொலிஸ் கல்லூரிகளை ஆரம்பிக்கவுள்ளோம். தமிழ் மொழி மூலமான முறைப்பாடுகளை பெற முடியாத நிலையைப் போக்குவதற்கான வகையில், ஐந்து மாத தமிழ்மொழிப் பயிற்சியை வழங்குகின்றோம். இவ்வாறான முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டிருப்பது வரலாற்றில் முதற் தடவையாகும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழில் ‘வெசாக்’ தின களியாட்ட நிகழ்வகளில் அதிக பணம் அறவிடப்படுகின்றன.

‘வெசாக்’ தின வைபவங்கள் யாழ்.குடாநாட்டில் 27 May 2010 முதல் களைகட்டியுள்ள நிலையில். யாழ். கோட்டைக்கு முன்பாக ‘கானிவெல்’ களியாட்ட நிகழ்வுகளும் ஆரம்பமாகியுள்ளன. இந்நிகழ்வுகள் எதிர்வரும் 5ஆம் திகதி வரை தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வுகளுக்கு தங்கள் சிறு பிள்ளைகளோடு சென்ற குடும்பத்தினர் பலர் ஏமாற்றங்களுக்குள்ளாகினர். ‘கானிவெல்’ நடைபெறுகின்ற வளவினிற்குள் பிரவேசிப்பதற்கு ஒருவருக்கு 50 ருபா ‘ரிக்கற்’ பெற வேண்டும். அதனை விடவும் உள்ளே சென்று ஒவ்வொரு நிகழ்வுகளையும் பார்வையிட வேறு வேறு கட்டணங்கள் அறவிடப்படுகின்றன. சாதாரணமாக ஒரு குடும்பம் 1000 ருபா இல்லாமல் இந்நிகழ்வுகளைக் கண்டு ரசிக்க முடியாது. போரின் பின்பு சுமுகமான நிலையில் இந்த ‘வெசாக்’ தின நிகழ்வுகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் பாதிக்கப்பட்ட மக்களிடம் அதிக பணம் அறவிடப்படுகின்றமை கவலை அளிப்பதாகவுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

புலிகள் அமைப்பில் இணைக்கப்பட்டிருந்த 200 சிறுவர்கள் விடுதலை!

விடுதலைப் புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருந்து, தடுப்பு முகமாம்களில் வைத்து பராமரிக்கப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்ட  200 சிறுவர்கள் 24-05-2010 வவுனியா நீதிமன்றத்தினால் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பல மாவட்டங்களைச் சேர்ந்த இச்சிறுவர்கள் இராணுவப் பாதுகாப்புடன் ஐ.நா. சிறுவர் நிதியப் பிரதிநிதிகளின் வழித்துணையுடன் நிதிமன்றததிற்கு அழைத்து வரப்பட்டனர்.  நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் சிறுவர் நன்னடத்தைப் பிரிவு அதிகாரிகளின் ஊடாக அங்கு வந்திருந்த பெற்றோர்களிடம் அச்சிறுவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.

கொழும்பு இந்துக் கல்லூரியில்  இவர்களுக்கான புனர்வாழ் வளிக்கப்பட்டதாகவும், இவர்கள் புனர்வாழ்வு நடவடிக்கையின் போது திருப்திகரமாக செயற்பட்டதாலும், போதுமான புனர்வாழ்வினைப் பெற்றுக்கொண்டதாலும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பம்மலப்பிட்டி இந்துக் கல்லூரியில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட புழந்தைப் போராளிகள் சில வாரங்களுக்கு முன் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் இசை நிகழ்ச்சி ஒன்றினை வழங்கியது குறிப்பிடத்தக்கது. ( முன்னாள் போராளிகள் உட்பட 495 பேர் பெற்றோர்களிடம் ஒப்படைப்பு!) அம்பேபுச புனர்வாழ்வு முகாமில் இருந்து கொழும்பு இந்துக் கல்லூரிக்கு மாற்றப்பட்ட இச்சிறுவர்களுக்கு இசைக் கருவிகள் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு லிற்றில் எய்ட் உதவியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ( http://littleaid.org.uk/ and http://littleaid.org.uk/gallery/musical-instruments-to-ambepusse-24th-july-2009 )