விஸ்வா

விஸ்வா

காணாமல் போனவர்களை கண்டுபிடித்துத் தருவதாகக் கூறி மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் கிளிநொச்சியில் கைது!

Police_Logo

இறுதி யுத்தத்தில் காணாமல் போனோரைக் கண்டுபிடித்துத் தருவதாகக் கூறி காணாமல் போனவர்களிடம் பணம் பெற முற்பட்டவர்கள் நேற்று ஞாயிற்றுக் கிழமை கிளிநொச்சியில் வைத்து பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டனர்.

காணாமல் போனவர்களை கண்டுபிடித்துத் தருவதாகக் கூறும் தொலைபேசி அழைப்புகள் கடந்த ஒரு வாரமாக வன்னியிலுள்ள மக்கள் பலருக்குச் சென்றுள்ளது. காணாமல் போனவர்களின் உறவினர்கள் இந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பேசினால் காணாமல் போனவர்களை கண்டபிடித்துத் தர முடியும் எனவும், இவ்விடயம் தொடர்பாக வேறு எவருக்கும் தெரியக்கூடாது எனவும் அத்தொலைபேசி இலக்கத்திலிருந்து பேசியவர்கள் கூறியிருக்கின்றனர்.

மேஜர் சீலன், மேஜர் மதியழகன் அகியோர் என தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர். காணாமல் போன போராளிகள், பொதுமக்கள் என ஐயாயிரம் பேர்வரை தங்களிடமிருப்பதாகவும், மக்கள் தங்களிடம் விபரங்களைக் கூறினால் அவர்கள் உள்ளனரா இல்லையா எனபதைக் கூறமுடியும் எனவும், உயிருடன் உள்ளவர்களை ஒப்படைக்க குறிப்பட்ட தொகைப் பணம் தரவேண்டும் எனவும் பொதுமக்களிடம் இவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு காணாமல் போனவர்களின் உறவினர்கள் தாம் ஒப்புக்கொள்வதாகக் கூறியுள்ளனர்.

நேற்றுக் காலை கிளிநொச்சியிலுள்ள கனகபுரம் மகாவித்தியாலயத்திற்கு காணாமல் போனவர்கள் சிலரின் உறவினர்களை பணத்துடன் வருமாறு அறிவித்ததுடன், குறித்த பாடசாலை அதிபரிடம் அதற்க அனுமதியினையும் கேட்டுள்ளனர். அதற்கு ஒப்புக்கொண்ட பாடசாலை அதிபர் உடனடியாக பொலிஸாருக்கு இவ்விடயம் குறித்து அறிவித்திருக்கின்றார். பின்னர் இது குறித்து இரணுவத்தினருக்கும் அறிவிக்கப்பட்டு, சிவில் உடையில் பாடசாலைப் பகுதியில் காத்திருந்த இராணுவத்தினரும் பொலிஸாரும் குறித்த மோசடி நபர்கள் பாடசாலைக்கு வந்த போது சுற்றிவளைத்துப் பிடித்திருக்கின்றார்கள்.

பிடிபட்டவர்கள் இம்மோசடிக்கு காரணமானவரின் முகவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. பிரதான நபர் பிடிபடவில்லை. இம்மோசடி சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிரமாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

”நூலகத்தில் முறைகேடாக நடந்தவர்கள் மீது ஏன் சட்டநடவடிக்கை எடுக்கவில்லை?” பொலிஸ் அதிகாரியிடம் நல்லிணக்க ஆணைக்குழு கேள்வி.

Jaffna_Libraryசில வாரங்களுக்கு முன்னர் யாழ்.பொதுநூலகத்திற்குள் முறைகேடாக நடந்து கொண்டவர்களுக்கெதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவர் சி.ஆர்.டி.சில்வா பொலிஸாரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமர்வுகளை நடத்தி வரும் நல்லிணக்க ஆணக்குழுவினர் நேற்று ஞாயிற்றுக் கிழமை காலை 9மணியளவில் யாழ்.பொது நூலகத்திற்குச் விஜயம் செய்தனர். அப்போது பொதுநூலக நூலகரிடம் அண்மையில் தென்னிலங்கையிலிருந்து சென்ற சுற்றுலாப்பயணிகள் யாழ்.நூலகத்தில் நடந்துகொண்ட முறை குறித்து ஆணைக்குழுவின் தலைவர் கேட்டறிந்துள்ளார். நடந்த விடயங்களையும் நூலக ஒழங்கு விதிகள் குறித்தும் நூலகர் விளக்கியுள்ளார். இது குறித்து சட்ட நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனையடுத்து ஆணைக்குழுவின் தலைவர் பொலிஸ் அதிகாரியை அழைத்து இந்த அசம்பாவித சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களுக்கு எதிராக ஏன் சட்டநடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார். அதற்கு பொலிஸ் அதிகாரி மௌனம் சாதித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

நெல்லியடியில் சைக்கிள் திருட்டுக்கள் அதிகரிப்பு. 15 சைக்கிள்கள் பொலிஸாரினால் மீட்பு!

யாழ்.வடமராட்சி நெல்லியடிப் பகுதிகளில் சைக்கிள் திருட்டுக்கள் அதிகரித்து வருவதாக பொலிஸில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனைத் தடுப்பதற்கு பொலிஸார் தற்போது துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்படி நெல்லியடி, பருத்தித்துறை, வல்வெட்டித்துறை ஆகிய பகுதிகளில் களவு போன 15 சைக்கிள்கள் மேற்படி பொலிஸ் குழுவினரால் மீடக்கப்பட்டுள்ளன. மீட்க்கப்பட்ட இந்த சைக்கிள்களை அதன் உரிமையாளர்கள் அடையாளம் காட்டிப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சைக்கிள் திருட்டுக்கள் தொடர்பாக அதிகளவிலான முறைப்பாடுகள் நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்தமையை அடுத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் அமைக்கப்பட்ட பொலிஸ் குழுவினரே நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

காணாமல் போனோர், தடுத்து வைக்கப்பட்டோர் தொடர்பாக நாளை யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட நிகழ்வு நடைபெறவுள்ளது.

Jaffna_Bus_Strandகாணாமற் போனோர் மற்றும், சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டோர் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று நாளை திங்கள் கிழமை நடத்தப்படவுள்ளது.

Jaffna_Bus_Strandகாணாமல் போனோர் தடுத்து வைக்கபட்டுள்ளோர் தொடர்பான விபரங்களை வெளியிடுமாறு கோரி யாழ். பஸ் நிலையத்தில் அனைத்துலக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் சக அமைப்பான ‘நாம் இலங்கையர்’ என்ற அமைப்பின் எற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

காணாமல் போனோரின் உறவினர்கள் அவர்களின் படங்களுடன் வந்து இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு ‘நாம் இலங்கையர்’ என்ற அமைப்பின் அமைப்பாளர் ருவான் போபகே கேட்டுக்கொண்டுள்ளார். இதில் மாணவர்கள் புத்திஜீவிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கு பற்றுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமது கோரிக்கையை வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டம் ஒன்றையும் நாளை அவர் நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாவற்குழி தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்குச் சொந்தமான காணியின் எஞ்சிய இடங்களை யாழ்.மக்கள் கைப்பற்றியுள்ளனர்.

நாவற்குழியிலுள்ள தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணியில் சிங்கள குடும்பங்கள் குடியேறி கொட்டில்களை அமைத்துள்ள நிலையில், மிகுதியாகவுள்ள காணிகளில் யாழ்ப்பாண மக்கள் சென்று கைப்பற்றியுள்ளனர்.
நாவற்குழியிலுள்ள குறித்த காணியில் கடந்த 10ஆம் திகதி இரவோடிரவாக யாழ்.புகையிரத நிலையத்தில் தங்கியிருந்த 70 சிங்களக் குடும்பங்கள் குடியேறி கொட்டில்களையும் அமைத்துள்ள நிலையில் நேற்று சனிக்கிழமை சாவகச்சேரி மற்றும் குருநகர் பகுதி மக்கள் சென்று எஞ்சிய நிலப்பகுதிகளைக் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வேளையில் சிறிது பற்றம் நிலவிய போதும் சிங்கள மக்கள் பிடித்து வைத்திருக்கும் நிலங்களைத் தவிர்த்து ஏனைய இடங்களை தமிழ்மக்கள் பிடித்துக்கொண்டனர்.

தற்போது 50 வரையிலான கொட்டில்களை சிங்களக் குடும்பங்கள் அமைத்துள்ளன. ஆனால், 50 இற்கும் மேற்பட்ட கொட்டில்களை தமிழ்மக்கள் அமைத்துளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று மீள்குடியேறச் சென்ற யாழ்.கொழும்புத்துறை வலன்புரம் மக்களை படையினர் அனுமதிக்கவில்லை.

யாழ்.கொழும்புத்துறையைச் சேர்ந்த வலன்புரம் பகுதி மக்கள் நேற்று சனிக்கழமை தங்களது சொந்த இடங்களில் மீள்குடியேறச் சென்ற போது படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். தங்களது சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்காக சென்ற குறித்த பகுதி மக்கள் அப்பகுதிகளில் சிரமதானப் பணிகளில் ஈடுபட்டனர். ஆனால், அவர்கள் அப்பகுதிகளில் குடியேற படையினர் அனுமதிக்கவில்லை.

சுமார் 15 வருடங்களுக்கு மேலாக இப்பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்களின் சொந்த இடங்களில் குடியேறி வாழும் விருப்பத்துடன் அப்பகுதிகளில் சிரமதானப் பணிகளை மேற்கொண்டனர். அப்பகுதிகளில் வெடிபொருட்கள் அகற்றப்பட வேண்டியுள்ளதாகவும் அதன் பின்னர் மீள்குடியேற்றத்திற்கான ஒழங்குகளை ஏற்படுத்தித் தருவதாகவும் படைத்தரப்பில் பின்னர் தெரிவிக்கப்பட்டதையடுத்து மக்கள் திரும்பிச்சென்று விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பளையில் மீள்குடியமர்ந்த மக்களுக்கு பல்வேறு நிறுவனங்கள் உதவி.

பளைப் பிரதேசத்தில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு பல்வேறு நிறுவனங்கள் உதவிகளை வழங்கி வருகின்றன. பளைப் பிரதேசத்தில மீளக்குடியமர்ந்த மக்களில் மோசமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவ்வுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

யாழ். வை.எம்.சி.ஏ நிறுவனம் உழைப்பாளிகளை இழந்த குடும்பங்களுக்கு தையல் இயந்திரங்களையும், தீவக லயன்ஸ் கழகத்தினர் வறுமை நிலையிலுள்ள இரு குடும்பங்களுக்கு சைக்கிள்களையும், வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஜனாதிபதியின் செயலாளர் யாழ்.வருகை.

Lalith_Weerathunga_Secretaty_to_Presidentஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் செயலாளர் லலித் வீரதுங்க நேற்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். அவர் யாழப்பாணத்தில் காரைநகர் கசூரினா கடற்கரை, யாழ்.நூலகம் ஆகிய இடங்களுக்குச் சென்று
பார்வையிட்டார்.

யாழ். நூலகத்திற்குச் சென்ற ஜனாதிபதியின் செயலர் நூலகருடன் கலந்துரையாடி பல விடயங்களை கேட்டறிந்தார். ஜனாதிபதியின் செயலாளர் தனிப்பட்ட விஜயமாக யாழ்ப்பாணம் வருகை தந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாவற்குழியில் சிங்கள மக்கள் அத்துமீறிக் குடியேறியுள்ளமை தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க ஆராய்வதாக சிவாஜிலிங்கம் தெரிவிப்பு.

Sivajilingam M K Presidential Candidateதென் னிலங்கைப் பகுதிகளிலிருந்த வந்து யாழ் புகையிரத நிலையத்தில் தங்கியிருந்த சிங்களக் குடும்பங்கள் திடீரென நாவற்குழியிலுள்ள தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்குச் சொந்தமான காணியில் அத்துமீறிக் குடியேறியுள்ளமை தொடர்பாக யாழ். அரச அதிபரோ, தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் யாழ். முகாமையாளரோ எதுவித நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை எனவும், இந்த அத்துமீறிய குடியேற்றத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தமிழ் தரப்பு ஆராய்ந்து வருவதாவும் தமிழ்தேசிய விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

படையினரின் ஆதரவுடனேயே இக்குடியேற்றம் நடைபெற்றுள்ளது எனவும், தமிழரின் பாரம்பரிய பூமியில் அவர்களைச் சிறுபான்மையினராக மாற்றும் அப்பட்டமான இனவாதமே இது எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலஸ்தீன மண்ணில் இஸ்ரேலினால் மேற்கொள்ளப்படும் யூதக் குடியேற்றத்திற்கு ஒப்பானது இது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மையில் திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில் கண்டல்காடு என்னுமிடத்தில் மீள்குடியேறுவதற்காக முஸ்லிம்கள் குடிசைகளை அமைக்க முற்பட்டபோது அரசஅதிபரின் உத்தரவின் பேரில் பொலிஸாரினால் முஸ்லிம் மக்களின் குடிசைகள் தீக்கிரையாக்கபட்டன எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உயர்பாதுகாப்பு வலயங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் பலர் இன்னமும் மீளக்குடியமர முடியாத நிலையிலுள்ளனர். அவர்கள் அத்துமீறி அரசகாணிகளில் குடியேறுவதுதான் ஒரே வழி என்பதை இவ்வாறான நடவடிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன எனவும் சிவாஜிலிங்கம் விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குறிக்காட்டுவான் – நெடுந்தீவு பயணத்திற்கு புதிய படகு தயாராகிறது.

New_Boat_for_Islandsகுறிக் காட்டுவான் – நெடுந்தீவு மக்களுக்கான புதிய படகுச் சேவை ஒன்றை ஈடுபடுத்துவதற்காக கொழும்புத் துறைமுக டொக்யாட்டில் படகு ஒன்று நிர்மாணிக்கப்படம்டு வருவதாகவும், சுமார் எட்டு இலட்சம் ரூபா செலவில் இது நிர்மாணிக்கப்படுவதாகவும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும், சிறு கைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Colombo_Dockyard_DDபொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளையடுத்தே இப்படகு உருவாக்கப்பட்டு வருவதாகவும் வெகு விரைவில் இப்படகு சேவையிலீடுபடுத்தப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.