விஸ்வா

விஸ்வா

யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதரகத்தை இந்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா திறந்து வைப்பார்.

Indian_Flagயாழ்ப் பாணத்தில் எதிர்வரும் 27ஆம் திகதி இந்தியத் துணைத்தூதரகம் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா இதனைத்திறந்து வைக்கவுள்ளார். அமைச்சர் எஸ்எம்.கிருஸ்ணா எதிர்வரும் 25ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார் எனவும், அம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்டுள்ள இந்தியத் தூதரகத்தையும் அவர் திறந்து வைப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம் வருகைதரவுள்ள அவர் வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நூறு உழவு இயந்திரங்களை நேரடியாக கையளிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உழவு இயந்திரங்கள் யாழ்ப்பாணத்திற்கு தற்போது கொண்டுவரப் பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

வலிகாமம் வடக்கில் 27ஆம் திகதி மீள்குடியேற்றம்.

வலிகாமம் வடக்கில் முன்று கிராமசேவையாளர் பிரிவுகளில் எதிர்வரும் 27ஆம் திகதி மக்கள் மீள்குடியேற்றப் படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள குறித்த மூன்று பிரிவுகளிலும் பொதுமக்கள் மீள்குடியேற்றப்படவுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அதனை ஒரு வைபவரீதியாக மேற்கொள்ளும் விடயத்தில் ஏற்பட்ட இழுபறிகள் காரணமாக அது பிற்போடப்பட்டது.

இளவாலை வடமேற்கு, இளவாலை வடக்கு, வித்தகபுரம், ஆகிய பகுதிகளிலேயே மக்கள் மீள்குடியமர்த்தப் படவுள்ளனர். இந்த நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச கலந்து கொள்ளவுள்ளார். அத்துடன் அன்றைய தினம் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணாவும் அதில் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் மக்களிடம் பணம் பறிக்க முற்பட்ட மோசடிக் கும்பலில் பிடிபட்ட நால்வருக்கு விளக்கமறியல்.

காணாமல் போனதாகக் கருதப்படும் புலிச்சந்தேக நபர்களை விடுவிப்பதாகக்கூறி கிளிநொச்சியில் பொதுமக்களிடம் பணம் பறிக்க முயன்ற நால்வர் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு அவர்களை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவானால் உத்தரவிடப்பட்டுள்ளது.

இவர்களில் மூவர் கனகபுரம் பாடசாலையில் வைத்து மக்களிடம் பணம் பெறவந்த போது பாடசாலை அதிபரின் பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் அறிவித்ததையடுத்து பிடிபட்டமை தெரிந்ததே. மேஜர் சீலன் என்பவருடன் அவரது முகவர்களாக செயற்பட்ட நால்வர் நேற்று புதன்கிழமை பொலிஸாரினால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு நீதவானால் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

நீதிமன்றில் பொலிஸார் சமாப்பித்த அறிக்கையில் மேஜர் சீலன் எனத் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டவருக்கும் இராணுவத்தினருக்குமிடையில் சம்மந்தம் எதுவுமில்லை எனவும், பொதுமக்களை ஏமாற்றிப் பணம் பறிப்பதற்காக தன்னை அவர் அவ்வாறு அறிமுகம் செய்துகொண்டார் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.

நாவற்குழியில் அத்துமீறி குடியேறியுள்ள சிங்கள மக்களின் பிரச்சினைகளுக்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஜனாதிபதி பணிப்பு.

Douglas_Devanandaயாழ். நாவற்குழியிலுள்ள தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் காணியில் அத்துமீறிக் குடியமர்ந்துள்ள சிங்கள மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து அம்மக்கள் அங்கிருந்து வெளியேற நடவடிக்கை எடுக்குமாறு தன்னை ஜனாதிபதி பணித்துள்ளதாக பாரம்பரிய மற்றும், சிறு கைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நேற்று யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றை ஆரம்பித்து வைத்து உரை நிகழ்த்தும் போது இதனை அவர் தெரிவித்தார். தான் இவ்விடயம் தொடர்பாக அம்மக்களை சந்தித்து கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் சட்டதிட்டங்களுக்கு மாறாக அத்துமீறி குடியேறுவது தடுக்கப்படல் வேண்டும் எனவும், சிங்களவர்களாக இருந்தாலும் தமிழர்களாக இருந்தாலும் அது தவாறான செயல் எனவும் அவர் குறிப்பிட்டாhர்.

இதேவேளை, யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த ஜே.வி.பியினரின் நோக்கம் சரியா பிழையா என்பதற்கப்பால் அவர்கள் மீது வன்முறையைப் பிரயோகித்தமை கண்டிக்கப்படவேண்டிய ஒன்று எனவும் அமைச்சர் டக்ளஸ் தோவானந்தா குறிப்பிட்டார்.

“யாழ்ப்பாணத்தில் எங்களை பொதுமக்கள் தாக்கவில்லை” -ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவிப்பு.

Sunil_Handunnetti_JVP_MPயாழ்ப் பாணத்தில் ஜே.வி.பியினரை பொதுமக்கள் தாக்கினார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ள செய்தி தவறானது என்றும், தங்கள் மீதான தாக்குதலின் பின்னணியில் புலனாய்வுப்பிரிவினரே செயற்பட்டதாகவும் தாக்குதலுக்குள்ளானவர்களில் ஒருவரான ஜே.வி.பியின் நடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.

நேற்றுக்காலை பத்தரமுல்ல பெலவத்தயில் அமைந்துள்ள ஜே.வி.பியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

யாழ்நகரில் தம்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக தாம் பொலிஸாருக்கு முறைப்பாடு பதிவு செய்வதற்கு முன்னரே யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் ஜே.வி.பியினர் மீது தாக்குதல் நடத்தியதாக அரசு தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டது. இதிலிருந்தே தாக்குதலை யார் மேற்கொண்டனர் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

யாழ்.வைத்தியசாலையில் தாங்கள் அனுமதிக்கப்பட்டிருந்த போது அங்கு வந்த பொலிஸார் எங்களை உடனடியாக குடாநாட்டை விட்டு வெளியுறுமாறும், தங்களால் பாதுகாப்பு வழங்க முடியாது எனவும் தெரிவித்தனர் யாழ். நகரிலும் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் தமிழ் மக்கள் தங்களுடன் நல்லுணர்வுடன் நடந்து கொண்டனர். வைத்தியசாலை வைத்தியர்கள். தாதியர் முதலானோர் தங்களுடன் பண்பாக நடந்து கொண்டதோடு தங்களை சிரத்தையோடு கவனித்தனர் எனவும் அவர் கூறினார்.

வடக்கு கிழக்கில் தற்போது இரண்டாவது பிரபாகரனின் ஆட்சி நடைபெறுகின்றது. கோத்தாபய ராஜபக்ச அங்கு பிரபாகரனாக செயற்படுகின்றார் எனவும், புலனாய்வப் பிரிவினா சிந்திப்பதையும் நினைப்பதையும் பொதுமக்கள் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர் எனவும் சுனில் ஹந்துநெத்தி குறிப்பிட்டார்.

அச் செய்தியாளர் மாநாட்டில் அவர் தங்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்களையும் காண்பித்தார்.

விடுதலைப்புலி உறுப்பினர்கள் போரிலேயே கொல்லப்பட்டனர் என மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா சாட்சியம்.

விடுதலைப்புலிகளின் தலைவர்கள் வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்தபோது அவர்களைக் கொலை செய்ததான வழக்கு விசாரணையில் மூன்றாவது சாட்சியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று செவ்வாய் கிழமை இரண்டாவது தடவையாக குறுக்கு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார். போரின் போது 58வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாக கடமையாற்றியவரும் தற்போது ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதியாக பணியாற்றுவருமான மேஜர் ஜெனரல் சவேந்திரசில்வா நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.

விடுதலைப்புலிகளின் சமாதானச் செயலக பணிப்பாளராகவிருந்த புலித்தேவன், அரசியல்துறைப் பொறுப்பாளராகவிருந்த நடேசன், புலிகளின் தளபதிகளில் ஒருவராகவிருந்த ரமேஸ் ஆகியோர் யுத்தத்தின்போதே கொல்லப்பட்டனர் என சவேந்திரசில்வா தெரிவித்தார்.

வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதிகளான தீபாலி விஜேசுந்தர, எச்.என்.பி.பி. வாரவெல, சர்பிக் ரஸீக் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதன்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சவேந்திர சில்வா பதிலளித்தார்.

குறிப்பிட்ட விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் சரணடைந்திருந்தால் அதனை தாங்கள் ஏற்றுக்கொண்டிருப்போம் எனவும், ஆனால், அவர்கள் சரணடைய விரும்பவில்லை எனவும், யுத்தத்தின் போதே அவர்கள் கொல்லப்பட்டனர் எனவும் சவேந்திரசில்வா தெரிவித்தார்.

இதன்போது அவரிடம் கேட்கப்பட்ட பல குறுக்குக் கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.

நிதிமோசடியில் தாம் ஈடுபடவில்லை என தெரிவிக்கின்றார் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அ.விநாயகமூர்த்தி

Vinayagamoorthy_A_TNA_MPதமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அ.விநாயகமூர்த்தி தாம் நிதிமோசடியில் ஈடுபட்டதாக வெளியாகியுள்ள தகவல்களை மறுத்துள்ளார். தான் அவ்வாறு மோசடியில் ஈடுபட்டமை உறுதிப்படுத்தப்படுமானால் தனது நடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்கத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ். கொக்குவிலில் அவரது இல்லத்தில் நேற்று செவ்வாய் கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்து இவ்விடயம் தொடர்பாக விளக்கினார். இவ்விவகாரம் தொடர்பாக அவர் கூறியதாவது-

“விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினரான எழிலனின் மனைவி எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதனையடுத்து எழிலனை விடுதலை செய்யுமாறு பயங்கரவாத தடுப்புப்பிரிவு அத்தியட்சகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பினேன். அதன் பின்னர் மேஜர் மதியழகன் எனத் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர் என்னுடன் தொடர்பு கொண்டு எழிலன் உயிருடன் இருப்பதாகவும், நான் பயங்கரவாதத் தடுப்புப்பிரிவுக்கு எழுதிய கடிதம் தன்னிடமிருப்பதாகவும், எழிலனின் விடுதலை குறித்து அவரது மனைவியிடம் பேச வேண்டும் எனவும் தெரிவித்தார். பின்னர் அவரே எழிலனின் மனைவியின் தொலைபேசி இலக்கத்தையும் தந்தார். பின்னர் அவர் எழிலனின் மனைவியுடன் கதைத்து அவரை விடுவிக்கப் பணம் கோரியதாக அறிந்தேன். இதே போன்ற சம்பவங்கள் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களான ந.நிதர்சன், சுதாமாஸ்ரர், ஆகியோரின் உறவினர்களுக்கும் நடந்ததாக அறிந்தேன். இந்த விடயங்களை இரணுவத் தளபதிக்கு கடிதம் மூலம் தெரிவித்தேன். புலி உறுப்பினர்களை விடுவிப்பதாகக் கூறி அவர்களின் உறவினர்களிடம் பணம் பறிக்கும் குழுவின் மீது நடவடிக்கை எடுக்குமாறும் அதில் குறிப்பிட்டிருந்தேன். ஆனால், நான் நிதி மோசடியில் ஈடுபட்டதாக விசமப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு நான் ஈடுபட்டமை ஆதாரத்துடன் நிரூபிக்கப்படுமானால் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பேன்”

-இவ்வாறு அவர் தெரவித்தார்.

பாடசாலையில் வைத்து நஞ்சருந்திய நான்கு மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி.

நேற்று செவ்வாய் கிழமை காலை பிரார்த்தனை நிகழ்வு முடிவுற்றதும் பாடசாலையில் வைத்தே நான்கு மாணவிகள் நஞ்சருந்தியுள்ளனர். இம்மாணவிகள் உடனடியாக சங்கத்தானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில அனுமதிக்கப்பட்டனர்.

இம்மாணவிகள் பாடசாலைச் சுவரில் பெயர்களை வெட்டியதற்காக அதிபர் இம்மாணவிகளை அனைத்து மாணவ மாணவிகளுக்கும் முன்னிலையில் கண்டித்தாகத் தெரியவருகிறது. அதனால் ஏற்பட்ட அவமானத்தைத் தாங்க முடியாமலேயே இம்மாணவிகள் குடிபானம் ஒன்றில் எதனையோ கலந்து அருந்தி உள்ளனர்.

வலிகாமம் பகுதியில் வடலி அடைப்பில் உள்ள பாடசாலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இம்மாணவிகள் அங்கு ஓஎல் படிக்கின்றனர் எனத் தெரியவருகிறது.

ஜே.வி.பி உறுப்பினர்கள் மீது யாழ்ப்பாணத்தில் இனந்தெரியாதவர்கள் தாக்குதல்.

JVP Bannerயாழ்ப் பாணத்தில் ஜே.வி.பி உறுப்பினர்கள் மீது நேற்று ஞாயிற்றுக் கிழமை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு யாழ்.கந்தர்மடத்தில் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதனின் இல்லத்தில் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி மற்றும், ஜே.வி.பியின் உறுப்பினர்கள் மூவர் உரையாடிக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள்களில் சென்ற இனந்தெரியாத நபர்கள் வீட்டிற்குள் புகுந்து ஜே.வி.பி உறுப்பினர்கள் மீது தாக்குதல்களை நடத்தினர். அத்துடன் ஜே.வி.பியினர் சென்ற வாகனமும் தாக்குதலுக்குள்ளானது.

இத்தாக்குதலில் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுனில் ஹெந்துநெத்தி, அக்கட்சியின் முன்னாள் உறுப்பினர் எம்.மோகன். கட்சியின் யாழ்.குழுத்தலைவர் லலித்குமார், ஜே.வி.பியின் பத்திரிகையான ‘லங்கா’வின் ஊடகவியலாளர் பிரியந்த ஆகியோர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து அங்கு வந்த பொலிஸாரினால் இவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டனர்.

தடுத்து வைக்கப்பட்டோர் மற்றும், காணாமல் போனோரின் விபரங்களை வெளியிட வேண்டும் எனக்கோரி யாழப்பாணத்தில் இன்று திங்கள் கிழமை ‘நாம் இலங்கையர்’ என்ற அமைப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவிருந்தது. இதற்காகவே ஜே.வி.பியினர் யாழ்ப்பாணம் சென்று பல்வேறு தரப்பினரைச் சந்தித்து உரையாடினர். இதனடிப்படையில் நேற்று மாலை 6.30 மணியளவில் யாழ்.கந்தர்மடத்திலுள்ள பத்மினி சிதம்பரநாதனின் இல்லத்திற்குச் சென்று அவருடன் கலந்துரையாடிக் கொண்டிருக்கையில் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

”நாவற்குழியில் காணிகளின் உறுதிப்பத்திரங்கள் இருந்தால் உடனடியாக குடியேற்றப்படுவர்” மீள்குடியேற்ற அமைச்சர்

milroy_fernando.bmpயாழ். நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் காணியில் குடியேறியுள்ள சிங்கள மக்களிடம் அக்காணிகளுக்கான உறுதிப்பத்திரங்கள் இருக்குமானால் 24 மணிநேரத்திற்குள் அவர்கள் அக்காணிகளில் குடியேற்றப்படுவர் என மீள்குடியேற்ற அமைச்சர் மில்றோய் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தற்போது அங்கு குடியேறியுள்ளவர்களை வெளியேற்றுவது குறித்து வீடமைப்பு அதிகார சபையினர் தான் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது பதவியேற்பு நிகழ்வினையொட்டி ஆயிரம் மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மானிப்பாய் இந்துக்கல்லூரியில் நடைபெற்ற போது அமைச்சர் அதில் கலந்து கொண்டு திரும்புகையில் ஊடகங்கள் நாவற்குழி குடியேற்றம் குறித்து கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க, நாவற்குழியிலுள்ள வீடமைப்பு அதிகாரசபையின் காணியில் சிங்கள மக்கள் அத்துமீறி குடியேறியுள்ளமை குறித்து வீடமைப்பு அதிகார சபையினர்தான் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அரசாங்க அதிபர் என்ற முறையில் தான் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது எனவும் யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.