சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

மூன்றாவது அணிக்கு பிரதமர் வேட்பாளர் இப்போது தேவையில்லை என்கிறார் ஜெயலலிதா

jayalalitha.jpgஇந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்காக உருவாகியுள்ள மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து தேர்தல் முடிவுகள் எல்லாம் வெளியானபிறகு யோசித்துக்கொள்ளலாம் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறி இருக்கிறார்.

இப்போதே முடிவு செய்ய அவசரம் எதுவுமில்லை, அவ்வாறு செய்யாமலிருப்பதால் அணியின் வெற்றி வாய்ப்புகள் பாதிக்கப்படப்போவதுமில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும் உத்திரப் பிரதேச முதல்வருமான மாயாவதி ஞாயிறன்று அளித்த விருந்து பற்றி சரியான தகவல் கிடைக்காததால்தான் தன் கட்சிப் பிரதிநிதி அதில் கலந்துகொள்ளவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

திருகோணமலை சிறுமி வர்ஷா படுகொலை சந்தேக நபரின் சடலத்தைப் பொறுப்பேற்க தாயார் மறுப்பு

varsa.jpg
திருகோணமலையில் 6 வயது சிறுமி படுகொலை தொடர்பாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பிரதான சந்தேக நபரின் சடலத்தை அவரது தாயார் அடையாளம் காட்டிய போதிலும் அதனைப் பொறுப்பேற்க மறுத்துவிட்டார்.

நித்தியபுரத்தைச் சேர்ந்த ஒப்ரின் மேர்வின் ரினோசன் (வயது 26) என்ற இந்நபர் நேற்று ஞாயிற்றுக்கிழமை வைத்திய பரிசோதனைக்காகப் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட வேளை, பொலிஸ் அதிகாரி ஒருவரின் கழுத்தை நெரித்துத் தப்பியோட முயன்றபோது, குறித்த பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாகப் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்மரணம் தொடர்பான விசாரணை நடைபெற்ற போது சாட்சியமளித்த சந்தேக நபரின்தாயார் “கடந்த 3 வருடங்களாக இவருக்கும் குடும்பத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. கணவரை விட்டு பிரிந்து நான் வாழ்ந்து வருகின்றேன்.இவரது சடலத்தை பொறுப்பேற்பதற்கும் நான் விரும்பவில்லை” எனக் குறிப்பிட்டார்.

சடலத்தைப் பொறுப்பேற்கத் தாயார் மறுத்ததையடுத்து அரச செலவில் அடக்கம் செய்யுமாறு பொலிஸாருக்கு மரண விசாரணையின் பின்பு மஜிஸ்திரேட் ரி.எல்.ஏ.மனாப் உத்தரவு பிறப்பித்தார்.இதனையடுத்து அவரது சடலம் இன்று அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டது.

இச் சிறுமியின் கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்ட திருகோணமலை பொலிஸ் தகவல்களின்படி சந்தேகத்தின் பேரில் கைதானவர்களில் ஒருவர் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் மகன் என்றும் மற்றுமொருவர் தமிழ் அரசியல் கட்சியொன்றுடன் தொடர்புடையவர் என்றும், மேலும் ஒருவர் கடந்த ஒரு மாத காலமாக சிறுமிக்குக் கணினி கற்பிப்பதற்காக வீட்டுக்கு சென்று வந்தவர் என்றும் தெரிய வருகின்றது. கணனி கற்பித்தவர் சிகரம் என்னும் இணைய வானொலி சேவையொன்றை நடத்தி வந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

இச்சிறுமி உவர் மலையிலுள்ள தமிழ் அரசியல் கட்சியொன்றின் காரியாலயத்திலேயே தடுத்து வைக்கப்பட்டிருந்தமை, மற்றும் இரண்டு சந்தேக நபர்களினால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை போன்ற தகவல்களும் தமது விசாரணைகளின் இருந்து தெரியவந்துள்ளதாகப் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இவற்றைத் தவிர, இந்தச் சந்தேக நபர்கள் திருகோணமலை பிரதேசத்தில் இடம்பெற்ற சில கடத்தல் மற்றும் கப்பம் கோரும் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

அதே வேளை படுகொலை செய்யப்பட்ட சென்.மேரிஸ் மகளிர் பாடசாலையின் முதலாம் வகுப்பு மாணவியான ஜூட் ரெஜி வர்ஷாவின் பூதவுடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. பாடசாலை மாணவர்கள் உட்பட பெருந்தொகையானோர் இதில் கலந்து கொண்டனர்

மனித நாகரிகம் வெட்கித் தலைகுனியும் செல்வி ஜுட் றெஜி வர்ஷாவின் கொலைக்கு கண்ட அறிக்கையும் கண்ணீர் அஞ்சலியும் : சிறீ-ரெலோ

கடந்த புதன்கிழமை (மார். 12) திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட தரம் ஒன்றில் கல்வி பயிலும் 6 வயதான யூட் றெஜி வர்சா என்ற சிறுமியின் கொலை குறித்து சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ஊடகப்பிரிவு) திருகோணமலையில் வெளியிட்ட துண்டுப்பிரசுரத்தில் மனித நாகரிகம் வெட்கித் தலைகுனியும் செல்வி ஜுட் றெஜி வர்ஷாவின் கொலைக்கு தமது வன்மை மிகுந்த கண்டனத்தை உறுதியுடன் வெளிப்படுத்தும் அதேவேளை அச்சிறுமியின் மறைவுக்கு தமது கண்ணீர் அஞ்சலியும் செலுத்திக் கொள்வதாக தெரிவித்துள்ளது. சிறீ-ரெலோ வெளியிட்ட துண்டுப்பிரசுரம் முழுமையாக; 

கண்டன அறிக்கையும் கண்ணீர் அஞ்சலியும்

செல்வி ஜுட் றெஜி வர்ஷா
( St.Mary’s College முதலாம் ஆண்டு மாணவி)
பிறப்பு 30.10.2003 இறப்பு 11.03.2009

எங்கள் வாழ்வுக்கும் இருப்புக்குமான இழப்புகளும், அழிவுகளும் போதாதா, சொந்த மண்ணில் மக்கள் படும் துயரம் தீராதா, என்று எந்நாளும் எதிர்பார்ப்பில் வாழும் மக்கள் சகல பிரச்சனைகளையும் தீர்த்து வாழுதல் வேண்டாமா? இந்த நிலையில் இங்கு நடப்பது என்ன? பள்ளிப் பிள்ளைகள் பணத்துக்காக கடத்தப்பட்டு கொல்லப்படுவது பார்த்துக் கொண்டிருக்க முடியாது. யாரும் இதை அனுமதிக்க முடியாது.

எமது மக்களின் வாழ்வுக்கான தியாகத்தில் எமது இழப்புகளும் சாதாரணமானதல்ல. ஜனநாயக வழியில் எமது மக்களின் இருப்பையும் வாழ்வையும் நிர்ணயிக்கும் பாரிய மக்கள் கடமையில் எம்மை முழுமையாக அர்ப்பணிக்க முன்வந்திருக்கும் நாம் இந்தக் கொடுமைகளையும், அராஜகத்தையும் அனுமதிக்க முடியாது. இவ்வாறான மக்கள் விரோத செயலுக்கு எதிராக நாம் எப்போதும் விழிப்புடனும் எதனையும் முன்னெடுக்கவும் தயக்கம் காட்ட முடியாது. மக்களே இவ்வாறான மக்கள் விரோத செயலில் ஈடுபடுபவர்களுக்க்கெதிராக எம்முடன் சேர்ந்து ஒத்துழைக்குமாறு வேண்டுகிறோம்.

இன்று இப்பள்ளிப் பிள்ளையின் இழப்பு நாம் அனைவரும் வேதனை சுமப்பது மட்டுமல்ல, வெட்கித் தலைகுனியும் செயலுமாகும். இப்பிள்ளையின் இழப்பு கல்விச் சமூகத்துக்கும் மட்டும் அல்ல முழு தமிழ்ச் சமூகத்துக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் சம்பவமாகும்.இக்குழந்தையின் குடும்பத்தினர் தாங்கும் துன்பத்தில் நாமும் சேர்ந்த போதும் அது முழுமையான ஆறுதலாகுமா?

ஆயினும் எமது அனுதாபம், ஆறுதல் அவர்களுக்கு எப்போதும் பிணைவாகும்.

மீண்டும் அனைத்து சமூக சக்திகளுக்கு சிறீ ரெலோ அமைப்பினரான நாம் வேண்டுதலாக முன்வைப்பது, இவ்வாறான கொடூர செயலில் ஈடுபடுவோரை இனங்கண்டு பாதுகாப்பு தரப்புக்கும் ஊடகங்களுக்கும் ஏனையவர்களுக்கும் அறியத் தருவதை தவற விடாதீகள்.

மனித நாகரிகம் வெட்கித் தலைகுனியும் செல்வி ஜுட் றெஜி வர்ஷாவின் கொலைக்கு எமது வன்மை மிகுந்த கண்டனத்தை உறுதியுடன் வெளிப்படுத்தும் அதேவேளை அச்சிறுமியின் மறைவுக்கு எமது கண்ணீர் அஞ்சலியும் செலுத்திக் கொள்கிறோம்.

சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ஊடகப்பிரிவு)

நிர்வாண ராகிங் செய்த நான்கு மாணவிகள் கைது

ஆந்திராவில் முதலாம் ஆண்டு மாணவியை நிர்வாண நடனம் ஆடச் சொல்லி அவரை தற்கொலைக்கு தூண்டியதற்காக நான்கு மாணவிகள் மற்றும் விடுதி வார்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள அரசு வேளாண்மை பொறியியல் கல்லூரியில் திரிவேணி என்ற 20 வயது மாணவி முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவரை அந்த கல்லூரியை சேர்ந்த ஸ்ரீவந்தி, சவுஜன்யா, நஷ்மா, வனிதா, சாகிதி ஆகிய ஐந்து சீனியர்  ராகிங் செய்து துன்புறுத்தியுள்ளனர்.

அவரை நிர்வாணமாக நடனமாட சொல்லி வற்புறுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த திரிவேணி தலைசாயபொடி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருக்கிறது.

இப்பிரச்சினையில் வழக்கு பதிவு செய்து வரும் ஆந்திர போலீசார் ராகிங் செய்த மாணவிகளில் நான்கு பேரையும், விடுதி வார்டனையும் கைது செய்தனர். மற்றொரு மாணவி விடுதியிலிருந்து வெளியேறிவிட்டதால், அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

பதவி நீக்கப்பட்ட பாகிஸ்தான் பிரதம நீதியரசர் மீண்டும் சேவையில் – பாகிஸ்தான் பிரதமர் தொலைக்காட்சியில் அறிவிப்பு

ifthikar_pakistan_justis.jpg பதவி நீக்கப்பட்ட பாகிஸ்தானின் பிரதம நீதியரசர் இப்திகார் சௌத்ரியை மீண்டும் அப்பதவியில் அமர்த்த அரசாங்கம் தீர்மாணித்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி தெரிவித்துள்ளார்.

இத்தீர்மாணத்தை இன்று பாகிஸ்தான் தேசிய தொலைக்காட்சியில் உரையாற்றும்போது உத்தியோகபூர்வமாக அறிவித்த பிரதமர் கிலானி, பிரதம நீதியரசர் இம்மாத இறுதியில் மீண்டும் பதவியில் அமர்த்தப்படுவார் எனக் கூறினார். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீபின் ஆட்சியின்போது பிரதம நீதியரசர் இப்திகார் சௌத்ரி உட்பட 60 நீதிபதிகள் சேவையிலிருந்து நீக்கப்பட்டனர். இவர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளுமாறு வற்புறுத்தி கடந்த சில நாட்களாக பாகிஸ்தானில் எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப் தலைமையில் எதிர்க் கட்சிகள் மற்றும் சட்டத்தரணிகள் ஏற்பாடு செய்திருந்த இந்த எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக நாடு ஸ்திரமற்ற நிலையை நோக்கிச் செல்வதையடுத்தே பாகிஸ்தான் அரசாங்கம் இத்தீர்மாணத்தை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் குறிப்பிடுகின்றன. 

கொழும்பில் வாழும் வட-கிழக்கு மக்கள் பொலிஸில் பதிய வேண்டும் :ரஞ்சித் குணசேகர

ranjeth-gunasekara.jpgவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து கொழும்பில் தற்காலிகமாக வாழ்ந்து வரும் மக்கள் அனைவரையும் எதிர்வரும் செவ்வாய்கிழமைக்கு முன் பொலிஸ் நிலையங்களில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் ஊடக பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது அவ்வாறு பதிவு செய்யாதவர்கள் கைது செய்யப்படுவர் எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார் . 

மழை தொடர்கிறது மின்வெட்டு அபாயம் தணிவு

flod-15.jpgநீரேந்து பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதையடுத்து மின்வெட்டு அபாயம் தணிந்துள்ளதாக மின்சார சபை நேற்று தெரிவித்தது. ஒரு மாதத்துக்கு மேலாக நீடித்த வரட்சியான காலநிலை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து நீர்மின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்தது.

ஆனால் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக நீரேந்து பகுதிகளில் மழை பெய்து வருவதாகவும் இதனால் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்ந்து வருவதாகவும் மின்சார சபை கூறியது. இதன் காரணமாக மின்வெட்டு அபாயம் பெருமளவு தணிந்துள்ளதாகவும் எதிர்வரும் நாட்களில் மேலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மின்சார சபை உயரதிகாரி ஒருவர் கூறினார்.

இதேவேளை இடியுடன் கூடிய காலநிலை தொடரும் எனவும் வடக்கு, கிழக்கு நீரேந்து பகுதிகள் மட்டுமன்றி நாட்டின் சகல பாகங்களிலும் மழை வீழ்ச்சியை எதிர்பார் ப்பதாகவும் காலநிலை அவதான நிலையம் கூறியது. மழைக்கு முன்பாக கடும் காற்று வீசும் வாய்ப்பு உள்ளதாகவும் அவதான நிலையம் தெரிவித்தது. இம்மாத இறுதிவரை மழை வீழ்ச்சி தொடரும் என எதிர் பார்க்கப்படுகிறது.

மேலும் 1166 சாவடிகளை நிறுவ திணைக்களம் தீர்மானம்

election_ballot_.jpgமேல் மாகாண சபைத் தேர்தலையொட்டி மேலதிகமாக 1166 வாக்குச்சாவடிகளை நிறுவ தேர்தல் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அந்தந்த வாக்குச் சாவடிகளில் வாக்குகள் எண்ணுவதற்கு தேர்தல் திணைக்களம் முடிவு செய்துள்ளதையடுத்தே வாக்கு எண்ணும் நிலையங்களின் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு வாக்கு எண்ணும் நிலையத்திற்குமான வாக்காளர் தொகை 1500 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் வாக்கு எண்ணும் நிலையங்களின் தொகை அதிகரிப்பதாக அறிவிக்கப்படுகிறது. ஏற்கனவே 2459 வாக்குச் சாவடிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்தத் தொகை 3625 ஆக உயர்த்தப்படவுள்ளதாக தேர்தல் திணைக்களம் கூறியது.

பரீட்சார்த்தமாகவே வாக்குச் சாவடிகளில் வாக்குகள் எண்ணும் பணிகளை மேற்கொள்ள தேர்தல் திணைக்களம் முடிவு செய்ததாக மேலதிக தேர்தல் ஆணையாளர் சுமனசிறி கூறினார்.

இதேவேளை வாக்குச் சாவடிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு எதிர்க்கட்சிகள் கோரி வருவதாகவும் வாக்குச்சாவடிகளின் பாதுகாப்பு தொடர்பாக பொலிஸ் திணைக்களத்துடன் பேசி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக எதிர்வரும் 20ஆம் திகதி அரசியல் கட்சிகளை தேர்தல் ஆணையாளர் சந்திக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

பாகிஸ்தானில் அரசியல் கொந்தளிப்பு உச்சக் கட்டம் நவாஸ் ஷெரீப், இம்ரான்கான் வீட்டுக்காவலில்; தடைகளையும் தாண்டி ஊர்வலம்.

n8_2.jpgபாகிஸ்தானில் அரசியல் கொந்தளிப்பு உச்சகட்டத்தை அடைந்திருக்கும் இந்த நிலையில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபும், முன்னாள் கிரிக்கெட் கப்டன் இம்ரான்கானும் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதேநேரம் நவாஸ் ஷெரீபின் சகோதரர் ஷபாஸ் ஷெரீபும், நவாஸ் ஷெரீபின் மகனும் கைதுசெய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களை அடுத்துவரும் மூன்று நாட்களுக்கு வீட்டுக் காவலில் வைப்பதற்கு பொலிஸார் பிடியாணை பெற்றுள்ளனர்.

தமது ஆட்சிக் காலத்தில் பதவியிலிருந்த உச்ச நீதிமன்ற நீதியரசர் உள்ளிட்ட நீதியரசர்களை மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டும், பஞ்சாப் மாநிலத்தில் கவர்னர் ஆட்சியை இரத்துச் செய்துவிட்டு மீண்டும் தமது சகோதரரை முதலமைச்சராக பதவியில் அமர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீபின் முஸ்லிம் லீக் கட்சியினர் இன்று 16ம் திகதி பாராளுமன்ற முற்றுகைப் போராட்டத்தை நடத்துவதற்கு ஏற்கனவே திட்டமிட்டிருந்தனர். இந்தப் போராட்டத்திற்கு பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் கப்டன் இம்ரான்கானின் தெரீக் இன்ஸாப் கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக நவாஸ் ஷெரீப் கட்சியினர் இஸ்லாமாபாத் நோக்கி ஊர்வலமாகச் செல்லத் தொடங்கியுள்ளனர்.  இதற்கு இம்ரான்கான் கட்சியினரும், நீதிபதிகளும், சட்டத்தரணிகளும் ஒத்துழைப்பு நல்கியுள்ளனர்.

இவ்வாறான சூழ்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் செய்யத் யூஸ¤ப் ராஸா கிலானி இப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர ஜனாதிபதிக்கு 24 மணி நேர அவகாசம் வழங்கினார். அந்நாட்டு இராணுவ தளபதி கியானியும் இப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறு ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியைக் கோரினார்.

இதேநேரம் இந்நெருக்கடிக்குத் தீர்வு காணும் வகையில் அமெரிக்காவும், பிரித்தானியாவும் கூட்டாக சமரசத் திட்டமொன்றை முன்வைத்துள்ளன. அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் கிலாரி கிளிங்டன் பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரியுடனும், நவாஸ் ஷெரீபுடனும் தொலைபேசி ஊடாகத் தனித் தனியாகத் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார். பிரச்சினையைப் பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் சபைச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் பாகிஸ்தான் ஜனாதிபதியையும் நவாஸ் ஷெரீபையும் கேட்டுள்ளார்.

இந்த நிலையில் ஜனாதிபதி சர்தாரி, நவாஸ் ஷெரீப் கட்சியினரின் போராட்டத்திற்குத் தடை விதித்த தோடு, போராட்டத்தையும், ஊர்வலத்தையும் கட்டுப்படுத்துவதற்கும் இராணுவத்திற்கும், பொலிஸாருக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனடிப்படையில் இஸ்லாமாபாத் நோக்கி ஊர்வலமாக வந்தவர்கள் மீது தடியடிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பலர் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப் பட்டுள்ளனர். நேற்று நண்பகல் வரையும் 1200 தொண்டர்களும் 30 க்கு மேற்பட்ட சட்டத்தரணிகளும் கைது செய்யப்பட்டி ருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதையும் மீறி நவாஸ் ஷெரீப் கட்சி ஆதரவாளர்களும், தொண்டர்களும், சட்டத்தரணிகளும் பல்வேறு நகரங்களிலிருந்து இஸ்லாமாபாத் வந்து சேர்ந்துள்ளனர். நவாஸ் ஷெரீபின் சகோதரர் தனது ஆதரவாளர்களுடன் ஏற்கனவே இஸ்லாமாபாத் வந்து சேர்ந்துள்ளார். இம்ரான்கானும் ஏற்கனவே இஸ்லாமாபாத் வீட்டிலேயே தங்கி இருக்கிறார்.

இதேநேரம் நவாஸ் ஷெரீப் தனது ஆதரவாளர்களுடன் இஸ்லாமாபாத் நோக்கி லாஹரிலிருந்து நேற்று ஊர்வலமாகச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தார். இவ்வாறான சூழ்நிலையில் நவாஸ் ஷெரீபை இராணுவத்தினரும், அவரது சகோதரரையும், மகனையும், இம்ரான்கானையும் பொலிஸார் வீட்டுக் காவலில் வைத்துள்ளனர்.

தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ள போதிலும், கட்சித் தொண்டர்களும், ஆதரவாளர்களும் சட்டத்தரணிகளும் பல்வேறு நகர்களிலிருந்தும் இஸ்லாமாபாத் நோக்கி ஊர்வலமாகச் செல்லுவதாகவும் அவர்கள் பொலிஸாராலும், இராணுவத்தினராலும் தடுத்து நிறுத்தப்படுவதாகவும் கைது செய்யப்படுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேநேரம் இஸ்லாமாபாத் நகருக்குள் எவருமே நுழைய முடியாதபடி சகல வீதிகளிலும் கொள்கலன்கள் குறுக்காக நிறுத்தப்பட்டு சீல் வைத்து மூடப்பட்டுள்ளன. அவற்றையும் மீறி அனேநகர் நகருக்குள் நுழைந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை பாராளுமன்றத்திற்கு அருகே எவரும் வர முடியாதபடி ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் தடுப்பு வேலிகள் அமைக்கப் பட்டிருப்பதோடு அங்கு இராணுவத்தினரும், பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

காலநிலை மாற்றம் மழை தொடரும்

flod-wanni.jpgபருவப் பெயர்ச்சி காலநிலை மாற்றத்தினால் நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் மாலை வேளையில் மழைபெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மாலைநேரங்களில் மின்னல் தாக்கம் ஏற்படுமென்பதால் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் எல்.ஆர்.ஜயசேகர தெரிவித்தார்.

குருநாகலில் நேற்று முன்தினம் பெய்த மழையை அடுத்து குருபகனே மந்தபுர பகுதியில் கடும் காற்று வீசியதன் காரணமாக பல வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்த காற்றினால் குருநாகல் மெதிபுர பிரதேச செயலகப் பிரிவில் பண்டுகஸ்துவ, மங்குலாகம, ஷெனிகெதர ஆகிய பகுதிகளுக்கும் சேதமேற்பட்டுள்ளது.

“குடிநீரில் எவ்வித நச்சும் கலக்கப்படவில்லை”

tap_water.jpgகொழும்பு நகரிலும் அதனை சூழவுள்ள பகுதிகளிலும் பகிர்ந்தளிக்கபடும் குடிநீரில் எவ்வித நச்சுத் தன்மையும் கலக்கப்படவில்லை எனவும் நேற்றுப் பகல் முதல் சுத்தமான நீரையே வழங்குவதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவிக்கிறது.

கடந்த சில தினங்களாக பெய்த கடும் மழையின் காரணமாக சேற்றுடன் கலந்த மழை நீர் களனி கங்கையில் கலந்ததால் கொழும்பு பெரும்பாகத்திற்கு பகிர்ந்தளிக்கப்படும் நீர் சேற்று மணத்துடன் விநியோகிக்கப்பட்டது. இதனையடுத்து குடிநீரில் நஞ்சு கலந்துள்ளதாக வதந்திகள் பரவின.

நேற்றுக் காலை 10.00 மணியளவில் நீர்வழங்கல் சபை நிலைமையை சரி செய்ததுடன் மிகவும் சுத்தமான நீரை விநியோகம் செய்தது.பாவனையாளர்கள் அனைவரும் சேற்று மணத்துடன் காலையில் வந்த நீரை தொட்டிகளில் சேமித்திருப்பின் அவற்றை வெளியேற்றிவிட்டு புதிய சுத்தமான நீரை தொட்டிகளில் நிரப்பிக் கொள்ளுமாறு நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை கேட்டுக் கொள்கிறது.