சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

பரீட்சை பெறுபேறு மீளாய்வு விண்ணப்பம்!

schools_stu.jpgஅண்மை யில் வெளிவந்த 2008 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கு பரீட்சைத் திணைக்களம் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.

இந்த விண்ணப்பங்களை எதிர்வரும் மே மாதம் 10 ஆம் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ கிடைக்கக்கூடிய வகையில் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்குமாறு பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. பாடசாலை விண்ணப்பதாரிகள் பாடசாலை அதிபர்கள் ஊடாகவும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் நேரடியாகவும் பதிவுத் தபால் மூலம் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.

ஒரு பாடத்துக்கு 150.00 ரூபா என்ற அடிப்படையில் மீளாய்வுக் கட்டணம் அறவிடப்படுகிறது. உரிய கட்டணத்தை அஞ்சல் அல்லது உப அஞ்சல் அலுவலகங்களில் செலுத்தி பற்றுச் சீட்டின் மூலப் பிரதியை விண்ணப்பப் படிவத்தின் மறுபுறம் ஒட்டி அனுப்பிவைக்க வேண்டும். ஒவ்வொரு பாடத்திற்கும் ஒவ்வொரு விண்ணப்பம் வீதம் அனுப்ப வேண்டுமென பரீட்சைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம்: அத்வானி

advanil000.jpgமத்தியில் பா.ஜ. ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் ராமர் கோயில் கட்டியே தீருவோம் என்று பாஜக பிரதமர் வேட்பாளர் அத்வானி கூறியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த கூட்டத்தில் அத்வானி பேசியதாவது: அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற கோடிக்கணக்கான மக்களின் கனவை மத்தியில் பா.ஜ. தலைமையில் ஆட்சி அமைந்தால் நிறைவேற்றுவோம்.

சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்துவதாகக் கூறி ராமர் பாலத்தை இடிக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முயற்சி செய்தது. சேது சமுத்திர திட்டத்துக்கு தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கட்சியும் (அதிமுக) எதிர்ப்பு தெரிவிக்கிறது.

இந்தியாவில் இருந்து ரூ.7 லட்சம் கோடி கறுப்பு பணம் சுவிஸ் உட்பட பல வெளிநாட்டு வங்கிகளில் முடங்கியுள்ளது. பா.ஜ. ஆட்சி அமைந்தால் அந்தப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவோம் என்றார்.

மகாராஷ்டிரா மாநிலம் ஜால்னாவில் பா.ஜ. தலைவர் ராஜ்நாத் சிங் பேசுகையில், ராமபிரானையே கற்பனை கதாபாத்திரம் என்று கூறி இந்துக்களை மத்திய அரசு இழிவுப்படுத்தியது. சேது சமுத்திர திட்டம் என்ற பெயரில் இந்துக்கள் வழிபடும் ராமர் பாலத்தை இடிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. மாற்றுவழியில் இந்த திட்டத்தை நிறைவேற்றவும் மறுக்கிறது. மத்தியில் பா.ஜ. ஆட்சிக்கு வந்தால், சேது சமுத்திர திட்டத்தை இப்போது நிறைவேற்ற முடிவு செய்துள்ள வழியில் நிறைவேற்ற விடாமல் ரத்து செய்வோம் என்றார். 

சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு அரசு இன்று சபையில் பதில்அளிக்கும்

sri-lanka-parliament.jpgயுத்த நிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு சர்வதேச நாடுகள் இலங்கை அரசுக்கு விடுத்துவரும் அழுத்தங்கள் தொடர்பாகவும் நோர்வேயுடனான இராஜதந்திர உறவைத் துண்டித்துக்கொள்ளுமாறு இலங்கை அரசுக்குள்ளிருந்து பிரயோகிக்கப்படும் அழுத்தங்கள் தொடர்பாகவும் இலங்கை அரசின் நிலைப்பாட்டை வெளிவிவகார அமைச்சர் றோஹித போகொல்லாகம இன்று நாடாளுமன்றில் தெரிவிப்பார் என்று எதிர் பார்க்கப்படுகின்றது.

நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகம் தாக்கப்பட்டமையைத் தொடர்ந்து அந்நாட்டுடனான இராஜதந்திர உறவைத் துண்டித்துவிடுமாறு அரசுடன் இணைந்துள்ள சில கட்சிகளும் அரசுக்கு வெளியேயுள்ள கட்சிகளும் அரசுக்கு அழுத்தங்கொடுக்கத் தொடங்கியுள்ளன.

குறிப்பாக அரசில் இணைந்துள்ள ஜாதிக ஹெல உறுமய மற்றும் விமல் வீரவன்ஸவின் தேசிய சுதந்திரமுன்னணி ஆகிய கட்சிகள் இந்த அழுத்தங்களைத் தொடர்ச்சியாகக் கொடுத்து வருகின்றன. இது ஒருபுறமிருக்க, இலங்கையின் வடக்கில் இடம்பெறும் யுத்தத்தை நிறுத்துமாறு சர்வதேச நாடுகள் பலவும் இலங்கைக்கு அழுத்தங் கொடுத்து வருகின்றன.

இந்த இரண்டு விடயங்கள் தொடர்பான அரசின் நிலைப்பாட்டை வெளிவிவகார அமைச்சர் றோஹித போகொல்லாகம இன்று நாடாளுமன்றில் தெரிவிப்பார் என்று நம்பகரமான வட்டாரங்கள் கூறுகின்றன.

சரணடையும் புலிகளுக்கு புனர்வாழ்வு – ஜனாதிபதி

mahinda.jpgஎஞ்சி யுள்ள புலிகள் சரணடையும் பட்சத்தில் அவர்களுக்குப் புனர்வாழ்வளித்து நாட்டுக்குப் பலன் தரக்கூடிய பிரஜைகளாக்குவதே எனது நோக்கம். இது நடைமுறைச் சாத்தியமான காரியம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.

பிரபாகரனுக்கு எதிராகப் பாதுகாப்பு வலயத்திலிருந்து மக்கள் வெளியேறி வரத் தொடங்கி விட்டதால் எஞ்சியுள்ள புலிகள் சரணடைய வேண்டும். இல்லாவிட்டால் ஒன்றில் சண்டையிட்டு மடிய வேண்டும். அல்லது சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் சங்கத்தின் மேல் மாகாணப் பட்டதாரிகள் மாநாடு அலரி மாளிகையில் நேற்று நடைபெற்றது. இவ் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

இவ் வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், யுத்த நிறுத்தம் பற்றியோ தாக்குதல் இடைநிறுத்தம் குறித்தோ எம்மோடு பேசுவதில் பலனில்லை. நாம் ஏற்கனவே 72 மணிநேர கால அவகாசம் வழங்கினோம். அதற்குப் பிறகு 42 மணிநேர அவகாசம் வழங்கினோம். அவர்களுக்கு (புலிகளுக்கு) போதியளவு கால அவகாசம் வழங்கியுள்ளோம். நீங்கள், புலிகளின் தலைவருக்கு கூறி ஒரு மணி நேரகால அவகாசம் அல்ல அரைமணி நேரகால அவகாசம் பெற்றுக்கொடுங்கள்.

புலிகளின் பிடியில் சிக்குண்டுள்ள அப்பாவி மக்கள் பாதுகாப்பான பிரதேசங்களுக்கு வந்துசேர அக்கால அவகாசமே போதும். புலிகளின் பிடியில் சிக்குண்டுள்ள மக்கள் பாதுகாப்பு படையினரின் பிரதேசங்களுக்கு வந்து சேர்ந்ததும் அங்கு எஞ்சப்போவது புலிகள் மட்டுமே. ஆகவே, புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டுச் சரணடைய வேண்டும். இல்லாவிடில் எமது பாதுகாப்புப் படையினருடன் சண்டையிட்டு மடிய வேண்டும். அல்லது சயனைட் வில்லை அருந்தி தற்கொலை செய்து கொள்ளவே நேரிடும்.

எஞ்சியுள்ள புலிகள் சரணடைய வேண்டும். எவரும் கொல்லப்படுவதை நான் விரும்பவில்லை. எஞ்சியுள்ள புலிகள் சரணடைவார்களாயின் அவர்களுக்குப் புனர்வாழ்வளித்து நாட்டுக்குப் பயனுள்ள பிரஜைகளாக்குவதே எனது நோக்கம். இது நடைமுறைச் சாத்தியமான காரியம். இதற்கு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனும், கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனும் நல்ல முன்னுதாரணம்.

பிரபாகரனை இந்தியாவும் கேட்டுள்ளது. அவருக்கு இந்நாட்டு நீதிமன்றத்திலும் வழக்குள்ளது.  ஆகவே அவர் சட்டத்திற்கு முன் ஆஜர்படுத்தப்பட்டு அதற்கு ஏற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

புலிகளால் பாதுகாப்பு வலயத்தினுள் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளவர்களில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி சிவிலியன்கள் கழுத்தளவு தண்ணீரில் பலத்த சிரமங்களுக்கு மத்தியில் நேற்று நண்பகலாகும் போது பாதுகாப்புப் பிரதேசங்களுக்கு வந்து சேர்ந்தனர். இவர்களோடு தற்கொலை புலிகளும் வந்து தங்களை வெடிக்க வைத்து அப்பாவி மக்களைப் படுகொலை செய்தனர்; காயப்படுத்தினர்.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஹெலிகொப்டர்கள் மூலம் ஆஸ்பத்திரிகளுக்கு எடுத்து வரப்பட்டுள்ளனர்.

பிரபாகரனுக்கு எதிராக மக்கள் பாதுகாப்பு பிரதேசங்களை நோக்கி வரத் தொடங்கி விட்டனர். உலக வரலாற்றில் புலிகளால் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ள பாரியளவு அப்பாவி மக்களை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை எமது படையினர் வெற்றிகரமாக முன்னெடுக்கின்றனர் என்றார்.

கிழக்கில் 42 செயற்திட்டங்களுக்கு அமைச்சர் முரளி நிதி ஒதுக்கீடு

karuna_amman.jpgஅரசிய லமைப்பு தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) 2009ம் ஆண்டிற்கான தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியிலிருந்து 5 மில்லியன் ரூபாவை மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்ட அபிவிருத்திப் பணிகளுக்கென ஒதுக்கீடு செய்துள்ளார்.

மேற்படி மாவட்டங்களிலுள்ள 42 செயற்திட்டங்களுக்கு இந்நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பழுகாமம் விவேகானந்தா சிறுவர் இல்லத்திற்கு 6 இலட்சம் ரூபாவும், கிரான் கனிஷ்ட வித்தியாலயத்திற்கு 10 இலட்சம் ரூபாவும், காரைதீவு இராமகிருஷ்ண மிஷன் பாடசாலைக்கு மின்சாரத்தை பெற்றுக் கொடுக்கவென 1,50,000 ரூபாவும், பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்திற்கு 3 இலட்சம் ரூபாவும் மற்றும் கிழக்கு மாகாண ஆலயங்களுக்குமாக நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக பொருட்கள் மீதான வரி சட்ட மூலம் பொருட்களின் விலை அதிகரிப்பை ஏற்படுத்தாது

sri-lanka-parliament.jpgஅரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள விசேட வர்த்தக பொருட்கள் வரி சட்ட மூலமானது மேலும் ஒரு புதிய வரிவிதிப்பையோ பொருட்களின் மீதான புதிய விலையதிகரிப்பையோ ஏற்படுத்தாது என அரச வருமானத்துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

உள்ளூர் உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள ஏற்றுமதி இறக்குமதி திருத்தச் சட்டமூலமானது குறிப்பாக சோளப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பெரும் நன்மைகளை ஈட்டிக்கொடுக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று உள்ளூராட்சி சபை திருத்தச் சட்டமூலம், விசேட வர்த்தகப் பொருட்கள் வரி சட்டமூலம், தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி சட்டமூலம் ஆகியன மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இதற்கிணங்க உள்ளூர் விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சோளம் மற்றும் ஏனைய விவசாய பொருட்களுக்கும் வரிவிதிக்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது;

ஐக்கிய தேசியக் கட்சியினர் தமது ஆட்சிக் காலத்தில் மக்களிடமிருந்து அறவிடப்பட்ட வரியிலிருந்து தமக்கு வேண்டியவர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய்களை வழங்கி அதற்கான வரிஅறவீட்டையும் மேற்கொள்ளாமல் சலுகை வழங்கினர்.

எமது அரசாங்கம் அத்தகைய நிறுவனங்களிடமிருந்து வரியை அறவிடுவதில் கவனம் செலுத்தியதுடன் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு வரிச் சலுகைகளை வழங்கி வருகிறது குறிப்பாக சோளப் பயிர்ச்செய்கையாளர்களுக்கு ஒரு கிலோ சோளத்திற்கு 28.00 ரூபா விலை கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

சோளப் பயிர்ச் செய்கையாளர்களின் மேம்பாட்டைக் கருதி அதற்கென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட குழுவொன்றை நியமித்துள்ளார். இதன்படி எதிர்வரும் காலங்களில் ஒன்றரை இலட்சம் ஏக்கரில் சோளம் பயிரிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பாதுகாப்பு வலயத்தில் இயங்கி வந்த புதுமாத்தளன் வைத்தியசாலை செயலிழந்ததாக அதிகாரிகள் தகவல்

puthu.jpgமுல்லைத் தீவு பகுதியில் உள்ள பாதுகாப்பு வலயத்தின் புதுமாத்தளன் வைத்தி்யசாலையை அண்மித்த பகுதியி்ல் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியிலிருந்து இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கடும் மோதல்களையடுத்து. அந்த வைத்தியசாலை செயலிழந்துள்ளதாக அங்குள்ள வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரு தரப்பினருக்கும் இடையிலான கடும் மோதல்களையடுத்து, வைத்தியசாலையும் பாதிக்கப்பட்டதாகவும், இதனால், அங்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள் பலரும் பாதுகாப்பான இடங்களைத் தேடி ஓடியதுடன், அங்கு கடமையிலிருந்த வைத்தியர்கள், ஊழியர்களும் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலர் பாதுகாப்பு வலயத்தின் உள்ளே சென்றுள்ள அதேவேளை, பலர் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இடம்பெயர்ந்து வந்த மக்களுடன் சேர்ந்து சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வைத்தியசாலையில் பணியாற்றி வந்த முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய சுகாதாரத்துறை அதிகாரிகள், வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால், அம்பலவன்பொக்கணை ஆகிய பகுதிகளில் இயங்கி வந்த வெளிநோயாளர் பிரிவுகள் அமைந்துள்ள நிலையங்களுக்குச் சென்று, அங்கு பணியாற்றுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இலண்டன் நாடாளுமன்றம் முன்பு இலங்கைத் தமிழர்கள் சாலை மறியல் போராட்டம்

londonprotest20012009.jpgஇலங் கையில் போர்நிறுத்தம் கோரி லண்டனில் தொடர்ச்சியாக போராட்டத்தை நடத்திவருகின்ற புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள் நாடாளுமன்ற வீதியை மறித்து சாலை மறியல் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

இலங்கையின் வடபகுதியில் போர் நடக்கும் இடத்தில்,பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதிக்குள் இலங்கை இராணுவத்தினர் நுழைந்துவிட்டதாக செய்திகள் வெளியானதை அடுத்து, நடைபாதையை விட்டு நகர்ந்து நாடாளுமன்ற வீதியிலேயே ஆர்ப்பாட்டக்காரர்கள் அமர்ந்து விட்டார்கள்.

இந்த இடத்தில் கடந்த 15 நாட்களாக இலங்கை இளைஞர் ஒருவர் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடத்தி வருகின்றார்.

இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான கோஷங்கள் மாத்திரமல்லாமல், இலங்கையில் இந்திய இராணுவம் இருப்பதாக குற்றஞ்சாட்டும் அவர்கள், இலங்கையில் இருந்து இந்திய இராணுவம் வெளியேற வேண்டும் என்றும் கோஷமிட்டார்கள். தவிர இலங்கை நிகழ்வுகள் குறித்தும் தமது போராட்டங்கள் குறித்து ஊடகங்கள் சரியாக செய்தி வழங்கவில்லை என்று அவர்கள் குறைபட்டார்கள். குறிப்பாக பிபிசிக்கு எதிராகவும் அங்கு கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதற்கிடையே லண்டன் பெருநகரப் பொலிஸார் இந்த வீதிமறியல் குறித்து வெளியிட்ட அறிக்கை ஒன்றில், வீதிமறியலில் ஈடுபட்டுள்ளவர்களை அங்கிருந்து அகற்றுவதற்காக அவர்களுடன் தாம் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை நடத்திவருவதாக கூறியுள்ளனர்.

நேற்று சுமார் 2000 பேர் வரை நாடாளுமன்றத்தை சுற்றவரவுள்ள வீதிகளில் கூடியிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பெண் நோயியல் நிபுணர் சுட்டுக்கொலை

வவுனி்யா பொது வைத்தியசாலையி்ன் பெண் நோயியல் நிபுணராகிய (வீஓஜி) டாக்டர் மீரா மொகிதீன் நேற்று மாலை 7 மணி்யளவில் தோணிக்கல் தனியார் வைத்தியசாலைக்கு அருகில் வைத்து இனந்தெரியாதவர்களினால் சுடப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மிஹின் லங்கா விமான சேவை சாத்தியமானதாக முன்னெடுப்பு – அமைச்சர் சரத் குணரத்ன

sri-lanka-parliament.jpgமிஹின் லங்கா விமான சேவை தற்போது சாத்தியமானதாக முன்னெடுக்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியினர் கூறுவதுபோல் அச்சேவையில் எவ்வித பின்னடைவுமில்லையென அமைச்சர் சரத் குணரத்ன தெரிவித்தார்.அரசியல் இலாபங்களுக்காக தொடர்ச்சியாக ஐக்கிய தேசியக் கட்சியினர் மிஹின் லங்கா விமான சேவையை குறைகூறி வருகின்றனர். அச்சேவை சாத்தியமானதாகத் தடையின்றி முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் ஐ. தே. க. எம்.பி ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். ரவி கருணாநாயக்க எம்.பி. தமது கேள்வியின் போது மிஹின் எயார் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இதுவரை குத்தகைக்கு பெறப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை மற்றும் அதற்காக வழங்கப்பட்ட நிதி எவ்வளவுவென்பதைக் கோரியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் சரத் குணரத்ன :-

ஐக்கிய தேசியக் கட்சி தற்போது வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதனால்தான் இத்தகைய பிரச்சினைகளைக் கிளப்புகிறது. எதிர்வரும் மேல் மாகாண சபைத் தேர்தலில் அக்கட்சி முகவரியில்லாமல் போகப் போகிறது எனவும் தெரிவித்தார்.