இலங்கை டெஸ்ட் கிரிக்கற் அணியின் மீது இன்றுகாலை துப்பாக்கிச் சூட்டுப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாக்கிஸ்தான் லாகூர் நகரில் கடாபி விளையாட்டரங்கில் இரண்டாவது டெஸ்ட் விளையாட்டுப் போட்டியின் மூன்றாவது நாளான இன்று விளையாட்டில் கலந்துகொள்வதற்கென மைதானத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ் வண்டியின் மீதும், பாதுகாப்புக்குச் சென்ற பொலிஸ் வாகனத்தின் மீதும் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இலங்கை கிரிக்கற் அணியைச் சேர்ந்த ஆறு காயமடைந்துள்ளனர்.
இதில் கிரிக்கற் வீரர்களான திலான் சமரவீர, மற்றும் உதவிப் பயிற்சியாளர் ஆகியோர் வைத்தியசாலையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனைய நால்வருக்கும் சிறு காயங்களே ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் வைத்திய சிகிச்சைப் பெற்று வெளியேறியுள்ளனர். கிரிக்கற் அணித் தலைவர் மஹேல ஜயவர்தனவுக்கு காலில் சிறிய காயமொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இனந்தெரியாத துப்பாக்கி நபர்களால் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலில் மொத்தம் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக ரொய்ட்டர் செய்திச்சேவை அறிவித்துள்ளது.
அதேநேரம் இன்று நடைபெறவிருந்த டெஸ்ட் போட்டி இரத்து செய்யப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படும் இலங்கைக் கிரிக்கற் வீரர்கள் வருமாறு:-
திலான் சமரவீர,
தாரங்க பரணவித்தான,
அஜந்த மெண்டிஸ்,
சங்ககார ,
மகேல ஜெயவர்தன
சமிந்தவாஸ்
செய்திப் பின்னிணைப்பு
பாக்கிஸ்தானில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக இலங்கைக் கிரிக்கற் கட்டுப்பாட்டுச் சபை அதிகாரியொருவருடன் ‘தேசம்நெற்’ தொடர்புகொண்டபோது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள திலான் சமரவீரவினதும் உதவிப்பயிற்சியாளர் போல் சாபேர் ஆகியோரின் நிலைமை பாரதூரமானதல்ல எனத் தெரிவித்தார். ஏனைய கிரிக்கற் வீரர்கள் 5 வருக்கும் சிறு காயங்களே ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சிகிச்சைப் பெற்று வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
பாக்கிஸ்தான் தொலைக்காட்சிச்சேவை இது குறித்து தகவல் தெரிவிக்கையில், வெள்ளை நிற வாகனமொன்றில் வந்த இனந்தெரியாதவர்களாலே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தது. இறுதியாகக் கிடைக்கும் தகவல்களின்படி இத்தாக்குதலில் எட்டு பாதுகாப்பு அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.
வீரர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் துரிதம்
பாகிஸ்தான் லாகூரில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இலங்கை வீரர்கள் காயமடைந்ததையடுத்து, வீரர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அவசர விமானம் மூலமாக இலங்கை அணி வீரர்களை வெகு விரைவாக நாட்டிற்கு அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என கிரிக்கெட் சபை பிரதம நிறைவேற்று அதிகாரி துலிப் மெண்டிஸ் தெரிவித்தார்.
அத்துடன் தோற்பட்டையில் துப்பாக்கி ரவைகள் பாய்ந்து காயமடைந்த பரணவித்தான, திலான்,துணைப் பயிற்றுவிப்பாளர் போல் ஆகியோர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாகவும், இன்று இரவுக்குள் நாடு திரும்புவர் எனவும் துலிப் மெண்டிஸ் கிரிக்கெட் சபையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் தெரிவித்தார்.
துப்பாக்கிப் பிரயோகத்தை அடுத்து லாகூர் கடாபி மைதானத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை அணி வீரர்கள் பாகிஸ்தானில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்தமையை இட்டு தாம் அதிர்ச்சி அடைவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். இலங்கை வீரர்களுக்கு, முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு வழங்கப்படும் என உறுதியளித்த பின்னரே அவர்கள் பாகிஸ்தான் சென்றதாகவும் அர்ச்சுன ரணதுங்க சுட்டிக் காட்டினார்.
உலக அளவில் சர்வதேச கிரிக்கெட் அணியினர் மீது முதல் தீவிரவாத தாக்குதல்
உலக அளவில் சர்வதேச கிரிக்கெட் அணியினர் மீது தீவிரவாத தாக்குதல் நடந்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
நடுவர் காயம்:
தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு அம்பயர் காயமடைந்துள்ளதாக பாகிஸ்தான் விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
யாரும் அபாய கட்டத்தில் இல்லை-ஜெயசூர்யா:
இதற்கிடையே தாக்குதலில் உயிர் தப்பிய கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா அளித்துள்ள பேட்டியில், எந்த வீரரும் அபாய கட்டத்தில் இல்லை. கவலைப்படும்படியான நிலையில் எந்த வீரரும் இல்லை. இதை நான் உறுதிப்படுத்துகிறேன்.
அனைவரும் பாதுகாப்புடன் இருக்கிறோம். இந்த தாக்குதலை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. முதலில் போலீஸார் மீது தாக்குதல் நடத்தினர். பின்னர் நாங்கள் இருந்த வேன் மீது தாக்குதல் நடத்தினர் என்று ஜெயசூர்யா கூறியுள்ளார்.
மும்பை தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளின் சதிதான் இது
இச்சம்பவம் குறித்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில ஆளுநர், இது தீவிரவாதிகளின் திட்டமிட்ட சதி. மும்பை தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளின் சதிதான் இது என்று தெரிவித்துள்ளார்.