இன்று சனிக்கிழமை மேல்மாகாணசபைக்கான தேர்தல் நடைபெறுகின்றது. காலை 7.00மணிக்கு ஆரம்பமான வாக்கெடுப்பு மாலை 4.00மணிவரை நடைபெறும். கொழும்பு, களுத்துறை, கம்பஹா மாவட்டங்களிலுள்ள 2769 வாக்குச் சாவடிகளிலும் இவ்வாக்கெடுப்பு நடைபெறுகின்றன.
மேல் மாகாண சபைக்கு 102 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான இத்தேர்தலில் 2378 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மேல்மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்தில் 17 கட்சிகளும், 13 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. கம்பஹா மாவட்டத்தில் 11 கட்சிகளும், 4 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுவதோடு களுத்துறை மாவட்டத்தில் 10 கட்சிகளும், 6 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.
கொழும்பு,கம்பஹா, களுத்துறை மாவட்டங்களிலுள்ள 38 இலட்சத்து 20 ஆயிரத்து 214 பேர் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்கும் இன்றைய தேர்தலின் பாதுகாப்பு கடமைகளுக்காக 17,000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், 12,000 அதிகாரிகள் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.
319 வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்குகள் எண்ணப் படவுள்ளதோடு தபால் மூல வாக்குகள் எண்ணுவதற்கு 19 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இலங்கையிலுள்ள மாகாணசபைகளுள் மக்கள் தொகை கூடிய மாகாணசபையும், பிரதிநிதிகள் எண்ணிக்கை அதிகரித்த மாகாணசபையும் மேல்மாகாண சபையாகும்.
மேல்மாகாணசபையின் கொழும்பு மாவட்டம் பொதுவாக ஐக்கிய தேசியக்கட்சிக்கு சார்புடைய மாவட்டமாகவே இருந்துவருகின்றது. இந்தத் தேர்தலில் இலங்கையில் தற்போது நடைபெறும் யுத்தம் தென்பகுதி மக்களின் மனோநிலை எப்படிப்பட்டதென்பதை வெளிப்படுத்துவதாக அமையலாமென கருதப்படுகின்றது. தேர்தல் பிரசார காலங்களில் சில அடாவடித்தனங்களும் தேர்தல் விதிமுறை மீறல்கள் நடைபெற்றன. ஆனால், இன்று தேர்தல் நடைபெறும் நேரத்தில் தேர்தல் வன்முறைகள் இடம்பெறாதுவிடின் மக்களின் மனோநிலையை அளவிடக்கூடிய ஒரு அளவுகோலாக இத்தேர்தல் அமையலாமென தேர்தல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வடமாகாணத்தில் இடம்பெற்றுவரும் யுத்த நிலையின் தென்பகுதி மக்களின் கருத்துக் கணிப்பாகவும் இத்தேர்தலைக் கொள்ள முடியுமென இவர்கள் கருதுகின்றனர். எவ்வாறாயினும் தேர்தல் நடைபெறும் முறையைப் பொறுத்தே இக்கருத்துக் கணிப்பை அளவிடலாம் என்றும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
நேர்மையானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதுடன், வாக்குச் சாவடிகளுக்கு வாக்காளர்கள் காலையிலேயே சென்று வாக்களிக்குமாறும் தேர்தல் ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இத்தேர்தலின் போது குறிப்பாக வாக்குச் சாவடியினுள் புகைப்படம் பிடிப்பதற்கோ செய்திகள் சேகரிப்பதற்கோ எந்தவொரு ஊடகத்திற்கும் அனுமதி இல்லை எனவும் தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.
இரு தடவைகள் அல்லது பல தடவைகள் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டவர்கள் ஒரு வாக்களிப்பு நிலையத்தில் மட்டுமே வாக்களிக்க வேண்டும்.
இன்று இரவு எட்டு மணிக்குப் பின்னர் தபால் வாக்குகளின் முடிவுகள் அறிவிக்கப்படுவதுடன், நள்ளிரவுக்குப் பின்னர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவித்தார். வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லும் வாக்காளர்கள் தம்மை உறுதிப்படுத்தக் கூடிய தேர்தல் ஆணையாளரினால் ஏற்றுக் கொள்ளப்படும் எனக் குறிப்பிடப்பட்ட அடையாள அட்டையை உடன் எடுத்துச் செல்லுமாறும் தேர்தல் ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அத்துடன் வாக்களிப்பு நிலையங்களில் குழப்பம் விளைவிக்க வேண்டாம் எனவும், குழப்பம் விளைவிக்கப்பட்ட வாக்களிப்பு நிலையத்தில் பதிவான வாக்குகள் அனைத்தும் ரத்துச் செய்யப்படும் என்றும் ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
நடந்து முடிந்த வடமேல் மாகாண தேர்தலின் போது புத்தளம் மாவட்டத்தின் நாயக்கர் சேனை வாக்குச் சாவடியின் வாக்குகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டு மறுவாக்குப் பதிவு நடத்தப்பட்டமையையும் நினைவு கூர்ந்தார்.
மேல்மாகாண தேர்தல் தொடர்பான செய்திகள் தேசம்நெற் வாசகர்களுக்காக உடனுக்குடன் திரட்டித் தருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தலின் புதிய நிலவரங்கள் குறித்த செய்திகள் தொடர்ந்தும் இதே தலைப்பின் கீழ் இணைக்கப்பட்டு வரும்.
இணைப்பு -01
தேர்தல் ஆரம்பமாகி நான்கு மணி நேரம் முடிவடையும் நிலையில் கொழும்பு கம்பஹா தேர்தல் மாவட்டங்களில் சுமுகமாக வாக்களிப்பு நடைபெறுவதாக தேசம் நெட்டுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுவரை கொழும்பு மாவட்டத்தில் 18 வீதமானோரும், கம்பஹா மாவட்டத்தில் 25 வீதமானோரும் வாக்களித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
முன்னைய தேர்தலுடன் ஒப்பு நோக்கும் போது வாக்களிப்பு மந்தமாக இடம்பெறுவதையே அவதானிக்க முடிந்தது.
களுத்துறை மாவட்டத்தில் சில வன்முறைகள் இடம்பெற்றுள்ளன. இதனால் ஒரு வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிப்பு இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. களுத்துறை மாவட்டத்தில் சராசரி வாக்களிப்பு வீதம் 20க்கும் குறைவு என களுத்துறையிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இணைப்பு -02
மேல்மாகாண சபைத் தேர்தலில் 55 தொடக்கம் 60 சத வீதம் வரையான வாக்குப் பதிவு
மேல் மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (25) சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி அது முடிவடைந்த நேரமான மாலை 4.00 மணிவரையான காலப் பகுதிக்குள் பாரதூரமான சம்பவங்கள் எதுவும் இடம் பெறவில்லையென தேர்தல்கள் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.
இன்று நடைபெற்ற மேல்மாகாண சபைத் தேர்தல் வாக்களிப்பு 55 தொடக்கம் 60 வீதமாகக் காணப்பட்டதாகவும் தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்தது.
இதேவேளை, தபால் மூல வாக்குகள் எண்ணும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தபால் மூல முடிவுகளை இன்று நள்ளிரவுக்குப் பின்னர் அறிவிக்கக் கூடியதாகவிருப்பதுடன். ஏனைய முடிவுகளை நாளை (26) அதிகாலையில் 3.00 மணியிலிருந்து வெளியிட முடியுமெனவும் தேர்தல்கள்; திணைக்களம் நம்பிக்கை தெரிவித்தது.
பெப்ரல் அமைப்பு கருத்துத் தெரிவிக்கையில், கொழும்பு மாவட்டத்தில் 53 சதவீதமான வாக்குகளும் களுத்துறை, கம்பஹா மாவட்டங்களில் 60 சத வீதமான வாக்குகளும் அளிக்கப்பட்டதாகத் தெரிவித்தது.
நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான கண்காணிப்பு அமைப்பு (கபே) இன்றைய தேர்தல் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், 49 சிறு,சிறு சம்பவங்கள் இடம்பெறிருந்தாலும் அமைதியானதாகவும் உற்சாகமானதாகவும் வாக்களிப்பு இடம்பெற்றதாகத் தெரிவித்துள்ளது.
இணைப்பு -03
மேல் மாகாண சபை தேர்தலில் 60% வாக்குப்பதிவு
மேல் மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. மக்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களிப்பில் கலந்துகொண்டதைக் காணமுடிந்தது. காலை வேளையில் வாக்களிப்பு மந்தமாக இருந்தபோதிலும், நண்பகலுக்கு பின்னர் சுறுசுறுப்படைந்திருந்ததாக தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
களுத்துறை, கொழும்பு, கம்பஹா ஆகிய மூன்று மாவட்டங்களிலுமாக 60% வாக்குப் பதிவு இடம்பெற்றிருப்பதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் டபிள்யு.பி. சுமணசிறி தெரிவித்தார்.
களுத்துறை மாவட்டத்தில் 65% வாக்குப் பதிவும், கம்பஹா மாவட்டத்தில் 60% வாக்குப் பதிவும் கொழும்பு மாவட்டத்தில் 53% வாக்குப் பதிவும் இடம்பெற்றுள்ளதாக தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
காலை ஏழு மணி முதல் மாலை நான்கு மணிவரை இடம் பெற்ற வாக்குப் பதிவு சுமுகமாக நிறைவடைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.
தேர்தல் நடைபெற்ற மூன்று மாவட்டங்களிலும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், இராணுவத்தினரும் கடமையில் அமர்த்தப்பட்டிருந்தனர்.
தெரிவு செய்யப்படவுள்ள 102 உறுப்பினர்களில் 43 பேர் கொழும்பு மாவட்டத்திலும், 39 பேர் கம்பஹா மாவட்டத்திலும் 20 உறுப்பினர்கள் களுத்துறையிலும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
மாலை 4 மணிக்கு வாக்குப் பதிவு நிறைவடைந்ததும் வாக்களிப்பு நிலையங்களிலிருந்து வாக்குப் பெட்டிகள், எண்ணும் நிலையங்களுக்குப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டன. தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் இரவு 11 மணிக்குப் பின்னர் அறிவிக்க தேர்தல்கள் தலைமையகம் ஏற்பாடு செய்திருந்தது. இறுதி முடிவுகள் காலை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்பு மாவட்டத்திலுள்ள கொழும்பு வடக்கு, மத்தி, கிழக்கு, மேற்கு, தெஹிவளை, இரத்மலானை, பொரளை, கொலன்னாவ, கோட்டே, மஹரகம, ஹோமாகம, மொறட்டுவை, கடுவெல, அவிசாவளை, கெஸ்பாவ ஆகிய 15 தொகுதிகளில் 43 பேரைத் தெரிவு செய்யவென 15, 60,593 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்தனர்.
கம்பஹா மாவட்டத்தில் வத்தளை, களனி, மகர, நீர்கொழும்பு, கட்டான, திவுலப்பிட்டிய, மீரிகம, மினுவாங் கொடை, அத்தனகல, கம்பஹா, ஜா-எல, பியகம, தொம்பே ஆகிய 13 தொகுதிகளில் 39 உறுப்பினர்களைத் தெரிவு செய்யவென 14, 58, 295 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்தனர்.
களுத்துறை மாவட்டத்தில் பாணந்துறை, பண்டாரகம, ஹொரணை, புளத்சிங்கள, மத்துகம, களுத்துறை, பேருவளை, அகலவத்தை ஆகிய எட்டுத் தொகுதிகளில் 20 பேரைத் தெரிவு செய்ய 8,1, 326 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.