::யுத்த நிலவரம்

::யுத்த நிலவரம்

இலங்கையில் நடைபெறும் யுத்தம் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

பாக்கு நீரிணையில் இந்திய போர்க் கப்பல்கள்!

boats-1002-2.jpgஇலங்கையில் யுத்தம் தீவிரமடைந்து வரும் வேளையில் இராமேஸ்வரம் கடல்பகுதியில் புலிகள் ஊடுருவுவதைத் தடுக்கும் வகையில் விமானப்படையினரின் போர் விமானங்களும் போர்க்கப்பலும் தீவிர கண்காணிபபில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இந்தியச் செயதிகள் தெரிவிக்கின்றன.

அகதிகள் போர்வையில் புலிகள் ஊடுருவலாம் எனக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக இராமநாதபுரம் கடல் பகுதியின் மாவட்டக் கடலோரப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது இராமேஸ்வரம் கடல் பகுதியில் இந்திய கடலோர காவல்படைக்குச் சொந்தமான 4 போர்க்கப்பல்கள் 500 க்கும் மேற்பட்ட கமாண்டோ படைவீரர்களுடன் தீவிரமாக பாதுகாப்புபணியில் ஈடுபட்டு வருகின்றன.

இராமேஸ்வரம் தனுஷ்கோடி, பாம்பன் மண்டபம் ஆகிய பாககு நீரிணை  கடல்பகுதியில் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான் போர்க்கப்பல்கள் ரோந்தில் ஈடுபட்டுள்ளன

மன்னார் வளைகுடா கடல்பகுதியில் தூத்துக்குடியில் உள்ள கடலோர காவல் படைக்குசொந்தமான போர்க்கப்பல் ஒன்றும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. இந்திய கடற்படை ஹெலிகொப்டர்  இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான போர் விமானம் ஒன்றும் கடலில் தாழ்வாகப் பறந்து கண்காணித்து வருகிறது மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான தரையிலும் நீரிலும் அதிவேகமாக செல்லக்கூடிய 2 ஹோவர்கிராப்ட் ஐசி 181 183 ஆகியவையும் 24 மணிநேரமும் கடலில் தீவிர ரோந்தில் ஈடுபட்டு வருகின்றன

கடலுக்குள் மீன்பிடிக்கச்செல்லும் மீனவர்களின் அடையாள அட்டைகள் படகுகள் சோதனையிடப்பட்டு வருகின்றன. இதுதவிர கியூப்பிரிவு பொலிஸார் கடலோரப்பகுதியில் ரோந்து சென்று இலங்கையில் இருந்து யாரும் தப்பிவருகிறார்களா இலங்கைக்கு பொருட்கள் எதுவும் கடத்தப்படுகிறதா என்று கண்காணித்து விசாரணை நடத்திவருகின்றனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பை நாடி வரும் சிவிலியன்களின் நலன்கருதி இன்று முதல் புதிய நடைமுறை

mahinda_samarasinghe.jpgபுலிகளின் பிடியிலிருந்து விடுபட்டுப் பாதுகாப்பை நாடி வரும் சிவிலியன்களின் நலன்கருதி இன்று முதல் புதிய நடைமுறையை பாதுகாப்புப் படையினர் அமுல் படுத்தவுள்ளதாக இடர் முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்றுத் தெரிவித்தார்.

அரசாங்க கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு பாதுகாப்பை நாடி வரும் அப்பாவி மக்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கும் தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்கும் அரசாங்கம் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

புலிகளின் பிடியிலிருந்து விடுபட்டு பாதுகாப்பை நாடி மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் வருவதற்கு தயாராக உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.  விசுவமடு, சுதந்திரப் பிரதேசத்தை நோக்கி வந்த சிவிலியன்களை இலக்கு வைத்து புலிகளின் பெண் தற்கொலை குண்டுதாரி நேற்றுக்காலை மேற்கொண்ட தாக்குதல் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு இடர் முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது.  இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, இடர் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் கலாநிதி ரஜீவ விஜேசிங்க கலந்துகொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் உரையாற்றுகையில் :-

புலிகளின் பிடியில் சிக்கியுள்ள அப்பாவி தமிழ் மக்களை இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தை நோக்கி வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் அழைப்பை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் வரத்தொடங்கினர்.  சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கடந்த சில நாட்களுக்குள் வந்துள்ளனர். நேற்றும் ஐயாயிரம் பொது மக்கள் வருகை தந்துள்ளனர். யாழ்ப்பாணம் வடமராட்சியை நோக்கி படகுகள் மூலம் 2 ஆயிரம் பொதுமக்கள் வருகை தந்துள்ளனர் என்று யாழ். அரச அதிபர் தனக்கு தகவல் தந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். பாதுகாப்பை நாடி எத்தனை ஆயிரம் பேர் வந்தாலும் அவர்களுக்குத் தேவையான சகல நிவாரண நடவடிக்கைகளை செய்து கொடுக்க அரசாங்கம் தயாராக உள்ளது. இதில் எந்தவித மாற்றமும் இல்லை.

தற்பொழுது படுதோல்வியடைந்துள்ள புலிகள், இது போன்ற தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். சிவிலியன்களே புலிகளை பாதுகாத்துக் கொள்ளவுள்ள ஒரே ஒரு ஆயுதமாகும். எனவே பொதுமக்கள் பாதுகாப்பு நாடி வருவதையிட்டு விரக்தியடைந்த புலிகள் அப்பாவி பொதுமக்களை கொலை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தப்பிவரும் மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தி அவர்களின் வருகை கட்டுப்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பாதுகாப்பை நாடி வந்த ஆயிரக்கணக்கான சிவிலியன்கள் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள ஏழு நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்குத் தேவையான சகல ஏற்பாடுகளும் செய்து கொடுத்துள்ளோம்.
இந்த மக்களை தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்குத் தேவையான சகல ஏற்பாடுகளும் செய்து கொடுத்துள்ளோம். இந்த மக்களை தங்க வைக்கவென மேலும் 5 நலன்புரி நிலையங்களை அமைக்க வவுனியா அரசாங்க அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கடற்புலிகளின் பாரிய தளம் முல்லை காட்டுப் பகுதியில் அழிப்பு

mi24_2601.jpgமுல்லைத் தீவு காட்டுப் பகுதியில் மறைவான முறையில் அமைக்கப்பட்டிருந்த கடற் புலிகளின் பாரிய தளம் மற்றும் கட்டடத் தொகுதி என்பனவற்றை நேற்றுக் காலை விமானப் படையினர் தாக்கியழித்துள்ளதாக விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார். விமானப் படையினரின் இந்த கடுமையான தாக்குதல்களில் கடற் புலிகளின் பாரிய கட்டடத் தொகுதிகளுடன் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான படகுகள் மற்றும் உழவு இயந்திரங்களும் நிர்மூலமாக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முல்லைத்தீவு கடலேரிக்கு வடக்கேயும், வெள்ளைமுல்லை வாய்க்கால் காட்டுப் பகுதியின் கரை யோரத்திற்கு மேற்கே ஒரு கிலோ மீற்றர் தொலைவிலும் இந்த முகாம் அமைக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். விமானப் படைக்குச் சொந்தமான கிபீர் மற்றும் மிக் – 27 ரக தாக்குதல் விமானங்களை பயன்படுத்தி நேற்றுக்காலை 7.00 மணியளவில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்கள் வெற்றியளித்துள்ளதாக மேலும் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவ ஐ. நா தொண்டு நிறுவனங்கள் மீண்டும் தயார்

mullai-ahathi.jpgஇலங் கையின் வடக்கே விடுதலைப்புலிகளின் பிரதேசத்தி்லிருந்து இடம்பெயர்ந்து இராணுவத்தின் கட்டு்ப்பாட்டுப் பகுதிகளுக்குள் வரும் மக்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதிலும், அவர்களின் முக்கிய அவசர தேவைகளை ஈடுசெய்வதிலும், ஐநா மன்றத்தின் தொண்டு நிறுவனங்கள் தமது பங்களிப்பை வழங்குவதற்கு முன்வந்திருப்பதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.

விடுதலைப்புலிகளின் பிரதேசங்களில் இருந்து இந்த நிறுவனங்கள் பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று அங்கிருந்து வெளியேறி வந்து வவுனியாவில் தமது அலுவலகங்களை அமைத்திருந்த போதிலும் அந்த நிறுவனங்கள் இடம்பெயர்ந்து வரும் மக்களுக்கான நிவாரண பணிகளில் சுதந்திரமாக ஈடுபடுவதற்கு அரசாங்கத்தினால் அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இன்று வவுனியாவுக்கு விஜயம் செய்த அனர்த்த முகாமைத்துவ மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன் தலைமையில் வவுனியா செயலகத்தில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டம் ஒன்றில் ஐநா மன்றத்தின் தொண்டு நிறுவனங்கள், அரசாங்கத்தின் வழிகாட்டலில் இடம்பெயர்ந்த மக்களுக்கான நிவாரண பணிகளில் ஈடுபடுவது தொடர்பாக ஆராயப்பட்டு, அவற்றிற்கான பொறுப்புக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

போர்ப்பிரதேசத்திலிருந்து இதுவரையில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வவுனியாவில் உள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கு வந்து சேர்ந்திருக்கின்றார்கள் என்பதும், ஏற்கனவே இராணுவத்தினரிடம் வந்து சேர்ந்துள்ள மேலும் 12 ஆயிரம் பேர் இந்த முகாம்களுக்கு படிப்படியாகக் கொண்டு வந்து கொண்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இவர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதில் அரச திணைக்களங்களும் தொண்டு நிறுவனங்களும் இணைந்து செயற்படத் தொடங்கியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

மக்களை அழைத்துவர 40 பஸ்கள் சேவையில்

bus.jpgவன்னியில் இருந்துவரும் மக்களை வவுனியாவுக்கு அழைத்துவருவதற்கென 40 பஸ்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த நிவாரண மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வந்த சுமார் 12 ஆயிரம் பேர் ஓமந்தை மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கட்டம் கட்டமாக வவுனியா அழைத்து வரப்படுவதாகவும் அவர் கூறினார்.

மக்களை அழைத்துவர இ.போ.ச. மற்றும் தனியார் பஸ்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, வவுனியாவுக்கு அழைத்துவரப்படும் மக்கள் வவுனியாவிலுள்ள பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்ட பின் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்படவுள்ளனர்.

புலிகளின் விமானங்கள் உருத்தெரியாதவாறு தனித்தனிப் பாகங்களாக கழற்றப்பட்டுள்ளன இராணுவப் பேச்சாளர் தகவல்

விடுதலைப்புலிகள் வசம் இருந்த விமானங்கள் உருத்தெரியாதவாறு தனித்தனியாக வெவ்வேறு பாகங்களாகக் கழற்றி வைக்கப்பட்டுள்ளன என்று கருதப்படுகின்றது. அவற்றை தேடும் பணியில் படையினர் தற்போது ஈடுபட்டுள்ளனர். இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார அரச ஊடகம் ஒன்றுக்கு மேற் கண்டவாறு தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் விமானப் படை, கடற்படை என்பவற்றின் செயற்பாடுகளை படையினர் முழு அளவில் சீர் குலைத்துள்ளனர். கடற்பகுதியில் 24 மணிநேரமும் கடற்படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

172 சதுர கிலோமீற்றர் பிரதேசத்துக்குள் விடுதலைப்புலிகள் முடக்கப்பட்டுள்ளனர். சுமார் 700 உறுப்பினர்கள் வரையிலேயே தற்போது அங்கு முடங்கியுள்ளனர். படையினர் எல்லாத் திசைகளில் இருந்தும் தாக்குதல் நடத்துவதால் விடுதலைப்புலிகள் தாக்குதல் திறனை இழந்து விட்டனர்  என்று இராணுவப் பேச்சாளர் விவரித்தார்.

விசுவமடு, குருவிகுளம் தேடுதல்: மோட்டார் குண்டு ஏவும் கருவிகள் கண்டுபிடிப்பு

udaya_nanayakkara_.jpgவிடு விக்கப்பட்ட விசுவமடு மற்றும் குருவிகுளம் பகுதிகளில் படையினர் மேற்கொண்ட பாரிய தேடுதல்களின் போது புலிகளின் மோட்டார் குண்டுகளை ஏவும் இரண்டு கருவிகளை இராணுவத்தினர் நேற்றுக் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.  60 மி.மீ. ரக மோட்டார் குண்டுகளை ஏவும் கருவிகள் ஒன்றும், 80 மி.மீ. ரக மோட்டார் குண்டுகளை ஏவும் கருவி ஒன்றும் இவற்றில் அடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார். படையினர் கடுமையான தாக்குதல்களினால் சேதமடைந்த நிலையில் புலிகள் விட்டுச் சென்றுள்ள இந்த மோட்டார் குண்டுகளை ஏவும் இரண்டு கருவிகளையும் இராணுவத்தின் இரண்டாவது செயலணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ரோஹன பண்டார தலைமையிலான படைப்பிரிவினரே கைப்பற்றியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கடல் புலிகளின் வளங்கள் மீது விமானத் தாக்குதல்

jet-1301.jpgஇலங்கை விமானப் படைக்குச் சொந்தமான கிபிர் மற்றும் மிக் -27 தாக்குதல் விமானங்கள் மூலம் கடற்புலிகளின் வளங்களை இலக்கு வைத்து இன்று(பெப்:09) காலை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இத்தாக்குதல் விடயமாக விமானப் படைப்பேச்சாளர்  தகவல் தருகையில் தொடர்சியாக கடற்புலிகளின் நடமாட்டத்தை அவதானித்து இன்று காலை 7.00 மணியளவில் இத்தாக்குதலை நடத்தியதாக தெரிவித்தார். முல்லைத்தீவுக்கு வடக்காக அமைந்துள்ள வெள்ளமுள்ளவாய்கல் பகுதியில் கடற்புலிகளின் படகுகள் ரெய்லர்கள் ரெக்டர்கள் என்பன வானிலிருந்து அவதானிப்பதற்க்கு முடியாத வாறு மறைத்து வைக்கப்பட்டிருந்த இடங்களையே இத்தாக்குதல் இலக்காகும் என விமானப்படைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்து வரும் வவுனியா மக்களின் நலன்பேண நான்கு விசேட செயலணிகள்

risard.jpgவிடுவிக்கப்படாத வன்னிப் பிரதேசத்திலிருந்து வவுனியாவுக்கு வந்துசேரும் மக்களுக்கு உணவு, குடிநீர், கல்வி மற்றும் சுகாதார வசதிகளைக் கிரமமான முறையில் பெற்றுக்கொடுக்கவென நான்கு விசேட செயலணிகள் அமைக்கப்படவிருப்பதாக மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நேற்றுத் தெரிவித்தார். அடுத்துவரும் சில தினங்களுக்குள் விடுவிக்கப்படாத வன்னிப் பிரதேசத்திலிருந்து சுமார் ஒரு இலட்சம் பேர் வந்து சேர்வர் எனவும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

விடுவிக்கப்படாத வன்னிப் பிரதேசத்திலிருந்து வவுனியாவுக்கு வந்துசேரும் மக்களுக்கு உணவு, குடிநீர், கல்வி மற்றும் சுகாதார வசதிகளை எவ்விதமான குறைபாடுகளுமின்றி சிறந்த முறையில் பெற்றுக் கொடுக்க இச்செயலணிகள் பெரிதும் உதவும் எனவும் அவர் கூறினார். இதுவரை வவுனியா மெனிக்பாம் பகுதியில் சுமார் 12 ஆயிரம் பேரை தங்க வைத்துள்ளதாகவும் இவர்களுக்குத் தேவையான சகல வசதிகளும் பெற்றுக் கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வன்னியில் இருந்துவரும் மக்களுக்குத் தேவையான சகல வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சமைத்த உணவுகள், தங்குமிட வசதி, சுகாதார வசதி என்பன வழங்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உத்தரவிட்டு ள்ளதாக கூறிய அவர் வன்னியில் இருந்துவரும் மக்களை தங்க வைக்க ஆயிரம் ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இவர்களுக்கு உதவி வழங்க ஐ.நா. மற்றும் ஐ.நா.வுடன் தொடர்புடைய தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பன முன்வந்துள்ளன. இது குறித்து அவர்களுடன் பேச்சு நடத்தினேன் எனவும் அமைச்சர் தெரிவித்தார். தற்காலிக கூடாரங்கள், நீர் வசதி, மலசல கூட வசதி என்பன அளிக்க ஐ.நா. தொண்டு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.

வவுனியா வரும் மக்களுக்கு சுகாதார வசதி, கல்வி, குடிநீர், மலசல கூட வசதி மற்றும் உணவு வசதிகள் அளிப் பதற்கென 4 செயலணிகளை நிறுவ திட்டமிட்டுள்ளதாக கூறிய அமைச்சர், அது குறித்து இன்று (9) வவுனியா செயலகத்தில் உயர்மட்ட கூட்டமொன்று நடத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்த செயலணிகளினூடாக குறித்த வசதிகள் வழங்குவது குறித்து தனித்தனியாக நட வடிக்கை எடுக்கப்படவுள்ளது. வன்னியில் இருந்துவரும் மக்களை கவனிப்பதற்கு அரசாங்கம் தயாராக உள்ளதாகவும் இதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார். உணவுகள், மருந்துகள் என்பவற்றை கையிருப்பில் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு வட கிழக்கு கடலில் புலிகளின் இரு படகுகள் தாக்கியழிப்பு

_bort.jpgமுல் லைத்தீவு வடகிழக்கு கடலில் புலிகளின் இரண்டு படகுகளை கடற்படையினர் நேற்றுக் காலை தாக்கியழித்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் டி. கே. பி. தஸநாயக்க தெரிவித்தார். இந்த சம்பவத்தில் ஆறு புலிகள் கொல்லப்பட்டுள்ளதுடன் இரண்டு படகுகளும் கடலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கடற்படையின் அதிவேக தாக்குதல் படகான டோராவை பயன்படுத்தி நேற்றுக்காலை 6.30 மணியளவில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தச் சம்பவத்தின் பின்னர் படையினர் கடற்பரப்பில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது கொல்லப்பட்ட ஆறு புலிகளில் இருவரின் சடலங்களை கண்டெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு கடற்பரப்பிற்கு வெளியில் செல்ல முற்பட்ட இரண்டு படகுகளும் முல்லைத்தீவுக்கு வடகிழக்கே 10 கடல் மைல் தொலைவில் வரும்வரை காத்திருந்த பாதுகாப்புப் படையினர் அந்த படகுகளை இலக்குவைத்து கடுமையாக தாக்குதல்களை நடத்தியுள்ளனர். புலிகள் எந்த விதத்திலும் தப்பிச் செல்ல முடியாத வகையிலும் அவர்கள் தாக்குதல்களை மேற்கொள்ள முடியாத நிலையிலும் கடற்படையினர் கடற்பரப்பில் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கொமாண்டர் தஸநாயக்க மேலும் தெரிவித்தார்.