புலம்பெயர் வாழ்வியல்

புலம்பெயர் வாழ்வியல்

தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் அவர்களுடைய வாழ்வியல், சமூக, அரசியல் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

‘கொப்பிக்கற்’ (copycat) தீக்குளிப்புகள் இன்றைய பிரச்சினைக்குத் தீர்வாகாது! : த ஜெயபாலன்

Stop_Suicideபெப்ரவரி 14 உலகம் முழுவதும் காதலர் தினத்தைக் கொண்டாட லண்டன் தமிழ் இளைஞர் ஒருவர் தனது தலையில் பெற்றோலை ஊற்றி தற்கொலை செய்ய முயற்சித்து உள்ளார். பிரித்தானிய பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்னால் இச்சம்பவம் பெப் 14 பிற்பகல் இடம்பெற்று உள்ளது. பிரித்தானிய பிரதமரின் அலுவலகத்திற்க முன்னால் இலங்கை அரசுக்கு சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்திற்கு அருகேயே தனது நண்பர்களுடன் வந்த இளைஞர் தன்மீது பெற்றோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். ஆனால் அவ்விளைஞர் தன்னைப் பற்ற வைக்க முன்னதாகவே பொலிசார் உடனடியாக செயற்பட்டு இன்னுமொரு மனிதத் தீப்பந்து கொழுந்தவிட்டு எரிவதைத் தடுத்து உள்ளனர்.

மற்றுமொரு லண்டன் தமிழ் இளைஞர் முருகதாஸ் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னால் தீக்குளித்து தன்னை மாய்த்துள்ளார். அவரை கௌரவப்படுத்தும் ஆயிரக்கணக்கான சுவரொட்டிகள் லண்டன் முழுவதும் ஒட்டப்பட மகனைப் பறிகொடுத்த தந்தை சுவிஸ்லாந்தக்குப் பயணமாகிறார். முத்துக்குமாரனுடன் ஆரம்பமான தீக்குளிப்பு இன்று மேற்குலகு நோக்கியும் நகர்ந்துள்ளது. வட இலங்கையின் வன்னிப் பிரதேசத்து மக்களின் அவலங்கள் தமிழ் மக்கள் மத்தியில் பாரிய உணர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த உணர்வலையை குறுகிய அரசியல் நோக்கங்களுடன் இன உணர்வைத் தூண்டும் வகையில் பிரச்சாரப்படுத்தி அரசியல் லாபம் பெறும் போக்கு ஒன்று இன்று ஏற்பட்டு உள்ளது.

கடந்த இரு வாரங்களில் தீக்குளித்தவர்கள்:
முருகதாசன் (26), சுவிஸ்லாந் – 13 பெப்ரவரி 2009
ராஜா (27), மலேசியா – 08 பெப்ரவரி 2009
ரவிச்சந்திரன் (47), இந்தியா – 07 பெப்ரவரி 2009
முத்துக்குமார் (27), இந்தியா – 29 ஜனவரி 2009

அறியப்பட்ட தீக்குளிப்பு முயற்சிகள்:
பெயர் தெரியவில்லை, தீக்குளிப்புத் தடுக்கப்பட்டது, பிரித்தானியா – 14 பெப்ரவரி 2009
கோசல்ராம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், இந்தியா – 10 பெப்ரவரி 2009
ராஜசேகரன், பொலிசாரால் கைது செய்யப்பட்டார், இந்தியா – 01 பெப்ரவரி 2009
தீனதயாளன், இந்தியா – 01 பெப்ரவரி 2009

வன்னி மக்கள் எதிர்நோக்குகின்ற அவலத்தை நிறுத்துவதற்கு எந்த வகையிலும் பயனளிக்காத வெறும் பரபரப்பை ஏற்படுத்தும் ஒரு செயலாகவே இந்த தீக்குளிப்புகள் அமைந்து உள்ளது. தீக்குளித்த இளைஞர்கள் ஒவ்வொருவரும் வன்னி மக்கள் மீதான தங்கள் உணர்வுகளை எழுதி வைத்து அம்மக்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்ற நோக்கில் தங்களை அழித்து உள்ளனர். அவர்களுடைய ஆழமான சமூகப்பற்று மதிக்கப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு ஆழ்ந்த சமூகப்பற்று உடையவர்கள் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்வதன் மூலம் அவர்களால் எதனையும் சாதித்து விடமுடிவதில்லை என்ற உண்மையை அவர்கள் உணர்வதில்லை. அவர்களது அழிவில் குறுகிய அரசியல் லாபம் தேடுபவர்களும் அந்த உண்மையைச் சொல்ல முன்வருவதில்லை.

வன்னி மக்களின் படுகொலையைக் கண்டித்து தங்களது இன்னுயிரைக் கருக்கியவர்களின் தன்னலமற்ற பிறர் நலன் சிந்திக்கும் எண்ணம் மகத்தானது.  அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்க  வார்த்தைகள் இல்லை.

ஆனால் இவ்வாறான சம்பவங்களை ஒருபோதும் ஊக்குவிக்க முடியாது. இவ்வாறான உணர்ச்சி வசப்பட்டு எடுக்கும் தீக்குளிப்புச் செய்ல்கள் தடுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு உயிரும் மகத்தானது. இவ்வாறான அநியாய இழப்புகள் உடன் நிறுத்தப்பட வேண்டும். ஈழத் தமிழர்கள் கொல்லப்படுவதை அனைவரும் கண்டிக்க வேண்டும். அதற்கான எதிர்ப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக செயற்படவும் வேண்டும். ஆனால் அதற்காக தங்களைத் தாங்களே அழிப்பது இப்பிரச்சினைக்கு தீர்வாகாது.

இந்த நல்ல உள்ளங்கள் நீண்டகாலம் உயிர்வாழ்ந்திருந்தால் தமிழ் சமூகத்திற்கு மட்டுமல்ல மனிதகுலத்திற்கு நல்ல பல காரியங்களைச் செய்திருக்கலாம். அவர்கள் இவ்வாறு தங்களை அழித்துக் கொள்வதை எக்காரணம் கொண்டும் ஊக்குவிக்க முடியாது.

1983க்களில் இனக்கலவரத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு கொந்தளித்து இவ்வாறான பல தீக்குளிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றது. அதனால் தமிழ் சமூகம் எவ்வித நன்மையும் அடையவில்லை. இறுதியில் தமிழர்களை இந்திய அரசு தனது நலன்களுக்காகப் பயன்படுத்திக் கொண்டது.  நல்லுள்ளங்களின் இந்த செயல்கள்  குறுகிய அரசியல் நோக்கங்களுக்கே பயன்படும்.

இன்று ஈழத்தமிழர்கள் அவலத்திற்கு உள்ளாகின்றனர் என்பதன் அடிப்படையில் வெறும் இனவாதம் கக்கப்படுகிறது. இதனால்  இந்த இளைஞர்கள் அப்பாவி உணர்வாளர்கள் தூண்டப்பட்டு குற்ற உணர்வுக்கு உள்ளாகி தீக்குளிப்பு என்ற விபரீத முடிவுக்கு தள்ளப்படுகிறார்கள். குறுகிய நோக்கங்களுடன் இவ்வாறான தீக்குளிப்புச் சம்பவங்களை ஊக்கப்படுத்துவதும் அதனை போற்றுவதும் மிகப்பெரும் தவறு. ஒரு மனித அவலத்தை கண்டிக்க இன்னொரு மனித அவலத்தை ஏற்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும்.

மாறி மாறிப் பதவிக்கு வந்த பேரினவாத அரசியல் தலைமைகள் தங்கள் வாக்கு வங்கிகளை மட்டுமே கருத்திற் கொண்டு இனவாதத்தை ஊட்டி வளர்த்தனர். சிறுபான்மையினங்களை எதிரிகளாக்கி அந்த இனவாதத் தீயில் தங்கள் அரசியலை செயற்படுத்தினர். இதற்கு பதிலாக எழுந்த தமிழ் அரசியல் தலைமைகளும் தங்களது வாக்கு வங்கியை நிரப்புவதற்காக தாங்களும் இனவாதத்தைக் கக்கினர். ஆயினும் காலத்திற்குக் காலம் சிங்கள இனவாதத் தலைமைகளுடன் – சிங்கள அதிகார வர்க்கத்துடன் சமரசம் செய்து கொண்டு தங்களது சந்தர்ப்பவாத அரசியலை நடாத்தினர். ஆயினும் இரு பக்கத்து மக்களும் இனவாதத்தினால் தூண்டப்பட்டு பரம எதிரிகளாகி உள்ளனர்.

இரு பங்கங்களிலுமுள்ள குறும் தேசிய இனவாதத் தலைமைகளின் செயற்பாடுகளுக்கு இலங்கையின் ஒட்டு மொத்த மக்களும் இன்று மிகுந்த விலையைச் செலுத்துகின்றனர். விடுதலைப் புலிகள் மீதான இராணுவ வெற்றியானது தமிழினத்தின் மீதான வெற்றியாக மகிந்த ராஜபக்ச குடும்ப அரசியலால் கற்பிதப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழ் மகனுக்கும் சிங்கள மகனுக்கும் முஸ்லிம் மகனுக்கும் மலையக மகனுக்கும் உள்ள பொதுப் பிரச்சினைகளை எல்லாம் புறம்தள்ளி இனவாதத்தினால் அவர்களைக் கூறுபோட்டு சகல இன மக்களையும் ஆளும் அதிகார வர்க்கங்கள் பலவீனப்படுத்தி உள்ளது.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தலைமை தாங்க முற்பட்டவர்களும் தங்களது சுயநல அரசியலுக்கு அப்பால் அதிகார வேட்கையுடன் செயற்பட்டனரே அல்லாமல் ஒடுக்குமுறைக்கு எதிரான ஒன்றுபட்ட போராட்டம் ஒன்றை மேற்கொள்ள இயலவில்லை. அன்றைய தமிழ் மிதவாதிகளை சந்தர்ப்ப வாதிகள் என்று கூறி ஒதுக்கி அவர்களது உண்ணாவிரதப் போராட்டங்களில் உணவூட்டி குழப்பம் விளைவித்ததும் பின்னர் எண்பதுக்களில் இத்தலைமைகள் கொன்றொழிக்கப்பட்டதும் வரலாறு.

போராட்டத்தை தமது கைகளில் எடுத்த இளைஞர்களிடமும் வேகம் இருந்த அளவுக்கு விவேகம் இருக்கவில்லை. அதிகாரத்துக்கான வேட்கையில் தங்களுக்கு உள்ளேயே மோதி அழிந்து கொண்டனர். எஞ்சிய ஏனைய இயக்கங்களையும் உறுப்பினர்களையும் அழித்து விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் அதிகாரத்தலைமை ஆயினர். தமிழர் விடுதலைக் கூட்டணி துப்பாக்கி ஏந்தாத புலிகள் என்றால் புலிகள் துப்பாக்கி ஏந்திய கூட்டணியினர். இவ்விரு அமைப்புகளினதும் அரசியலில் எவ்வித மாற்றமும் இல்லை. மூன்று தசாப்தங்களுக்கு முன்பாக அன்று கூட்டணித் தலைமைகள் மேடை போட்டு இனவாதத்தை முழங்கினர். இன்று புலத்தில் உள்ள பெருமக்கள் ஐபிசி போன்ற வானொலிகளிலும் இணையங்களிலும் இனவாதத்தை கக்குகின்றனர்.

அன்று உணர்வலைகளால் தூண்டப்பட்ட தமிழ் இளைஞர்கள் தங்கள் கைகளை பிளேட்டினால் கீறி அந்தத் தலைவர்களுக்கு இரத்தத் திலகம் இட்டனர். இன்று இளைஞர்கள் பல படிகள் தாண்டிச் சென்று தங்களையே தீப்பந்தங்களாக்கி உள்ளனர்.

போராட்டம் மனித வாழ்வை மேம்படுத்துவதற்காகவே அமைய வேண்டும். தமிழ் மக்களின் போராட்டத் தலைமைகளின் குறுகிய அரசியல் நோக்கங்களால் தமிழ் மக்களின் வாழ்க்கையே போராட்டமாகி தமிழ் மக்களின் வாழ்நிலை மிக மோசமாகி உள்ளது. இன்று உணர்ச்சி வசப்பட்டு தங்களைத் தீப்பந்தங்களாக்கியவர்கள் மீண்டும் உயிருடன் வந்து கேள்வி கேட்க மாட்டார்கள். ஆனால் மக்கள் நிதானமாக சிந்திக்கும் போது கேள்விகள் எழும். அப்போது குறும்தேசிய கூட்டணித் தலைமைகளை மக்கள் எவ்வாறு ஓரம்கட்டினரோ அவ்வாறே இன்றைய தலைமைகளும் ஓரம்கட்டப்படுவது தவிர்க்க முடியாது.

தமிழ் சமூகத்தின் மத்தியில் தற்கொலைக் கலாச்சாரம் பற்றிய ஆய்வுகள் மிகவும் அவசியமாகி உள்ளது. பொதுவாகவே கல்வி, காதல், மணவாழ்வு நெருக்கடிகள் ஏற்படும் போது தற்கொலை செய்து கொள்கின்ற நிகழ்வுகள் விடுதலைப் போராட்டத்திற்கு முன்னரேயே இருந்துள்ளது. அதன் பின்னரும் தங்களது நெருக்கடிகளில் இருந்து தப்புவதற்கான ஒரு வழிகோலாகவும் இந்தத் தற்கொலைகள் அமைந்து இருந்தது. 2004 சுனாமி நிகழ்வின் பின்னர் தமது அன்புக்குரியவர்களை இழந்தவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகியதும் அவர்கள் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவங்களும் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வுகளும் பெருமளவில் இடம்பெற்றது.

இவற்றுக்கு அப்பால் விடுதலைப் புலிகள் தற்கொலைக் கலாச்சாரம் ஒன்றைக் கட்டமைத்து உள்ளனர். இவற்றின் சரி பிழைகளை விவாதிப்பது இக்கட்டுரையின் நோக்கமல்ல. ஆனால் விடுதலைப் புலிகளின் இந்தத் தற்கொலைக் கலாச்சாரம் சமூகத்தில் ஏற்படுத்தகின்ற தாக்கம் பற்றிய ஆய்வுகள் கல்வியியலாளர்களால் மேற்கொள்ளப்படுவது மிகவும் அவசியம்.

ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்ற நாடுகளிலும் தற்கொலைகள் பொதுவான விடயமாகவே உள்ளது. குறிப்பாக நடுத்தர வயது இளைஞர்களே கூடுதலாகத் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதற்கான காரணங்கள் பல்வகைப்பட்டாலும் தனிமை, அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டு கேள்விக்குறியான எதிர்காலம், குடும்பப் பிணக்குகள் என்பன முக்கிய காரணமாகின்றது. இப்பிரச்சினைகளில் இருந்து வெளியேறுவதற்கு தற்கொலையை ஒரு வழியாகக் கொள்கின்றனர்.

தற்போதைய ஆய்வாளர்கள் தற்கொலையைத் தூண்டுகின்ற பரம்பரையியல் கூறுகள் சிலரில் சில சமூகத்தவரில் செயலூக்கம் பெற்றிருப்பதான முடிவுகளுக்கும் வந்துள்ளனர்.

குறிப்பாக இலங்கையும் தற்கொலை வீதம் அதிகமுள்ள ஒரு நாடக உள்ளது. தமிழ் சமூகத்தில் தற்கொலை வீதம் பற்றிய சரியான ஆய்வுகள் பதிவுள் இல்லை. இவை பற்றிய ஆய்வுகள் மிகவும் அவசியமானது.

தற்போதைய தீக்குளிப்புகள் ஒரு அரசியல் நோக்கமுடையவை. ஆயினும் இவை ஒரு கொப்பிகற் முறையில் பிரதி செய்யப்பட்டு அடுத்தடுத்து நிகழ்ந்துள்ளது. இந்த தீக்குளிப்புகளை பெருமிதப்படுத்துவதும் கௌரவிப்பதும் இவ்வகையான செயற்பாடுகளைத் தூண்டுவதாகவே அமைகின்றது. அதனாலேயே இந்த கொப்பிக்கற் தீக்குளிப்புகள் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ளது. மறத் தமிழன், வீரத்தமிழன் போன்ற பதங்களைச் சூட்டி மாயையான ஒரு கௌரவத்தை ஏற்படுத்துவதன் மூலம் இலகுவான மனநிலையுடையவர்களை ஆபத்திற்குள் தள்ளுகின்றது. ஏற்கனவே மனஅழுத்தங்களுக்கு உள்ளான ஒருவர் இவ்வாறான இன உணர்வுத் தூண்டுதல்களாலும் தற்கொலை என்பது கௌரவமான விடயமாகப் பார்க்கப்படுவதாலும் அந்த வழியை நோக்கித் தூண்டப்படுகிறார். ஒரு தெளிவான மனநிலையில் உள்ள ஒருவர் தற்கொலை செய்துகொள்வதாக எந்த மருத்துவ ஆய்வும் தெரிவிக்கவில்லை.

இவ்வாறான தீக்குளிப்பு போன்ற தற்கொலைகள் தமிழ் மக்களது அரசியல் போக்கில் எவ்வித மாறுதலையும் ஏற்படுத்தாது. இவ்வாறான உயிரிழப்புகள் அர்த்தமற்றவை. பயனற்றவை. வீணாணது. இது தமிழ் சமூகம் எதிர்கொள்ள வேண்டிய சமூகநோய். தமிழ் சமூகத்தின் ஆழ்மனதில் உள்ள ஆரவாரமற்ற அழுகை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

பிரித்தானியாவில் இருந்து தொகையாக தமிழர்களைத் திருப்பி அனுப்பத் திட்டம்!!!

Stop_the_War_on_Asylumபிரித்தானியாவில் இருந்து அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்களை தொகையாகத் திருப்பி அனுப்ப பிரித்தானிய அரசு முற்பட்டு உள்ளது. ஏற்கனவே இலங்கை அரசாங்கத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டின்படி தற்போது இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவதனை பிரித்தானிய உள்துறை அமைச்சு முடுக்கிவிட்டு உள்ளது. இதன் முதற்கட்டமாக ஜனவரி 15 அன்று 50 பேர் வரை விசேடமாக பதிவு செய்யப்பட்ட விமானத்தில் இலங்கைக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.

இது தொடர்பாகவும் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் தொடர்பான விரிவான கட்டுரையும் விரைவில் வெளிவரும். அதற்கு முன்னதாக சட்டவல்லுனர் அருண் கனநாதன் அரசியல் தஞ்சம் தொடர்பான தேசம்நெற் வாசகர்களின் கேள்விக்கு பதிலளிக்க கேள்விகளுக்கு முன் வந்து உள்ளார். அரசியல் தஞ்சம் தொடர்பான உங்கள் கேள்விகளை கருத்துக் களம் பகுதியில் பதிவு செய்யவும்.

Related News:

அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்ட மறக்கப்பட்ட மக்கள் – ஒரு பார்வை : த ஜெயபாலன்

பிரித்தானியவின் தஞ்சம் வழங்கும் செயன்முறை (asylum system) மனிதத் தன்மையற்றது

லண்டன் நியூஹாமில் எளிமையுடன் தைப்பொங்கல் – வீதி விளக்குகளுக்கு துணைமேயர் ஒளியூட்டினார். : த ஜெயபாலன்

Pongal_Newham_2009தமிழர்களின் புது வருடப் பிறப்பாகிய தைப்பொங்கல் லண்டன் ஈஸ்ற்ஹாம் பகுதியில் தெரு விளக்குகள் ஒளியூட்டப்பட்டு அமைதியான முறையில் நடைபெற்றது. ஐரோப்பாவில் தைப்பொங்கல் தினம் உத்தியோகபூர்வமாக கொண்டாடப்படும் ஒரே நகரம் லண்டன் ஈஸ்ற்ஹாம் என்பது குறிப்பிடத்தக்கது. நியூஹாம் துணை மேயர் கிறிஸ்ரைன் போல்டன் தெருவிளக்குகளுக்கு ஒளியூட்டி தமிழ் புதுவருடத்தை வரவேற்றார்.

2001 முதல் கடந்த எட்டு ஆண்டுகளாக தைப்பொங்கலையொட்டி வீதி விளக்குகளுக்கு ஒளியூட்டும் நிகழ்வு ஈஸ்ற்ஹாமில் இடம்பெற்று வருகிறது. இந்நிகழ்வில் மத வேறுபாடுகளைக் கடந்து இந்துக்கள் முஸ்லீம்கள் கிறிஸ்தவர்கள் என அனைவரும் பங்கேற்பது வழமை. இன்று இலங்கையில் நிகழும் யுத்த சூழல் காரணமாக இந்நிகழ்வு மிக எளிமையான முறையில் ஒழுங்கு படுத்தப்பட்டது.

ஈஸ்ற்ஹாம் ஹைஸ்ரிற் நோத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் துணைமேயருடன் கவுன்சிலர்கள் சிவிக் அம்பாசிடர் கவுன்சில் அலுவர்கள் மற்றும் பொது மக்களும் கலந்துகொண்டனர். நியூஹாம் கவுன்சிலுக்கு மூன்றாவது முறையாகவும் தெரிவு செய்யப்பட்ட கவுன்சிலர் போல் சத்தியநேசன் இந்நிகழ்வை கடந்த எட்டு ஆண்டுகளாக ஏற்பாடு செய்து வருகிறார்.

இன்று ஏற்றப்பட்ட இவ்வெளிச்சம் இலங்கையிலும் உலகிலும் சமாதானத்திற்கான வெளிச்சம் இந்த வெளிச்சம் நம்பிக்கையைக் கொடுக்கும் என்று குறிப்பிட்டார். பல்கலாச்சார மக்களும் வாழும் நியூஹாமில் தமிழர்களுடைய புது வருடத்தை குறிக்கும் இந்நிகழ்வு இடம்பெறுவது நியூஹாமிற்கு பெருமை சேர்க்கிறது என்று குறிப்பிட்ட போல் சத்தியநேசன் நியூஹாம் மக்களுடன் சேர்ந்தே முன்னேறுகிறது என்று குறிப்பிட்டார்.

துணை மேயர் கிறிஸ்ரின் போல்டன் பேசுகையில் இலங்கையில் நடைபெறும் யுத்தம் பற்றிய தனது வேதனையை வெளிப்படுத்தினார். துன்பங்கள் வந்தாலும் இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறுவது அவசியம் என்பதனை அவர் சுட்டிக்காட்டினார்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழ் மக்களுடைய ஒரு நம்பிக்கையாக இருந்து வந்தது. இதையொட்டி எண்பதுகளின் நடுப்பகுதிகளில் அடுத்த பொங்கலில் தமிழீழம் என்பது போன்ற கருத்துக்கள் தமிழீழ விடுதலை இயக்கங்களால் தமிழ் மக்கள் மத்தியில் திட்டமிட்டு பரப்பப்பட்டு இருந்தது. ஆனால் இன்று நிலைமை மறுதலையாகி விட்டது. தங்களுக்குள் முட்டி மோதிய தமிழீழ விடுதலை இயக்கங்கள் ஒன்றையொன்று அழித்துக்கொண்டு தங்களையும் அழித்துக் கொண்டன.

இன்று இலங்கைத் தமிழர்கள் தை பிறந்தாலும் சமாதானத்திற்கு ஏதும் வழி இருக்கா என்ற அங்கலாய்ப்புடனேயே உள்ளனர்.