Narges Mohammadi)

Narges Mohammadi)

ஈரானில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு எதிராக போராடிய நர்கிஸ் முகம்மதிக்கு அமைதிக்கான நோபல் !

ஈரானிய சமூக செயற்பாட்டாளர் நர்கிஸ் முகம்மதிக்கு (Narges Mohammadi) அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஈரானில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு எதிராக போராடியதற்காகவும், மனித உரிமைகளுக்காக அவர் நடத்திய போராட்டத்திற்காகவும் அவருக்கு 2023 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஈரானிய ஆட்சியாளர்கள் அவரை 13 முறை கைது செய்துள்ளனர். ஐந்து முறை அவர் குற்றவாளி என்று தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், மொத்தம் 31 ஆண்டுகள் அவர் சிறைத்தண்டனையுடன் 154 கசையடிகளையும் பெற்றுள்ளார். துயரம் என்னவென்றால், நர்கிஸ் முகம்மதி இன்னும் சிறையில் தான் இருக்கிறார்.

 

இயற்பியல் மாணவியான முகம்மதி, சமத்துவம் மற்றும் பெண்களின் உரிமைகளுக்காக போராடுபவராக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார்.

 

ஈரானிய பெண்களுக்காகப் போராடி சிறையில் அடைக்கப்பட்ட சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு உதவுவதற்கான முயற்சிகளுக்காக 2011 ஆம் ஆண்டில் முதன்முறையாக கைது செய்யப்பட்டார்.

 

இந்தக் குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு பல ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

 

பிணையில் வெளிவந்த முகம்மதி, ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு எதிரான போராட்டங்களில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

 

அவரது இந்த போராட்டம், 2015 ஆம் ஆண்டு மீண்டும் அவர் கைது செய்யப்பட்டு, கூடுதலாக சில ஆண்டுகள் சிறைக்குள் இருக்கும் நிலையை உருவாக்கியது.

 

சிறைப்பிடிக்கப்பட்டதிலிருந்து, நர்கிஸ் முகம்மதி, ஈரானில் போராட்டங்களுக்கான வலு குறையாமல் இருக்க உதவிக்கொண்டேயிருந்தார்.

 

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசுகள் இதுவரை அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று (06) அமைதிக்கான நோபல் பரிசு நர்கிஸ் முகம்மதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.