13ஆவது திருத்தச்சட்டம்

13ஆவது திருத்தச்சட்டம்

நாட்டின் ஒற்றையாட்சிக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்கம் செலுத்தும் எதற்கும் ஆதரவு வழங்க முடியாது. – சரத் வீரசேகர

தேசிய ஒற்றுமையை, நல்லிணக்கத்தை ஸ்தாபிக்க அரசாங்கம் ஏற்றுக்கொண்ட விடயங்களை செயற்படுத்த வேண்டும் என சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அலுவலகத்தை ஸ்தாபித்ததன் பின்னர் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டால் அதனையும் செய்ய வேண்டும். ஆகவே நாட்டின் ஒற்றையாட்சிக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்கம் செலுத்தும் எதற்கும் ஆதரவு வழங்க முடியாது. இந்த சட்டமூலத்துக்கு நான் எதிர்ப்பு தெரிவிப்பேன் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டார்.

 

உண்மையை கண்டறியும் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படவுள்ளது. இந்த ஆணைக்குழு ஊடாக இராணுவத்தினருக்கு எதிராக சாட்சியம் திரட்ட முடியும். யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவ அதிகாரிகள் இன்று தண்டிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு சர்வதேச மட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாராளுமன்றத்தின் ஊடாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான சட்டமூலத்தில் தேசிய நல்லிணக்கத்தை ஸ்தாபிப்பதற்கு உருவாக்கப்பட்ட அரச கொள்கைகளை செயற்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டால் இந்த அலுவலகத்தின் ஊடாக அதனையும் செயற்படுத்த வேண்டும். 29 ஆயிரம் இராணுவத்தினர் இதற்காகவே உயிர் நீத்தார்கள்.

 

தேசிய ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தை ஸ்தாபிக்கும் சட்டமூலம் சூழ்ச்சி நிறைந்தது. எதிர்காலத்தில் இராணுவத்தினருக்கு மறைமுகமாக பாதிப்பை ஏற்படுத்தும் ஆகவே இந்த சட்டமூலத்துக்கு நான் எதிர்ப்பு தெரிவிப்பேன் என்றார்.

 

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (9) இடம்பெற்ற தேசிய ஒற்றுமைக்கும்,நல்லிணக்கத்துக்குமான அலுவலகம், தேசிய நீரளவை சட்டமூலம் என்பன மீதான விவாதத்தின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

“13வது திருத்தச் சட்டத்தின் அதிகாரங்களை அபிவிருத்திக்காக பயன்படுத்த வேண்டும்.” – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

ஒவ்வொரு மாகாணமும் 13வது திருத்தச் சட்டத்தின் அதிகாரங்களை அபிவிருத்திக்காக பயன்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தொழில் வல்லுனர்களுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

மாகாண மட்டத்தில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானது என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

அவற்றில் மத்திய அரசாங்கம் தலையிடாது என்றும் அதேபோல் அதிகாரப் பகிர்வு என்பது ஒரு அரசியல் எண்ணக்கருவாக மாத்திரம் அன்றி, பொருளாதார அடிப்படையில் யதார்த்தமாக அமைய வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மாகாண மட்டத்தில் சுயாதீன பொருளாதாரத்தை உருவாக்குவது தொடர்பிலான தெரிவை ஜப்பான், கொரியா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் போன்ற நாடுகளிடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறும் குறிப்பிட்டுள்ளார்.

“கிழக்கில் முஸ்லிம் இனவாத அரசியல்வாதிகள் தமிழர்களுடைய நில வளத்தை சூறையாடுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.” – அமைச்சர் எஸ்.வியாழேந்திரன்

“இந்த வட கிழக்கை பிரித்ததிலே மிக முக்கியமான சூத்திரகாதியாக இருந்த கட்சி ஜே.வி.பி.” என வர்த்தக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

கௌரவிப்பு நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

நல்லிணக்க அரசியல் என்பது தமிழர்களின் இருப்பை அழிக்கின்ற அல்லது அழிக்க நினைக்கின்ற நாசமாக்க நினைக்கின்ற இந்த அரசியலுக்கு நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்பதில் ஆயிரம் வீதம் உறுதியாக இருப்பவர்கள் நாங்கள். வடகிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்று 1987 ஆம் ஆண்டு இந்தியா வடகிழக்கு பிரச்சனை ஒரு தீர்வாக கொண்டு வந்தது. வடகிழக்கு இணைப்பு சம்பந்தமான ஒப்பந்தம் வந்த பொழுது இணைந்த வடகிழக்கு இருந்த போது அதன் பின் இந்த வடகிழக்கு பிரிக்கப்பட்டது.

இந்த வட கிழக்கை பிரித்ததிலே மிக முக்கியமான சூத்திரகாதியாக இருந்த கட்சி ஜே.வி.பி கட்சியாகும். மக்கள் விடுதலை முன்னணி இன்று காலையில் ஒரு செய்தியை பார்த்தேன் .13-வது திருத்தச் சட்டத்தை முற்றாக எதிர்ப்பதாக கட்சியின் உறுப்பினர் சுனில் ஹந்துன் நெத்தி  ஊடக சந்திப்பின் போது தெரிவித்துள்ளார் .

எமது நிலைப்பாடும் சம்பந்தனின் நிலைப்பாடும் இதுவாகவே இருக்கின்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தெற்கு மக்களுக்கு விருப்பம் இல்லாத அரசியல் தீர்வு எமக்கு வேண்டாம் என்று  சம்பந்தன் தெரிவித்ததற்கு அமைவாக நாங்களும் அதை எதிர்க்கின்றோம் என்று சுனில் ஹந்துன் நெத்தி  தெரிவித்துள்ளார்.

கிழக்கில் எங்களது அரசியல் நிலைப்பாடு தமிழர்களின் நில வள பொருளாதார இருப்பை தமிழர்களோடு இருந்து கொண்டு முதுகில் குத்துகின்ற இந்த நல்லிணக்க அரசியலுக்கு எமது கழகம் ஒருபோதும் ஒத்துக் கொள்ளாது. ஆகவே வடகிழக்கு இணைக்கப்பட வேண்டும். வடகிழக்கு இணைக்கப்பட்டால் தான் கிழக்கின் இருப்பை பாதுகாக்க முடியும் இணைந்த வட கிழக்கில் தான் தமிழர்களின் இருப்பு பாதுகாக்கப்படும் .

இணையாத வடகிழக்கில் காணி பொலீஸ் அதிகாரம் வழங்கப்பட்டால் வடமாகணம் ஓரளவு தப்பி பிழைக்கலாம் கிழக்கு தப்பி பிழைக்காது. காணி, பொலிஸ் அதிகாரம் இல்லாமலே கிழக்கு மாகாண ஆளுநருடைய சில ஏக்கத்தகாத நடவடிக்கைகள் சில திட்டமிட்ட குடியேற்றங்களுக்கு துணை போகின்ற தன்மை சில முஸ்லிம் இனவாத அரசியல்வாதிகள் தமிழர்களுடைய நில வளத்தை சூறையாடுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஒருவேளை இணைந்த வட-கிழக்கு இல்லாமல் தனியாக கிழக்கு மாகாண சபைக்கு காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால் உங்களது நிலைமை என்னவாகும் என்று சிந்தித்துப் பாருங்கள்.

நாங்கள் உறுதியாக சொல்லுகின்றோம் வடகிழக்கு இணைக்கப்பட வேண்டும் இணைந்த வடகிழக்குக்கு தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய சீர்திருத்தத்துடன் கூடிய 13 ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இணைந்த வடகிழக்கில்தான் கிழக்கை பாதுகாக்க முடியும். கிழக்கை பாதுகாத்தால் தான் வட-கிழக்கை இணைக்க முடியும் என்று கூற விரும்புகின்றேன்.” என தெரிவித்தார்.

கொழும்பில் 13ஆவது திருத்தத்தை தீ வைத்து எரித்த பௌத்த பிக்குகள் – யாழில் 13ஐ காட்டிலும் சிறந்த தீர்வை கொடுக்க வலியுறுத்தும் பௌத்த பிக்குகள் !

13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் தீர்மானத்திற்கு எதிராக பிக்குகளினால் இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பௌத்த பிரிவினரை பிரதிநிதித்துவப்படுத்தும் தீவிர தேசியவாத பௌத்த மதகுருமார்களின் குழுவினரால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

பெளத்த தேரர்களின் பங்கேற்போடு இடம்பெற்ற இந்த பேரணியானது நாடாளுமன்ற வீதியை செல்லும்போது பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டது.

நாடாளுமன்றத்திற்கு செல்லும் பாதையை பொலிஸார் மறித்ததையடுத்து அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இந்த போராட்டத்தின் போது 13வது அரசியலமைப்பு திருத்த பிரதியை பிக்குக்கள் தீ வைத்து எரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதே வேளை பதின்மூன்றாம் திருத்தத்திற்கு மேலதிகமாக தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என பௌத்தப்பிக்குகள் கூட்டாக அறிவித்தனர்.

தென்பகுதியில் உள்ள பௌத்த பிக்குகள் அடங்கிய சர்வமத குழு யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு வடபகுதியில் உள்ள சர்வமதத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினர்.

கலந்துரையாடலுக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற  ஊடக சந்திப்பிலேயே பௌத்தப்பிக்குகள் உட்பட சர்வமத தலைவர்கள், பதின்மூன்றாம் திருத்தத்திற்கு மேலதிகமாக தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என அறிவித்தனர்.

இனப்பிரச்சினைக்கு தீர்வாக 13ஆவது திருத்தத்தை அறிவிக்க தயாராகும் ஜனாதிபதி ரணில்..?

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் உள்ளிட்ட அதிகாரப்பகிர்வு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

9ஆவது நாடாளுமன்றத்தின் 4ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 8 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

அன்றைய தினம் ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மட்டுமே இடம்பெறும்.

இந்த உரையின் போதே 13 ஆவது திருத்தச்சட்டம் உள்ளிட்ட அதிகாரப்பகிர்வு சம்பந்தமாகவும் ஜனாதிபதி கருத்து வெளியிடவுள்ளார் என கூறப்படுகின்றது.

சர்வக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் வெளியிடப்பட்ட கருத்துகள் உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாக வைத்தே ஜனாதிபதியின் உரை அமையும் என தெரியவருகின்றது.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டியது தனது கடப்பாடாகும் என ஜனாதிபதி அண்மையில் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

“13 ஆவது திருத்தத்தை சர்வஜன வாக்கெடுப்பின்றி முழுமையாக அமுல்படுத்த வேண்டாம்.”- தேரர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் !

13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டாம் என கோரி எல்லே குணவன்ச தேரர் மற்றும் பெங்கமுவே நாலக தேரர் ஆகியோர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

பொலிஸ் காணி அதிகாரங்கள் உள்ளிட்ட சில அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படுமாயின் அது நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

13ஆவது திருத்தம் இந்தியாவால் திணிக்கப்பட்டது என்றும் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார மூலோபாயத் திட்டத்தின் ஒரு பகுதியாக அது இலங்கையின் பாராளுமன்றத்தில் வலுக்கட்டாயமாக நிறைவேற்றப்பட்டது என்றும் அந்தக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே 13 ஆவது திருத்தத்தை சர்வஜன வாக்கெடுப்பின்றி முழுமையாக அமுல்படுத்த வேண்டாம் எனவும் உள்நாட்டு வளங்கள் மற்றும் சொத்துக்கள் வெளிநாட்டினருக்கு விற்பனை செய்வதை உடனடியாக தடுக்கவும் கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு மூலம் நாட்டுக்கு இழந்த செல்வம் மற்றும் வளங்களை மீட்டெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைப் போக்குவதற்கு ஏற்றுமதியை அதிகரிப்பது மற்றும் அரச செலவீனங்களைக் குறைப்பது அவசியமானது.

இந்தநிலையில் ஜனாதிபதி உட்பட அமைச்சரவையில் உள்ள எவரும் உள்ளூர் உற்பத்தியாளர்களை வலுப்படுத்துவதற்கான எந்தவொரு மூலோபாயத் திட்டங்களையும் முன்வைக்கவில்லை என்றும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

13ஆவது திருத்தச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி

அரசியலமைப்பில் உள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தலைவர்களுடனான பேச்சுவார்த்தைகள் முன்னேற்றகரமாக இடம்பெறுவதாகவும் பிரச்சினைகளுக்கு தீர்வினை அளிக்க வேண்டும் என்பதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நீடித்துக்கொண்டிருக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வினைக் காண வேண்டும் என்பதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிகுந்த கரிசனையுடன் இருக்கின்றார் எனவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், தற்போது 13ஆவது திருத்தச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க ஆரம்பித்துள்ளது.

குறித்த சட்டத்தினை அமுலாக்குவதில் உள்ள நடைமுறைப்பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் சம்பந்தமாக கவனத்தில் கொள்ளப்பட்டு அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன எனவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்தியா கோரிக்கை!

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதும், மாகாண சபைத் தேர்தல்களை முன்கூட்டியே நடத்துவதும் அரசியல் அதிகாரப் பகிர்வு அடிப்படையிலான அரசியல் தீர்வுக்கு மிகவும் முக்கியமானது என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பையடுத்து, இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் இணைந்து அவர் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பினை நடாத்தியிருந்தார்.

இந்தியாவுடனான கூட்டாண்மை, நாட்டின் பொருளாதார மீட்சியை எவ்வாறு எளிதாக்குவது என்பது குறித்து கலந்துரையாட ஜனாதிபதி விக்ரமசிங்கவை விரைவில் இந்தியாவிற்கு வருமாறு, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கடிதத்தை கையளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இலங்கைத் தமிழ் சமூகத்தின் தேவைகள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி விக்ரமசிங்கவிடம் ஜெய்சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா, இலங்கையின் நம்பகமான அண்டை நாடு, நம்பகமான பங்காளி மற்றும் இலங்கைக்கு தேவை ஏற்படும்போது, எந்த தொலைவுக்கு செல்ல தயாராக உள்ள ஒரு நாடு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது இலங்கைப் பயணம், பிரதமர் மோடியின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கைக்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் அறிக்கை என வலியுறுத்திய ஜெய்சங்கர், தேவைப்படும் நேரத்தில் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து துணை நிற்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், திருகோணமலையை ஒரு வலுசக்தி மையமாக மேம்படுத்தும் திறன் இலங்கைக்கு உள்ளது. அத்தகைய முயற்சிகளுக்கு நம்பகமான பங்காளியாக, இந்தியா தயாராக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒத்துழைப்பை முன்னோக்கி கொண்டு செல்லும், புதுப்பிக்கத்தக்க சக்தி கட்டமைப்புக்கு, கொள்கை அடிப்படையில் இன்று இணக்கம் எட்டப்பட்டுள்ளதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

“சமஷ்டி கட்டமைப்பை நாட்டில் கொண்டுவர ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை.” – சரத் வீரசேகர

13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி, சமஷ்டி கட்டமைப்பை நாட்டில் கொண்டுவரும் தமிழ்க் கட்சிகளின் முயற்சிகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

“வீடொன்று பற்றியெறியும்போது சுருட்டை பற்றவைத்ததைப் போன்று, இன்று சில தமிழ்க் கட்சிகளும் புலம் பெயர் தமிழ் அமைப்புக்களும் ஒரு சில சர்வதேச நாடுகளும் செயற்பட்டு வருகின்றன.

நாடு இன்று பொருளாதாரப் பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ள நிலையில், நாட்டை துண்டாட, நாட்டில் சமஷ்டியை ஏற்படுத்த அவர்கள் முயற்சித்து வருகிறார்கள். 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதிக்கு அழுத்தங்களை பிரயோகித்து வருகிறார்கள். இந்து – லங்கா ஒப்பந்தத்திற்கு இணங்க, வடக்கையும் கிழக்கையும் ஒன்றிணைத்து ஒருவருடத்திற்குள் சர்வஜன வாக்கெடுப்பொன்றுக்கு செல்ல வேண்டும் என்றே கூறப்பட்டிருந்தது. அது 13 ஆவது திருத்தசட்டம் கிடையாது.

அத்தோடு, இந்த ஒப்பந்தத்தில் அதிகாரத்தை பரவலாக்கல் தொடர்பாகக் கூறப்படவில்லை. அப்படியிருக்கையில், எவ்வாறு 13 ஆவது திருத்தச்சட்டம் வந்தது? இது இந்தியாவின் தேவைக்காக எம்மீது சுமத்தப்பட்ட ஒன்றாகும்.

இந்த சிறிய நாடு 9 மாகாணங்களாக பிரிந்து செயற்பட வேண்டிய அவசியம் கிடையாது. அமெரிக்காவில் 50 மாநிலங்கள் உள்ளன. அங்கு மேற்கு வெர்ஜீனியா மாநிலமானது இலங்கைளவு பரப்பளவைக் கொண்ட மாநிலமாகும். அதேபோன்று அமெரிக்காவின் அலஸ்கா மாநிலமானது இலங்கையை விட பாரிய மாநிலமாகும்.

இப்படியான மாநிலங்களைக் கொண்ட ஒரு நாட்டில்தான் சமஷ்டி முறைமை தேவைப்படுகிறது. அதைவிடுத்து இலங்கை போன்றதொரு சிறிய நாட்டை சமஷ்டியாக்க முற்படுவதானது, இலங்கையை பிரிக்கவேயாகும். இலங்கையென்பது ஒற்றையாட்சி முறைமைக்கொண்ட நாடாகும்.

69 இலட்சம் மக்கள் வாக்களித்து, எமக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மையை மக்கள் வழங்கியிருப்பதானது, நாட்டில் சமஷ்டியை ஏற்படுத்துவதற்கல்ல. மாறாக ஒற்றையாட்சியை பாதுகாத்து நாட்டை முன்னேற்றவே என்பதை அனைவரும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

எனவே, 13 ஐ அமுல்படுத்தி, நாட்டில் சமஷ்டியை ஏற்படுத்தும் தமிழ்க் கட்சிகளின் முயற்சிகளுக்கு நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். 13 ஐ நாம் இப்போதும் நடைமுறைப்படுத்தி தான் வைத்துள்ளோம். ஆனால், பொலிஸ் – காணி அதிகாரங்களை வழங்கி ஐக்கிய இலங்கையை பிரிக்க நாம் என்றும் இடமளிக்கப் போவதில்லை.’ எனத் தெரிவித்துள்ளார்.