தவச்செல்வம் பவித்திரன்

தவச்செல்வம் பவித்திரன்

யாழ்ப்பாணத்தில் தொடரும் வாள்வெட்டு குழு அட்டகாசம் – 23 வயது குடும்பஸ்தர் பலி – உதவி கேட்டு வந்தவரை விரட்டிய கடற்படை வீரர்கள்!

யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை (11) இளம் குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

 

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

 

குறித்த குடும்பஸ்தரும் அவரது மனைவியும் காரைநகரில் இருந்து வட்டுக்கோட்டை – மாவடியில் உள்ள வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தவேளை பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகாமையில் இரண்டு கார்களில் ஆயுதங்களுடன் நின்ற சிலர் அவர்களை வழி மறித்தனர்.

 

இதன்போது இருவரும் தப்பித்து கடற்படை முகாமுக்குள் உள்நுழைந்தனர். இந்நிலையில் கடற்படையினர் அவர்களை வெளியே விரட்டினர். இதனால் அவர்கள் வெளியே வந்தவேளை, ஒரு காரில் மனைவியையும், அடுத்த காரில் குறித்த நபரையும் ஏற்றிக்கொண்டு குறித்த குழு அங்கிருந்து சென்றது.

 

பின்னர் மனைவியை சித்தங்கேணி சந்தியில் இறக்கி விட்டனர். அதன்பின்னர் மனைவி வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்வதற்கு சென்றுள்ளார். இந்நிலையில் குறித்த நபரை கடத்திச் சென்றவர்கள் அவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்ட பின்னர் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையினுள் காரில் சென்று, வைத்தியசாலையில் உள்ள மாமரத்துக்கு கீழே அவரை தூக்கி வீசிவிட்டு சென்றனர்.

 

இந்நிலையில் வைத்தியசாலையில் இருந்த சுகாதார பணியாளர்கள் இது குறித்து வைத்தியருக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தினர். அவ்விடத்திற்கு வந்த வைத்தியர் நோயாளர் காவுவண்டி மூலம் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை சில நிமிடங்களில் அவர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

வட்டுக்கோட்டை – மாவடி பகுதியைச் சேர்ந்த தவச்செல்வம் பவித்திரன் (வயது 23) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 

கடற்படை முகாமுக்கு இன்றையதினம் சென்ற தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

அந்தவகையில் கிளிநொச்சி பகுதியில் வைத்து நால்வர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அராலி மத்தி மற்றும் அராலி மேற்கு பகுதிகளைச் சேர்ந்த 25, 37, 32 மற்றும் 22 வயதுடைய நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.