இலங்கையின் கடன்தரம் உயர்வுக்கு ரணிலின் அரசாங்கமே காரணம் – ஹர்ஷ டி சில்வா புகழாரம்
கடந்த அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களே இலங்கையின் கடன் தரம் முன்னேற்றம் அடைந்துள்ளமைக்குக் காரணம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். கடனை மீள செலுத்த முடியாத நாடுகள் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்பட்டு உள்ளமை மகிழ்ச்சிக்குரியது. மற்றும் மூடீஸ் (ஆழழனல’ள) ரேட்டிங் நிறுவனத்தின் தரப்படுத்தலில் இலங்கை முன்னேற்றமடைந்து உள்ளமை ஆகியவை முன்னைய அரசாங்கத்துக்கு கிடைத்த வெற்றியென ஹர்ஷ் டி சில்வா தெரிவித்தார். அரசாங்கத்துக்கு கடனை மீள செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டமையானது தனியார் துறையிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தமை தெரிந்ததே.
“எவ்வாறிருப்பினும் சர்வதேச சந்தையில் கடன் பெறக் கூடிய தரப்படுத்தலை நாம் இன்னும் அண்மிக்கவில்லை. அதற்கு மூடீஸ் ரேட்டிங் தரப்படுத்தலில் டீடீடீ நிலைக்கு வர வேண்டும். அந்த நிலைமையை அடைவதற்கு பொருளாதாரம் மேலும் பலப்படுத்தப்பட வேண்டும். கடந்த அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் மற்றும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்களாலேயே இந்த பிரதி பலன் கிடைத்துள்ளது. தேர்தல் காலங்களில் தேசிய மக்கள் சக்தி குறிப்பிட்டதைப் போன்று கடந்த அரசாங்கத்தால் எட்டப்பட்ட இணக்கப்பாட்டை இரத்து செய்து, கடன் மறுசீரமைப்பில் திருத்தங்களை மேற்கொண்டிருந்தால் இந்தப் பலனைப் பெற்றிருக்க முடியாது” எனவும் ஹர்ஷ் டி சில்வா தெரிவித்தார்.