ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை நீக்கியது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன !

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு அக்கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

 

இதன்படி, அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன, இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பவித்ராதேவி வன்னியாராச்சி மற்றும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன ஆகியோரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

 

கடந்த ஜூலை மாதம் 29 ஆம் திகதி நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் அரசியல் சபைக் கூட்டத்தில் அக்கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் தீர்மானத்திற்கு எதிராக வேறொரு வேட்பாளரை ஆதரித்தமைக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

கட்சியின் அகில இலங்கைக் நிறைவேற்றுக் குழு, செயற்குழு, அரசியல் குழு உறுப்புரிமை மற்றும் கட்சியின் தேசிய அழைப்பாளர் பதவி ஆகியவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜபக்ஷக்கள் தரப்பிலிருந்து ஜனாதிபதி வேட்பாளர் இவர் தான்.. – வெளியானது புதிய அறிவிப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா களமிறங்கவுள்ளார் என்றும் நாளைய தினம் இதுதொடர்பாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவரும் மொட்டுக் கட்சியின் உறுப்பினருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாளைய தினம் மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார். அந்தவகையில், வர்த்தகர் தம்மிக்க பெரேரா கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவார்.

 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புத்திக் கூர்மையான அரசியல் தலைவர் என்று பலரும் இங்கு நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவரைவிட பசில் ராஜபக்ஷ சிறந்ததொரு தலைவராவார்.

 

ரணிலைவிட பசிலுக்கு அரசியல் தொடர்பாக நன்றாகத் தெரியும். இதனால்தான் நேற்று மொட்டுக் கட்சி அப்படியானதொரு விசேட தீர்மானத்தை எடுத்தது. நாம் நிச்சயமாக தம்மிக்க பெரேராவை களமிறங்குவோம்.

 

அவரை ஜனாதிபதியாக தெரிவு செய்த பின்னர்தான் பசில் ராஜபக்ஷ ஓய்வார். ஏனெனில், மொட்டுக் கட்சிதான் நாடளாவிய ரீதியாக பலமானதொரு கட்சியாக இன்னமும் இருந்து வருகின்றது.

 

ஒகஸ்ட் 15 ஆம் திகதியிலிருந்து நாம் எமது அரசியல் செயற்பாட்டை மேற்கொள்வோம்;.

நாம் ஸ்தாபிக்கவுள்ள அரசாங்கத்தில் நாமல் ராஜபக்ஷ தான் பிரதமராக பதவியேற்பார்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்னும் 51 நாட்கள்தான் உள்ளன.அவரால் தொடர்ந்தும் ராஜபக்ஷவினரை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது.

 

அமைச்சர் கஞ்சன விஜேயசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் தற்போது ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு வழங்கினாலும், விரைவிலேயே தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு எமது தரப்பில் வந்து இணைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” இவ்வாறு உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

 

“எமது கைகளில் இரத்தக் கறையில்லை. புதிய பரிணாமத்தை நோக்கி பயணிக்க தமிழ்,முஸ்லிம் மக்கள் எம்முடன் ஒன்றிணைய வேண்டும்.” – மஹிந்த ராஜபக்ஷ

“எமது கைகளில் இரத்தக் கறையில்லை. புதிய பரிணாமத்தை நோக்கி பயணிக்க தமிழ்,முஸ்லிம் மக்கள் எம்முடன் ஒன்றிணைய வேண்டும்.” என முன்னாள் ஜனாதிபதியும்,பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பு சுஹததாஸ உள்ளக அரங்கில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய மாநாட்டில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டு மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கை எமது பாரிய பலமாகும்.எமது நம்பிக்கையை மக்கள் பாதுகாத்துள்ளார்கள்.பாரிய சவால்களுக்கு மத்தியில் மக்கள் எம்முடன் உள்ளார்கள் என்பது பலவிடயங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டை சுட்டிக்காட்டி சமூக வலைத்தளங்களில் சேறு பூசும் விமர்சனங்கள், தவறான கருத்துக்கள் பதிவேற்றப்பட்டுள்ளதை அவதானித்துள்ளோம்.போலியான குற்றச்சாட்டுகள்,சேறு பூசல்கள் ஒன்றும் எமக்கு புதிதல்ல, 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவ்வாறான நிலைமைக்கு முகம் கொடுத்தோம்.

30 வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நான் நாட்டை அபிவிருத்தி செய்தேன்.யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர முடியாமல் ஒருசில அரச தலைவர்கள் பிரபாகரனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள்.ஒருசிலர் பிரபாகரனுக்கு ஆயுதம் வழங்கி புலிகளின் போராட்டத்தை தூண்டி விட்டார்கள்.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து தமிழ்,சி;ங்களம் மற்றும் முஸ்லிம் சமூகத்தினர் அமைதியாகவும் நல்லிணக்கத்துடனும் வாழும் சூழலை ஏற்படுத்தினேன்.பொருளாதாரத்தை மேம்படுத்தினேன். இவ்வாறான பின்னணியில் 2015 ஆம் ஆண்டு நாட்டு மக்கள் மாற்றத்தை  எதிர்பார்த்தார்கள். நான் அதற்கும் இடமளித்தேன்.

2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் எமது பொருளாதார கொள்கைக்கு முரணாக செயற்பட்டது.தவறான தீர்மானங்கள்,காட்டிக் கொடுப்புகள் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தின. 2015 ஆம் ஆண்டு அரசாங்கமே வரையறையற்ற வகையில் வெளிநாட்டு கடன்களை பெற்று நாட்டை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியது.

2019 ஆம் ஆண்டு பாரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மக்கள் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள். நல்லாட்சி அரசாங்கத்தினால் பலவீனப்படுத்தப்பட்ட நிதி நிலைமையை நாங்கள் பொறுப்பேற்றோம்.கொவிட் பெருந்தொற்று தாக்கம் பொருளாதார பாதிப்பை தீவிரப்படுத்தியது.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு முன்னுரிமை வழங்கினோம்.பொருளாதார பாதிப்பை ஒரு தரப்பினர் தமது அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்திக் கொண்டு அரகலய என்பதொன்றை தோற்றுவித்தார்கள்.

ஜனாதிபதியின் ஆடையை அணிந்துக் கொள்ள இன்று பலர் தயாராகவுள்ளார்கள்.பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அரசாங்கத்தை பொறுப்பேற்காமல், தப்பிச் சென்றவர்களிடம் மக்கள் ஒருபோதும் ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்கப் போவதில்லை.

ஒருசிலர் தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இளைஞர்களை தவறான வழிநடத்துகிறார்கள்.தேசிய மற்றும் சர்வதேச ரீதியிலான ஆலோசனைகள் மற்றும் கட்டளைகளுக்கு அமைய அவர்கள் நாட்டுக்கு எதிராக செயற்படுகிறார்கள்.ஒரு தரப்பினரது குறுகிய நோக்கங்களுக்காக நாட்டை பிளவுப்படுத்த இடமளிக்க முடியாது.

எமது கைகளில் இரத்தக் கறையில்லை.புதிய பரிணாமத்தை நோக்கி பயணிக்க தமிழ்,முஸ்லிம் மக்கள் எம்முடன் ஒன்றிணைய வேண்டும்.அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள தேர்தல்களில் நாங்கள் வெற்றிப்பெறுவோம்.எமது பயணத்தில் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.

“அரச நிறுவனங்களை தனியார்மயமாக்குவது மிகவும் கவலைக்குரியது.” – நாமல் ராஜபக்ஷ

இலாபம் ஈட்டிக் கொண்டிருக்கும் அரச நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சிகள் குறித்து தனது கருத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ வெளிப்படுத்தியுள்ளார்.

அதன்படி நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை இலாபகரமான வணிகங்களாக மாற்றுவதற்கு அவற்றை தனியார் மயமாக்குவது பற்றி சிந்திக்கக்கூடியதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்,

அதேவேளை இலாபம் ஈட்டிக் கொண்டிருக்கும் அரச நிறுவனங்களை தனியார்மயமாக்குவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

மேலும் இலாபகரமான அரச நிறுவனங்களை தனியார்மயமாக்க ஒரு முடிவு எடுக்கப்பட்டிருந்தால், அத்தகைய முடிவின் பின்னணியில் உள்ள காரணத்தைப் புரிந்துகொள்வது அவசியம் என்றும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

“நாட்டை முன்னேற்ற முயற்சித்த பசில் ராஜபக்ச மீது போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.”- ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாட்டை வழிநடத்த மிகவும் பொருத்தமானவராக இருப்பார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் பசில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இந்நாட்டின் வறிய மக்களை முன்னேற்றுவதற்கும், உலகின் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் ஒன்றாக இலங்கையை மாற்றுவதற்கும் செயற்பட்டு வந்தவர். அத்துடன், நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் சர்வதேச சமூகத்துடன் சிறப்பான விதத்தில் செயற்பட்டு யுத்தத்துக்கு தேவையான ஆதரவைப் பெற்றவர் எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிலுள்ள ஏழை மக்களின் கஷ்டங்களை புரிந்துக்கொண்டு, அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்குத் தேவையான பல நடவடிக்கைகளை முன்னெடுக்கக்கூடிய தலைவர் பசில் எனவும், கடந்த காலங்களில் அவர் மீது போலியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாகவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

“மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்குவது எம்மால் செய்யக்கூடிய இலகுவான விடயம்.”- பொதுஜன பெரமுன

மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்க வேண்டுமென்றால் அதனை எம்மால் இலகுவில் செய்துவிட முடியும். ஆனால் அவ்வாறான எந்தவொரு முயற்சியும் இடம்பெறவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று(20) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தன எம்முடன் ஒத்துழைப்புடன் செயற்படுகின்றார். அவருடன் எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி, பிரதமர் பதவி ஆசையில் திரியும் ஒரு சிலரே இப்படியான வதந்திகளை பரப்பிவருகின்றனர்.

மக்கள் ஆதரவு மூலமே மஹிந்தவை பிரதமர் ஆக்குவோம் எனவும் அவர் தெரிவிததுள்ளார்.

“எப்போது எந்த தேர்தல் நடைபெற்றாலும் நாம் தான் வெற்றியாளர்கள்.” – பஸில் ராஜபக்ச

“எப்போது எந்த தேர்தல் நடைபெற்றாலும் நாம் தான் வெற்றியாளர்கள்.” என  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்,

“இந்த வருடமும், அடுத்த வருடமும் தேர்தலுக்கான வருடங்களாகும், ஆனால் எந்த தேர்தல் முதலில் நடைபெரும் என எமக்கு தெரியாது, நாட்டில் எந்த வகையான தேர்தல் நடைபெற்றாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றி உறுதியானது.

வருகின்ற காலங்களில் உள்ளூராட்சிசபைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது, ஆனால் இதில் எந்த தேர்தல் எப்போது நடக்கும் என எமக்கு தெரியாது.

எந்த தேர்தலாக இருந்தாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெறுவது உறுதி. உள்ளூராட்சி தேர்தலின் முடிவுகளை வைத்து ஆட்சி மாற்றத்தை செய்ய முடியாது, நாடாளுமன்ற தேர்தல் மூலமே அதனை செய்ய முடியும்.

இருப்பினும், மக்களின் ஜனநாயகத்தை நிலைநாட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலைத் தொடர்ந்து பிற்போடமல் விரைவில் நடத்த வேண்டும்.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மொட்டு சின்னத்துக்கு வாக்களிப்பதை தவிர இலங்கை மக்களுக்கு வேறு வழியில்லை – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

மொட்டு சின்னத்திற்கு வாக்களிப்பதை தவிர மக்களுக்கு மாற்று வழிமுறை ஏதும் கிடையாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

யார் நாட்டுக்கு சேவையாற்றினார்கள், யார் நாட்டை சீரழித்தார்கள் என்பதை இருமுறை சிந்தித்து மக்கள் வாக்களிக்க வேண்டும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனநாயகம் மற்றும் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு மதிப்பளித்து செயற்படுகிறது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொதுஜன பெரமுன மாறுப்பட்ட பொதுச் சின்னத்தில் போட்டியிடும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடவில்லை. ஆகவே மக்களுக்கு மாற்று வழியேதும் கிடையாது.

இடம்பெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றிப்பெறும் எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் விரும்பினால் நாட்டை மீண்டும் ஆளத்தயாராக உள்ள ராஜபக்ஷக்கள் !

நாட்டு மக்கள் ராஜபக்சவை விரும்பினால், ராஜபக்சவே நாட்டை தொடர்ந்து ஆட்சி செய்வார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்வது தொடர்பான கலந்துரையாடல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது, அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அதிக இளைஞர் பிரதிநிதித்துவத்தை முன்வைக்க தாம் நம்புவதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெரும்பான்மை உள்ளூராட்சி மன்றங்களைக் கைப்பற்றும் என்றும் அவர் மேலும் கூறினார்.

“ராஜபக்சக்கள் மீதான மக்களின் வெறுப்பை தீவிரப்படுத்தி, அதனூடாக தனது கட்சியை வளர்க்க ரணில் முயற்சி.” – வாசுதேவ குற்றச்சாட்டு !

“ராஜபக்சக்கள் மீதான மக்களின் வெறுப்பை தீவிரப்படுத்தி, அதனூடாக ஐக்கிய தேசிய கட்சியை வளர்க்க  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கிறார்.” என இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (நவ 20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 2023ஆம் ஆண்டுக்கான வரவு / செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவில்லை. இந்த வரவு / செலவுத் திட்டத்தின் பரிந்துரைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் நடுத்தர மக்கள் மிக மோசமான நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் நன்மதிப்பு கிடையாது. அரசாங்கத்தின் தீர்மானங்களை மக்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

மக்களாதரவு இல்லாமல் பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண முடியாது. நகர மற்றும் பிரதேச சபை சட்டத்தின் பிரகாரம் எதிர்வரும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட அரசாங்கம் பல்வேறு வழிமுறைகளை தற்போது கையாள்கிறது. எல்லை நிர்ணய குழு அறிக்கையினூடாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. தமக்கு மக்களாணை உண்டு என குறிப்பிடும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உரிய காலத்தில் நடத்த அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.

எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன படுதோல்வி அடையும் என்பதை உறுதியாக குறிப்பிட முடியும்.  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் பொதுஜன பெரமுன மீதான மக்களின் வெறுப்பை தீவிரப்படுத்தி, அதனூடாக ஐக்கிய தேசிய கட்சியை பலப்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறார்.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை விடுத்து அமைச்சரவை அமைச்சுக்களின் எண்ணிக்கையை விஸ்திரப்படுத்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளமை முற்றிலும் தவறானது.

அரச செலவினங்களை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தினோம் என்றார்.