வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி

வடக்கில் இளைஞர்களிடையே வேகமெடுக்கும் வெளிநாட்டு மோகம் – கோடிகளை குவிக்கும் மோசடியாளர்கள் !

வடக்கில் இளைஞர்களிடையே வேகமெடுக்கும் வெளிநாட்டு மோகம் – கோடிகளை குவிக்கும் மோசடியாளர்கள் !

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி இளையோரை ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவங்கள் வடக்கில் அதிகரித்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமான முறைகளில் ஆட்கடத்தல்களில் ஈடுபடும் முகவர்கள் இளையோரை இலக்கு வைத்து , அவர்களை சமூக ஊடகங்கள் ஊடாக அணுகி, ஆசை வார்த்தைகளை கூறி பெருந்தொகையான பணத்தினை பெற்று மோசடி செய்து வருகின்றனர்.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் , மானிப்பாய், கிளிநொச்சி உள்ளிட்ட பொலிஸ்நிலையங்களில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. வெளிநாடு செல்வதற்கு வங்கி கணக்கில் பெருந்தொகை பணம் வங்கி கணக்கில் இருப்பில் இருக்க வேண்டும் என கூறி, வங்கி கணக்கு இலக்கங்களை பெற்று , அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை பெற்று , வங்கியில் உள்ள பணத்தை மோசடியாக கும்பல் பெற்றுக்கொண்டு தலைமறைவாகி வருகிறது.

வெளிநாடு செல்ல காத்திருக்கும் இளையோர், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் மற்றும் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு முகவர்கள் ஊடாக பயண ஏற்பாடுகளை செய்து சட்ட ரீதியான முறையில் செல்ல வேண்டும்.

இது தொடர்பில் இளையோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டாலே இவ்வாறான மோசடி சம்பவங்களில் இருந்து அவர்கள் தப்பிக்கொள்ள முடியும். இல்லையெனில் பெருந்தொகை பணத்தினை இழக்க நேரிடும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை இலங்கையின் பல பகுதிகளிலும் பரவலாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக பலர் கைது செய்யப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகிறது.

இலங்கையை விட்டு அதிகமாக வெளியேறும் இளைஞர்கள்!

2023 செப்டெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2024 செப்டெம்பர் மாதத்தில், வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை 10% அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 2024 செப்டெம்பர் மாதத்தில் 28,344 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியுள்ளனர் மற்றும் 2023 செப்டெம்பர் மாதத்தில் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியவர்களின் எண்ணிக்கை 25,716 ஆக பதிவாகியுள்ளது.

2024 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில், வெளிநாடுகளில் வேலை தேடிச் சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 240,109 ஆகும்.இதில் 99,939 பெண் தொழிலாளர்கள் மற்றும் 142,170 ஆண் தொழிலாளர்கள் உள்ளனர்.

2024 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் 17,649 தொழிலாளர்கள் தொழில்சார் வேலைகளுக்காக (Professional employment) வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர், அதேவேளை, அரை திறன் (Semi-skilled jobs) கொண்ட வேலைகளுக்குச் சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 3,704 ஆகும்.

2024 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில், அதிக எண்ணிக்கையிலான இலங்கையர்கள் சவூதி அரேபியாவிற்கு வேலைக்காக அனுப்பப்பட்டுள்ளனர், அந்த எண்ணிக்கை 38,133 ஆக பதிவாகியுள்ளது.

இந்த காலப்பகுதியில், 6391 இலங்கையர்கள் இஸ்ரேலுக்கு வேலைக்காக சென்றுள்ளனர், மேலும் 6295 இலங்கையர்கள் ஜப்பானுக்கு வேலைக்காக சென்றுள்ளனர்.

மேலும், 5870 பேர் தென் கொரியாவிலும், 5677 பேர் குவைத்திலும், 3995 பேர் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் வேலைக்காக வெளியேறியுள்ளனர்.

 

பணமோசடி செய்தவரை எதிர்த்து கேள்வி கேட்டவர்கள் மீது தாக்குதல் – யாழ்ப்பாணத்தில் இருவர் கைது !

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி லட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்தவர் மீது தாக்குதல் நடத்திய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்னர்.

குறித்த கைது நடவடிக்கையானது, நேற்று (06) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் பிரான்ஸ்  நாட்டிற்கு செல்வதற்காக 25 இலட்சம் ரூபா பணத்தினை நீர்கொழும்பு பகுதியில் வசிக்கும் நபர் ஒருவருக்கு வழங்கியுள்ளார்.

இந்த நிலையில் அவர் சிங்கப்பூர் வரையில் அழைத்துச் செல்லப்பட்டு ஏமாற்றப்பட்டதுடன், மீண்டும் அவர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

இதனையடுத்து பணத்தினை கொடுத்து ஏமாந்த நபரும் அவரது சகோதரனும், நீர்கொழும்பை  சேர்ந்த நபரை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து தாக்குதல் நடாத்தி அவரிடமிருந்து ஐந்து இலட்சம் ரூபா பணத்தினை பெற்றுக் கொண்டனர்.

அந்தவகையில், பாதிக்கப்பட்ட நபர் மானிப்பாய்  காவல் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், தாக்குதலை நடாத்திய இருவரும் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் இருவரையும் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சவுதிக்கு பணிப்பெண்ணாக சென்ற தமிழ்பெண்ணுக்கு நடந்த கொடூரம் !

பணிப்பெண்ணாக சவுதிக்கு சென்ற எனக்கு இரண்டு மாத சம்பளம் தரவில்லை. பேசியதை விட அதிகமாக வேலை வாங்கி துன்பப்படுத்திவிட்டு நாட்டுக்கு அனுப்பி விட்டார்கள். அங்குள்ள விசேட தேவைக்குட்பட்ட பிள்ளையையும் மீளுங்கள் என துணுக்காய், ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த கலாநாதன் கிருஸ்ணவேணி கோரிக்கை விடுத்துள்ளார்.

 

தனது அவல நிலை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீள் குடியேறிய பின்னர் குடும்ப வறுமை காரணமாக பணிப்பெண்ணாக வெளிநாடு சென்றேன். அதுவும் மன்னராட்சி நடந்த, சட்டம் நிறைந்த இஸ்லாமிய நாடு என சவுதியை தெரிவு செய்தேன். ஏஜென்சி மூலமாக சட்ட பூர்வமாகவே சென்றேன்.

 

நான் ஏழு பேர் கொண்ட குடும்பத்தின் வீட்டு வேலைக்கு தான் சென்றேன். மேலதிக வேலை செய்ய என்னால் முடியாது. போகும் போது எனக்கு 49 வயது. ஆரம்ப சம்பளம் அவர்களது பணத்தில் 900 தந்தார்கள். முதல் மாத சம்பளம் இன்னும் தரவில்லை. பின்னர் எனக்கு மேதிலக சமையல் வேலைகள் தந்தார்கள்.

 

தோட்டம் வேலை உட்பட பல வேலைகளை அவர்களது தாய் இறந்ததும் செய்தேன். நான் சிரமப்பட்டேன். என்னை துன்பப்படுத்தினார்கள். காலில் அடித்தார்கள். இரண்டு வருடத்தில் திரும்பி வருவதாகவே சென்றிருந்தேன். ஆனால் என்னை வர அவர்கள் விடவில்லை. 2015 ஆம் ஆண்டு 7 ஆம் மாதம் போன நான் கடைசியாக என்னை துன்பப்படுத்தி அங்கு பொலிசில் நிறுத்தி இறுதியாக அரசாங்கத்தால் 2024 ஆம் ஆண்டு தான் அழைத்து வந்தனர்.

 

எனக்கு இறுதி மாத சம்பளமும் தரவில்லை. நான் உழைக்க சென்று தற்போது பணமும் இல்லை. உடலும் இயலாத நிலையில் உள்ளேன். அந்த குடும்பத்தில் விசேட தேவையுடைய ஒரு பிள்ளை உள்ளது. அதுவும் அங்கு துன்பப்படுகிறது. அதனையும் காப்பாற்ற வேண்டும். எனது இரண்டு மாத சம்பளமும் தேவை எனத் தெரிவித்தார்.

சடுதியாக அதிகரித்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி – குறுகிய காலத்தில் 2000க்கும் அதிகமான முறைப்பாடுகள் !

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வௌிநாடுகளில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட சம்பவங்கள் தொடர்பில் 2148 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

 

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

 

கடந்த வருடத்தில் 1337 முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பணியகம் கூறியுள்ளது.

 

இந்த வருடத்தில் பதிவான முறைப்பாடுகளின் அடிப்படையில், 90 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் – மக்களே அவதானம் !

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பல்வேறு மோசடிகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் சடுதியாக அதிகரித்து வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 1,150 க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத்யாப்பா குறிப்பிட்டார்.

 

கொழும்பில் புதன்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

 

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பல்வேறு மோசடிகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் அதிகரித்துள்ளது.

 

2021 ஆம் ஆண்டில் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் 552 முறைப்பாடுகள் பணியகத்துக்கு கிடைக்க பெற்றிருந்தது. கடந்த வருடம் 1,337 ஆக அதிகரித்துள்ளது.

 

இருப்பினும் தற்போது அதனளவு சடுதியாக அதிகரித்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 1,156 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.இந்த புள்ளிவிவரங்களின் பகுப்பாய்விலிருந்து நாம் சில முடிவுகளைப் பெறலாம்.

 

மக்கள் மிக விரைவாக தவறாக வழி நடத்தப்படுகிறார்கள். மக்களை ஏமாற்றி, வெளிநாட்டு வேலைகளை காட்டி இந்த பணத்தை சட்டவிரோதமாகவோ அல்லது மோசடியாகவோ பெற்றுக் கொள்ளும் வகையில் சில ஒழுங்கமைக்கப்பட்ட நபர்கள் செயற்பட்டு வருகின்றனர்.எனவே பொதுமக்கள் இது தொடர்பில் விழிப்புணர்வாக செயற்பட வேண்டும் என்றார்.

400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமையாளர்களின் உரிமம் தடை !

சுற்றுலா வீசாவில் ஆட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிய 400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமையாளர்களின் உரிமம் தடை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

டொலர்கள் இன்றி உண்டியல் வடிவில் பணத்தை கொண்டு வந்த பல வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொழில்துறை அமைச்சின் வரவு – செலவுத் திட்டம் மீதான வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 77 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் கைது – தொடர்ந்து ஏமாறும் இளைஞர்கள் – மக்களே அவதானம் !

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து வெளிநாடுகளுக்கு வேலை தேடி செல்வோரின் தொகை சடுதியாக அதிகரித்துள்ளது. இதனை பயன்படுத்தி பல மோசடியாளர்கள் இளைஞர்களை வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி பல கோடி ரூபாய் வரையில் மோசடி செய்து வருகின்றனர். இவர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு காவல்துறையினர் வலியுறுத்தியும் கேளாது பலர் பணத்தை கொடுத்து ஏமாந்து போயுள்ளார்கள். இது தொடர்பான கைதுகள் அடுத்தடுத்து இடம்பெற்று வருகின்றன.

இந்தநிலையில்; வெளிநாட்டு தொழில் வாய்ப்பை பெற்றுத் தருவதாகக் கூறி 77 இலட்சம் ரூபாவுக்கு மேல் மோசடி செய்த நபரை திருகோணமலை விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

திணைக்களத்துக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சம்பந்தப்பட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சந்தேக நபர் நிலாவெளி பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என்பதுடன் அவர் இன்று (12) திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.