விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் போராட்டம்

வென்றது இந்திய விவசாயிகளின் ஓராண்டு கால போராட்டம் – வேளான் சட்ட ரத்து மசோதா நிறைவேற்றம் !

இந்தியாவில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் தொடங்கியது முதலே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டனர். மேலும், முழக்கங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மக்களவை நண்பகல் 12 மணிக்கு ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

ஒத்திவைப்புக்கு பிறகு, மக்களவையில் கூட்டத்தொடர் மீண்டும் தொடங்கியது. அப்போது, மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வழிவகுக்கும் மசோதாவை தாக்கல் செய்தார்.

இதற்கிடையே, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் போரட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளின் பலத்த போராட்டத்துக்கு இடையே வேளாண் சட்ட ரத்து மசோதா நிறைவேற்றப்பட்டது. மேலும், வேளாண் சட்ட ரத்து மசோதாவை விவாதிக்க வேண்டும் என்ற காங்கிரஸ் உறுப்பினர்களின் கோரிக்கையையும் சபாநாயகர் நிராகரித்தார்.

மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

விவசாயிகள் கடந்த ஓராண்டாக போராடி வந்த நிலையில், கடந்த 19-ம்திகதி அன்று 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். இந்நிலையில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்து அதன் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகளின் ஒரு வருட போராட்டத்தின் முன்பு அடிபணிந்தது இந்திய அரசு – மீளப்பெறப்பட்ட வேளாண்சட்டங்கள் !

சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை மீளப் பெறுவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

குறித்த சட்டங்களை மீளப்பெறுமாறு வலியுறுத்தி டெல்லி உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் விவசாயிகள் சுமார் ஓராண்டு காலமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தின்போது சிலர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், நாட்டு மக்களுக்கு இன்று(19) விசேட உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகளின் நலனுக்காகவே 3 வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

வேளாண் சட்டங்களின் நலனை ஒரு தரப்பு விவசாயிகளுக்கு எங்களால் விளங்கப்படுத்த முடியவில்லை. எனவே, மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் மீளப்பெற முடிவு செய்துள்ளோம்.

இந்த மாதம் ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில், 3 வேளாண் சட்டங்களையும் மீளப் பெறுவதற்கான நடைமுறையை ஆரம்பிப்போம். எனவே, விவசாயிகள் தங்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும்.

டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்துவதற்காக கூடியுள்ள விவசாயிகள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.