அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றத்தினால் எவரும் பட்டினியால் உயிரிழக்கவில்லை. சீனி, அரிசி ஆகிய பொருட்களின் விலை அதிகரிப்பு பெரியதொரு விடயமல்ல என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்தார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (7 ) இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்தன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
2020 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது,மக்களிடமிருந்து அரசாங்கம் நிவாரணம் பெற வேண்டும் என நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ குறிப்பிடவில்லை. மக்கள் மீது சுமை செலுத்தாத வகையில் வரவு-செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டது ஊடகங்களில் திரிபுப்படுத்தப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அத்தியாவசிய பொருட்களை கட்டுப்படுத்தும் காலத்தில் நாம் தற்போது இல்லை. வர்த்தமானி ஊடாக வர்த்தகர்களை கட்டுப்படுத்த முடியாது. அதன் காரணமாக தான் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்ட விலைக்கமைய விற்பனை நடவடிக்கைகள் இடம்பெறாமல் இருக்கும் சூழல் காணப்படுகிறது. வர்த்தமானி அறிவித்தல் நீக்கப்பட்டு சந்தையில் போட்டித்தன்மையான சூழல் தற்போது ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
கொவிட்டால் கடந்த 2 வருட காலமாக முழு உலகமும் உற்பத்தி துறையில் பாதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான நிலையில் போலியாக வர்த்தமானி அறிவித்தல் ஊடாக பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவது பயனற்றது. பொருட்களின் விலையை நிர்ணயித்தால், சந்தையில் பொருள் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படும். எதிர்பார்க்காத அளவு பொருட்களின் விலை அதிகரிக்கப்படும்.
அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தினால் எவரும் உயிரிழக்கவில்லை.சீனி,அரிசி,சீமெந்து ஆகியவை பெரும் பிரச்சினையல்ல அவற்றை காட்டிலும் தீர்க்க வேண்டிய பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. கொவிட்-19 தாக்கத்திலிருந்து நாட்டு மக்களை பாதுகாத்தற்கு அரசாங்கத்திற்கு மக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும் என்றார்.
