விராட்கோலி

விராட்கோலி

“இம்முறை எமது அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்.” – விராட்கோலி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந் திகதி சென்னையில் தொடங்குகிறது.

முதல் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்சும், விராட் கோலி தலைமையிலான ரோயல் சேலஞ்சர்ஸ்- பெங்களூர் அணியும் மோதுகின்றன.

இதற்காக இரு அணி வீரர்களும் சென்னை வந்துள்ளனர். பெங்களூர் அணி தலைவர் விராட்கோலி நேற்று சென்னை வந்தார். தன்னை 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட பிறகு பயிற்சியில் ஈடுபடுகிறார்.

ஏற்கனவே வந்த பெங்களூர் அணி வீரர்கள் தனிமைப்படுத்துதல் நடைமுறையை முடிந்த பிறகு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் விராட்கோலி பெங்களூர் அணியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது:-

நாங்கள் மீண்டும் இந்தியாவில் விளையாடுகிறோம் என்பதில் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். வேறுபட்ட அமைப்பில் இருந்தாலும், வேறு வழியில் இருந்தாலும் நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். இந்த நேரத்தில் எனக்கு ஒரு நல்ல உணர்வு இருக்கிறது.

இது ஒரு நீண்ட பயணம் – பெங்களூர் அணிக்கு திரும்பி வருவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த ஐ.பி.எல். போட்டியை நேற்றுதான் நாங்கள் முடித்தது போல் உணர்கிறோம். கடந்த போட்டியின் உத்வேகத்தை நாங்கள் பெற்றுள்ளோம். அணியில் சில புதிய வீரர்கள் வந்துள்ளனர். பழைய வீரர் பெயர்களும் உள்ளன. அவர்களை நான் பல ஆண்டுகளாக அறிந்து இருக்கிறேன்.

டேனியல் கிறிஸ்டியன் இதற்கு முன்பு பெங்களூர் அணியில் இருந்திருக்கிறார். மேக்ஸ்வெல், முதல் முறையாக இடம் பெற்றுள்ளார். ஆனால் அவரை நாம் அனைவரும் அடிக்கடி ஐ.பி.எல். போட்டியில் பார்த்து இருக்கிறோம். நாங்கள் ஒன்றாக இணைந்து நிறைய ஆட்டங்களில் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன்.” இவ்வாறு அவர் கூறினார்.