விநாயகமூர்த்தி முரளிதரன்

விநாயகமூர்த்தி முரளிதரன்

அம்மான் படையணி அமைப்பினூடாக வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள முன்னாள் போராளிகளின் நலன் பேணவுள்ளேன் – விநாயகமூர்த்தி முரளிதரன்

அம்மான் படையணி எனும் புதிய அமைப்பினூடாக வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள முன்னாள் போராளிகளின் நலன் பேணவுள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

 

மட்டக்களப்பில் நேற்று(29) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

 

இந்த செயற்பாடுகளுக்கு புலம்பெயர்ந்து வாழும் மக்களின் ஆதரவு கிடைத்துள்ளது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட, கணவனை இழந்த குடும்பத் தலைவிகளும், விடுதலைப் புலிகள் மாத்திரமல்லாது அனைத்து இயக்கங்களையும் சேர்ந்த போராளிகளும் வாழ்வாதாரமற்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

 

அவர்களுக்காக புது வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அம்மான் படையணி அமைப்பு போராளிகளின் நலம் பேணுவதற்காக உருவாக்கப்பட்டு, பெரும்பாலும் வட மாகாணத்திலேயே தற்போது செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், கிழக்கு மாகாணத்திலும் அதன் செயற்பாடுகளை விரிவாக்க திட்டமிட்டுள்ளதாகக் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

600 காவல்துறையினரை கொன்றமை தொடர்பில் கருணா அம்மானுக்கு எதிராக குற்றப்பத்திரிகை !

33 வருடங்களுக்கு முன்னர் திருக்கோவில் காட்டில் 600 காவல்துறையினரை கொன்றமை தொடர்பில் விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா அம்மானுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவினாலேயே குறித்த குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.

இக்காவல்துறையினரின் கொலையை கருணா தான் செய்ததாக பெங்களுரை சேர்ந்த பேராசிரியரும், திருக்கோவில் முகாமில் இருந்த முன்னாள் சிறப்பு அதிரடிப்படை வீரருமான ஜனித் சமிலாவும் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் முறைப்பாடு செய்துள்ளார்.

ஜூன் 11, 1990 அன்று நடந்த இக்கொலை சம்பவம் குறித்து எந்த விசாரணையும் இடம்பெறவில்லை என்பதும், படுகொலையில் இரண்டு காவலர்கள் மட்டுமே உயிர் தப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“பிரபாகரன் இறந்ததை அவருடன் இருந்த கருணா அம்மான் உறுதிப்படுத்தினார்.” – இலங்கை பாதுகாப்பு அமைச்சு

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக இந்திய அரசியல்வாதி ஒருவர் கூறுவது உண்மைக்குப் புறம்பானது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான அறிக்கைகள் நகைப்புக்குரியவை என பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கேர்னல் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக உலகத் தமிழர் அமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தமிழகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்திருந்தார்.

தமிழினத்தின் விடுதலைக்காக பிரபாகரன் விரைவில் மக்கள் மத்தியில் வருவார் என பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இது தொடர்பான அறிக்கை உண்மைக்குப் புறம்பானது என பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கேர்னல் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம் டிஎன்ஏ பரிசோதனையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களான கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் தயா மாஸ்டர் ஆகியோரும் பிரபாகரனின் சடலத்தை அவதானித்ததன் பின்னர் அவரது மரணத்தை உறுதிப்படுத்தியதாக கேர்னல் நளின் ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.

“இலங்கை என்பது உண்மையில் நாணயம்மிக்க தனித்துவமான நாடு.” – கருணா

“யுத்தம் முடிவுற்ற தருவாயில் இருந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தொடர்பான விடயங்களை அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதனைச் சிறந்த முறையில் கையாண்டார்.” என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன்  தெரிவித்தார்.

செங்கலடியில் இன்று (28.03.2021) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது  மேலும் தெரிவித்த அவர்,

“யுத்தம் முடிவுற்ற தருவாயில் இருந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தொடர்பான விடயங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தக் காலத்தில்கூட பாரிய நெருக்கடிகள் தரப்பட்டன. ஆனால், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதனைச் சிறந்த முறையில் கையாண்டார்.

ஆனால், தற்போதைய சூழலில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இந்தப் பிரச்சினை இரண்டு தரப்பும் இருந்து பேசித் தீர்க்க வேண்டிய ஒரு பிரச்சினை. ஏனெனில் இலங்கை என்பது உண்மையில் நாணயம்மிக்க தனித்துவமான நாடு. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாடாகவும் இருக்கின்றது.

அந்த வகையிலே இந்தத் தீர்மானம் நிறைவேற்றத்தினூடான சில தகவல்களை அரசாங்கத்திற்கு அவர்கள் தந்திருக்கின்றார்கள்.

இது சம்பந்தமாக நாட்டின் ஜனாதிபதி கோட்டாபாய சிறந்த முன்னெடுப்புகளை மேற்கொண்டிருக்கின்றார். குறைந்தது ஆறு மாதத்திற்குள் நிறைவேற்றும்படி இந்தத் தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

எனவே ஜனாதிபதி சிறந்த முறையில் இந்த மாற்றங்களை உருவாக்கி மீண்டும் இந்த ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகளை சிறந்த முறையில் பேணுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வார்கள் என்று நான் நினைக்கின்றேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.

“கருணாவை தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைப்பது என்பது சாத்தியப்படாத ஒரு விடயம்” – சி.வி.கே சிவஞானம்

நேற்றைய தினம், கிளிநொச்சியில் ஊடகவியலாளர்களை சந்தித்த விநாயகமூர்த்தி முரளிதரன், தான் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுடன் தனக்கு நெருங்கிய தொடர்பு காணப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் “விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணாவை தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைப்பது என்பது சாத்தியப்படாத ஒரு விடயம்” என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இன்று (04.01.2021)) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த சிவஞானம், கருணா கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட விரும்புவதாக தெரிவித்தாரே தவிர கூட்டமைப்பு அவரை இணைத்துக் கொள்வது தொடர்பாக எந்த ஒரு தீர்மானமும் எடுக்கவில்லை அவரை கூட்டமைப்புடன் இணைப்பது என்பது சாத்தியப்படாத ஒரு விடயம் என கூறியுள்ளார்.

“தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாம் உருவாக்கிய கட்சி.தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனும் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கும் தயாராகவே உள்ளோம்” – கருணா

“தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாம் உருவாக்கிய கட்சி.தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனும் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கும் தயாராகவே உள்ளோம்” என  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தொிவித்துள்ளாா்.

கிளிநொச்சியில், நேற்று (03.01.2021) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளாா்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தொடர்பில் தொடர்ச்சியாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றீர்கள் இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் இணைந்து போட்டியிட தயாராக உள்ளீர்களா?  என அவரிடம் ஊடகவியலாளர் வினவினார்,

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாம் உருவாக்கிய கட்சி. அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டியும், விமர்சித்தும் உள்ளோம். அந்த வகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனும் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கும் தயாராகவே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக செயற்பட வேண்டும். அந்த ஒற்றுமைக்காக தமிழ்த் தலைவர்கள் முன்வர வேண்டும்.

நாங்கள் பல தேர்தல்களுக்கு முகம்கொடுத்து பல வெற்றிகளை கண்டுள்ளோம். இதனால் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் போன்ற இடங்களில் எமது கட்சியின் செயற்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறோம். இம்முறை வடக்கில், முதன் முறையாக யாழ்ப்பாண தேர்தல் தொகுதியில் எமது கட்சி போட்டியிடுவது தொடர்பாக எனது அமைப்பாளர் உடன் இன்று சந்திக்க உள்ளோம்.

தமிழ்த் தலைமைகளின் கடந்த கால செயற்பாடுகள் அரசியல்களை விட்டு தற்போது காணப்படும் சூழலை கருத்தில் கொண்டு ஒற்றுமையாக செயற்பட முன்வர வேண்டும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

“நாம் பாராளுமன்ற அங்கத்துவத்தை இழந்த போதிலும் எமது பிரதமர் மக்கள் சேவை செய்யும் வாய்ப்பினை எனக்கு பெற்று தந்துள்ளார்” – விநாயகமூர்த்தி முரளிதரன்

“நாம் பாராளுமன்ற அங்கத்துவத்தை இழந்த போதிலும் எமது பிரதமர் மக்கள் சேவை செய்யும் வாய்ப்பினை எனக்கு பெற்று தந்துள்ளார்” தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் நாவிதன்வெளி பிரதேசத்தில் உள்ள வேப்பையடி பகுதியில் பிரதமரின் இணைப்பாளர் அலுவலகத்தை இன்று(11.11.2020) காலை திறந்து வைத்த பின்னர் ஊடகங்களிடம் உரையாற்றும் போது மேற்கண்டவாறு விநாயகமூர்த்தி முரளிதரன் கூறியுள்ளார்.

அவர் ஊடகங்களிடம் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த கால தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் நீண்ட காலமாக எமது மக்களை ஏமாற்றி வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினரை விரட்டியடித்து நாம் தனித்துவத்தை நிலைநாட்டியுள்ளோம். குறிப்பாக கல்முனை பகுதியில் 89 வீதம் வாக்குகளை பெற்றமைக்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எம்மை பாராட்டினார். கல்முனை தொகுதி மக்களிற்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். பொத்துவிலில் சிறிய மாற்றம் இருந்திருந்தால் நாம் நிச்சயம் வென்றிருப்போம். தேர்தலின் பின்னர் நான் ஓடி ஒளிந்து விட்டதாக சிலர் கூறுகிறார்கள். நிறைவாகும் வரை மறைவாக இருக்க வேண்டுமென சொல்வார்கள். அதற்காக சிறிது இடைவெளி ஏற்பட்டது.

இருந்த போதிலும் நாம் பாராளுமன்ற அங்கத்துவத்தை இழந்த போதிலும் எமது பிரதமர் மக்கள் சேவை செய்யும் வாய்ப்பினை எனக்கு பெற்று தந்துள்ளார். இந்த அடிப்படையில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறையை என்னை நம்பி ஒப்படைத்துள்ளார். இந்த அதிகாரங்களை பயன்படுத்தி மேலும் பல மாற்றங்களை இந்த பிரதேசங்களில் கொண்டு வருவேன்.

மக்களுக்காக தொடர்ந்து உழைக்க வேண்டும். தேர்தலுக்காக மாத்திரம் நாம் மக்களை ஏமாற்ற கூடாது. எனக்கு கிடைத்த அதிகாரம் மிக்க பதவி ஊடாக மக்களிற்கு உதவி செய்வேன். இதற்கு தற்போது தடையாக உள்ளது கொரோனா நோய். இந்த நோய் காரணமாக அமைச்சுக்கள் செயலிழந்து உள்ளன.

தமிழ் தேசிய கூட்டமைப்பானது விழுந்தும் மீசையில் மண் படவில்லை என்று தோல்வியடைந்த கலையரசன் என்பவருக்கு தேசிய பட்டியல் கொடுத்துள்ளது. அவர் வாகனத்தில் பவனி வருகின்றார். அவர் ஒரு வேலைத்திட்டம் அம்பாறையில் செய்தால் நான் திரும்பிச்சென்று இருப்பேன். ஒன்றுமே செய்யபோவதில்லை. மக்களை ஏமாற்றவே இருப்பை தக்க வைக்க முயல்கின்றனர்.தமிழ் தேசிய கூட்டமைப்பில் தற்போது குழப்பம். கலையரசனுக்கு பதவி வழங்கியதால் கூட்டமைப்பின் செயலாளரின் பதவி பறிபோனது. எங்கள் அம்பாறை மாவட்ட மக்களை எமது இதயத்தில் இருந்து பிரிக்க முடியாது. நானும் கைவிட்டு போக மாட்டேன் என கூற விரும்புகின்றேன்.

அம்பாறை மாவட்ட மக்களை அபிவிருத்தியின் பால் இட்டுச்செல்ல சகல அரசியல் கட்சிகளும் இணைய வேண்டும். இதனை ஒரு இனவாதமாக எவரும் பார்க்க கூடாது. இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இன்று எமது மக்கள் அவர்களுக்கு சாட்டை அடி கொடுத்துள்ளனர். எனவே தான் எதிர்வரும் தேர்தல்களில் எம்முடன் ஒரே சின்னத்தில் இணைந்து போட்டியிட கோடிஸ்வரன், கலையரசன் ஆகியோர் உணர்ந்து செயற்பட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன்.

கல்முனை விவகாரம் பற்றி பிரதமரிடம் பேசினேன். துறைசார்ந்த அமைச்சர் சரத் வீரசேகரவிடமும் பேசினேன். கொரோனா முடிந்ததும் அவர் கல்முனைக்கு வருவார். கொரோனா முடிந்ததும் முதலாவதாக கல்முனையை தரமுயர்த்துவோம் எனவும் அவர் மேலும்  குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு பின்னால் எமது மக்கள் சென்றால் இன்னும் தமிழ்ச் சமூகம் குழி தோண்டிப் வைக்கப்படுவார்கள்.! – கருணாஅம்மான்

வடக்கு கிழக்கு மக்கள் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பை தூக்கி வீசியிருக்கிறார்கள். இதனை மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இன்னும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு பின்னால் எமது மக்கள் சென்றால் இன்னும் தமிழ்ச் சமூகம் குழி தோண்டிப் வைக்கப்படுவார்கள் என தமிழர் மகா சபை சார்பில் கடந்த 9 ஆவது பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான கருணாஅம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டார்.

நடைபெற்று முடிந்த தேர்தல் தொடர்பாக அம்பாறை மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த தமிழர் மகா சபை சார்பில் பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிட்ட தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தனது ஆதரவாளர்களை நேற்று (26.08.2020) மாலை சந்தித்து கலந்துரையாடிய வேளை மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், எனது விருப்பு வாக்கினை விட குறைந்த வாக்குகளை பெற்ற சம்பந்தன் உள்ளிட்ட குழுவினர் பாராளுமன்றம் சென்றுள்ளதாகவும் அம்பாறை மாவட்ட மக்களின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு மக்களுடன் இணைந்து தொடரந்தும் பயணிக்க உள்ளதாக கூறிய அவர்  தனது கருத்தில், அம்பாறை மாவட்டத்தில் பாரிய சவால் எதிர்காலத்தில் எனக்கு இருக்கின்றது. நான் வெற்றி பெற்று பாராளுமன்றம் செல்லவில்லை என நினைக்க வேண்டாம். நான் வெற்றி பெற்றுள்ளேன். இதற்காக தொடர்ந்து உழைத்த புலம்பெயர் வாழ் சொந்தங்கள் இளைஞர்கள் இந்த வெற்றிக்கு பெரும் பங்காற்றி உள்ளனர். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டிய தேவை இருக்கின்றது நான் வெற்றி அடைந்தவுடன் அரசுடன் கதைத்து அமைச்சுக்கள் ஊடாகவும் அந்த வளங்களை பெற்றுக் கொண்டு மக்களுக்கு வழங்வேன் என இவ்இடத்தில் கூறுகின்றேன்.

மேலும், கல்முனை பிரதேச செயலகத்தின் தரமுயர்த்தும் முயற்சி தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளேன். அத்துடன் எமது கட்சியின் கிளைகளை அம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் நிறுவ ஏற்பாடு செய்துள்ளேன். எதிர்காலத்தில் எமது மக்களுக்கு நல்ல செய்தி வரும் எனவும் தெரிவித்தார்.