வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் குடும்பஸ்தர் மர்ம சாவு !
கடந்த 18 ஆம் திகதி சனிக்கிழமை சந்திரகுமார் சந்திரபாலன் எனும் 49 வயதுடைய குடும்பஸ்தர் வல்வெட்டித்துறை பொலிஸாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார் எனக் கூறப்படுகிறது. சந்திரபாலனுக்கு எதிராக விடுக்கப்பட்டிருந்த பிடியாணை காரணமாகவே அவர் விசாரணைகளுக்காக கொண்டு செல்லப்பட்டிருந்தார். அவர் கைதாகும் போது மதுபோதையில் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
கைதான நபர் சனிக்கிழமை இரவே உயிரிழந்துள்ளார். அவருடைய உடல் முதலில் வல்வெட்டித்துறை ஊரணி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், பின்னர் அங்கிருந்து பிரேத பரிசோதனைக்கு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. சந்தேக மரணமாகையால் உடற்கூறு பரிசோதனையில் மேலதிக தகவல்களை பெறும் பொருட்டு சடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதுள்ளது. இறந்தவரின் உடலில் அடிகாயங்கள் காணப்படுவதால், பொலிஸாரின் சித்திரவதையினால் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என உறவினர்களும் அப்பகுதி மக்களும் தெரிவிக்கின்றனர்.
இதேமாதிரி 2023 இல் வட்டுக்கோட்டை பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகிய நாகராசா அலெக்ஸ் என்ற இளைஞர் பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இறந்தமையும் குறிப்பிடத்தக்கது.
