வன்னி ஊழல் ஒழிப்பு அணி

வன்னி ஊழல் ஒழிப்பு அணி

தமிழ் தலிபான்களாகும் ஊழல் ஒழிப்பு அணி வன்னி: 

தமிழ் தலிபான்களாகும் ஊழல் ஒழிப்பு அணி வன்னி:

ஆரம்பத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக குரல் கொடுப்பதாகவே காட்டி வந்தது. கடந்த மாதம் யாழில் தீயில் எரிந்து இறந்த சாவகச்சேரி உதவி பிரதேச செயலாளர் தமிழினி சதீஸ்க்காக குரல்கொடுத்து கட்டியெழுப்பிய விம்பம் படிப்படியாக உடைந்து வருகின்றது.

சமீபத்தில் ஊழல் ஒழிப்பு அணி வன்னி கையிலெடுத்துள்ள மூன்று பெண்களின் விவகாரமும் தமிழ் ஆண்களின் ஆணாதிக்க மனோபாவத்தினை அடக்குமுறை மனோபாவத்தினை வெளிப்படுத்தி நிற்கின்றது. அவர்கள் சட்டவிரோத அல்லது சமூகப் பிறழ்வான செயற்பாடுகளில் ஈடுபடும் பெரிய இடங்களில் இருக்கும் பெண்களில் கைவைக்கவில்லை. மாறாக பெரிய பின்புலம் இல்லாத ரிக்ரொக்கில் வீடியோ போடும், யூரியூப்பில் செய்தி வாசிக்கும் மற்றும் தனது வாழ்வாதாரத்திற்கு பாலியல் தொழில் செய்யும் பெண்ணும் தான் கண்ணில் பட்டுள்ளார்கள்.

ரிக்ரொக் சாளினி பற்றிய ஊழல் ஒழிப்பு வன்னி அணி வெளியிட்ட முதல்ச் செய்தியிலேயே எடுத்த எடுப்பிலேயே அவர் விபச்சாரத் தொழில் புரிகிறார் எனக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அதற்கு ஆதாரமாக சாளினியின் நிர்வாண புகைப்படங்களும் பதிவேற்றப்பட்டிருந்தன. அப்படி பதிவேற்றப்பட்ட படங்களில் பெண்ணின் முகம் மறைக்கப்படவில்லை. அந்தப் படங்களில் தோன்றும் ஆணின் முகம் திட்டமிட்டு மறைக்கப்பட்டிருந்தது. முதலில் அந்தப் படங்களில் தோன்றிய பெண் சாளினி தானா? என்பதே உறுதிப்படுத்தப்படவில்லை.

இதற்கிடையில் இந்த விவகாரத்தில் மூக்கை நுழைத்த மெத்தப்படித்த மூன்று பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றதாக சொல்லித திரியும் மேதாவி எம்பி இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றத்தில் கூட ஊரைக் கூட குறிப்பிட்டு சாளினி என்னும் பெண் விபச்சாரம் செய்வதாக உரையாற்றியிருந்தார். இதைவிட வேறு என்ன அறியாமை இருக்க முடியும். பொறுப்புள்ள ஒரு பதவியிலிருக்கிற ஒரு மக்கள் பிரதிநிதி தீர விசாரிக்காமல் ஒரு பெண்ணின் சுயமாரியாதை மற்றும் மாண்பை பாராளுமன்றத்தில் ஏலம் போட எம்பி அர்ச்சுனா இராமநாதனுக்கு யார் அதிகாரம் கொடுத்தது.

சாளினி மீது குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசிய ஊழல் ஒழிப்பு வன்னி அணி இப்போது இந்த விவகாரத்தில் பின்வாங்கியுள்ளது. ரிக்ரொக்கில் தனக்கு ஆபாசமாக பேசி கொமன்ட் அடிப்பவர்களுக்கு அதேபாணியில் ஆபாசமாக பேசி பதிலழித்த வீடியோக்களையும் ஒரு சில நிர்வாண படங்களையும் வைத்துக் கொண்டு சாளினி பாலியல் தொழிலில் ஈடுபடும் விபச்சாரி என பிரச்சாரத்தில் ஈடுபட்டது சம்பந்தப்பட்ட முகநூல். தற்போது சாளினி தங்களை தொடர்பு கொண்டு மன்னிப்புக் கேட்டதாகவும், அவர் இனிமேல் ஆபாசமாக பேச மாட்டார். அவர் தொடர்பில் வெளிவந்த படங்கள் போலியானவை. அவருடைய முன்னாள் காதலன் தான் அப்படங்களை எடுத்தவர் என்றும். அந்த காதலன் தற்சமயம் பொலிஸாரால் தேடப்பட்டு வருவதகவும் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் சாளினி மன்னிப்புக் கேட்கும் காணொளி ஒன்றையும் பதிவேற்றியுள்ளனர்.

ஊழல் ஒழிப்பு வன்னி அணியும் அவர்களை முகநூலில் பின்தொடர்பவர்களும் சாளினிக்கு மன்னிப்பு கொடுத்து விட்டார்கள் என்றும் சாளினி திருந்தி வாழ சந்தர்ப்பம் கொடுத்துள்ளதாகவும் அறிவித்துள்ளனர். இறுதியில் சாளினி என்ற அபலை பெண் மீது சுமத்தப்பட்ட பழிச்சொல்லுக்கு யாரும் மனம் வருந்தவில்லை. பாராளுமன்றம் வரை சாளினி பற்றிய கிசுகிசுவை பாராளுமன்ற கன்சேர்ட்டில் பதிவு செய்த எம்பி இராமநாதன் அரச்சுனாவும் வெட்கப்படவும் இல்லை.

சாளினி மீது நடந்தது அப்பட்டமான ஊடக அடக்குமுறை. சாளினியை விபச்சாரி என மிரட்டி அவரை அடிபணிய வைத்துள்ளார்கள். கலாச்சார மற்றும் பண்பாட்டு காவலர்கள் ஏன் ரிக்ரொக்கில் மணிக்கணக்கில் ஆபாசமாக பேசும் ஆண்களை வெளிப்படுத்தவில்லை. அவர்களுக்கு வகுப்பு எடுக்கவில்லை. தமிழர்களின் கலாச்சாரத்தை தமிழ்ப் பெண்கள் தான் காப்பாற்ற வேண்டும். பெண்கள் எப்படி தமிழ்க் கலாச்சாரத்தை பேணுகிறார்கள் என்பதை தமிழ் ஆண்கள் கண்காணிப்பது மட்டும் தான் அவர்களின் தலையாய கடமை. அர்ச்சுனா மற்றும் அர்ச்சுனாவின் நண்பர்கள் ரிக்ரொக்கில் சமூக வலைத்தளங்களில் பாலியல் வக்கிரமாக பதிவுகளை மேற்கொண்டு வருபவர்கள். அதைப் பற்றி யாரும் கேள்வி எழுப்பவில்லை.

சாளினிக்கு ஆபாச கேள்விகளை அனுப்பிய ஆண்கள் தமிழர் கலாச்சாரத்தை கெடுக்கவில்லை. அவர்கள் சமூக சீரழிவுக் காரணமாகவில்லை சாளினி நீ பெண். நீதான் பார்த்து பேச வேண்டும். உன்னுடைய எல்லை இவ்வளவு தான் என்று வரையறை செய்ய ஊழல் ஒழிப்பு அணி வன்னி உட்பட யாருக்கும் அதிகாரம் இல்லை. எப்படியோ பெரிய பின்புலம் எதுவும் இல்லாவிடினும், சாளினி தானாகவே முன் வந்து எம்பி அர்ச்சுனா மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.