வடக்கில் போதைப்பொருளை முடிவுக் கொண்டு வர என்பிபி திடசங்கற்பம் !
போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பிலான விசேட மத்திய நிலையமொன்றை வடக்கில் அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இவ் விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த சுனில்,
போதைப்பொருள் ஒழிப்புக்குரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். கடந்த காலங்களில் அரசியல்வாதிகளுக்கும், போதைப்பொருள் வியாபாரிகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்பட்டது. வரலாற்றில் முதல்தடவையாக போதைப்பொருள் வர்த்தகர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையிலான தொடர்பு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வைத்தியசாலைகளில் போதைப்பொருள் தொடர்பில் தமிழ் மொழியில் விழிப்புணர்வுகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும் போது, இந்த ஆண்டில் மட்டும் யாழ்ப்பாணத்தில் 104 கிராம் ஐஸ்ப் போதைப்பொருள், 650 கிராம் கேரள கஞ்சா, 26,915 போதைப்பொருள் மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. வடக்கில் ஹெரோயின் போதைப்பொருள் பாவனை குறைவான போக்கில் இருப்பதை காண முடிகிறது என்றார். இருப்பினும் ஏனைய போதைப்பொருள் பாவனை உயர்வடைந்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் ஆணைக்கு அமைவாக போதைப்பொருள் பாவனையை முழுமையாக இல்லாதொழிப்போம் என சுனில் வட்டகல சூளுரைத்தார்.

