வடக்கு – கிழக்கு

வடக்கு – கிழக்கு

திட்டமிட்டு புறக்கணிக்கப்படும் வடக்கு – கிழக்கின் சுற்றுலாத்துறை..? – நாடாளுமன்றத்தில் இரா.சாணக்கியன் கேள்வி..!

சுற்றுலாப் பயணிகளின் வருகை வட கிழக்கில் குறைவாக காணப்படுகின்றது. திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றதா..என பாராளமன்ற உறுப்பினர் சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாராளுமன்றத்தில் 18.06.2024. நேற்று கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார் .

மேலும்,கருத்து தெரிவிக்கையில் ,

வடக்கு கிழக்கினை பொறுத்த வரையில் இன்று சுற்றுலாப்பயணிகளின் வருகை மிக குறைவாக உள்ளது. கிழக்கு மாகாணத்தின் அறுகம்பை பிரதேசத்தில் அரசாங்கத்தின் எந்த முன்னேற்றகரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத போதும் சுற்றுலாப் பயணிகள் அங்கு வருகை தருகின்றனர் ஏனெனில் அங்கு Surfing இக்குரிய கடல்வளம் காணப்படுவதாலாகும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போக்குவரத்து இன்று பிரதானமான பிரச்சனையாக உள்ளது. யாழ்ப்பாணத்தினை பொறுத்த வரையில் பலாலி விமான நிலையம் ஊடாக சில சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் சூழல் உள்ளது. ஆனால் மட்டக்களப்பில் உள்ள விமான நிலையம் கடந்த காலத்தில் இயங்கும் நிலையில் இருந்தாலும் மட்டக்களப்பு மாவட்டத்தினுள் விமானங்கள் தரையிறங்குவதில்லை. இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.

மட்டக்களப்பு ஓந்தாச்சிமடம் போன்ற கரையோர பிரதேசங்களை சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையானதொரு சுற்றுலா மையமாக மாற்றுவதற்கான முன்மொழிவுகளை நாங்கள் வழங்கியுள்ளோம். ஆனால் இன்று வரை அதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பரவலாக பேசப்படும் விடயம் யாதெனில் VFS என்ற தனி நிறுவனம் இன்று சுற்றுலாப் பயணிகளுடன் தொடர்பான நிதி மோசடியினை மேற்கொள்கின்றது. இதற்கு பிற்புலக் காரணிகளாக அமைச்சர்கள் இருக்கக் கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளது. எவராக இருந்தாலும் இலங்கைக்குள் வருவதற்கு VISA விண்ணப்பத்திற்கு கட்டணம் செலுத்தினால் VFS என்ற நிறுவனத்தினால் அரசாங்கத்திற்கும் அந்தப் பணம் இல்லாமலாக்கப்படுகின்றது.

பொலன்னறுவையில் இருந்து மட்டக்களப்பிற்கு புகையிரதம் வருவதற்கு 2 வருடங்களுக்கு முன்னர் நாங்கள் எடுத்த முயற்சியினால் விசேட Express Train மட்டக்களப்பிற்கு வருகின்றது. ஆனால் மட்டக்களப்பிற்கு வருகின்ற புகையிரதப் பாதையினை கூட இன்று வரை புனரமைப்பு செய்யாமையின் காரணமாக பயணிகள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகின்றனர்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் 20ம் திகதி வரவிருப்பதை செய்திகள் மூலம் அறிய முடிகின்றது. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நிலத் தொடர்பினை ஏற்படுத்துவது, புகையிரத சேவையினை ஆரம்பிப்பது மிக முக்கிய விடயமாக உள்ளது. ஏனெனில் தென்னிந்தியாவில் உள்ள எங்களது தமிழ் சகோதர மக்களில் குறிப்பிட்ட தொகையினர் இலங்கைக்கு வந்தால் வடக்கு, கிழக்கினை எம்மால் கட்டியெழுப்ப முடியும். ஆகவே அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். சுற்றுலாப் பயணிகள் மூலமாக வருமானமீட்டுவதற்கான வழியினை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டுமென தொடர்ச்சியாக கூறக் காரணம் நாங்களே எங்களது பிரதேசங்களை கட்டியெழுப்ப முடியும். ஜனாதிபதி அவர்கள் இன்று கூட சிறிய பெரும்பான்மையுடன் மாகாண சபைக்கு புதிதாக ஒரு சட்ட மூலத்தினை கொண்டு வரத் தேவையில்லை. கௌரவ சுமந்திரன் அவர்கள் தனிநபர் பிரேரணை ஒன்றினை சமர்ப்பித்துள்ளார்.

முன்பிருந்த மாகாண சபை தேர்தல் முறையில் தேர்தலினை நடத்தக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்த முடியும். ஜனாதிபதிக்கு தமிழ் மக்களின் ஆதரவு கிடைக்க வேண்டுமாயின் அவர் தமிழ் மக்களுக்கு கூறும் சில விடயங்களையாவது செய்ய வேண்டும். இவற்றினை மேற்கொள்ளாது செயற்படுவதனால் தமிழ் மக்களை ஏமாற்றுவதனையே தனது நோக்கமாக கொண்டுள்ளார் என்பதனையே நாங்கள் எண்ண முடியும் எனவும் தெரிவித்தார் .

நாட்டின் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களை சிங்கள மக்களிடமிருந்து பறிக்கும் சதிச் செயற்பாடுகள் இடம்பெறுகிறது – சரத் வீரசேகர

நாட்டின் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களை சிங்கள மக்களிடமிருந்து பறிக்கும் சதிச் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

 

அகில இலங்கை பௌத்த பேரவையின் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

 

கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சுமார் இருபத்தைந்தாயிரம் சிங்களக் குடும்பங்கள் வாழ்ந்ததாகவும், இன்று அந்த மாகாணங்களில் ஒரு குடும்பம் கூட இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐம்பத்திரண்டு வீதமான தமிழ் மக்களில் வடக்கு, கிழக்கு வாழ்கின்றனர் எனத் தெரிவித்த அவர், சிங்கள மக்கள் பெரும் தேசமாக இருந்தும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உரிமைகளை இழந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

 

அந்த மாகாணங்களில் மூன்று மாவட்டங்களில் சிங்களப்பாடசாலைகள் இல்லை எனவும், இது ஒரு துரதிஷ்டமான நிலை என தெரிவித்த அவர், இந்த நிலைமையை எதிர்கொள்ள சிங்கள பௌத்த மக்கள் ஒன்றிணைய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

“சர்வதேசத்தின் கண்காணிப்பில் மனிதப் புதைகுழிகளை அகழ்வுக்கு உட்படுத்த வேண்டும்.” – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினர் வலியுறுத்தல் !

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குக்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி வடக்கு – கிழக்கு தழுவிய வகையில் கடையடைப்பு அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், பெருந்தொகையான மக்களின் பங்களிப்புடன் பேரணி ஒன்று முல்லைத்தீவில் ஆரம்பமாகி மாவட்ட செயலகத்தின் ஊடாக பயணித்தனர். இந்த போராட்டத்தில் வட கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பெருந்தொகையான மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

 

இதற்கு அமைவாக வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு கடையடைப்பு அனுஷ்டிக்கப்படுகின்றது.

 

இந்நிலையில் , வடக்கு – கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நடத்திய ஹர்த்தால் மற்றும் பேரணி ஆகியன நிறைவுக்கு வந்துள்ள நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினர் கூட்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

 

சர்வதேசத்தின் கண்காணிப்பில் மனிதப் புதைகுழிகளை அகழ்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று குறித்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

காலாகாலமாக மனிதப் புதைகுழிகளே தமிழ் பேசும் மக்களுக்கு கிடைத்த பெரும் பரிசாக உள்ளது. செம்மணி முதல் கொக்குத்தொடுவாய் வரை இந்த விவகாரம் நீண்டுள்ளது. 1984 ஆம் ஆண்டு முதல் கொக்குதொடுவாய் மற்றும் அதனை அண்டிய முல்லைத்தீவின் எல்லைக்கிராமங்களில் பலர் படுகொலை செய்யப்பட்டனர்.

 

அத்துடன், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். குறித்த காலப்பகுதியில் போர் உச்சமாக நடைபெற்றுகொண்டிருந்தது. எனவே போர்க்காலப் பகுதியில் தான் இந்த புதைகுழிகள் தோன்றியிருக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

வடக்கு – கிழக்கில் இராணுவத்தின் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படுவது தொடர்பில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அதிருப்தி !

வடக்கு கிழக்கில் படையினர் கையகப்படுத்தி வைத்துள்ள பொதுமக்களின் காணிகளை அரசியல் தேவை கருதி விடுவிக்கப்படுவதை தாம் எதிர்ப்பதாக முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பூகொட மண்டாவல, ரணவிரு கிராமத்தில் இடம்பெற்ற போர்வீரர் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

 

இன்று நாட்டை ஆட்சி செய்பவர்கள் மட்டுமன்றி பலர் போர் வீரர்களை மறந்து விடுகின்றனர். இப்போது சிலருக்கு போர் நடந்ததா என்று கூட தெரியாது. மொத்தத்தில் தற்போதைய அரசாங்கம் உட்பட எந்த அரசாங்கமும் போர்வீரர்களை கண்டுகொள்ளவில்லை.

வடக்கு கிழக்கில் இராணுவத்தின் தேவைக்காக கையகப்படுத்தப்பட்ட சில காணிகள் உள்ளன. இவ்வாறு கையகப்படுத்தப்பட்ட சில நிலங்களைத் திருப்பித் தரவும் வாய்ப்புள்ளது. ஆனால், அரசியல் நலன் கருதி அந்த நிலங்களை திருப்பி கொடுப்பதை ஏற்க முடியாது.

வடக்கு, கிழக்கில் வாக்குகளுக்காக பேராசை கொண்ட சக்திகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் மற்றும் தவறான இடத்தில் வைக்கும் போக்கு தற்போது காணப்படுகிறது. என்ன ஒரு கோழைத்தனமான செயல். நாங்கள் அவர்களுக்கு எதிரானவர்கள்.

தற்போதைய ஆட்சியே கோழைத்தனமானது. அருவருப்பானது. பலவீனமாக உள்ளது. அர்ப்பணிப்புடன் பணியாற்றக்கூடிய அறிவார்ந்த தலைவர் இந்த நாட்டிற்கு தேவை. அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று பலர் கேட்கிறார்கள், கேட்பது எளிது ஆனால் பதில் சொல்வது கடினம்.

சரியான தலைமையை தெரிவு செய்வதற்கு நாட்டு மக்கள் தியாகங்களைச் செய்தால் அதற்கான முன்மொழிவுகளை பரிசீலிக்க வாய்ப்பு உள்ளது. இருந்தாலும், வீட்டில் கண்ணாடி முன் பார்க்கும்போது, ​​எதிர்காலத்தில் நாட்டை வழிநடத்தக்கூடிய ஒரு தலைவரைக் காண்கிறேன்.

ரணில் விக்ரமசிங்கவிற்கு சல்யூட் அடிக்க முடியும் ஏனென்றால் தற்போதைய ஜனாதிபதி, ராஜபக்சவை போல ஊழல்வாதி அல்ல, ஆனால் வரும் ஜனாதிபதி தேர்தலில் நான் அவருக்கு எந்த வகையிலும் ஆதரவளிக்க மாட்டேன், அவர் மேதை அல்ல, பலவீனமானவர்.“ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

‘தமிழ் அரசியல்வாதிகள் நாட்டை பிளவுபடுத்துவதிலேயே குறியாக உள்ளனர்.’ – பந்துல குணவர்தன

வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் நாட்டை பிளவுபடுத்துவதிலேயே குறியாக உள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

நேற்றைய தினம்(30) அனுராதபுரத்திற்கு வந்த அமைச்சரிடம் செய்தியாளர்கள் வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தால் தொடர்பில் கேள்வி எழுப்பிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் அவர் தெரிவித்ததாவது,

‘தமிழ் மக்களை உசுப்பேத்தி விடுவது தான் தமிழ் கட்சியினரின் அன்றாட தொழில். இதன் ஊடாக அவர்கள் தங்கள் சுயலாப அரசியலை முன்னெடுத்து வருகின்றார்கள். ஹர்த்தால், போராட்டங்கள் மூலம் எதையும் சாதிக்க முடியாது.

தமிழ் மக்களை ஏமாற்றவே இப்படியான போராட்டங்களை தமிழ் கட்சியினர் நடத்துகின்றனர். ஆனால், அவர்களின் ஆட்டத்திற்கு ஆட முடியாது’ – என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கு பௌத்த மரபுரிமைகளைப் பாதுகாப்போம் என்ற தலைப்பில் கொழும்பில் இடம்பெற்ற விசேட கூட்டம் !

‘வடக்கு, கிழக்கு பௌத்த மரபுரிமைகளைப் பாதுகாப்போம்’ என்ற தொனிப்பொருளில், கொழும்பில் இன்று(புதன்கிழமை) விசேட கூட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.

வட மாகாணத்தின் பிரதான பௌத்த தேரர், கல்கமுவே சந்தபோதி தேரர் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.

‘சாசனத்தைப் பாதுகாப்பதற்கான உலகளாவிய சிங்கள கூட்டமைப்பின்’ ஏற்பாட்டில், கொழும்பு – 07 இல் இந்த கூட்டம் நடத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கில், பௌத்த மரபுரிமைகள் சேதமாக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனவே அவற்றைப் பாதுகாப்பதற்கு முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தில், வடக்கு, கிழக்கு பௌத்த அமைப்புகள், பௌத்த பிக்குகள், பௌத்த அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி மாபெரும் பேரணி – மட்டக்களப்பு பிரகடனத்துடன் முடிவுக்கு வந்தது !

வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய உரிமைப் பேரணியினரின் இறுதிப் பிரகடனம் மட்டக்களப்பில் இன்று வெளியிடப்பட்டது. இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட இந்த பேரணியின் முடிவில் இன்று மட்டக்களப்பு பிரகடனம் வெளியிடப்பட்டது.

குறித்த பிரகடனத்தில்;

தமிழ் மக்களின் அபிலாசைகள் ஏற்கனவே கூட்டாகப் பலமுறை வெளிப்படுத்தப்பட்டுள்ள போதிலும், ஈழத்தமிழரின் இனப்பிரச்சனைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தர அரசியல் தீர்வு இதுவரை எட்டப்படவில்லையென்பதால் அந்த அடைவை எட்டுவதற்காக மீண்டும் ஒருதடவை இந்த பிரகடனம் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இன்று 2023 பெப்ரவரி 7 ம் திகதி தமிழ் மாணவர்களும், மக்கள் சமூக அமைப்புக்களும், தமிழ் மக்களும் ஒன்றிணைந்து ஈழத் தமிழராகிய நாம் மரபுவழித் தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமைக்கு உரித்துடைய ஒரு தேசிய இனம் என்பதை மீண்டும் உலகுக்குப் பிரகடனப்படுத்துகின்றோம்.

வட்டுக்கோட்டைத் தீர்மானம், திம்புக் கோட்பாடு, பொங்குதமிழ் பிரகடனம் எனபவற்றினூடாக வரலாற்றில் தமிழ் மக்களின் அபிலாசைகள் கூட்டாகப் பலமுறை வெளிப்படுத்தப்பட்ட போதிலும், ஈழத் தமிழரின் இனப்பிரச்சனைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தர அரசியல் தீர்வைக் காண்பதற்காக, மீண்டும் ஒருதடவை எமது ஏகோபித்த வெளிப்படுத்தலை வலியுறுத்திக் கூறவேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, இன்று பேரெழுச்சியாக எமது தென் தாயகத்தின் மையப்பகுதியாகிய மட்டக்களப்பு நகரில் ஒன்று திரண்டுள்ளோம்.

தமிழ் மக்களுக்கான எந்தவொரு அரசியல் தீர்வும் எட்டப்பட முன் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி, தமிழ் மக்களின் பாரம்பரியத் தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் மக்கள் கூட்டாகப் பேரெழுச்சி கொண்டுள்ளனர். உலகெங்கிலும் உள்ள எமது உறவுகளின் ஆதரவுடன் இன்று தாயகத்தில் பெருமெழுச்சியாக திரண்டுள்ள மாணவர்களும், மக்களும், மக்கள் அமைப்புப் பிரதிநிதிகளுமாக முன்னெடுத்துள்ள இன்றைய பாரிய எழுச்சிப் பேரணி தமிழ் மக்களது ஏகோபித்த குரலின் தெளிவான வெளிப்பாடாகும்.

ஈழத் தமிழ் மக்கள் தொடர்பான எந்தவொரு அரசியல் நகர்விலும் தமிழர் தேசத்தின் பிரதிநிதிகள், சிங்கள தேசத்தின் பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச சமூகத்தின் பிரதிநிதிகள் அனைவரும் பின்வரும் ஈழத் தமிழர் வரலாற்று உண்மைகளைக் கவனத்தில் கொள்ளவேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றோம்.

இலங்கைத்தீவின் வரலாற்றில், தமிழர்களும் சிங்களவர்களும் தம்மை தாமே ஆளும் சுயாதீன இராச்சியங்களை கொண்டிருந்தனர். காலனித்துவ ஆட்சியாளர்களான போத்துக்கீசர், ஒல்லாந்தர் மற்றும் பிரித்தானியர்கள் தங்களுடைய சுமார் 300 வருட ஆரம்ப ஆட்சிக் காலத்தில் சிங்கள இராச்சியங்களையும், தமிழ் இராச்சியங்களையும் தனித்தனியாக நிர்வகித்து வந்தனர். 1833ம் ஆண்டு கோல்புரூக் ஆணைக்குழுவின் பரிந்துரையின் பிரகாரம் தம்முடைய நிர்வாக நடைமுறையை இலகுபடுத்துவதற்காக சிங்கள இராச்சியங்களும், தமிழ் இராச்சியங்களும் பிரித்தானியர்களால் இணைக்கப்பட்டது என்ற வரலாற்று உண்மையை முதலில் சிங்கள தேசம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

மேலே சொல்லப்பட்ட வரலாற்று நிகழ்வுகளை முற்றாகப் புறந்தள்ளி எண்ணிக்கைப் பெரும்பான்மை அடிப்படையில் முழுநாட்டினதும் அதிகாரங்கள் சிங்களதேசத்திடம் கைமாற்றப்பட்டது. அதன் மூலம் தமிழர் தேசம் என்பது மழுங்கடிக்கப்பட்டு, தமிழ் மக்கள் இரண்டாந்தரப் பிரஜைகள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்பதைச் சுட்டிக் காட்டுவதோடு, இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து அடுத்தடுத்து வந்த சிங்கள ஆட்சியாளர்கள் எப்பொழுதும் சிங்களவர்களுக்கு கடும் தேசியவாதத்தை போசித்தும், ஊக்கப்படுத்தியும் வந்துள்ளதோடு தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு தமது இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதை உலகம் பாராமுகமாக இருந்து வருகிறது.

தமிழ் மக்களுக்கு உரித்தான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தனியான சுதந்திர தமிழீழ அரசை அமைப்பதற்காக 1976ம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினால் நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு, 1977ம் ஆண்டுப் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வழங்கப்பட்ட மகத்தான மக்கள் ஆணையே ஈழத் தமிழர்கள் சனநாயக முறையில் நடாத்தப்பட்ட ஒரு பொதுவாக்கெடுப்பில் தமது சுதந்தர வேட்கையை வெளிப்படுத்தியிருந்தது என்பதைப் பன்னாட்டு சமூகம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஒற்றையாட்சி அமைப்பைக் கொண்டு 1978ம் ஆண்டு இயற்றப்பட்ட அரசியலமைப்பானது தமிழ் மக்களின் விருப்புக்கு மாறாக அவர்களின் ஒப்புதல் இல்லாமலேயே நிறைவேற்றப்பட்டது என்பதை இந்தப் பிராந்தியத்தில் அக்கறையுள்ள அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். நான்கு தசாப்த காலமாக பல்வேறு தமிழ் அரசியல் கட்சிகளும், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வன்முறையற்ற அமைதியான அரசியல் போராட்ட வழிமுறையூடாக வென்றெடுப்பதற்காக அடுத்தடுத்து வந்த சிங்கள ஆட்சியாளர்களோடு ஒத்துழைத்து, தங்களது ஆகக் குறைந்தபட்ச அரசியல் உரிமைகளைக் கூட பெற்றுக் கொள்வது சாத்தியமற்றது என்று நிரூபிக்கப்பட்டுதோடு, எமது சாத்வீகப் போராட்டங்கள் ஆயுதமுனையில் அடக்கப்பட்ட காரணத்தாலேயே, இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு வேறு வழிமுறைகள் இல்லாத சூழலில் தற்காப்புக்காக தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தோற்றம்பெற்றதோடு, தமிழர்களின் உரிமைக்கான கோரிக்கையாக சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு வலுப்பெற்றது என்பதை சம்மந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ளவேண்டும்.

1985ம் ஆண்டு பூட்டான் தலைநகர் திம்புவில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்ட தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் ஆயுதப் போராட்ட அமைப்புகள் உள்ளடங்கலாக அனைத்துத் தமிழ் அரசியல் அமைப்புக்களும் ஏகமனதாக தங்களுடைய அடிப்படைக் கோரிக்கைகளாக தமிழர் தாயகம், தமிழர் தேசியம், தமிழர் சுயநிர்ணய உரிமை என்பவற்றை முன்வைத்திருந்தமை கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.

ஈழத் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் வழியில் தீர்வு காண்பதற்குரிய நடைமுறைகளில் முன்னேற்றம் காணப்படாததன் விளைவாக, தமிழரின் ஆயுதப் போராட்டம் தொடர்ந்ததோடு, தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழரின் அரசியல் – இராணுவ பலமாக மேலெழுந்து அடுத்தடுத்து வந்த சிறிலங்கா ஆட்சியாளர்களுடன், தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாக பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்களைச் செய்து கொண்ட போதிலும் சிங்கள ஆட்சியாளரின் நேர்மையற்ற அணுகுமுறைகளால் பேச்சுவார்த்தைகளில் தீர்வுகள் எதுவும் எட்டப்பட முடியவில்லை என்ற கசப்பான உண்மை கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

தமிழர்கள் மீதான திட்டமிட்ட இனப்படுகொலை, கடந்த 70 வருடங்களுக்கு மேலாக அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த சிங்கள ஆட்சியாளர்களின் துணையோடு, தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட, நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற கட்டமைக்கப்பட்ட படுகொலைகள் – 2009ல் மேற்கொள்ளப்பட்ட அதியுச்ச இனவழிப்புப் படுகொலைகள் உட்பட, மனிதப் படுகொலைகள், நிலங்களைக் கையகப்படுத்தல், பாலியல் வன்முறைகள், கலாசாரம் மற்றும் பொருளாதாரக் கட்டுமானங்களை அழித்தல் போன்ற வன்முறைகள் மூலம், தமிழ் மக்களுடைய தேசத்துக்கான தகுதிப்பாட்டைத் தாங்கிநிற்கும் அனைத்து விழுமியங்களும் அழித்தொழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை ஏற்றுக் கொண்டும், வடக்கு மாகாண சபையில் கடந்த 10.02.2015 பின்னர் 16.09.2015 இல் தமிழக சட்டசபையிலும் நிறைவேற்றப்பட்ட கண்டனத் தீர்மானங்களில், அடுத்தடுத்து வந்த சிறிலங்கா ஆட்சியாளர்கள் நிகழ்த்திய இனப்படுகொலைகளை உலகுக்கு அம்பலப்படுத்தியிருந்ததையும் நாம் கூட்டாக மீண்டுமொரு தடவை அனைவரின் கவனத்திற்கும் உட்படுத்துகின்றோம்.

மேற்குறித்த யதார்த்த நிலைகளை கருத்தில் கொண்டு, தமிழர் தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வாக தமிழர்களை ஒரு தனித்த தேசமாக, அவர்களின் பாராதீனப்படுத்தப்பட முடியாத சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பது மட்டுமே, மேலே குறிப்பிட்ட அனைத்து ஒடுக்குமுறைகளும் மீள நிகழாது இருப்பதை உறுதிசெய்யும் என்பதை வலியுறுத்தியும், தமிழர் தேசத்தின் வரலாற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ் மக்கள் தங்களுடைய தனியான இறைமையை யாருக்கும் கையளித்திருக்கவில்லை என்பதைக் கருத்தில் கொண்டும், வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய இந்தப் பேரெழுச்சியின் பிரகடனமானது, தேசிய இனப்பிரச்சினைக்குத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் தீர்வாக, சர்வதேச சட்டத்தின் ஆட்சித் தத்துவங்களுக்கு ஏற்புடையதாகவும், மனித உரிமைகள் எல்லா நபர்களுக்கும் சமத்துவமானது என்ற அடிப்படையிலும், சுயநிர்ணய உரிமையினை மதித்தும், அக்கறையுள்ள அனைத்து தரப்பினர்கள் முன்னிலையிலும் நிரந்தர அரசியல் தீர்வை எட்டுவதற்குமாக முன்வைக்கப்படும் தீர்மானங்களைக் கவனத்தில் கொள்ளுமாறு இந்தப் பேரணி வலியுறுத்துகிறது.

அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தையானது அரசியலமைப்பு ஏற்பாடுகளைச் செய்வதற்கு முன், பின்வரும் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதில் இருந்து ஆரம்பிக்கப்படல் வேண்டும்.

1. இந்த உடன்படிக்கையானது, ஏனைய விடயங்களிற்கும் மேலாக, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை, அதன் இறைமை மற்றும் தமிழ் மக்களின் பாரம்பரிய மற்றும் வரலாற்றுத் தாயகம் அங்கீகரிக்கப்படுவதோடு, முதலில் தமிழர் தாயகத்திலிருந்து ஆக்கிரமிப்பு இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும்.

2. இந்த உடன்படிக்கையானது தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும்.

3. இந்த உடன்படிக்கை ஒருதலைப்பட்சமாக ரத்து செய்யப்பட்டால், சர்வதேச மற்றும் ஐக்கிய நாடுகள் அவையின் ஒழுங்குபடுத்தல், கண்காணிப்பு என்பவற்றோடு, தமிழ் மக்கள் ஒரு பொது வாக்கெடுப்பு மூலம் தமது அரசியல் எதிர்காலத்தை தீர்மானித்துக் கொள்ளலாம் என்ற ஏற்பாடு இவ் உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட வேண்டும்.

4. இந்த உடன்படிகை மூன்றாம் தரப்பான சர்வதேச தரப்பினரின் முன்னிலையில் எழுதப்பட வேண்டும்.

பேச்சுவார்த்தையின் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்:

1. தொடர்ச்சியாக, திட்டமிட்ட இனப்படுகொலைக்கு உள்ளாகி வரும் தேசம் என்ற வகையில், தமிழ் மக்கள் தமது அடையாளத்தை பாதுகாக்க தொடர்ந்து போராடி வருகின்றனர்.

2. தமிழ் மக்கள் இனவழிப்பிற்கு முகங்கொடுத்து வரும் நிலையில், தமிழர்களின் தேசிய அடையாளத்தின் பாதுகாப்பு மற்றும் ஒரு தேசமாக இருத்தல் என்பவை சமரசத்திற்கு அப்பாற்பட்டதாகவும், உறுதியான உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

3. முதலில், இரு தரப்பும் கூட்டாக பேச்சுவார்த்தை செய்வதற்கான தெளிவான வழிவரைபடத்தை சர்வதேச மத்தியஸ்தத்துடன் தயார் செய்ய வேண்டும். இது தெளிவான அடைவுகளையும் அதன் கால அட்டவணைகளையும் கொண்டிருக்க வேண்டும்.

4. பேச்சுவார்த்தைகள் இரண்டு தளங்களில் சமாந்தரமாக நடாத்தப்பட வேண்டும் ஒன்று தமிழ் மக்கள் எதிர்நோக்கும் உடனடிப் பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது மற்றையது இறுதி அரசியல் தீர்வை நோக்கியதாக இருக்கவேண்டும்.

5. உடனடிப் பிரச்சினைகள் குறித்துப் பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

5.1. தொல்பொருள் ஆராய்ச்சி, வன ஜீவராசிகள் திணைக்களம், வனவள பாதுகாப்புத் திணைக்களம், மகாவலி அபிவிருத்தித் திட்டம் எனும் போர்வையில் மேற்கொள்ளப்படும் அனைத்து வகையான நில அபகரிப்புத் திட்டங்களும் நிறுத்தப்படுவதோடு அபகரிக்கப்பட்ட காணிகளை உடனடியாக உரியவர்களிடம் மீள ஒப்புடைக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

5.2. தமிழர் தாயகத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட அனைத்து சிங்களக் குடியேற்றங்களும் அகற்றப்பட வேண்டும்.

5.3. அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படவேண்டும். 5.4. உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை மாற்றங்களைப் பழைய நிலைக்குக் கொண்டுவரவேண்டும்.

5.5. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பான சர்வதேச விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படுவதுடன், அவர்களுக்கு சர்வதேச நீதி வழங்கப்படுவதோடு குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

5.6 பயங்கரவாதத் தடைச் சட்டம் உடனடியாகவும் நிரந்தரமாகவும் நீக்கப்படவேண்டும்.

5.7. மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வரும் ஊடகவியலாளர்கள் மீதும், திட்டமிட்ட இன அடக்குமுறைக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்து வரும் மாணவர்கள் மற்றும் மக்கள் சமூகச் செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படுதல் மற்றும் கைதுசெய்யப்படுதல் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.

5.8. தமிழ் மக்களின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஏற்படுத்தும் அனைத்து வகையான அச்சுறுத்தல்களையும், தடைகளையும் நிறுத்தவேண்டும்.

5.9. காலகாலமாக நடைபெற்று வரும் தமிழின அழிப்பிற்கு சர்வதேச நீதிப் பொறிமுறை (சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் – ICC, சர்வதேச நீதிமன்றம்- ICJ) ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு பரிகார நீதி வழங்கப் படவேண்டும். அத்துடன் ஐக்கிய நாடுகள் அவையால் விசேடமாக உருவாக்கப்பட்ட தீர்ப்பாயத்தின் விசாரணைப் பொறிமுறைகளும் அனுமதிக்கப்படவேண்டும்.

5.9.0. இறுதி அரசியல் தீர்வொன்று எட்டப்படும் வரை தமிழ் மக்கள் தமது தாயகத்தின் அன்றாட விவகாரங்களை நடாத்துவதற்கு இடைக்கால நிர்வாகப் பொறிமுறையொன்று உருவாக்கப்படவேண்டும்.

6. இறுதி அரசியல் தீர்வைக் காண்பதற்கு பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

6.1. இலங்கை அரசின் அரசியலமைப்பின் அடிப்படையாகிய ஒற்றையாட்சிமுறை ஒழிக்கப்படவேண்டும்

6.2. இறுதித் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பம் முதலே ஆக்கப்பூர்வமாக நடாத்தப்பட வேண்டுமாயின் வட்டுக்கோட்டைத் தீர்மானம், திம்புக் கோட்பாடுகள், பொங்கு தமிழ் பிரகடனம் ஆகிய வரலாற்றுப் பதிவுகள் ஊடாக தமிழ் மக்களால் முன் வைக்கப்பட்ட, அதி முக்கிய அடிப்படைக் கோட்பாடுகளை மையப்படுத்தி, தமிழ் மக்களின் வேணவாவைப் பூர்த்தி செய்யும் தீர்வை இலக்காகக் கொள்ள வேண்டும்.

தமிழ் மக்களின் அடிப்படைக் கோட்பாடுகள் ஆவன: 1) தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம் என்பதை அங்கீகரித்தல். 2) தமிழ் மக்களினுடையதாக அடையாளம் காணப்பட்ட, வரலாற்று ரீதியான மற்றும் பாரம்பரியமான தாயகப் பிரதேசத்தை அங்கீகரித்தல். 3) மேற்குறிப்பிட்ட உரித்துடைமையின் அடிப்படையில், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படவேண்டும்.

6.3. பேச்சுவார்த்தைகளின் போது சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் புத்திஜீவிகள் (பலதுறை நிபுணர்கள் குழு) சேர்க்கப்பட வேண்டும். அத்துடன் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய புலம்பெயர் தமிழ் மக்கள் பிரதிநிதிகளும் உள்வாங்கப்பட வேண்டும்.

6.4. தமிழ் மக்களுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைச் சூழல் ஏற்படும்பட்சத்தில், அது சர்வதேச மத்தியஸ்தத்துடனும், வெளிப்படைத்தன்மையுடனும், பொறுப்புணர்வுடனும் செயற்பட வேண்டும்.

6.5. இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது இஸ்லாமியத் தமிழ் மக்கள், மலையகத் தமிழ் மக்கள் ஆகியோரின் அடிப்படைப் பிரச்சனைகளுக்கும் நிரந்தரத் தீர்வு காணப்படவேண்டும்.

6.6. முன்னைய பேச்சுவார்த்தைகளைப் போல் அல்லாமல் நடுநிலையுடனும், நேர்மையுடனும் நடுவராகச் செயற்படுமாறு சர்வதேச சமூகத்தைக் கேட்டுக் கொள்கிறோம். மேலே கூறப்பட்டுள்ள விடயங்கள் நடைமுறையில் திருப்திகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதை ஆராய்ந்து உறுதிப்படுத்திய பின்னரே, எந்தவொரு நிதி வழங்கும் நாடுகளும் மற்றும் நிறுவனங்களும் சிறிலங்காவிற்கு பொருளாதார உதவி வழங்கத் தொடங்கவேண்டும் என நாம் தாழ்மையாகக் கேட்டுக்கொள்கிறோம்.

இறுதித் தீர்வை எட்டுவது என்பது, வன்முறைச் சுழற்சிகள் மீண்டும் நிகழாமல் இருப்பதற்கும், இலங்கையில் நிலையான அமைதியை அடைவதற்கும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நிலையான அமைதியை நிலைநாட்டுவதற்கும் முக்கியமாக உள்ளதென்பதை இப்பிராந்தியத்தை அக்கறையோடு கையாளும் நாடுகள் உணர்ந்து செயற்படவேண்டும்.

ஈழத் தமிழரின் தேசிய இனப் பிரச்சனையில் மரபுவழித் தாயகம், தமிழ் தேசியம், தன்னாட்சியுரிமை என்ற அடிப்படையில் எட்டப்படும் எந்தவொரு நிரந்தர அரசியல் தீர்வும், சர்வதேசத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்டுக் கண்காணிக்கப்படும் பொதுவாக்கெடுப்பின் மூலம், தமிழ் மக்களின் ஆணை பெறப்படவேண்டும் என்பதே எமது உறுதியானதும் அறுதியானதுமான நிலைப்பாடாகும்.

அத்துடன் ஈழத் தமிழர்களின் தலைவிதியை ஈழத் தமிழர்களே தீர்மானித்து, எம்மை நாமே ஆளக் கூடிய நிரந்தரத் தீர்வும் பொதுவாக்கெடுப்பில் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதை, தமிழ் மக்கள் சார்பாக இந்தப் பிரகடனம் உலகுக்கு அறிவிக்கின்றது.

“முறையற்ற கொள்கைகளை வகுத்து வடக்கு – கிழக்கை நாசமாக்கியவர்கள் யாழ்ப்பாண மேட்டுக்குடியினர்.” – அமைச்சர் பிள்ளையான்

மரணம் வரையிலும் சம்பந்தன் ஐயா போன்றவர்கள் இலங்கையின் அரசியலை ஊகித்துக்கொள்ளவில்லையென்பது மிகவும் கவலையான விடயம் என இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் பணிகள் மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் நடைபெற்றுவருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சிமன்றங்களில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தினை நேற்றைய தினம் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மேற்கொண்டது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி தவிர்ந்த உள்ளுராட்சிமன்றங்களில் போட்டியிடவுள்ளதாக இதன்போது இராஜாங்க சந்திரகாந்தன் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

”பிராந்திய மட்டத்தில் அரசியல் கட்டமைப்புகள் பலப்படுத்தப்படவேண்டும். அந்த அடிப்படையில் கடந்த காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிதைவும் கிழக்கு சார்ந்த ஒரு கூட்டமைப்புக்கான சாத்தியத்தினை அதிகரித்துள்ளது.

அந்தடிப்படையில் கிழக்கு மாகாணத்தினை மையப்படுத்திய அனைவரையும் போராட்ட அமைப்புகளிலிருந்து வெளியேறியவர்கள்,  போராட்டத்தின் வலிதெரிந்த அமைப்புகளோடும் நாங்கள் பேச்சுவார்த்தைகளை நடாத்தியிருக்கின்றோம்.

இருந்தபோதிலும் அவர்கள் இன்னமும் போலித்தேசியவாதிகளை நம்பியிருக்கின்றார்கள். அது தோல்வியில்முடியும் என நம்புகின்றேன். இருந்தபோதிலும் கிழக்கு மாகாணத்தில் ஒரு கூட்டமைப்பினை உருவாக்குவதற்கு நாங்கள் கலந்து பேசிவருகின்றோம்.

இந்த நாட்டின் அரசியலில் இவ்வளவு காலமும் சீரழிந்து சின்னாபின்னமாகி பொருளாதார இழப்புகளுக்கு காரணமாகயிருந்தவர்கள் கொள்கையினை வகுத்தவர்கள், தாங்கள் மட்டும் என்ற எண்ணக்கருக்களை உருவாக்கிய யாழ்ப்பாணத்தில் பிறந்த சிலர் தாங்கள் மாத்திரந்தான் என்ற எண்ணக்கருவினைக் கொண்டவர்களைத்தான் மேட்டுக்குடிகள் என்று சொல்கின்றோமேயொழிய வடபகுதியிலிருக்கும் எல்லோரையும்சொல்லவில்லை.

அவர்கள் இப்போதும் தங்களது ஆதிக்கத்தினை நிலைநாட்டுவதற்கு பலமாக போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அதன் தீர்மானத்தின் ஒரு பகுதியே இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு சிதைந்துள்ளதாகும். அந்த மேட்டுக்குடியின் சித்தாந்ததின் எடுக்கப்பட்ட முடிவுகளே இதற்கு காரணம்.

சுமந்திரனை நாங்கள் சட்டத்தரணியென்றே நினைத்தோம்.  ஆனால் கணக்கு வாத்தியார் போல கணக்கு படிப்பிக்கின்றார் தொழில்நுட்பம் தொடர்பாக  அவருக்குத்தான் அந்த கணக்கு தெரியும். எனக்கு தெரியாது.

இன்று வடகிழக்கு இணைப்பு மாகாணசபை தொடர்பில் பேசும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அன்றைய நிலைப்பாட்டை யாரும் மறந்துவிடக்கூடாது. 2008ஆம்ஆண்டு நாங்கள் தேர்தலில் போட்டியிடமாட்டோம் கொள்கை ரீதியான முரண்பாடு என பல விமர்சனங்களை செய்தார்கள்.

2008ஆம் ஆண்டு நான் முதலமைச்சராக வந்தபோது என்னை வரவிடாமல்செய்வதற்கு முஸ்லிம் காங்கிரசுக்கு ஆதரவு வழங்கினார்கள். இரண்டாவது முறை தவறவிட்டு அடுத்ததடவை முதலைமைச்சர் பதவியை தமிழ்தேசிய கூட்டமைப்பு எடுக்கவேண்டும் என்று சம்பந்தர் ஐயாவிடம் சென்று கதைத்தோம்.

கிழக்கில் போராடியவர்கள் பல இழப்புகளை சந்தித்தவர்கள் என்ற அடிப்படையில் கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பினை சேர்ந்தவர் முதலமைச்சராக வரவேண்டும் என்பதற்காக எனது முழு ஆதரவினையும் தருகின்றேன் என சம்பந்தர் ஐயாவிடம் கூறியபோது அதனை உதாசீனம் செய்தார்.

அதனால் அமைச்சர் ஹாபீஸ் சொல்வது உண்மையில்லை. நாங்கள் சாதகமான விடயங்களை ஊகித்துக்கொள்கின்றோம். சம்பந்தன் ஐயா போன்ற தலைவர்கள் மரணம் வரையிலும் இலங்கையின் அரசியலை ஊகித்துக்கொள்ளவில்லையென்ற என்ற கவலை எனக்கு இன்னும் இருக்கின்றது.” என தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு இணைக்கப்பட வேண்டும் – இரா.சம்பந்தன்

தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வை வழங்குவது அரசாங்கத்தின் கடப்பாடாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தற்போது அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அவை வெற்றி பெற முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவோம் என்றும் கூறினார்.

அதேநேரம், எமது மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யாத அர்த்தமற்ற தீர்வை ஏற்கப்போவதில்லை என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டு உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்றும் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு ஜப்பான் நிதியுதவி !

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் கண்ணிவெடி அகற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக ஜப்பான் அரசாங்கம் 6 இலட்சத்து 48 ஆயிரத்து 148 அமெரிக்க டொலர்களை சுரங்க ஆலோசனைக் குழு (MAG) வழங்கியுள்ளது.

கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகம், ஜப்பானின் தூதுவர் Mizukoshi Hideaki மற்றும் சுரங்க ஆலோசனைக் குழுவின் இலங்கைக்கான பணிப்பாளர் Cristy McLennan ஆகியோருக்கு இடையில் மானிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

ஜப்பானின் உதவியுடன் சுரங்க ஆலோசனைக் குழுவால் அமுல்படுத்தப்பட்ட 14ஆவது கண்ணிவெடி அகற்றும் திட்டம் இதுவென ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய திட்டமானது மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மேலதிகமாக 259,464 சதுர மீற்றர் நிலப்பரப்பில் கண்ணிவெடிகளை அகற்றவுள்ளது.

குறித்த அகழ்வாராய்ச்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்கு பாதுகாப்பான நிலங்களாக மாற்றுவதுடன், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ 7,424 பேரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, முந்தைய 13 திட்டங்கள் 15 ஆயிரத்து 831 கண்ணிவெடிகள் மற்றும் பிற வெடிகுண்டுகளை அகற்றியுள்ளன என்றும் ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.