பெண்களுக்கு எதிரான வன்முறைகளின் போது குற்றவாளிகள் தப்பிக்கின்றனர் – வடக்கு ஆளுநர் கவலை !
பெண்களின் உரிமைகளை மதிப்பதற்கு ஒவ்வொருவரும் தயாராகினால் சமூக மாற்றம் தானாகவே ஏற்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சு நடத்திய சர்வதேச மகளிர் தின விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட போது தெரிவித்தார்.
பெண்களுக்கு எதிரான துர்நடத்தைகளில் ஈடுபடுபவர்களும், வன்முறைகளில் ஈடுபடுபவர்களும் சட்டத்தின் பிடியிலிருந்தும், மேலதிகாரிகளின் உதவிகளுடன் தப்பிக்கும் நிலைமையும் காணப்படுகின்றது எனவும் அப்போது அவர் கவலை தெரிவித்தார்.
பெண்களுக்கு எதிரான இத்தகைய செயற்பாடுகளை இல்லதொழிக்க அனைவரும் ஓரணியில் கைகோர்த்து குரல் எழுப்ப வேண்டும் எனவும் ஆளுநர் அறைகூவல் விடுத்தார். பெண்களின் உரிமைகள் இன்றும் மறுக்கப்படுவதனால்தான் மகளிர் தினத்தை நாம் கொண்டாடிக்கொண்டிருக்கின்றோம் என்று கூறிய ஆளுநர் இன்று பெண்கள் சமூகத்தின் பல்வேறு தளங்களிலும் குறிப்பாக வேலைத்தளங்கள் மற்றும் பாடசாலைகள் என எங்கும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். சமூக மாற்றம் என்பது நாம் அனைவரும் பெண்களை மதிக்கும் போது தானாக வரும் எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
