அனுர அரசாங்கம் வடக்கு அபிவிருத்தியில் அக்கறை கொண்டுள்ளது – ஆளுநர் வேதநாயகன் !
மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் சாதகமான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் எமது மாகாணத்தை நாம் துரிதமாக அபிவிருத்தி செய்துகொள்ள வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் யாழ்ப்பாணம், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவுக்கான palliative care கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் உரையாற்றிய ஆளுநர், “ மாகாண அபிவிருத்திக்கான இது போன்றதொரு சந்தர்ப்பத்தை நாம் இழக்கக் கூடாது.சுயநலம் மலிந்த இந்தக் காலத்தில் மற்றையவர்களுக்கு உதவி செய்பவர்கள் அருகிச் செல்கின்றனர்.
அவ்வாறானதொரு நிலைமையில் மருத்துவமனைக்கு உதவியைச் செய்வதற்கு முன்வந்தவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்களே. புலம்பெயர்ந்து சென்றாலும் எமது மண்ணுக்கும் மக்களுக்கும் சேவை செய்ய விரும்பும் அவர்களது எண்ணம் மிகப்பெரியது. தெல்லிப்பழை புற்றுநோய் மருத்துவமனைக்கான தேவைகள் இன்னமும் நிறைய இருக்கின்றன. அவையும் விரைவில் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.” என அவர் தெரிவித்துள்ளார்.
