படுகொலை அரசியல் வரலாறு பாராளுமன்றத்தில் !
மக்கள் விடுதலை முன்னணியால் (ஜே.வி.பி) படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள், தலைவர்கள், தொழிற்சங்கவாதிகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் 1300 பெயர்களைக் கொண்ட பட்டியலை நாடாளுமன்ற உறுப்பினர் ரோகிணி குமாரி விஜேரத்ன நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
இது தொடர்பில் மேலும் நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்டுள்ள ரோஹிணி குமாரி, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு முன்பே ஜே.வி.பி-யால் சிறுவர் படையினர் உருவாக்கப்பட்டனர் இதற்கு சிறந்த உதாரணம், 70 வயதுடைய ஐக்கிய தேசிய கட்சியின் பெண்ணைக் கொலை செய்ய, 13 வயதான ‘கந்தலே போனிக்கி,” பயன்படுத்தப்பட்டார் என்றார்.
இது குறித்து பதிலளித்துள்ள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், யாழ்ப்பாண நூலகத்தை எரித்து தமிழர்கள் மீது படுகொலை சட்டங்களை ஏவியவர்கள் இன்று கொலைப் பட்டியல் பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் அற்றவர்கள் என்றார்.
இந்தப் படுகொலை அரசியல் தெற்குக்கு மட்டுமானதல்ல, வடக்கிலும் மிக நீண்ட காலமாக நடந்தது. வடக்கு கிழக்கில் உருவான நாற்பது வரையான விடுதலை அமைப்புகள் உருவாக்கி ஆயுதங்களால் மட்டுமே பேசிக்கொண்டனர். தமிழ் மக்கள் தியாகிகள் துரோகிகள் ஒட்டுக்குழுக்கள் என முத்திரை குத்தப்பட்டனர்.
இது பற்றி ஈழநாடு பத்திரிகை வருமாறு எழுதியுள்ளது: “தமிழ் அரசியல்வாதிகள், தங்களின் தேவைக்காகவே ஒவ்வொரு கால கட்டங்களில் துரோகி, தியாகி என்னும் சொற்களை பயன்படுத்துகின்றனர். அரசியல்வாதிகளின் ஆடு புலியாட்டத்தின்போது, ஒ ரு குறிப்பிட்ட காலகட்டத்தில் துரோகிகள் என்போர் திடீர் தியாகிகளாகி விடுவதும் பின்னர் தியாகிகள் என்போர் திடீர் துரோகிகளாவதும் சர்வசாதாரணமானது.”
இதனை மழைக்கு முளைக்கும் காளான்கள் போல் தேர்தலை நோக்கி உருவாகும் சந்தர்ப்பவாதக் கூட்டுக்கள் தெளிவாக வெளிப்படுத்துகின்றது.
