ரொஹின்யா அகதிகள் முல்லைத்தீவு கேபாப் பிளவு முகாம் கொண்டுவரப்பட்டனர்!
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடலில் தத்தளித்த ரொஹின்யா அகதிகள் கரையொதிங்கிய போதும் தற்போது தரையில் அங்கும் இங்குமாக அலைக்கழிக்கப்பட்டு, நேற்று கேப்பாப் பிளவு விமானப்படையினரின் தளத்திற்குக் கொண்டுவரப்பட்டு உள்ளனர். 120 பேருடன் மியான்மரில் இருந்து புறப்பட்ட படகு பட்டினியில் ஐவர் மரணமடைய, டிசம்பர் 19இல் முள்ளிவாய்க்கால் கடற்பகுதியை அடைந்தது. மீனவர்களால் முதலுதவிகள் அளிக்கப்பட்டு, மருத்துவ பரிசோதணை செய்யப்பட்டு அன்று அந்த அகதிகள் திருகோணமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். வெளிநாட்டு விவகாரப் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா அந்த அகதிகளை வரவேற்று அவர்களுக்கு வேண்டிய அடிப்படை மனிதாபிமான உதவிகள் கிடைக்க வழிசெய்தார்.
மேலும் இவர்கள் திருமலை நீதவான் முன் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இவர்களில் 12 மாலுமிகள் ஆட்கடத்தல் குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட ஏனைய 103 பேரும் ஜமாலியா முஸ்லீம் மகாவித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டனர். டிசம்பர் 21இல் இவர்கள் மிரிஹனை இடைத்தங்கல் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் அனுமதி அளிக்காததால் அவர்கள் மீண்டும் திருகோணமலைக்கு கொண்டுவரப்பட்டு நேற்று டிசம்பர் 23இல் முல்லைத்தீவு கேப்பாப்பிளவு விமானப்படைத் தளத்திற்கு கொண்டுவரப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
