ரஷ்யா – இலங்கை

ரஷ்யா – இலங்கை

ரஷ்ய இராணுவத்தில் வலிந்து இணைக்கப்பட்ட யாழ் இளைஞர்களை மீட்டுத்தாருங்கள் – பாராளுமன்றத்தில் சிறீதரன் எம்.பி – தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்களை மறுக்கும் ரஷ்யா !

ரஷ்ய இராணுவத்தில் வலிந்து இணைக்கப்பட்ட யாழ் இளைஞர்களை மீட்டுத்தாருங்கள் – பாராளுமன்றத்தில் சிறீதரன் எம்.பி – தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்களை மறுக்கும் ரஷ்யா !

 

இலங்கையிலிருந்து  முகவர்களால் ஏமாற்றப்பட்ட நிலையில் ரஷ்ய இராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்களை மீட்டுத் தருமாறு நாடாளுமன்றத்தில் சி.சிறிதரன் எம்.பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் – கச்சேரியைச் சேர்ந்த 24 வயதுடைய மற்றும் கரவெட்டியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் சுயனிகாந் பகீரதன் மற்றும் முல்லைத்தீவைச் சேர்ந்த 46 வயதுடைய சுந்தரலிங்கம் பாலச்சந்திரன் மற்றும் யாழ். குருநகரைச் சேர்ந்த 37 வயதுடைய கீதபொன்பலம் பிரதாப் மற்றும் 31 வயது ஸ்ரீபன் சுரேஸ் ஆகியோர் ஏமாற்றப்பட்டு ரஷ்யா  இராணுவத்தில் வலிந்து இணைக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும், இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள அவர்களுடைய புகைப்படங்களையும் அனுப்பியிருக்கிறார்கள். ஆகவே கெளரவ சபாநாயகர் அவர்களே இதில் 3 பேரினுடைய படங்களும் இருக்கின்றது. தயவு செய்து இவர்களை இந்த நாட்டுக்கு எடுப்பதற்கு ஒரு வழிமுறையை எடுத்து எம்மிடம் மீட்டுத் தருமாறு கேட்டுக் கொள்கின்றேன் என சபையில் சிறிதரன் எம்.பி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, விசிட் விசா ஊடாக பிரான்ஸ், பெல்ஜியம் நாடுகளுக்கு பயணிக்க முற்பட்ட யாழ்.இளைஞர்களை உக்ரைன் யுத்தத்தில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தியதாக வௌியான செய்திகள் ஆதராமற்றவை என ரஷ்ய தூதரகம் 04.12.2024 அன்று வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை – ரஷ்யா இடையிலான பாரம்பரிய நட்பு ரீதியான உறவை இழக்கச் செய்வதை நோக்காகக் கொண்டு வௌிப்படுத்தப்படும் உறுதிப்படுத்தப்படாத தரவுகள் தொடர்பில் தூதரகம் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும்  எனினும் உள்நாட்டிலுள்ள சட்டவிரோத வௌிநாட்டு முகவரகங்கள் இலங்கையர்களை ரஷ்யாவிற்கு அனுப்பியமை தொடர்பில் தூதரகத்திற்கு எந்தவொரு உத்தியோகபூர்வ தகவல்களும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ள கொழும்பிலுள்ள ரஷ்ய தூதரகம் இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை தரப்பிலிருந்து ஏதேனும் கோரிக்கைகள் விடுக்கப்படும் பட்சத்தில் ஆதரவு வழங்க ரஷ்யா தயாராக இருப்பதாகவும் ரஷ்ய தூதரகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.