ரணில் விக்ரமசிங்க

ரணில் விக்ரமசிங்க

சம்பந்தனின் ஆதரவோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோ ரணில் விக்ரமசிங்கவிற்கு தேவையில்லை – ஆளுந்தரப்பு திட்வட்டம் !

சம்பந்தனின் ஆதரவோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோ ரணில் விக்ரமசிங்கவிற்கு தேவையில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

‘வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தொடர்பில் ரணில் விக்ரமசிங்க வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றினால் ரணில் விக்ரமசிங்கவிற்கும், அரசுக்கும் ஆதரவு வழங்கத் தயார்’ – என இரா.சம்பந்தன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ‘ரணில் விக்ரமசிங்கவிடம் நிபந்தனைகளை முன்வைத்து அவருக்கும் அரசுக்கும் ஆதரவு வழங்குவது போல் பாசாங்கு செய்து தங்கள் காரியங்களை நிறைவேற்ற சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சிக்கின்றனர்.

அவர்களின் வியூகம் ரணில் விக்ரமசிங்கவுக்கும் தெரிந்த விடயம். எனவே, சம்பந்தனின் ஆதரவோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோ ரணில் அரசுக்குத் தேவையில்லை.

அபிவிருத்தியில் அதிகூடிய கவனம் எடுத்துச் செயற்படும் ரணில், அதற்கான இலக்கை அடையும் தருவாயில் அரசியல் தீர்வுக்கான செயற்றிட்டங்களையும் முன்னெடுத்து அதிலும் வெற்றி காண்பார். இதற்குத் தமிழ் மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும்.’ என்றார்.

ரணில் விக்ரமசிங்க அரசுக்கு ஆதரவு வழங்கத் தயார் – இரா.சம்பந்தன் நிபந்தனை !

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தொடர்பில் ரணில் விக்ரமசிங்க வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றினால் அவரது அரசுக்கு ஆதரவு வழங்கத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அந்தச் செய்தியில் சம்பந்தன் கூறியதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“கடந்த காலங்களில் நாட்டின் ஒவ்வொரு ஆட்சியாளர்களும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குவதற்காக தைப்பொங்கலையும், சிங்கள – தமிழ் புத்தாண்டையும் தெரிவு செய்திருந்தனர். எனினும், தமிழ் மக்களுக்கு எந்தவொரு தீர்வையும் பெற்றுக்கொடுக்கவில்லை.

இந்நிலையில், ஒவ்வொரு தைப்பொங்கலையும், தமிழ் – சிங்கள புத்தாண்டையும் தமிழ் மக்கள் மிகவும் எதிர்பார்புடனேயே கடந்து சென்றுள்ளனர்.

இந்தத் தடவை தைப்பொங்கல் காலத்தில் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். அதற்கு ஏற்ற முறையில் அவர் செயற்படுவார் என நம்புகின்றோம்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு வடக்கு, கிழக்குப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்ற ஆசை அன்றிலிருந்து இருந்தது. எனினும், அவரைச் சுற்றியிருந்தவர்கள் அதற்கு இடம் கொடுக்காமல் இழுத்தடித்தனர். அதனால் தமிழ் மக்களின் நம்பிக்கை ஏமாற்றத்தில் முடிவடைந்தது.

தென்னிலங்கையின் இனவாத அரசியலுக்கு மத்தியில் தமிழ் மக்களுக்கு சற்று நிவாரணம் வழங்குவது மிகவும் கடினமான விடயம் என்பதை அனைவரும் புரிந்துகொண்டுள்ளனர்.

ஆனால், தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். இது தொடர்பில் அனைவரும் சிந்திக்க வேண்டும்.” என அவர் தெரிவித்துள்ளார்.

“ரணில் விக்ரமசிங்க ராஜபக்ஷ்வினருக்கு செய் நன்றி செலுத்துவதற்கு மிகவும் திறமையானவர்.”- ஐக்கிய மக்கள் சக்தி

“ரணில் விக்ரமசிங்க ராஜபக்ஷ்வினருக்கு செய் நன்றி செலுத்துவதற்கு மிகவும் திறமையானவர்.”என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படும் செய்தி தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்படுமா என பலரும் கேட்கின்றனர். ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி ஆகிய இரண்டு கட்சிகளிலும் ஒரே ஆதரவாளர்களே இருக்கின்றனர்.  இணைந்து செயற்படுவதாக இருந்தால், எமது நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்துகொண்டு ராஜபக்ஷவினரை பாதுகாத்தவர்கள் அவர்களுடன் டீல் வைத்துக்கொண்டு இருந்தவர்கள் இல்லாத கட்சியாக இருக்கவேண்டும்.

அதேபோன்று பல்வேறு ஊழல் மோசடிகளுடன் தொடர்புபட்டவர்கள் இருக்கும் வரைக்கும் ஐக்கிய தேசிய கட்சியுடன் நாங்கள் இணைந்து செயற்படப்போவதில்லை. அவ்வாறானவர்களின் நடவடிக்கையாலே மக்கள் ஐக்கிய தேசிய கட்சியை கடந்த பொதுத் தேர்தலில் நிராகரித்தனர். அவ்வாறு இருக்கையில் மீண்டும் அவர்களுடன் எவ்வாறு நாங்கள் ஒன்றாக செயற்பட முடியும் என கேட்கின்றேன்.

அத்துடன் ரணில் விக்ரமசிங்க ராஜபக்ஷ்வினருக்கு செய் நன்றி செலுத்துவதற்கு மிகவும் திறமையானவர். செய்நன்றி செலுத்துவதன் பரிசுதான் 37 பேருக்கு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கியது. இதுமாத்திரமல்லாது எதிர்வரும் நாட்களில் 10க்கும் மேற்பட்ட அமைச்சரவை அமைச்சர்களும் நியமிக்கப்பட இருக்கின்றனர்.

அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கயையை குறைந்தபட்சம் 20 பேருக்கு வரையறுக்குமாறே நாங்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தோம். அதேபோன்று தற்போதைய நிலைமையில் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சுக்கள் வேண்டாம் என்றே நாங்கள் தெரிவித்து வந்தோம்.

மேலும் நாட்டின் தற்பாேதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் வரிக்கு மேல் வரி அதிகரித்தும், மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்களை அதிகரித்து சாதாரண மக்கள் மீது பாரிய சுமையை சுமத்தியுள்ள நிலைமையில் நாடு என்றவகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னரிமை வழங்கவேண்டியது அமைச்சுப் பதவிகளை நியமிப்பதற்கு  அல்ல என்பதை நாங்கள் தெரிவித்துக்கொள்கின்றோம் என்றார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு ஏற்ப செயற்படுமாறு பிரித்தானியா கோரிக்கை !

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு ஏற்ப செயற்படல் தொடர்பில் விரிவாக கலந்துரையாடியதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நிதி அமைச்சில் நேற்று(வெள்ளிக்கிழமை)  சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் பின்னர்  பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ட்விட்டர் பதிவொன்றை இட்டுள்ளார்.

அதில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு ஏற்ப மனித உரிமைகளையும் உரிய செயற்பாடுகளையும் மதித்து, அமைதியான, ஜனநாயக மற்றும் திறந்த வௌி செயற்பாடுகள் மூலம் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை பலப்படுத்த எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ஒரே ஒரு ஆசனத்தை வைத்துக்கொண்டு ஜனாதிபதியாகவும் வருவார் ரணில்.”- வஜிர அபேவர்தன

ரணில் விக்ரமசிங்க ஒரே ஒரு ஆசனத்தை வைத்துக்கொண்டு பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் உருவாகும் வல்லமை கொண்டவர் என தான் முன்னர் கூறியது இன்று நடந்து கொண்டிருக்கின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

 

காலியில் நடைபெற்ற கட்சி உறுப்பினர்களுடனான கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

“அரசியலில் எனக்கு இருக்கின்ற அனுபவங்களை வைத்து நான் ரணில் நாடாளுமன்றத்துக்கு தேசியப் பட்டியல் ஆசனம் ஊடாக வரும்போது ஒரு விடயத்தை குறிப்பிட்டேன். அதாவது ஒரு ஆசனத்தை வைத்துக்கொண்டு ரணில் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் உருவெடுப்பார் என்று நான் கூறினேன். அது தற்போது நடந்து கொண்டிருக்கின்றது.

இன்று ரணில் பிரதமராகிவிட்டார். நான் அன்று கூறிய விடயம் அவ்வாறே நடந்து கொண்டு இருக்கின்றது. அதனால் பதற்றமடையாமல் பொறுமையுடன் பார்த்துக்கொண்டிருங்கள். நான் கூறியது எல்லாம் நடக்கும்.

அதுமட்டுமன்றி டொலர் இல்லாத ரூபாய் இல்லாத ஒரு திறைசேரியையே ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றுக்கொண்டார். அதுவும் மிகவும் தாமதமாகவே ரணிலுக்கு கிடைத்திருக்கின்றது. அப்படி காலியான வெறுமையான திறைசேரி கிடைத்திருந்தாலும்கூட மக்களின் பிரச்சினைகளுக்கு பிரதமர் ரணில் தீர்வைப் பெற்றுக் கொடுப்பார்.

சிறிய தாமதம் ஏற்படும். ஆனால் பதற்றப்படாமல் அவசரப்படாமல் பொறுமையுடன் பார்த்துக்கொண்டிருங்கள். பிரச்சினைகளை ரணில் விக்ரமசிங்க தீர்த்து வைப்பார்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“21 வது அரசியலமைப்பு உருவாக்கப்பட்டாலும், எந்த மாற்றமும் ஏற்படாது.”- ரணில் விக்ரமசிங்க

21வது அரசியலமைப்பு சீர்திருத்தம் உருவாக்கப்பட்டாலும், நாட்டில் எந்த மாற்றமும் ஏற்படாது என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஏற்பாட்டில் இன்று கொழும்பில் இடம்பெற்ற மே தினக் கூட்டத்தின் போதே முன்னாள் பிரதமர் ரணில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் வேலையை இழந்துள்ளனர். டொலர் தட்டுப்பாடு மற்றும் மோசமான நிதிக் கட்டுப்பாடுகள் காரணமாக அரசாங்கம் ஸ்திரமற்ற நிலைக்குச் சென்றுள்ளதாகவும், இதனால் மக்களின் அன்றாட வாழ்வில் எரிவாயு, உணவு, எரிபொருள் மற்றும் மின்சாரம் போன்றவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கூற்றுப்படி, அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு பதிலாக 21 வது அரசியலமைப்பு உருவாக்கப்பட்டாலும், எந்த மாற்றமும் ஏற்படாது. 20ஆவது திருத்தச் சட்டத்தில் தமக்கு விருப்பம் இல்லை.  21ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதால் பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்புவது கடினம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

300 ரூபா வரை அதிகரிக்கவுள்ள டொலரின் பெறுமதி !

வருட இறுதிக்குள் 300 ரூபா வரை டொலரின் பெறுமதி அதிகரிக்கக்கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

விசேட காணொளி ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அக்காணொளியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கையின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. டொலர் பற்றாக்குறை இன்னும் நீங்கவில்லை.

ரூபாவின் பெறுமதி கடுமையான வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்று ஒரு டொலர் 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இத்தொகை 275 ரூபாய் வரை உயரக்கூடும். அத்தோடு நிறுத்தவில்லை என்றால் வருட இறுதிக்குள், டொலரின் பெறுமதி 300 ரூபா வரை அதிகரிக்கலாம் என அவர் கூறியுள்ளார்.

“கடந்த காலங்களில் இடம்பெற்ற குற்றங்களுக்காக ரணில் விக்ரமசிங்கவையே சிறைக்கு அனுப்ப வேண்டும்” – மஹிந்தானந்த அளுத்கமகே

“கடந்த காலங்களில் இடம்பெற்ற குற்றங்களுக்காக ரணில் விக்ரமசிங்கவையே சிறைக்கு அனுப்ப வேண்டும்” என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று(09.12.2020)  2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் நீதி, தொழில் அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகள் மீதான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

மேலும் அவர் பாராளுமன்றில் கூறுகையில்,

நல்லாட்சியில் இடம்பெற்ற குற்றங்களுக்கு ரணில் – மைத்திரி மீது மாத்திரம் குற்றம் சுமத்தாது எதிர்க்கட்சியில் இன்று அமர்ந்துள்ள அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும். நல்லாட்சியில் நீதமன்ற சுயாதீனம் முழுமையாக நாசமாக்கப்பட்டது, ஆனால் எமது அரசாங்கம் நீதிமன்ற சுயாதீனத்தை அழித்துள்ளதாக கருத்தொன்றை உருவாக்க நினைக்கின்றனர்.

எமது ஆட்சியில் நீதிமன்ற சுயாதீன பலவீனம் குறித்து பேசிக்கொண்டு நல்லாட்சியில் ராஜபக்ஷவினரை சிறையில் அடைக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டது நியாயமானதா? நீதிபதிகளை அலரிமாளிகைக்கு வரவழைத்து தீர்ப்புகளை தீர்மானிக்கும் நிலைமை காணப்பட்டது, எமக்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்பட்டது,

ஆனால் நாம் ஒருபோதும் அரசியல் பழிவாங்கலை மேற்கொள்ள மாட்டோம். பொய் குற்றங்களை சாட்டி எவரையும் சிறையில் அடைக்க மாட்டோம். ஆனால் கடந்த காலத்தில் நடந்த குற்றங்களுக்காக வழக்கு தொடுக்க வேண்டிய நபர்களுக்கு எதிராக வழக்கு தொடுப்போம், ரஞ்சன் ராமநாயகவிற்கு எதிராக இரண்டு வழக்குகளை தொடுப்பேன், அதில் நிச்சயமாக ரஞ்சன் ராமநாயக குற்ற்வாளியாவர்.

ஆனால் இறுதி நேரத்தில் வழக்கை வாபஸ் பெறுவேன். ஏனெறால் உண்மையில் சிறைக்கு அனுப்ப வேண்டியது ரஞ்சனையோ வேறு எவரையுமோ அல்ல, ரணில் விக்ரமசிங்கவையே சிறைக்கு அனுப்ப வேண்டும். அன்றே எனக்கு நித்திரை வரும்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரணிலை நாடாளுமன்றம் அனுப்ப முயற்சி

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு அனுப்ப ஆராயப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் பலர், ரணில் விக்கிரமசிங்கவிடம் குறித்த யோசனையை முன்வைத்துள்ளனர். கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி படுதோல்வியடைந்தது. ஒரு ஆசனத்தை கூட கைப்பற்றவில்லை. எனினும் தேசிய பட்டியல் மூலம் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரு ஆசனம் கிடைத்துள்ளது. அதற்கான நபரை பெயரிடுவதில் கட்சிக்குள் முரண்பாடுகள் தோன்றியுள்ளன. புதிய பாராளுமன்றத்தின் சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ள நிலையிலும், ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினரின் பெயர், இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் தேசிய பட்டியல் உறுப்பினரை அறிவிக்க, ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் தேர்தல் ஆணைக்குழுவிடம் 7 நாள் அவகாசம் கோரியுள்ளார். இவ்வாறான பின்னணியிலேயே கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு அனுப்ப செயற்குழு உறுப்பினர்கள் சிலர் ஆலோசனைகளை முன்வைத்துள்ளனர்

26 வருடங்களாக ரணில் விக்ரமசிங்கவால் எதனையும் செய்ய முடியவில்லை ! – ஐ.தே.க பிக்குகள் முன்னணி அதிருப்தி.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு, ரணில் விக்ரமசிங்கவை தாம் கேட்டுக் கொண்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிக்குகள் முன்னணி தெரிவித்துள்ளது.

எனினும் தமது கோரிக்கையை ரணில் விக்ரமசிங்க நிராகரித்தாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிக்குகள் முன்னணியின் பிரதம செயலாளர் கீனியாவல பாலித்த தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (19.08.2020) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ´கடந்த 26 வருடங்களாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கவால் எதனையும் செய்ய முடியவில்லை. அவர் எடுத்த பிழையான தீர்மானங்களே இன்றைய நிலைக்கு காரணம். நாம் அவருடன் தனியாக பேசினோம். ஏம்மால் கையளிக்கப்பட்ட கடிதத்தை அவர் போபிட்டிய தேரரின் முகத்தில் வீசி அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என கூறினார்.

ஆகவே, அவ்வாறான தலைவருடன் எப்படி முன்நோக்கி பயணிப்பது? ரணிலால் எதிர்காலத்தில் 10 தேரர்களின் ஆதரவை கூட பெற முடியாது. மஹிந்தவுடன் 14,000 தேரர்கள் உள்ளனர். காரணம் அவர் தேர்களை கௌரவப்படுத்துகின்றார்´ என்றார்.