தீவிரமடையும் யாழ் குடிநீர் பிரச்சினை – பாலியாற்றில் வடலி வளர்த்து பதநீர் குடிப்போம் என்கிறார் சீ.வி.கே
யாழ்ப்பாணம் – கிளிநொச்சி குடிநீர் விநியோக திட்டத்தின், தாளையடியில் அமைந்துள்ள கடல்நீரை நன்னீராகச் சுத்திகரிப்புச் செய்யும் நிலையத்தை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
குடிநீர் விநியோகத் திட்டத்தின் கட்டுப்பாட்டு அறையின் செயற்பாடுகளை ஆளுநர் பார்வையிட்டார். அதன் பின்னர் கடல்நீரை உள்ளெடுக்கும் நிலையம், சுத்திகரிப்பு மற்றும் விநியோகம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளையும் நேரில் சென்று பார்வையிட்டார். இதன்போது திட்டப் பணிப்பாளர் மற்றும் பொறியியலாளர்களால் உரிய விளக்கங்களும் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இன்னமும் குறுகிய காலப்பகுதியில் மிகப் பாரிய அளவிலான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படவுள்ளதாகவும் நிலத்தடி நீர் அப்பகுதி மக்களின் சனத்தொகைக்கு ஏற்ப பயன்பாட்டுக்கு போதுமானதாக இல்லை எனவும் பொறியியலாளர் சிவகுமார் அண்மையில் தேசம் நெட்டுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார்.
மேலும் தாளையடியில் அமைந்துள்ள கடல்நீரை நன்னீராகச் சுத்திகரிப்புச் செய்யும் நிலையத்தின் மூலம் தண்ணீர் பெறுவது என்பது இஸ்ரேல், அராபியா போன்ற நாடுகளுக்கே பாரிய பணச்செலவை ஏற்படுத்தும் திட்டமாக உள்ளதால் குறித்த நாடுகளே மாற்று வழியை தேடுகின்றன. அத் திட்டம் யாழ்பாணத்தில் வெற்றியளிக்க வாய்ப்பில்லை எனவும் அதற்கு பதிலாக இரணைமடு குளத்தின் தண்ணீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே அதிகமாக பூர்த்தியான நிலையில், அரசியல் வறுமையின் வெளிப்பாடாகவே இரணைமடு நீர் யாழுக்கு வர சிரமப்படுகிறது என பொறியியலாளர் சிவகுமார் மேலும் தெரிவித்திருந்தார்.
இதேவேளை அண்மையில் பாலியாறு நீர்வழங்கல் திட்டம் குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கடிதம் மூலம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
குறித்த கடிதத்தில், கடந்த ஏழு தசாப்தங்களாக யாழ்ப்பாண மாநகர பிரதேச, தீவக மற்றும் தென்மராட்சி மக்கள் குறிப்பாக நியாயமான சுகாதாரமான நீர் விநியோகத்திற்கு ஏங்கியிருக்கிறார்கள். வட மாகாணசபை, யாழ்ப்பாண மாவட்ட மக்களுக்கான நீர்விநியோகத்துக்கென வருடம் பூராகவும் கடலைச் சென்றடையும் நீரை திசைதிருப்பும் திட்டமாக பாலியாறு நீர்விநியோகத் திட்டத்தை முன்மொழிந்திருந்தது. எனவே இந்தத் திட்டத்தின் நிறைவேற்றலுக்கான போதிய நிதியை தற்போது பரிசீலிக்கப்படும் வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்து அதன் துரித நிறைவேற்றத்திற்கான பணிப்புரையை வழங்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் யாழ்ப்பாண மக்களின் குடி நீர் பிரச்சினை தொடர்பில் தொடர்ச்சியாத கள்ள மௌனம் காத்து வருவதாகவும் பலரும் அதிருப்தி வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
