யாழ் வேலையற்ற பட்டதாரிகள் வன்னி, மலையகத்தில் பணியாற்றத் தயாரில்லையா ? தமிழகத்திலிருந்து ஆசிரியர்களை வரவழைக்க கோரிக்கை !
வடக்கு – கிழக்கில் ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் தங்களுக்கு அரசாங்க வேலை வேண்டும் என்று காத்திருக்கின்றனர். ஆனால் வன்னியில், மலையகத்தில் ஆசிரியர்களுக்கான பற்றாக்குறையை நிரப்ப தென்னிந்தியாவில் இருந்து ஆசிரியர்களை கொண்டு வாருங்கள் என்கிறார் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன். இதே கருத்தை பத்து ஆண்டுகளுக்கு முன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் கெ சிவாஜிலிங்கம் தேசம்நெற் க்கு வழங்கிய நேர்காணலிலும் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
“இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை அழைத்து வந்து பெருந்தோட்டப் பாடசாலைகளில் தமிழ் மொழியில் கற்பிக்க அனுமதிக்க வேண்டும்” என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வி. ராதாகிருஷ்ணன் நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
“தோட்டத்துறை பாடசாலைகளில் கற்பிக்க இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை அழைத்து வருவதற்கான திட்டத்தை நான் முன்வைத்தேன். அரசாங்கம் இதை இப்போது செயல்படுத்தும் என்று நம்புகிறேன். ஆனால் அந்த நேரத்தில் ஜே.வி.பி இந்த நடவடிக்கையை எதிர்த்தது. தற்போதைய அரசாங்கம் இதை இப்போது செயல்படுத்தும் என்று நம்புகிறேன். தோட்டத் துறை பள்ளிகளை மேம்படுத்த இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுங்கள்” என்று அவர் மேலும் கூறினார்.
இதேவேளை வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஆயிரக்கணக்கான தமிழ் மொழி பட்டதாரிகள் தொழில் வாய்ப்புக்காக காத்திருக்கும் வேளையில் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சராக செயலாற்றிய எம்.பிய இராதாகிருஷ்ணன் இந்தியாவில் இருந்து தமிழ்மொழி ஆசிரியர்களை கொண்டு வாருங்கள் என நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டிருப்பதானது பல்வேறு கேள்விகளையும் எழுப்புகின்றது.
யாழ்ப்பாணத்தில் போராடும் வேலையில்லாப் பட்டதாரிகள் ஏன் வன்னியில் உள்ள தமிழ் ஆசிரியர்களுக்கான வெற்றிடத்தைக் கூட முடியாதவர்களாக உள்ளனர். இவர்கள் ஏன் மலையகம் சென்று பணியாற்றத் தயாராக இல்லை என்ற கேள்விகள் எழுகின்றது. மேலும் இந்த வேலையற்ற பட்டதாரிகள் பெரும்பாலும் கலைப்பாடங்களை மட்டுமே கற்பிக்கக் கூடியவர்களாகவும் ஏனைய அடிப்படைப் பாடங்களான விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம், தமிழ் பாடங்களை கற்பிக்கக்கூடியவர்கள் இல்லை என்றும் தெரியவருகின்றது.
அது மட்டுமல்ல கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்திலிருந்து மலையகத்துக்கு கற்பிக்கச் சென்றவர்களால் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் பிரதி அமைச்சர் வி ராதாகிருஷ்ணன் தென்னிந்தியாவிலிருந்து ஆசிரியர்களை வரவேற்க முனைகின்றாரா என்பதும் கவனிக்கப்பட வேண்டும். அண்மையில் யாழ் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மலையகத்தைச் சேர்ந்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை எழுத்தறவற்றவர் கைநாட்டு கள்ளத் தோணி என்றெல்லாம் இழிவுபடுத்தி இருந்தார். அதேபோல் மற்றுமொரு பா உ எஸ் சிறிதரன் மலையகத் தமிழர்களை வடக்கத்தையான் என விழித்திருந்தார். இவ்வாறான தொடர்ச்சியான இழிவுபடுத்தல்கள் தமிழ் சமூகங்களை தொடர்ந்தும் கூறுபடுத்தி வருகின்றது.
மேலும் இந்த வேலையற்ற பட்டதாரிகளும் அரச வேலை கிடைத்ததும் தாங்கள் செல்கின்ற இடங்களில் மனப்பூர்வமாக பணியாற்றுவது இல்லை என்ற கருத்துக்களும் மேலோங்கியுள்ளது. மலையகத்தில் ஒரு காலும் யாழ்ப்பாணத்தில் ஒரு காலும் வைத்திருப்பார்கள். திங்கள் கிழமை மதியத்திற்கு மேல் பாடசாலைக்குச் சென்று வெள்ளிக்கிழமை மதியத்தோடு யாழ்ப்பாணம் திரும்பிவிடுவார்கள். இவர்கள் தாங்கள் கற்பிக்கின்ற மாணவர்களை முன்னேற்றுவதில் அவ்வளவு அக்கறைகொள்வதில்லை போன்ற குற்றச்சாட்டுகள் இன்றும் உள்ளது.