யாழில் தொடரும் மலையக மாணவர்களின் தற்கொலைகள் !
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞான பீடத்தில் மூன்றாம் வருடத்தில் கற்று வந்த மலையகத்தைச் சேர்ந்த மாணவன் கடந்த 26 ஆம் திகதி சனிக்கிழமை தற்கொலை செய்துகொண்டுள்ளார். கொட்டகல – புனித அன்ருஸ் தோட்டம் என்ற முகவரியைச் சேர்ந்த 24 வயதான கருப்பையா கவிரத்தினம் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் கொக்குவில் பிரவுண் வீதியில் தங்கியிருந்த விடுதியிலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேநேரம் ஆறுதிருமுருகனின் தெல்லிப்பளை துர்க்காபுரம் மகளிர் இல்லத்திலும் கடந்த வியாழக்கிழமை ஏப்பிரல் 24 ஆம் திகதி மலையக மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவ்விரு சம்பவங்களிலும் காதல் விவகாரங்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேநேரம் யாழ்ப்பல்கலைக்கழக மாணவன் தற்கொலையில் அவர் படிப்பதற்கு பணப்பற்றாமையால் சிரமப்பட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இவை எதனையும் உறுதப்படுத்த முடியவில்லை. எப்படியிருந்த போதும் மலையகத்திலிருந்து யாழ்ப்பாண பல்கலைக் கழகத்துக்கு வரும் மாணவர்கள் பொருளாதார ரீதியாக பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். ஆறுதிருமுருகன் போன்றவர்கள் மலையக மாணவர்களின் நலனுக்காக உதவுகிறோம் என பெருந்தொகை பணத்தை புலம்பெயர் தொண்டு அமைப்புக்களிடம் வசூலிக்கிறார்கள். அதனை அவர்கள் மலையக மாணவர்களின் நலனுக்கு எவ்வாறு செலவு செய்கிறார்கள் என்பதில் எந்த வெளிப்படைத் தன்மையும் கண்காணிப்பும் இல்லை.
சமீப காலங்களில் இளையோரின் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும் மாணவர்களின் உளவள ஆரோக்கியம் தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதில்லை.
