மைத்திரிபால சிறிசேன

மைத்திரிபால சிறிசேன

நீக்கப்படும் முன்னாள் அமைச்சர்கள், ஜனாதிபதிகளின் சலுகைகள் – மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள கருத்து !

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் எம்.பிக்களின் பாதுகாப்பு மற்றும் இதர அரச சேவைகள் நிறுத்தப்பபடும் என அநுர தலைமையிலான அரசாங்கம் தெரிவித்து அதனை படிப்படியாக நடைமுறைப்படுத்தி வரும் நிலையில் இந்த பாதுகாப்பு சேவை நீக்கப்படுவது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து தெரிவித்துள்ளார்.

தாம் பிரமுகர்களின் பாதுகாப்பை விரும்பும் நபர் அல்ல எனவும், பிரமுகர்களின் பாதுகாப்பை நீக்கினால் பிரச்சினையில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (30) தெரிவித்துள்ளார்.

தான் எந்த தவறும் செய்யாத காரணத்தினால் எவரும் தம்மை கொல்லவோ அடிக்கவோ முயற்சிக்க மாட்டார்கள் என நம்பிக்கையுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஒருவர் மனநலம் குன்றியவர்போல நடந்து கொண்டால் மட்டுமே இதுபோன்ற வன்முறைகள் சாத்தியமாகும் என்றார்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படாத நிலையில், அமைச்சர்கள் உள்ளிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த காவல்துறை அதிகாரிகளே மீள அழைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை திணைக்களம் நேற்று முன்தினம்(29) தெளிவுபடுத்தியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – நீதிமன்றத்தில் இரகசிய சாட்சி வழங்க எதிர்பார்க்கும் மைத்திரிபால சிறிசேன!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை உண்மையாக செய்தது யார் என்பது தமக்கு தெரியும் என தாம் கூறியது, மூன்று வாரங்களுக்கு முன்னர் கிடைத்த தகவலுக்கமையவே என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

 

இன்று (23) காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்விடயங்களை தெரிவித்தார்.

 

இவ்விடயம் தொடர்பில் நீதிமன்றத்தில் இரகசிய சாட்சி வழங்க தாம் எதிர்பார்த்துள்ளதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

 

பகிரங்கமாக நீதிமன்றத்தில் சாட்சி வழங்கினால் தனது உயிருக்கும் தனது குடும்பத்தவர்களின் உயிருக்கும் அது அச்சுறுத்தலாக அமையும்.

 

இந்த தகவலை அரசியலுக்காக அல்லாமல், மிகவும் நேர்மையுடன் குறிப்பிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட அனைத்து விசாரணைகளும் தவறானவை என்பதோடு, அநீதியானவை.” – நாடாளுமன்றத்தில் பகீர் கிளப்பிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கோட்டாபய ராஜபக்ஷவிடமும் இரகசியமான ஆவணங்கள் கையளிக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

“இரண்டு நாட்களுக்கு முன்னர், பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு ஆலோசகர் பேராசிரியர் ரோஹான் குணரத்ன, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தும் விசாரணைக் குழுக்களுக்கு வெளிப்படுத்த முடியாத, மிகவும் இரகசியமான அறிக்கைகள் தங்களிடம் உள்ளதாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த அறிக்கைகளை எந்தக் காரணம் கொண்டும் வெளியிட முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, நான் நியமித்த ஜனாதிபதி ஆணைக்குழுவானது, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அறிக்கையை கையளிக்கும்போது, தனியான ஒரு பைலை, கையளித்தனர்.

 

இந்த பைலை சட்டமா அதிபருக்கோ, புலனாய்வுப் பிரிவினருக்கோ, சி.ஐ.டியினருக்கோ, பொலிஸாருக்கோ வழங்காமல், தனிப்பட்ட ரீதியாக வைத்துக் கொள்ளுமாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

ரோஹான் குணரத்ன இரகசியமான அறிக்கைகள் தங்களிடம் உள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், கோட்டாபய ராஜபக்ஷவிடமும் இரகசியமான பைல் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

 

எனவே, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட அனைத்து விசாரணைகளும் தவறானவை என்பதோடு, அநீதியானவை என்பதை இங்கே நான் கூறிக்கொள்கிறேன்.

 

சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி தொடர்பாக, நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமிப்பது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவரின் நிலைப்பாட்டில்தான் நானும் உள்ளேன்.

 

இந்த நாடாளுமன்றில் இதற்கு முன்னரும் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது.

 

இதில், எனக்கு எதிரானவர்கள் மட்டும்தான் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டார்கள்.

 

வன்மத்துடன், பழி வாங்கும் நோக்கத்துடன் தான் இந்த தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணைகளுக்கு சென்றால் உள்நாட்டு யுத்தம் தொடர்பிலும்  தமிழர்கள் சர்தேச விசாரணைகளை கோர வாய்ப்புள்ளதால் சர்வதேச விசாரணை வேண்டாம்.” – மைத்திரிபால சிறிசேன

“ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணைகளுக்கு சென்றால் உள்நாட்டு யுத்தம் தொடர்பிலும்  தமிழ் டயஸ்போராக்கள் சர்தேச விசாரணைகளை கோர வாய்ப்புள்ளதால் சர்வதேச விசாரணை வேண்டாம்.” என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

 

நாடாளுமன்றத்தில் நேற்று (22) நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தினக் குண்டு தாக்குதல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடாளுமன்றத்தில் இந்தளவுக்கு விவாதம் நடத்தப்பட்ட விடயம் வேறு எதுவும் இருக்காது. இதில் நானே இலக்காக இருக்கின்றேன். தாக்குதல் நடந்த நாள் முதல் பல்வேறு சந்தர்ப்பங்களில் கருத்துத் தெரிவித்துள்ளேன்.

அதன்போது எனக்குப் புலனாய்வுப் பிரிவோ, பாதுகாப்புத் தரப்பினரோ எனக்கு அறிவிக்கவில்லை. இதனை மக்கள் நம்புகின்றார்கள் இல்லை. நான் தெரிந்துகொண்டே வெளிநாட்டுக்குச் சென்றிருந்ததாகத் தெரிவிக்கின்றனர்.

இதன்படி நானே பொறுப்புக் கூற வேண்டியவர் என்றும் கூறுகின்றனர். 7 நீதியரசர்களைக் கொண்ட வழக்கு விசாரணையில் எனக்குத் தகவல்கள் அறிவிக்கப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த அறிக்கையை நான் சபையில் சமர்ப்பிக்கின்றேன். நான் 2016 ஆம் ஆண்டு முதல் எனக்குக் கிடைத்த தகவல்கள் தொடர்பில் பாதுகாப்புச் சபையில் கூறியுள்ளேன். சர்வதேச நாடுகளில் ஐ.எஸ். அமைப்பினர் தாக்குதல்களை நடத்தும்போது இங்கு இவ்வாறு நடக்க இடமளிக்கக்கூடாது என்று நான் அடிக்கடி பாதுகாப்பு சபையில் கூறியுள்ளேன்.

சஹ்ரானைக் கைது செய்யாமை தொடர்பில் கூறுகின்றனர். அவரைக் கைது செய்யவென அதிகாரிகள் இருக்கின்றனர். அதற்கு ஜனாதிபதி போகப் போவதில்லையே.நான் 2019 ஜனவரியில் நடந்த பாதுகாப்புச் சபையில் சஹ்ரானைக் கைது செய்யாது இருக்கின்றமை தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளேன்.

அத்துடன் ஒரு வருடமே பாதுகாப்பு அமைச்சு என்னிடம் இருந்தது. கிடைத்து 6 மாதத்திலேயே குண்டு வெடித்தது. இவ்வாறு குண்டு வெடிக்க முன்னர் நான்கு வருடங்கள் என்னிடம் காவல்துறை அமைச்சு இருக்கவில்லை.சம்பவம் நடந்த பின்னர் சஹ்ரானுடன் தொடர்புடைய முழு அமைப்புகளையும் இல்லாமல் செய்துவிட்டேன். இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட்டால், அதனை அடிப்படையாகக்கொண்டு யுத்தம் தொடர்பிலும் தமிழ் டயஸ்போராக்கள் சர்தேச விசாரணை கோரலாம்.

 

எனவே, சர்வதேச விசாரணை அவசியமில்லை என ஐ.நா. பிரதிநிதியிடம் கூறிவிட்டேன். உள்ளக விசாரணைக்குச் சர்வதேச ரீதியில் தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அத்துடன் ஐ.நாவிடமும் நாங்கள் தொழில்நுட்ப உதவிகளை வழங்குமாறு கேட்கின்றேன். அத்துடன் சிலர் என் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். இங்கு விவாதங்களை நடத்தி இன்னும் பணத்தைச் செலவழிக்கத் தேவையில்லை.

 

என் மீது குற்றச்சாட்டை முன்வைத்தவர்களுக்குப் பதிலளிக்கின்றேன். சரத் பொன்சேகாவுக்குப் பீல்ட் மார்ஷல் பதவியை நானே வழங்கினேன். நான் வழங்கியது வேண்டாம் என்றால் அந்தப் பதவியை இல்லாமல் செய்துகொள்ள வேண்டும்.

 

அவர் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து அவரை விடுவித்து அவருக்குப் பீல்ட் மார்ஷல் பதவியை வழங்கினேன். இந்நிலையில், சில இராணுவ அதிகாரிகள் என்னிடம் அவர் பற்றி கூறுவர்.

 

யுத்தம் செய்வதாகக் கூறிக்கொண்டு கிளிநொச்சி வரும் அவர் கொங்கிறீட் பங்கருக்குள் இருப்பார் எனவும், அவர் யுத்தக் களத்துக்குச் செல்லவில்லை எனவும் இராணுவ அதிகாரிகள் சிலர் என்னிடம் கூறியுள்ளனர். நாய் மனித கால்களைக் கடிக்கும்; ஆனால் மனிதன் நாயின் காலைக் கடிப்பதில்லை” என்றார்.

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை பிக்குகளே உருவாக்கினர் – மைத்திரிபால சிறிசேன

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை பிக்குகளே உருவாக்கியதாக சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று (31) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

1956 ஆம் ஆண்டு சுதந்திரக்கட்சியின் ஆட்சியில் சிங்கள மொழி அரசகரும மொழியாக்கப்பட்டது. இதற்கு வடக்கில் இருந்து எதிர்ப்புகள் வலுத்தன. சர்ச்சைகள் உருவாகின. அதன்பின்னர் தமிழ் மொழியும் அரச மொழியாக்கப்பட்டது.

பண்டாரநாயக்கா – செல்வநாயகம் (பண்டா – செல்வா) ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முற்பட்ட போது இன்று போலவே அன்றும் மகா சங்கத்தினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். பண்டாரநாயக்காவின் வீடு சுற்றிவளைக்கப்பட்டது. இறுதியில் குறித்த ஒப்பந்தத்தை பண்டாரநாயக்க கிழித்தெறிந்தார்.

மாறாக பண்டா – செல்வா ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் பிரபாகரன் உருவாக்கி இருக்க மாட்டார் என சுட்டிக்காட்டியுள்ளார்.

“அபிவிருத்திக்கான அதிகாரபகிர்வுக்கு தயார். பொலிஸ் அதிகாரங்களை வழங்க தயாரில்லை.” – மைத்திரி தரப்பு !

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படுவதில் எமக்கு உடன்பாடில்லை. மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால் அது தென்னிலங்கையில் ஏற்படுத்தும் தாக்கத்தினால், மக்கள் மத்தியில் மீண்டும் மோதல்கள் ஏற்பட வழிவகுக்கும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

 

அத்தோடு, அபிவிருத்திக்கான அதிகாரபகிர்வுக்கு முழுமையான ஆதரவை வழங்க நாம் தயாராகவுள்ளதாகவும், அரசாங்கம் இது தொடர்பில் தனது ஸ்திரமான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்றும் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தினார்.

 

சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் வியாழக்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

 

13ஆவது அரசியலமைப்பு திருத்தம் இந்தியாவினால் பலவந்தமாக திணிக்கப்பட்டதாகும். எனினும், இந்தியாவுடன் தற்போது காணப்படும் இராஜதந்திர தொடர்புகள் காரணமாக எம்மால் அதனை உதாசீனப்படுத்த முடியாது.

 

எனவே, அபிவிருத்திக்கான அதிகாரபகிர்வுக்கு முழுமையான ஆதரவை வழங்க நாம் தயாராகவுள்ளோம். பொலிஸ், காணி அதிகாரங்களுடன் 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தினால் அது தென்னிலங்கை மக்கள் மத்தியில் அச்சத்தை உண்டாக்கும். எனவே இது மக்கள் மத்தியில் மீண்டும் இன மோதல்கள் ஏற்பட வழிவகுக்கும்.

 

பொலிஸ் அதிகாரம் தொடர்பில் அரசாங்கமும் எந்த நிலைப்பாட்டையும் தெரிவிக்கவில்லை. நாமும் அது குறித்து பேசவில்லை. இது தொடர்பில் முதலில் அரசாங்கத்தின் முன்மொழிவே அவசியமாகும்.

 

சர்வகட்சி மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரனால் மாகாணசபைகளில் ஆயுதங்கள் அற்ற பிரஜா பொலிஸ் சேவையை வழங்குமாறு யோசனையொன்று முன்வைக்கப்பட்டது.

 

எனவே, இதனைப் போன்ற யோசனைகளை அரசாங்கமே முன்வைக்க வேண்டும். அரசாங்கத்தினால் இதற்கான வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டால், அதற்கு எந்தளவுக்கு ஒத்துழைப்புக்களை வழங்க முடியும் என்று நாம் கட்சி ரீதியாக கலந்தாலோசித்து தீர்மானம் எடுப்போம்.

 

எவ்வாறிருப்பினும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியல் ரீதியாக பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படக் கூடாது என்பதே எமது நிலைப்பாடாகும். முதலமைச்சர்களுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதால் ஏற்படக் கூடிய விளைவுகளை வரலாற்று சம்பவங்கள் ஊடாக நன்கு அறிந்திருக்கின்றோம்.

 

எனவே, மாகாண முதலமைச்சர்களுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படுவதை நாம் முற்றாக எதிர்க்கின்றோம். எனவே, அரசாங்கம் இது குறித்த முன்மொழிவுகளை முன்வைக்கும் போது, முறையான திட்டமிடல்களை வழங்க வேண்டும். மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் தென்னிலங்கை மக்கள் மத்தியில் அச்சம் காணப்படுகிறது.

 

எனவே, அரசாங்கம் இது தொடர்பில் தனது ஸ்திரமான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். இவ்விடயத்தில் ஜனாதிபதி எவ்வாறு செயற்பட வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டை நாம் சர்வகட்சி மாநாட்டில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கின்றோம். அரசாங்கம் யோசனையொன்றை முன்வைத்தால் , கட்சி ரீதியில் கலந்துரையாடி தீர்மானிப்போம் என்றார்.

13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக ஜனாதிபதியின் நிலைப்பாடு என்ன..? – மைத்திரிபால கேள்வி !

13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக ஜனாதிபதி, அரசாங்கத்தின் நிலைப்பாட்டை முதலில் அறிவிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.

சர்வகட்சி மாநாடு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

“13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக ஜனாதிபதி, அரசாங்கத்தின் நிலைப்பாட்டை முதலில் அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

 

அரசாங்கத்தின் யோசனை என்ன என்பதை முதலில் எமக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

அந்த யோசனைகள் வெளிவந்தவுடன், நாம் இதுதொடர்பாக ஆராய முடியும்.

 

இதுதொடர்பாக கலந்துரையாடல்களை மேற்கொண்டு, எமது யோசனைகளையும் இதில் முன்வைத்து அடுத்தக்கட்டத்தை நோக்கி செல்ல முடியும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“மொழி அல்லது மத அடையாளம் கொண்ட அரசியல் கட்சிகளை பதிவு செய்வதை தடைசெய்ய வேண்டும்.” முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால

பௌத்த மதத்தை விமர்சிக்கும் உரிமை இங்கு எவருக்கும் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பௌத்த மதத்தை விமர்சிக்கும் உரிமை இங்கு எவருக்கும் கிடையாது.

மொழிகளும் மதங்களும் வேறுப்பட்டாலும் ஒவ்வொரு மதங்களையும் மதிக்க மனிதர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

இதன் ஊடாக அரசியல் செய்ய பலரும் முயற்சிக்கிறார்கள். கடந்த காலங்களில் எல்லாம் இதுபோன்ற பல வரலாறுகள் காணப்படுகின்றன.

என்னைப் பொறுத்தவரை மொழி அல்லது மத அடையாளம் கொண்ட அரசியற் கட்சிகளை பதிவு செய்வதை தடைசெய்யும் வகையில் அரசமைப்பில் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும்.

தேர்தல் ஆணைக்குழுவும் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அப்போது மட்டுமே இவ்வாறான வெறுப்புப் பிரசாரங்களின் ஊடாக அரசியல் செய்யும் கலாசாரத்தை நாட்டிலிருந்து இல்லாது செய்ய முடியும்.

 

வெறுப்புப் பிரசாரங்களை செய்யும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து அடிப்படைவாதிகளால் நிதி அனுப்பப்படுகிறது.

 

இதனைக் கண்டறிந்து முதலில் அரசாங்கம் நிறுத்த வேண்டும். புலனாய்வுப் பிரிவினர் இதனைக் கண்டறிய வேண்டும்.

நல்லிணக்கம், ஜனநாயகம், மனிதாபிமானத்தை உறுதிப்படுத்தினாலேயே ஒரு நாட்டை முன்னேற்ற முடியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டார்.

மைத்திரிபால சிறிசேனவை தூக்கிலிட முயற்சி !

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டுள்ள போதும் தன்னையும் குறி வைப்பதை ஏற்றுகொள்ள முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தாலும், தாக்குதல்களின் குற்றவாளியாக என்னை காண்பது நியாயமற்றது.

2019 மே 21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் இன்னமும் இடம்பெற்று வருகின்றது.

இருந்தபோதும் தாக்குதல்கள் தொடர்பாக என்னை சிறையில் அடைக்க அல்லது தூக்கிலிடவே கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை விரும்புகின்றார். உரிய விசாரணைகள் முடிவடையாமல் அவர் இதைச் செய்ய முயற்சிக்கிறார்” என்றார்.

“கர்தினாலுக்கு எந்த அதிகாரமும் இல்லை.” – தலதாமாளிகையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரம் கர்தினாலுக்கு வழங்கப்படவில்லை.” என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு இன்று (19) காலை சென்று வணக்கம் செலுத்தியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் அதிபர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதற்குரிய அதிகாரம் நீதித்துறை அல்லது பிரதம நீதியரசர் ஆகியோருக்கே உள்ளது.”

தொடர்ந்து பேசிய அவர்,

“நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து அபராதம் செலுத்த வேண்டியது கட்டாயமாகும். அபராதத்தை செலுத்தாவிட்டால், என்ன சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும்.

இதற்குரிய அதிகாரம் நீதித்துறைக்கு அல்லது பிரதம நீதியரசருக்கு உள்ளது, கர்தினாலுக்கு கிடையாது.” எனவும் தெரிவித்துள்ளார்.