மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

கொடுங்கோல் ஆட்சியை முறையடிக்கின்ற அகிம்சை போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு உதவ வேண்டும் – அடைக்கலநாதன் கோரிக்கை!

இலங்கை அரசின் கொடுங்கோல் ஆட்சியை முறையடிக்கின்ற அகிம்சை போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு உதவ வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவின் தமிழ்நாட்டில் இடம்பெற்ற அயலகத் தமிழர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், ஈழத்தமிழர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு தமிழக அரசு என்றும் துணை நிற்கும் என நம்புவதாகவும் மேலும் சிறப்பு முகாம்களிலுள்ள இலங்கை தமிழரை தமிழக அரசு விடுவிக்க வேண்டும் எனவும் செல்வம் அடைக்கலநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அகதிகளாக தமிழ்நாட்டை சென்றடைந்த இலங்கை தமிழ் மக்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள உதவிகள் தொடர்பிலும் இதன்போது நினைவுகூர்ந்தார்.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 21 மீனவர்கள் மற்றும் 133 மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – மு.க.ஸ்டாலின்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 21 மீனவர்கள் மற்றும் 133 மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி S.ஜெய்ஷங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

 

இந்த விவகாரம் தொடர்பில் உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி ஜெய்ஷங்கருக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார்.

 

மீன்பிடித் தொழிலை ஜீவனோபாயமாகக் கொண்டுள்ள தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படுவது அவர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளதாக தமிழக முதல்வர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

எனவே, இலங்கைக் கடற்படையினரால் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டு அவர்களது வசமுள்ள 133 மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கத் தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வெளியுறவுத்துறை அமைச்சர் S.ஜெய்ஷங்கரை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

“மீனவர் பிரச்சினையில் அவன் செத்தாலும் இவன் செத்தாலும் தமிழர்கள் என்ற நிலமை தான் இருக்கிறது.” – எம்.கே.சிவாஜிலிங்கம்

எல்லை தாண்டும் இந்திய மீனவர்களால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தி தீர்வு காண்பதற்கு தமிழ்நாடு வருமாறு தமிழ் நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சியின் பொது செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

நேற்று சுப்பர்மடம் பகுதியில் மீனவரகள் போராட்டத்தில் கலந்து கொண்டபின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

அண்மைக் காலமாக வட பகுதி கடலிலே எங்களுடைய கடற்றொழிலாளர்கள் தங்களுடைய இலட்சக்கணக்கான, கோடிக்கணக்கான கடற்றொழில் உபகரணங்களை மாத்திரமல்ல தங்களுடைய இன்னுயிர்களையும் திறக்கின்ற நிலமை ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக இந்தியாவிலிருந்து எல்லை தாண்டி வருகின்ற ரோளர் பாரிய இழுவை மடி படகுகள் மோதி பாரிய சேதம் ஏற்பட்டுருக்கிறது.

இதே போல இலங்கை கடற்படையினரது படகுகளாலும் வேண்டுமென்றும் விபத்தினாலும் கொல்லப்பட்டு கரை ஒதுங்குகின்ற கடற்றொழிலாளர்களது சடலங்களால் ஒரு பதட்டமான சூழல் அதிகரித்திருக்கிறது.

வடமராட்சி மருதங்கேணி வத்திராயன் பகுதியில் இரண்டு கடற்றொழிலாளர்களது உடல்கள் கரை ஒதுங்கியிருக்கின்றன. இதே போன்று பருத்தித்துறை பொன்னாலை வீதியிலே சுப்பர்மடம் பகுதியிலே வீதியை மறித்து நேற்று முன்தினம் காலை 8:00 மணியிலிருந்து அவர்கள் மறியல் போராட்டத்தை நடாத்திக் கொண்டிருக்கின்றனர்.

பொலிகண்டி வரை வீதி போக்குவரத்து முடக்கப்பட்டிருக்கிறது. இலங்கை அரசாங்கம் இதை பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இலங்கை இந்திய அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈழ மீனவர்களும், தமிழக மீனவர்களும், நடுக்கடலிலே மோதுவதை இல்லாமல் செய்ய வேண்டும்.

தமிழக அரசும் வட மாகாணத்திலே இருக்கக் கூடிய சங்கங்கள், உட்பட மக்கள் பிரதிநிதிகளும் பேச வேண்டும். இப்பொழுது கூட இரண்டு தினங்களுக்கு முன்னர் மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உடனடியாக பேச்சுவார்த்தை நடாத்தி இந்தமாதிரியான பதட்டங்களை குறைக்க முன்வருமாறு கேட்டிருப்பதாக எனக்கு செய்தி அனுப்பியிருக்கிறார்கள்.

இப்பொழுது கூட அவரது உதவியாளர் வழக்கறிஞர் ராதா கிருஷ்ணன் அவர்கள் இன்றிரவு தமிழக முதலமைச்சருடன் பேசிவிட்டு செய்தி தருவதாக சொல்லியிருக்கிறார்.  உடனடியாக ஒரு போர் நிறுத்தம் போல அந்த எல்லையில் இருப்பவர்கள் எல்லை தாண்டக் கூடாது. இல்லாவிட்டால் எங்களுடைய மக்கள் பட்டிணியாலும் பசியாலும் தான் பாதிக்கப்படுவார்கள். மீதி விடயங்களை பேசி ஒரு இணக்கத்தின் அடிப்படையில் தீர்வு காணப்ட வேண்டும். இலங்கை அரசு இதில் அக்கறை காட்டும் என நாங்கள் எதிர்பார்க்க முடியாது. இந்திய மத்திய அரசுக்கும் ஏனோ தானோ நிலவரம்தான். இதிலே அவன் செத்தாலும் இவன் செத்தாலும் தமிழர்கள் என்ற நிலமை இருக்கிறது.

அவர்கள் மிகப்பெரிய எண்ணிக்கையில் இருக்கிறார்கள். பொருளாதாரத்தில் பலமாக இருக்கிறார்கள். தற்போது விலை வாசி அதிகரித்திருக்கும் நிலையில் பனையால் விழுந்தவனை யானை மிரிப்பதாக உள்ளதாகவும் உடனடியாக இந்த பிரச்சினை தீர்க்க வேண்டும். அதற்க்கான முழு முயற்சிகளை உடனடியாக எடுப்போம் என்றார்

தமிழை இந்தியாவின் தேசிய மொழியாக்குங்கள் – மு.க.ஸ்டாலின் கோரிக்கை !

இந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த அதே நேரம் 2000ஆண்டுகளுக்கு மேலான இலக்கண பாரம்பரியம் உடைய மொழிகளுள் ஒன்றாக தமிழ்மொழி தனிச்சிறப்பு பெறுகின்றது. எனினும் ஆட்சி நடவடிக்கைகள் தொடங்கி பல இடங்களில் தமிழ்மொழிக்கான அந்தஸ்து கிடைப்பதில்லை. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

திருப்பதியில் நடைபெற்ற 29 ஆவது தெற்கு மண்டல பேரவையின் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சார்பில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்றார். இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் ஸ்டாலினின் உரையை பொன்முடி வாசித்தார்.

மழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வேண்டியிருந்ததால் கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை என மு.க.ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் மிகவும் பழமையான மொழிகளுள் ஒன்றான தமிழ் இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தேசிய மொழியாக இருக்கிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, தமிழ்மொழியை இந்தியாவின் ஆட்சிமொழிகளுள் ஒன்றாக அறிவிப்பதுடன், திருக்குறளையும் தேசிய நூலாக பிரகடனப்படுத்த வேண்டும் என முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.