முல்லைத்தீவில் இரண்டு லட்சம் ஏக்கர் காணிகளை சுவீகரிப்பு செய்துள்ள வன இலாகா !
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள படையினர், வன இலாகா, வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட அரச கட்டமைப்புக்கள் மக்களுக்குரிய காணிகளை தொடர்ந்தும் அத்துமீறி அபகரிப்புச் செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர், மக்களின் காணிகளை ஆக்கிரமிப்புச் செய்கின்ற திணைக்களங்களைச் சார்ந்தவர்கள் இவ்வாறான பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களுக்கு வருவதில்லை. இந்த அபகரிப்பாளர்கள் இந்த கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறானவர்களின் செயற்பாடுளை மிக வன்மையாகக் கண்டிக்கின்றேன். ஏன் எனில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2009இற்கு முன்னர் வனவளத் திணைக்களத்திடம் 2,22,006 ஏக்கர், 2009ஆம் ஆண்டிற்குப் பின்னர் அடாவடித்தனமாக எமது மக்களின் காணிகளுக்கும் எல்லைக்கல்லிட்டு 4,35,000 ஏக்கர் காணிகள் வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ளது. அந்த வகையில் 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் எமது மக்களின் காணிகளை விடுதலைப் புலிகள் பாதுகாத்தனர். நிலம்தான் எமது உரிமை, நிலம் இல்லையேல் எதுவுமில்லை. அவ்வாறிருக்க எமது மக்களின் காணிகள் அனைத்தையும் அபகரிப்புச்செய்தால்> எமது மக்கள் காணியின்றி தெருவிலா இருப்பது? என்றார்.
இதேவேளை அண்மையில் யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மக்களின் காணி தொடர்பான உரிமைகள் மீறப்பட கூடாது என தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.