முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய்

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் மூடி மறைக்கப்படும் அபாயம்..?

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் மூடி மறைக்கப்படுமா என்ற சந்தேகம் தற்போது எழுகின்றது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியினை நேற்று நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இதனைத் தெரிவித்துள்ளார்.

 

கொக்குதொடுவாய் புதைகுழி தொடர்பான விடயத்தை பார்க்கும் போது ஏற்கனவே இறுதி நாளன்று 17 உடலங்கள் புதைகுழியின் ஊடாக கண்டுபிடிக்கப்பட்டதாகவும், நிறுத்தப்பட்ட தினத்தின் போது ஒக்டோபர் மாதம் நடுப்பகுதி அல்லது பிற்பகுதி அடுத்த அகழ்வு ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

ஆனால் அண்மையில் நிதி போதாத நிலமையை சுட்டிக்காட்டி காலதாமதம் ஆகலாம் என்று ஒரு தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

 

எங்களுக்கு இதில் ஒரு ஐயம் ஏற்படுகின்றது என்னவென்றால் காலதாமதங்கள் , நிதி இல்லை என்று கூறுவதும், ஒக்டோபர் மாதத்திற்கு பிற்போடப்பட்டதும், குறித்த காலப்பகுதி மழை காலமாக இருப்பதாலும் இப்படியே மூடி மறைக்கப்பட்டு விடுமோ என்ற சந்தேகம் ஒன்று ஏற்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த நிலையில், சட்டத்தின் ஆட்சியை நடத்துமாறும் வெளிப்படைத்தன்மையை மக்களோடு பேணுமாறு மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

 

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுகள் – பின்னிப் பிணைந்த நிலையில் பல உடல்கள் !

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணியானது ஏழாவது நாளாக இன்று தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

குறித்த அகழ்வாய்வின் போது ஆறு மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இன்று ஏழாவது நாள் தொடர்சியாக அகழ்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த புதன்கிழமை (06) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், ஏழாவது நாள் அகழ்வாய்வுகள் இன்று (13) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, தடயவியல் காவல்துறையினர், கிராம சேவையாளர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும், தொல்லியல் ஆய்வாளர் பரமு புஷ்பரட்ணம் தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதுவரை துப்பாக்கிச் சன்னங்கள், விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயன்படுத்தும் இலக்கத் தகடு, உடைகள், கழிவு நீரை சுத்திகரிக்கும் இயந்திரம் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஆறாம் நாள் அகழ்வாய்வுகள் நேற்று (13) முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவ , தொல்லியல் ஆய்வாளர் பரமு புஷ்பரட்ணம், தடயவியல் காவல்துறையினர், கிராம சேவையாளர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அகழ்வுப் பணியின் இறுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா “ஒரு உடற்பாகம் முழுமையாகவும் இன்னொரு உடற்பாகம் பகுதியளவில் மீட்கப்பட்டதாகவும் ஏற்கனவே மீட்கப்பட்ட ஐந்து உடற்பாகங்களுடன் ஆறு உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும்” தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த பகுதியில் துப்பாக்கிச் சன்னம் ஒன்றும், கழிவு நீரை சுத்திகரிக்கும் உபகரணம் ஒன்றும் தடயப்பொருட்களாக எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அகழ்வுப் பணியில் உடலங்களை அடையாளப்படுத்துவதில் கடினத்தன்மை காணப்படுவதாகவும் ஒன்றன் மேல் ஒன்றாக பல உடல்கள் பின்னிப் பிணைந்து இருப்பதாலும் இந்தநிலை தோன்றியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொக்குத்தொடுவாயில் த.வி.புலிகளின் பெண் போராளிகளின் எச்சங்கள்..? – தகவலை மறைக்கும் ஆய்வுக்குழு..?

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியிலிருந்து இன்றைய நான்காவது நாள் அகழ்வின் போது சில முக்கிய தடையப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இருப்பினும் இது தொடர்பாக அதிகார பூர்வமாக கருத்து தெரிவிப்பதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் செப்டம்பர் (06) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

நான்காம் நாள் அகழ்வாய்வுகள் இன்று முல்லைத்தீவு நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினர் மற்றும், தொல்லியல் ஆய்வாளர் பரமு புஷ்பரட்ணம், யாழ்ப்பாணம் சட்டவைத்திய அதிகாரி ஆகியோரால், சட்டத்தரணி எஸ்.துஸ்யந்தி ஆகியோரின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த மனிதப் புதைகுழி இரண்டாம் நாள் அகழ்வாய்வின் போது துப்பாக்கி சன்னங்கள் என சந்தேகிக்கப்படும் உலோக துண்டுகள், துப்பாக்கி சன்னங்கள் துளைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ஆடைகள் தடையப்பொருட்களாக மீட்கப்பட்டிருந்தன.

மூன்றாம் நாள் அகழ்வில் தமிழீழ விடுதலை புலிகளின் பெண் போராளிகள் உடையது என சந்தேகிக்கப்படும் உடல் எச்சங்கள் இரண்டு முழுமையாக மீட்கப்பட்டதுடன் குறித்த உடல்களுடன் காணப்பட்ட ஆடைகளில் சில இலக்கங்களும் பொறிக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் இன்றையதினம் நான்காவது நாள் அகழ்வின் போது சில முக்கிய தடையப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும், இது தொடர்பாக அதிகார பூர்வமாக கருத்து தெரிவிப்பதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அடையாள இலக்கத் தகடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

 

இருந்த போதிலும் இது தொடர்பில் அதிகார பூர்வமாக தகவல் வெளியிட இன்று பொறுப்பாக இருந்த யாழ் சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அகழ்விற்கு பிரதானமாக செயற்படுகின்ற சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவா இன்று விடுமுறையில் சென்றுள்ளதாக தெரியவருகின்றது.

இன்றும் குறித்த மனிதப் புதைகுழி வளாகத்தை பார்வையிடுவதற்கென யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் குழு ஒன்று வருகை தந்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் பங்குகொள்ளும் சட்டத்தரணிகளுக்கு புலனாய்வு பிரிவினரால் அச்சுறுத்தல் !

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய்மத்தி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் பங்குகொள்ளும் சட்டத்தரணிகளுக்கு புலனாய்வு பிரிவினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது

 

இன்று(31) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் இடம்பெற்ற நிலையிலேயே இந்த விடயம் நீதிமன்றத்தின் கவனத்துக்கு சட்டத்தரணிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.

குறிப்பாக இந்த வழக்கு விசாரணைகளுடன் தொடர்புபட்ட சட்டத்தரணிகள் கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித புதைகுழி உள்ள பகுதிக்கு கடந்த 10.08.2023 ம் திகதி கள விஜயம் மேற்கொண்டிருந்த போது அங்கு விஜயம் செய்த சட்டத்தரணிகள் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் பல்வேறு தரப்பினரிடமும் விசாரித்ததோடு குறித்த பகுதி கிராம அலுவலரிடமும் அங்கு சென்ற சட்டத்தரணிகளின் பெயர் என்ன எங்கிருந்து வந்தார்கள் என்பது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்திருந்ததாகவும் அவர்கள் வருகை தந்த வாகன இலக்கங்கள் உள்ளிட்ட தகவல்களை வழங்கி தங்களது விவரங்களை திரட்டி இவ்வாறு புலனாய்வு பிரிவினர் தமக்கு அச்சுறுத்தல் விடுத்து வருவதாக சட்டத்தரணிகளால் மன்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

குறித்த சட்டத்தரணிகள் தொடர்பாக கிராம அலுவலரிடமும் புலனாய்வு பிரிவினர் வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்ததாக கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலரும் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான நிலையில் சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம் ஏ சுமந்திரன், புலனாய்வு பிரிவினர் என்பவர்கள் இரகசியமாக தகவல்களை பெற்றுக் கொள்பவர்கள் இவர்கள் வெளிப்படையாக வந்து விசாரணைகள் செய்வது என்பது அச்சுறுத்தல் என்பதை மன்றின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

இது தொடர்பாக கொக்குளாய் காவல் நிலைய பொறுப்பதிகாரி குறித்த விடயமாக சட்டத்தரணிகளை முறைப்பாடு ஒன்றை பதிவு செய்யுமாறும் தாங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்

 

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் நீதிமன்றத்தில் அறிக்கையிடப்பட்டு இருப்பதன் அடிப்படையில் அதனை வைத்துக்கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதிபதி கொக்குளாய் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி தொடர்பில் நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

சர்ச்சைக்குறிய முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை நேற்று (17) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

தொல்பொருள் திணைக்களத்தினர், சட்டவைத்திய அதிகாரி அடங்கிய குழுவினர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் , முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.பார்த்தீபன் தலைமையில் எடுத்துக்கொள்ளப்பட்ட இவ்வழக்கு விசாரணையில், அகழ்வுப்  பணி தொடர்பான பாடிட்டு அறிக்கையினை தொல்பொருள் திணைக்களத்தினர் சமர்ப்பித்தனர் .

இதனைத் தொடர்ந்து  குறித்த வழக்கு விசாரணையை  இம்மாதம்  31 ஆம் திகதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இது குறித்து சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் ஊடகங்களுக்கு  கருத்துத் தெரிவிக்கையில் ” அகழ்வு பணிக்காக முல்லைத்தீவு கச்சேரிக்கு இதற்கான நிதி கிடைக்கப் பெறாத நிலையில் உடனடியாக அகழ்வு பணியை மேற்கொள்ள முடியாது இருப்பதாக சட்ட வைத்திய அதிகாரியினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மன்றில் பாதீட்டினை தாக்கல் செய்து அகழ்வு பணியினை மேற்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளனர்.  பேராசிரியர் புஷ்பரெட்ணம்அவர்களும் இந்த அகழ்வு பணியில் ஈடுபடுவதற்கு தனது சம்மதத்தை தெரிவித்து இருந்த நிலையில் நிதி கிடைக்காத அடிப்படையில் அகழ்வு பணி மேற்கொள்ளப்பட முடியாதுள்ளது.

எனவே இந்த வழக்கு இந்த மாதம் 31 ஆம் திகதி எடுத்துக் கொள்ளப்படவுள்ளதுடன்  அத்தோடு இன்று நீதிமன்றத்தில் பிரசன்னமாகாத  பிரதேச செயலாளர் மாவட்ட செயலக அதிகாரிகள் பிரதேச சபையினர் மின்சார சபையினர் அடுத்த தவணை நீதிமன்றத்தில் கட்டாயம் பிரசன்னமாகி  அகழ்வு பணியினை மேற்கொள்வதற்கான ஆவண செய்யுமாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தோண்டும் பணியை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தோண்டும் பணியை தற்காலிகமாக நிறுத்துமாறு முல்லைத்தீவு நீதிமன்றில் இருந்து கடந்த 12ஆம் திகதி உத்தரவு கிடைக்கப்பெற்றிருந்தது.

சர்வதேச தரம் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு சுரங்கம் தோண்டுவதற்கு ஏற்ற சூழல் உருவாகும் வரை இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுகள் முறையான நியமங்கள் மற்றும் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக இல்லை எனவும், அவ்வாறான மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பல தரப்பினர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

அகழ்வுப் பணிகளைத் தொடருமாறு அண்மையில் புதைகுழிக்கு அருகில் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

எவ்வாறாயினும், இந்த இடத்தில் மூன்று நாட்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது, புலிகளின் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் 16 மனித எலும்புகள், பல புலி சீருடைகள், ஆயுதங்கள், சில வெடிகுண்டுகள் மற்றும் பிற இராணுவ உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

 

குறித்த பொருட்கள் தற்போது முல்லைத்தீவு நீதிமன்றில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதுடன் கொக்கிளாய் மற்றும் முல்லைத்தீவு பொலிஸ் நிலையங்கள் மற்றும் முல்லைத்தீவு பாதுகாப்பு திணைக்களம் இணைந்து கொக்குத்தொடுவாய் பாரிய புதைகுழியை அகழ்வு செய்து வருகின்றனர்.

“எடுத்ததற்கெல்லாம் சர்வதேச விசாரணையை கேட்காதீர்கள்.” – இலங்கை பாதுகாப்பு அமைச்சு

“இலங்கை இராணுவ முகாம்கள் அமைந்துள்ள பகுதிகளில் கண்டுபிடிக்கப்படும் மனித புதைகுழிகள் தொடர்பாக சர்வதேச கண்காணிப்பை கோருவது சிறுபிள்ளை தனமானது.எடுத்ததற்கெல்லாம் சர்வதேச விசாரணையை கேட்காதீர்கள்.”  என இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன வலியுறுத்தியுள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் குறித்து சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன், சர்வதேச கண்காணிப்பு அவசியம் என்றும் தமிழ் அரசியல்வாதிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழ் அரசியல்வாதிகளின் இந்தக் கோரிக்கை குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்தனவை தொடர்புகொண்டு வினவிய போது, அகழ்வு பணிகளை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறியுள்ளார்.

“வன்னிப் பிரதேசம் யுத்தம் நடந்த பூமி எனவும் அந்தப் பகுதியிலேயே மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதிமன்ற உத்தரவுக்கு அமையவே அந்த புதைகுழி தோண்டப்பட்டு, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் ஜெனரல் கமல் குணரட்ன குறிப்பிட்டுள்ளர்.

சம்பவங்கள் நடக்கும் இடங்களில் அரச புலனாய்வாளர்களின் பிரசன்னம் இருக்கும் என்பதுடன், அதனை தவிர்க்க முடியது எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.

அது தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும் என கூறியுள்ள அவர், மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் நீதிமன்ற உத்தரவில் காவல்துறையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அதற்கான பணிகள் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய நடைபெறும் எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ன மேலும் கூறியுள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் சர்வதேச நியமங்களுக்கு அமைய நடைபெற வேண்டும் – மக்கள் போராட்டம் !

அண்மையில் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளில்  சர்வதேச கண்காணிப்பாளர்கள் அல்லது சர்வதேச நிபுணத்துவம் பெற்றவர்களை கொண்டு சர்வதேச நியமங்களுக்கு அமைய  இந்த அகழ்வு பணி மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக இன்று கவலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் 2500 நாட்களைக் கடந்து தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற நிலைமையில் புதன்கிழமை (12)  முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது

குறிப்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களுடைய உறவுகளை தேடி வருகின்ற நிலைமையில் இறுதி யுத்தத்தில் சரணடைந்ததாக சந்தேகிக்கப்படுபவர்களுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற கொக்குத்தொடுவாயில் அடையாளம் காணப்பட்ட மனித புதைக்குழி அகழ்வு பணிகள் சர்வதேச நியமங்களுக்கு முரணாக இடம்பெற்று வருவதாகவும் எனவே சர்வதேச நிபுணத்துவம் பெற்றவர்களை கொண்டு சர்வதேச தலையீட்டுடன் குறித்த அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு குறித்த உடலங்கள் யாருடையது என்பது தொடர்பாக கண்டறியப்பட வேண்டும் எனவும் குறித்த செயற்பாடு சர்வதேச கண்காணிப்புக்கு மத்தியில் இடம் பெற வேண்டும் என்பதையும் வலியுறுத்தி குறித்த  போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.