முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா

முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா

கருணா அம்மான் இலங்கை போர்க்குற்றவாளிகள் நான்கு பேருக்கு பிரித்தானியா தடை !

கருணா அம்மான் இலங்கை போர்க்குற்றவாளிகள் நான்கு பேருக்கு பிரித்தானியா தடை !

 

2009 ஆம் ஆண்டு முடிவடைந்த இலங்கை உள்நாட்டுப் போரின் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கையின் முன்னாள் மூத்த இராணுவத் தளபதிகள் மூவருக்கும் மற்றும் ஒரு முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளிலிருந்து பிரிந்து சென்ற தளபதி ஒருவர் மீதும் என பிரித்தானியா நேற்று திங்கட்கிழமை 24 ஆம் திகதி மார்ச் தடைகளை விதித்துள்ளது.

அந்த வகையில் தடை செய்யப்பட்ட நால்வரும் பிரித்தானியாவுக்கு பயணம் செய்வதற்கான தடைகள் மற்றும் சொத்து முடக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகோடா மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூர்யா ஆகியோர் மீது இத்தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும் இத்தடை போடப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் பேச்சு வார்த்தைகள் இடம்பெற்ற வேளையில் கருணா விடுதலைப் புலிகளில் அமைப்பிலிருந்து பிரிந்து சென்றிருந்தார். பின்னர் போர் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலத்தில் கருணா இலங்கை இராணுவத்திற்காகப் பணியாற்றும் ஒரு துணை ராணுவக் குழுவை வழிநடத்தினார்.

அரசாங்கப் படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கும் இடையிலான 26 ஆண்டுகாலப் போரில் 80,000 – 100,000 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது. ஆனால் போரில் கொல்லப்பட்ட போராளிகள் உட்பட மக்களின் எண்ணிக்கை அதிகம் என கூறப்படுகிறது.

போர் முடிவடைந்து நீண்ட காலத்திற்குப் பிறகும், இலங்கையின் இராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகள் மீது நீதிக்கு புறம்பான கொலைகள், சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறை உள்ளிட்ட போர்க்குற்றங்கள், வலிந்து காணாமல் ஆக்குதல், கடத்தல்கள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அதேநேரம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் போரில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீதும் போர்க்குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளது.

இலங்கை அரசு தொடர்ந்தும் போர்க்குற்றச்சாட்டுக்களை மறுத்து வருகிறது. தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கையான சர்வதேச விசாரணைக்கும் ஒத்துழைப்பை வழங்க இலங்கை தயாராக இல்லை. அதேநேரம் இலங்கை அரசு இவ் விவகாரத்தில் உள்நாட்டு பொறிமுறைக்குள் விசாரணை நடத்த தயாராக உள்ளதாக கூறி வருகிறது. தமிழ்மக்களைப் பொறுத்தவரை உள்ளக விசாரணையில் தமக்கு நம்பிக்கை இல்லை என்று சர்வதேச விசாரணையையே கோருகிறார்கள்.

பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் லாம்மி ஒரு அறிக்கையில், “இலங்கையில் மனித உரிமைகளுக்கு இங்கிலாந்து அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது, உள்நாட்டுப் போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்புக்கூறலைக் கோருவது உட்பட, அவை இன்றும் சமூகங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன” என்று கூறியுள்ளார்.

பிரித்தானியா இலங்கையில் உள்நாட்டுப் போரில் போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு தடை விதித்ததை தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என 15 வருடங்களாக போராடியவர்களுக்கு கிடைத்த வெற்றியாக கொண்டாடுகிறார்கள். மறுபக்கம் என்பிபி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.