முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

தணியாத அனுர அலை – அச்சத்தில் கொள்கை பேதமின்றி கூட்டணி அமைக்கின்றனர் வீணை – வீடு – சங்கு குழுவினர் !

தணியாத அனுர அலை – அச்சத்தில் கொள்கை பேதமின்றி கூட்டணி அமைக்கின்றனர் வீணை – வீடு – சங்கு குழுவினர் !
சங்கு சின்னத்தின் பரந்துபட்ட கூட்டணியை அமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தொடக்கம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வரை இந்தக் கூட்டணியில் இணைய முடியும் என்று ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அண்மையில் தெரிவித்திருந்தார். அது போல தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சீ.வி.கே சிவஞானமும் ஈ.பி.டி.யுடன் இணைந்து செயலாற்ற அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் இதற்கு சாதகமான ஓர் பதிலை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா வழங்கியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் கட்சிகள் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒன்றிணைந்து எதிர்கொள்வது தொடர்பில் பேசுவதற்கு உத்தியோகபூர்வமாக எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை, மக்கள் நலனுக்காக ஒன்றிணைய அழைப்பு விடுத்தால் எனது பங்களிப்பு நிச்சயமாயிருக்கும் என தெரிவித்தார்.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கிய நான்கு கட்சிகளும் தமிழினத்தின் நலன் கருதி மீண்டும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், ஏனைய கட்சிகளின் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதும் தமிழர் அரசியல் தரப்பில் பேசுபொருளாக மாறியுள்ளது.
 இதேவேளை வடக்கு – கிழக்கில் இன்னமும் என்.பி.பி கட்சி மீதான மக்கள் அலை தணிந்தபாடில்லை என்கின்றனர் அரசியல் அவதானிகள். கடந்த காலங்களில் மத்தியில் ஆட்சி அமைத்த ரணில் மைத்திரி கூட்டணி, ராஜபக்ச தரப்பு ஆகியோருடன் கூட்டணி அமைத்தும் தமிழ்தேசிய தரப்பினரும், ஈ.பி.டி.பியினரும் தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகள் தொடங்கி, அபிவிருத்தி திட்டங்கள் என எந்த ஆக்கப்பூர்வமான விடயங்களையும் மேற்கொண்டிருக்கவில்லை. ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சுமத்தும் அரசியலையே முன்னெடுத்திருந்தனர். இவ்வாறான நிலையிலேயே கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களின் முழுமையான ஆதரவும் தேசிய மக்கள் சக்தி மீது திரும்பியிருந்தது. எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான என்.பி.பிக்கு தமிழ் மக்களின் ஆதரவு அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் என்.பி.பி அலையை சமாளிக்க கொள்கை பேதமில்லாமல் வடக்கின் அரசியல் கட்சிகள் செயற்படுவதாக பலரும் தெரிவித்து வருகின்றனர்.