மாகாண சபை தேர்தல்கள் குறித்து சகல கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டும் – தேர்தல் ஆணைக்குழு
“மாகாண சபைத் தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளோம்” என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.
அண்மைய தேர்தல்கள் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், “உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு தற்போது அவை விசாரணைகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பு திகதியை நிர்ணயிக்க முடியும்.
மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் காணப்படும் சிக்கல்களுக்கு தீர்வு காண வேண்டிய பொறுப்பு பாராளுமன்றத்துக்கு உண்டு என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தியுள்ளோம். தேர்தல் முறைமை தொடர்பான பாராளுமன்றத் தெரிவுக்குழுக்களில் கலப்புத் தேர்தல் முறைமை குறித்து பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம்.
காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். காணப்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வு கண்டு மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்தும் சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கும், பாராளுமன்றத்துக்கும் உண்டு” என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்