மனித உரிமைகள் கண்காணிப்பகம்

மனித உரிமைகள் கண்காணிப்பகம்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் -மனித உரிமைகள் கண்காணிப்பகம்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

 

அத்துடன், குறித்த சட்டத்தை நீக்கும் வரையில், அதன் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என அந்த கண்காணிப்பகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

1983 முதல் 2009 ஆம் ஆண்டு வரையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் இறந்தவர்களை நினைவு கூர்ந்தமைக்காக 9 தமிழர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

 

சிறுபான்மை சமூக உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை தன்னிச்சையாக தடுத்து வைத்து சித்திரவதை செய்வதற்கு நீண்டகாலமாக இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டு வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

 

இந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தை, மாற்றியமைப்பதாக இலங்கை அரசாங்கம் சர்வதேச நட்பு நாடுகள், வர்த்தக பங்காளிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு பலமுறை உறுதியளித்துள்ளது.

 

எனினும் இதுவரை அது நடைமுறைக்கு வரவில்லை. ஏற்கனவே தொடர்ச்சியான அரசாங்க பாகுபாட்டை எதிர்கொள்ளும் ஒரு சமூகத்தை மேலும் இது ஓரங்கட்டுவதாக அமைந்துள்ளதென என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் துணை ஆசிய இயக்குநர் மீனாட்சி கங்குலி கூறியுள்ளார்

 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ‘நல்லிணக்கம்’ பற்றி கருத்துரைக்கின்ற போதிலும், அவரது அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இனப்பிளவுகளை ஆழப்படுத்த மட்டுமே உதவுவதாக அவர் விமர்சித்துள்ளார்.

சட்டவிரோதமாக புலம்பெயர்வோர் மீது வெடிகுண்டு வீசி கொலைசெய்யும் அரேபியா !

யெமென் வழியாக சவுதி அரேபியாவிற்கு சட்டவிரோதமாக புலம்பெயர்வோர் மீது அந்நாட்டு இராணுவம் வெடிகுண்டு வீசி தாக்கி வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

எதியோப்பியா போன்ற ஆபிரிக்க நாடுகளில் இருந்து தொழில்வாய்ப்பு தேடி அரேபியாவுக்குள்  நுழைபவர்கள் மீதே இவ்வாறான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சவுதி அரேபிய இராணுவத்தினர் அவர்களை கண்மூடித்தனமானச் சுட்டு கொல்வதாகவும், கடந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் மட்டும் 430 பேர் இரக்கமின்றிக் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IMF கடன் வசதியினால் இலங்கை மக்களின் உரிமைகள் பறிபோகும் நிலை – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கடன் வசதியினால் இலங்கை மக்களின் உரிமைகள் பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

வருமானத்தை அதிகரிக்கும் கொள்கைகளால் பொருளாதார, சமூக உரிமைகள் மேலும் சிதைக்கப்படாமல் காக்கப்பட வேண்டும் எனவும் ஊழல் எதிர்ப்பு சீர்திருத்தங்கள் மூலம் பொறுப்புக்கூறலை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

செல்வந்தர்கள் சிலருக்கு நன்மை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சட்டங்களே இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அன்றாடம் வாழ்வாதாரத்திற்காக போராடும் மக்களின் மீது சுமையை ஏற்படுத்தக்கூடாது எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட அமைதிப்போராட்டக்காரர்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும். – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

கொழும்பில் கடந்த சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்மீது பொலிஸாரால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமையையும் 84 பேர் கைதுசெய்யப்பட்டமையையும் கண்டித்திருக்கும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், இதன்மூலம் எதிர்ப்புக்களைப் பொறுத்துக்கொள்ளமுடியாத இலங்கை அரசாங்கத்தின் போக்கு மீளுறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரித்திருக்கின்றன.

அரசாங்கத்தினால் நிகழ்த்தப்படும் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்புத்தெரிவித்து சோசலிஸ இளைஞர் சங்கத்தினால் கடந்த சனிக்கிழமை கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணியைக் கலைப்பதற்கு பொலிஸாரால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதுடன் தடியடிப்பிரயோகமும் நடத்தப்பட்டது.

இதுகுறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் இடைக்கால நிறைவேற்றுப்பணிப்பாளர் ரிறானா ஹஸன் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்:

உலகளாவிய ரீதியில் சிவில் சமூக இடைவெளியை ஒடுக்குவதற்கும், போராட்டக்காரர்களை அடக்குவதற்கும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களை அமைதிப்படுத்துவதற்கும் அரசாங்கங்கள் பயங்கரவாதத்திற்கு எதிரான நடைமுறைகளைப் பயன்படுத்துவதை அவதானிக்கமுடிகின்றது.

அந்தவகையில் இவ்வார இறுதியில் (கடந்தவார இறுதி) அதற்கான சிறந்த உதாரணமாக இலங்கை அமைந்திருக்கின்றது. இருப்பினும் அதன்மூலம் இன்னமும் மக்களை நிறுத்தமுடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இவ்விடயம் தொடர்பில் சர்வதேச மன்னிப்புச்சபையின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:

இன்றைய தினம் (சனிக்கிழமை) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 84 பேர் கைதுசெய்யப்பட்டிருப்பதன் மூலம் எதிர்ப்புக்களைப் பொறுத்துக்கொள்ளமுடியாத இலங்கை அரசாங்கத்தின் போக்கு மீளுறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இருப்பினும் இந்த அமைதிப்போராட்டக்காரர்கள் அரசின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவே போராடுகின்றார்கள். எனவே கைதுசெய்யப்பட்ட அமைதிப்போராட்டக்காரர்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும்.

அதுமாத்திரமன்றி ஆர்ப்பாட்டங்களுக்கு மேலும் தடையேற்படுத்தும் வகையில் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள ‘அதியுயர் பாதுகாப்பு வலய’ உத்தரவு தொடர்பிலும் நாம் மிகுந்த கரிசனை கொண்டிருக்கின்றோம். அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதென்பது ஓர் மனித உரிமையாகும் என்று அப்பதிவில் மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

இலங்கையில் இந்திய இராணுவம் மேற்கொண்ட குற்றங்கள் தொடர்பிலும் விசாரணை வேண்டும் – ஐ.நாவில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தல் !

இலங்கையில் இந்திய இராணுவத்தை நிலைநிறுத்திய போது இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பிலும்  ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை முன்வைத்துள்ள பொறிமுறைகள் மூலம் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என நான்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் கோரியுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலியை மேற்கோள் காட்டி The Island  பத்திரிகை இது தொட்பாக நேற்று (21) செய்தி வௌியிட்டுள்ளது.

மோதலின் போது இடம்பெற்ற சம்பவங்கள்  உள்ளிட்ட  அனைத்து சர்வதேச குற்றங்களுக்கும் தீர்வு காண இலங்கை மீது வலுவான தீர்மானத்தை கோருவதாக மீனாக்ஷி கங்குலி தெரிவித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இந்திய படையினர் போர் நிறுத்த உடன்படிக்கையை அமுல்படுத்துவதற்காக அனுப்பப்பட்டிருந்த போது இடம்பெற்ற முறைகேடுகள் முறையாக விசாரிக்கப்பட்டு, பொறுப்புக்கூறல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்  1987 ஜூலை முதல் 1990  மார்ச் வரையான காலப்பகுதியில்  இந்திய இராணுவம் அட்டூழியங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டால்,   இந்தியாவின் பொறுப்புக்கூறல் எவ்வாறு அமையும் என முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தபோதே  மீனாக்ஷி கங்குலி இந்த கருத்துகளை வௌியிட்டுள்ளார்.

சர்வதேச மன்னிப்புச் சபை, UN Advocacy, FORUM-ASIA, மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) சார்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடுமையான உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கும் இராஜாங்க அமைச்சு பதவிகளை வழங்கியுள்ள ரணில் – மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு !

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் புதிய நிர்வாகம் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் தண்டனையின்மையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் உறுதியளிக்கவில்லை என்பதை உணர்த்தியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நேற்று முன்தினம்  37 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.

அவர்களில் மூன்று பேர் கடுமையான உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் என குற்றம் சுமத்தப்பட்டவர்கள் என்று கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி சுட்டிக்காட்டியுள்ளார்.

பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், லொஹான் ரத்வத்தே, சனத் நிஷாந்த ஆகியோர் மீதே இவ்வாறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், மோசமான அமைச்சு நியமனங்கள் மற்றும் அமைதியான எதிர்ப்புக்களுக்கு அதன் கடுமையான பிரதிபலிப்பு, இலங்கையின் உரிமைகள் நிலைமை வேகமாக வீழ்ச்சியடைந்து வருகின்றமை தொடர்பில், இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

‘சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சிக்கின்றது.”- மனித உரிமைகள் கண்காணிப்பகம் விசனம் !

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் நிகழ்த்தப்படும் மீறல்களை உடனடியாக முடிவிற்குக்கொண்டுவருமாறு சர்வதேச சமூகத்தினால் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டுவந்த நிலையில், கடந்த வாரம் பாராளுமன்றத்தில் மேலோட்டமான திருத்தங்களை நிறைவேற்றியதன் ஊடாக அனைவரையும் ஏமாற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் விசனம் வெளியிட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் மிகமோசமான சரத்துக்கள் தொடர்பில் அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள திருத்தங்களில் அவதானம் செலுத்தப்படவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்களும் ஐக்கிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முன்மொழியப்பட்ட அந்தத் திருத்தங்களை உடனடியாக நிறைவேற்றவேண்டும் என்பதற்காக, மனித உரிமைகள் அமைப்புக்களின் ஆலோசனைகளுக்கு இடமளிக்கக்கூடியவாறான உபகுழு ஆராய்வை அரசாங்கம் தவறவிட்டுள்ளது, அதன்விளைவாக அச்சட்டத்தை சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு அமைவாக மாற்றியமைக்க்ககூடியவாறான முக்கிய சந்தர்ப்பம் நழுவவிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் கடந்த நான்கு வருடகாலமாக நபர்களைத் தன்னிச்சையாகத் தடுத்துவைப்பதஙற்கும் சித்திரவதைகளுக்கு உட்படுத்துவதற்கும் சிறுபான்மையினத்தவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளை இலக்குவைப்பதற்கும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பயன்படுத்திவந்திருக்கின்றது.

தற்போது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பினும்கூட, எவ்வித ஆதாரங்களையும் சமர்ப்பிக்காமல் நபர்களைப் பலவருடங்களுக்குத் தன்னிச்சையாகத் தடுத்துவைப்பதற்கு அச்சட்டம் இடமளிப்பதுடன் பிணை வழங்கலுக்கான வாய்ப்பையும் இல்லாமல்செய்கின்றது.

அத்தோடு சித்திரவதைகளிலிருந்து பாதுகாப்புப்பெறுவதற்கு ஏதுவான அர்த்தமுள்ள திருத்தங்கள் இதில் உள்ளடக்கப்படவில்லை.

தற்போது அத்தியாவசியப்பொருட்களுக்கான தட்டுப்பாட்டிற்கும் பணவீக்கத்திற்கும் வழிவகுத்திருக்கக்கூடிய கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் முறையற்ற பொருளாதார நிர்வாகத்திற்கு எதிராகப் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இப்போது இடம்பெற்றுவரும் மீறல்கள் தொடர்பில் பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாகியிருக்கக்கூடிய அரசாங்கம், சர்வதேசத்திடமிருந்து நிதியுதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக மனித உரிமைகள் விவகாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதுபோன்று காண்பிக்க முயற்சிக்கின்றது.

இலங்கைவாழ் மக்கள் உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களின் தட்டுப்பாட்டிற்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு சர்வதேச சமூகத்தின் உதவி தேவைப்படுகின்றது.

இருப்பினும் அரசாங்கம் தமது வெளிநாட்டு பங்காளிகள் நியாயமான மனித உரிமைசார் மறுசீரமைப்புக்களையும், மீறல்களை முடிவிற்குக்கொண்டுவந்து நீதியை நிலைநாட்டுவதற்கான அர்த்தமுள்ள நடவடிக்கைகளையும் எதிர்பார்க்கின்றார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“இலங்கையில் இறுதிப்போரில் பொதுமக்கள் மீதான கண்மூடித்தனமான தாக்குதல்கள், கொலைகள், கற்பழிப்புகள் உட்பட ஏராளமான போர்க்குற்றங்களுக்கு ராஜபக்ஷக்களே பொறுப்புடையவர்கள் ” – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

“இலங்கையில் இறுதிப்போரில் பொதுமக்கள் மீதான கண்மூடித்தனமான தாக்குதல்கள், கொலைகள், கற்பழிப்புகள் உட்பட ஏராளமான போர்க்குற்றங்களுக்கு ராஜபக்ஷக்களே பொறுப்புடையவர்கள் ” என உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் , இலங்கையின் மனித உரிமை மீறல்களை உலகம் புறக்கணித்து நடக்காது என்பதை ராஜபக்ச அரசுக்கு நிரூபிக்கும் வகையில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இம்முறை நிறைவேற்றப்படும் தீர்மானம் அமைய வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள 93 பக்கங்களைக் கொண்ட அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

திறந்த காயங்கள் மற்றும் பெருகி வரும் பேராபத்துக்கள் கடுமையான துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்புக்கூறலைத் தடுக்கும் இலங்கை’ என்ற தலைப்பில் ஐக்கிய அமெரிக்கா, நியூயோர்க்கைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையை வழங்கும் விதமாக ஐ.நாவின் தீர்மானம் அமைய வேண்டும்.

ஐ.நா. மனித உரிமைகள் சபை அமர்வில் இலங்கையில் நடைபெற்ற சர்வதேச குற்றங்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் வகையிலும், தற்போது நடைபெற்று வரும் துஷ்பிரயோகங்களைக் கண்டிக்கும் வகையிலும் குறித்த தீர்மானம் அமைய வேண்டும்.

இலங்கையின் மனித உரிமை மீறல்களை உலகம் புறக்கணித்து நடக்காது என்பதை ராஜபக்ச அரசுக்கு நிரூபிக்கும் வகையில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இம்முறை நிறைவேற்றப்படும் தீர்மானம் அமைய வேண்டும்.

இலங்கை அரசின் நீதி மீதான தாக்குதல்கள் இன்றும் எதிர்காலத்திலும் மனித உரிமை மீறல்கள் அதிகரிக்கும் அபாயத்தைக் காட்டுகின்றது.

இலங்கையில் இறுதிப் போரின்போது, பொதுமக்களைப் பாதுகாக்கும் ஐ.நாவின் நெறிமுறை சார்ந்த தோல்வி அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மீதான கண்மூடித்தனமான தாக்குதல்கள், கொலைகள், கற்பழிப்புகள் உட்பட ஏராளமான போர்க்குற்றங்களுக்கு அப்போதைய ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்‌சவும், அப்போதைய பாதுகாப்பு செயலாளரான கோட்டாபய ராஜபக்‌சவும் நேரடிப் பொறுப்புடையவர்கள்.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகப் பதவியேற்ற கோட்டாபய ராஜபக்ச, போர்க்குற்றங்கள் உள்ளிட்ட பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் உடைய அதிகாரிகளைப் பதவிகளுக்கு நியமித்ததோடு, உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் போன்றவற்றை மறுத்து வருகின்றார்.

இலங்கையின் ஊடகங்கள் சுய தணிக்கையோடு செயற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இலங்கை மீது இம்முறை கடுமையான தீர்மானமொன்றை நிறைவேற்றத் தவறுவது, உலகெங்கிலும் உள்ள அநியாயக்காரர்களுக்கு மோசமான செய்திகயைக் கொண்டு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசாங்கம் இன, மத சிறுபான்மையினரை ஒடுக்கும் வகையிலான புதிய கொள்கைகளை அமுல்படுத்தும் – மீனாக்ஷி கங்குலி

இலங்கையில் கடந்த ஐந்தாம் திகதி நடைபெற்ற தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாரிய வெற்றியினைப் பெற்றுக்கொண்டது.  இதனைத் தொடர்ந்து அதன் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றார்.
மேலும், புதிய அமைச்சரவையும் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் அரசாங்க கொள்கைகளை சவாலுக்கு உட்படுத்தும் துறைகள் மீதான அச்சுறுத்தல்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க கொள்கைகளை சவாலுக்கு உட்படுத்தும் துறைகள் மீதான அச்சுறுத்தல்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கலாம் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்றுக்கொண்ட வெற்றியினைத் தொடர்ந்து குறித்த அமைப்பு இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளது.

அதனடிப்படையில், சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தென்னாசிய இயக்குநர் மீனாக்ஷி கங்குலி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“புதிய அரசாங்கம் இன, மத சிறுபான்மையினரை ஒடுக்கும் வகையிலான புதிய கொள்கைகளை அமுல்படுத்துவதுடன் அதற்கான நீதி கோரும் அமைப்புகளின் மீது அடக்குமுறைகளைப் பிரயோகிக்கும்.
ஜனாதிபதி கோட்டாபய ரடாஜபக்ஷ 2019ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்து கடந்த 2005 முதல் 2015 வரையான காலப்பகுதியில் பல யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை தனது அமைச்சரவையில் நியமிக்கிறார்.
அவரது, சகோதரர் மஹிந்த ராஜபக்ஷவும் தற்போது பாதுகாப்புச் செயலாளராக உள்ள கமால் குணரத்ன மற்றும் தற்போதைய இராணுவத் தளபதி சவேந்திர சில்வா ஆகியோரைப் போன்று மோசமான யுத்தக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்பட்டவர்.
நாட்டில் நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் சிவில் சமூகத்தின் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தும் ஐக்கிய நாடுகள் சபையின் 30/1 தீர்மானத்தை ராஜபக்ஷ அரசாங்கம் வெளிப்படையாகவே நிராகரித்துள்ளது.
எவ்வாறாயினும் மனித உரிமைகள் கண்காணிப்பகம், இலங்கையில் ஒருமித்த தீர்வு ஒன்றை எட்டுவதற்கு அரசாங்கம் உடன்பட வேண்டும் என்பதுடன் சர்வதேச தரத்திலான பேச்சுரிமை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றை அரசாங்கம் மதிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் செயற்பட்டு வருகிறது.
எனினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடத்த மஹிந்த ஆட்சிக் காலத்தில் நிலவிய அடக்குமுறை சூழலை நோக்கி வேகமாக நகர்த்துகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.