மக்கள் விடுதலை முன்னணி

மக்கள் விடுதலை முன்னணி

ஜே.வி.பியினருக்கு ஜப்பான், தென்கொரியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளும் அழைப்பு விடுக்க வேண்டும் – அமைச்சர் பந்துல குணவர்தன

ஜப்பான், தென்கொரியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் மக்கள் விடுதலை முன்னணிக்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்க வேண்டும். மக்கள் விடுதலை முன்னணியுடன் விரிவுபடுத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதற்கு இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என ஊடகத்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வெல்லவாய பகுதியில் இன்று திங்கட்கிழமை (12) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புடன் நாட்டின் பொருளாதாரம் தற்போது ஸ்திரமடைந்துள்ளது. முறையான மறுசீரமைப்புக்களுடன் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுள்ளோம் என்பதை எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால், குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

பொருளாதார மீட்சிக்காக தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள மறுசீரமைப்புக்களை குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மாற்றியமைத்தால் அல்லது இடைநிறுத்தினால் நாடு மீண்டும் வங்குரோத்து நிலையடையும் என்பதை அரசியல் தரப்பினர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நாட்டு மக்களை தவறான வழிநடத்தும் வகையில் போலி அரசியல் வாக்குறுதிகளை வழங்குவதை அரசியல்வாதிகள் அனைவரும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். அரசியல் வாக்குறுதிகளினால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த ஆண்டு இடம்பெறவுள்ள தேசிய தேர்தல்களில் அரசியல் வாக்குறுதிகளை அனைவரும் தவிர்த்துக் கொள்வது அத்தியாவசியமானது. இந்தியா, சீனா உள்ளிட்ட முன்னிலை நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை கைச்சாத்திட ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்திய எதிர்ப்பு கொள்கைகளை கடைப்பிடித்த மக்கள் விடுதலை முன்னணியினர் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டமை வரவேற்கத்தக்கது. மக்கள் விடுதலை முன்னணிக்கு ஜப்பான், தென்கொரியா, சீனா உள்ளிட்ட நாடுகள் உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்க வேண்டும் என்றார்.

மக்கள் விடுதலை முன்னணியினரை இந்தியா அழைத்து பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தததது பாரிய பேசுபொருளானது. இலஙட்கை அரசியலில் சீனச்சார்புக்கு எதிரான நிலைப்பாட்டை ஜே.வி.பி எடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த சந்திப்பு நடைபெற்றிருக்கலாம் என்ற நிலையிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதற்கு பின்னணியில் இருப்பதாக பலரும் குறிப்பிட்டிருந்த நிலையில் ஜே.வி.பியினர் இதனை முழுமையாக மறுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையிலேயே அமைச்சர் பந்துல குணவர்த்தன மேற்குறித்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

“வடக்கு தமிழ் அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிடும் ஆளும் தரப்பு உறுப்பினரது மூளையை பரிசோதனை செய்ய வேண்டும்.” – அனுர குமார திஸாநாயக்க

வடக்கு தமிழ் அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிடும் ஆளும் தரப்பு உறுப்பினரது மூளையை பரிசோதனை செய்ய வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற 2024 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

அவர் மேலும் உரையாற்றியதாவது

 

இலங்கை பல்லின சமூகம். தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் சமூகங்களை ஒன்றிணைத்து தேசிய நல்லிணக்கம் உறுதி செய்யப்பட்டால் தான் தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். இனவாத கருத்துக்களின் வெளிப்பாடுகளினால் தான் 30 வருட கால யுத்தம் தோற்றுவிக்கப்பட்டது.

 

ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்கள் தமது இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கு கட்டவிழ்த்து விட்ட இனவாதங்களினால் தான் இந்த நாடு 30 வருட கால யுத்தத்தை எதிர்கொண்டது.

 

யுத்தம் முடிவடைந்து 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும் இனங்களுக்குகிடையில் தேசிய நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்படவில்லை.

 

வடக்கில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிடும் ஆளும் தரப்பின் உறுப்பினரது மூளையை பரிசோதனை செய்ய வேண்டும்.

 

இவர்கள் ஒருபோதும் தேசிய நல்லிணக்கத்தை எதிர்பார்க்கவில்லை. இனவாதம் தோற்றம் பெறும் வகையில் தான் கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்.

 

இனவாதத்தை பரப்பி அதன் ஊடாக தமது இருப்பை தக்கவைத்துக் கொள்ளவே தொடர்ந்து முயற்சிக்கிறார்கள். வடக்கு மற்றும் தெற்கில் அரசியல் தீர்வுகளுக்கு முன்னர் தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த வேண்டும். எமது அரசியல் செயற்பாடுகள் தேசிய நல்லிணக்கத்தை நிலை நாட்டுவதாக அமையும் என்றார்.

இலங்கையின் 31 பால் பண்ணைகளை இந்தியாவின் அமுல் டைரி நிறுவனத்திற்கு விற்பனை செய்யத் திட்டம் – அனுரகுமார

மில்கோ, ஹைலேண்ட் மற்றும் தேசிய கால்நடை அபிவிருத்திச் சபைக்கு சொந்தமான 31 பால் பண்ணைகளை இந்தியாவின் அமுல் டைரி நிறுவனத்திற்கு விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மில்கோவை விற்பனை செய்ய ஏற்கனவே அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் இந்தியாவின் அமுல் டைரி நிறுவனத்திற்கு ‘ஹைலேண்ட்’ விற்பனைக்கு மற்றொரு அமைச்சரவைப் பத்திரம் இறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.

மக்கள் விடுதலை முன்னணியின் மாவனல்லை தேர்தல் மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

NLDB க்கு சொந்தமான அதிகாம, ரிதியகம, நாரம்மல மற்றும் பொலன்னறுவை உள்ளிட்ட 21 பால் பண்ணைகள் திட்டத்திற்கு அமைய விற்பனை செய்யப்படும்.

இது தொடர்பாக இரண்டு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், பண்ணைகளில் உள்ள நிலம், மரங்கள் மற்றும் தோட்டங்களை மதிப்பிடுவதற்கு ஒரு குழுவும், பண்ணைகளில் உள்ள விலங்குகள் மற்றும் உபகரணங்களை மதிப்பிடுவதற்கு NLDB பணிப்பாளர் நாயகம் தலைமையிலான இரண்டாவது குழுவும் பணிக்கப்பட்டுள்ளது. .

“எங்கள் 31 பால் பண்ணைகளின் நிலை எங்களுக்குத் தெரியும். அவற்றின் நிலைமைகளைப் பற்றி நாங்கள் திருப்தியடைய முடியாது. அங்குள்ள வளங்களில் இருந்து அதிகபட்ச பலன்களைப் பெற வேண்டும். ஆட்சியாளர்களுக்கு அவ்வாறு செய்வதில் ஆர்வம் இல்லை. அவர்கள் சிறந்ததைப் பயன்படுத்த வேண்டும். தொழில்நுட்பம் மற்றும் அவற்றை மேம்படுத்தவும்.ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளால் அவை நஷ்டத்தை சந்திக்கின்றன,” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“சர்வதேச சமூகத்தை கையாளும் அறிவும் திறமையும் ஜே.வி.பி க்கு இல்லை.” – மஹிந்தானந்த அளுத்கமகே

மக்கள் விடுதலை முன்னணி நாட்டிற்குத் தேவையான மாற்று அணி அல்ல என்பதை மக்கள் தற்போது உணர்ந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொடையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டமொன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை சர்வதேச சமூகத்தை கையாளும் அறிவும் திறமையும் மக்கள் விடுதலை முன்னணிக்கு இல்லை எனவும் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

சந்திரிகாவின் அரசாங்கத்தில் அனுரகுமாரவிற்கு ஐந்தாண்டுகளுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது என்றும் ஆனால், அவர்கள் அதனை பாதியிலேயே கைவிட்டனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை அனுரகுமார பேஸ்புக்கிற்கு மட்டுமே ஜனாதிபதி என்றும் ஒரு டீக்கடை கூட நடத்தாத ஜே.வி.பி எப்படி நாட்டை ஆள முடியும் என்றும் மஹிந்தானந்த அளுத்கமகே கேள்வியெழுப்பினார்.

“தோல்வியடைந்த ஆட்சியாளர்களின் ஆயுதம் இனவாதமே.ஆதலால் பிரியாதிருப்போம்.”- யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் !

“பிரிப்பதற்கு இடங்கொடோம்  ஒன்றாய் நாம் பறந்திடுவோம்” எனும் தொனிப்பொருளில் கவனயீர்ப்பு போராட்டமொன்று யாழ். மத்திய பஸ் நிலையம் முன்பாக இன்று சனிக்கிழமை (15) முன்னெடுக்கப்பட்டது.

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) இளைஞர் அமைப்பான சோசலிச இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் துண்டுப் பிரசுர விநியோகமும் கவனயீர்ப்பு போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது, சிங்கள தமிழ் முஸ்லீம் நல்லிணக்கம் நீடுழி வாழ்க, இனவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம், தேசிய ஒற்றுமைக்காக போராடுவோம், இனவாதத்தில் சிக்காமலிருப்போம், மீண்டும் ஒருமுறை வேண்டாம் ஒன்றாய் நாம் பறந்திடுவோம், தேசிய நல்லிணக்கத்தை மீண்டும் பிரிப்பதற்கு இடமளிக்க வேண்டாம், தோல்வியடைந்த ஆட்சியாளர்களின் ஆயுதம் இனவாதம் என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை  தாங்கியவாறு கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“சிறிய குற்றங்களில் ஈடுபடும் சாதாரண குடிமக்கள் மட்டுமே நீதித்துறையால் வலைவீசப்படுகின்றனர்.” – அனுரகுமார திஸாநாயக்க

“நாட்டில் நிலவும் மோசமான அரசியல் கலாசாரத்தினால் பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை.” என  மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊழல் தடுப்பு சட்டமூலம் மீதான ஒத்திவைப்பு விவாதத்தில் பேசிய அவர்,

தற்போதுள்ள சட்டங்களான பொதுச் சொத்துச் சட்டம், பணமோசடி தடுப்புச் சட்டம், இலஞ்சம் அல்லது ஊழல் தடுப்புச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் போன்ற சட்டங்களே பொருளாதார குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை தடுக்க போதுமானவை எனவும் தெரிவித்துள்ளார்.

சிறிய குற்றங்களில் ஈடுபடும் சாதாரண குடிமக்கள் மட்டுமே நீதித்துறையால் வலைவீசப்படுகின்றனர் என்றும், அதேசமயம் கடுமையான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் அரசியல் அதிகாரத்தின் காரணமாக விடுதலையாகி விடுவதாகவும் தெரிவித்தார்.

“தேங்காய் திருடியதற்காக ஒருவர் பிடிபட்டார், பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் இலஞ்சம் வாங்கிய கிராம உத்தியோகத்தர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சட்டத்தில் குறைபாடுகள் இருந்தால் அது எப்படி வரும்? நாட்டில் நிலவும் மோசமான அரசியல் கலாசாரமே தவிர, சட்டத்தில் பிரச்சினை இல்லை. இது பெரும்பான்மையான அரசியல் அதிகாரம், ஒரு சில உயர் அதிகாரிகள், பல பொலிஸ் அதிகாரிகள், பல தொழில் அதிபர்கள் மற்றும் ஊடக அதிபர்களை உள்ளடக்கிய ஒரு தீய வட்டம். இது ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட தீய வட்டம். வலுவான அரசியல் அமைப்பினால் மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும், சட்டங்களால் மட்டும் அல்ல,” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“88 – 89 ஆம் ஆண்டு காலகட்டங்களை போல இன்னமும் தடிகள், வாள்கள், கத்திகளுடன் தான் ஜே.வி.பி.” – நாமல் ராஜபக்ச விசனம் !

மக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட கடந்தகால மனோநிலையிலேயே மக்கள் விடுதலை முன்னணி தற்போதும் இருப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,

மக்கள் விடுதலை முன்னணியில் ஒரளவு மாற்றம் ஏற்பட்டிருக்கும் என நான் எண்ணியிருந்த போதிலும் கடந்த மே மாதம் 9 ஆம் திகதி அவர்கள் செயற்பட்ட விதமானது 88 மற்றும் 89 ஆம் ஆண்டு காலகட்டங்களின் அவர்களின் நடத்தையை மீண்டும் பிரதிபலிக்கின்றது.

மக்கள் விடுதலை முன்னணி, தமது தடிகள், வாள்கள், கத்திகள் மற்றும் தீப்பந்தங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்காக தொழிலாளர்களுடன் இணைந்து கொண்டதாக நான் எண்ணியிருந்தேன்.

நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் ஜே.வி.பி.யும் இணைந்துகொள்வதற்கான கொள்கைத் தீர்மானத்திற்கு வரும் என எண்ணிய போதிலும் அவ்வாறு தெரியவில்லை.

இதே நேரம்  நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக தற்போதைய ஜனாதிபதி குறிப்பிட்ட சில நடைமுறையை நடைமுறைப்படுத்தி வருகிறார். மேலும், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைகளுக்கும் தனது சொந்தக் கொள்கைகளுக்கும் ஒரு மையப் புள்ளியைக் கண்டறிய ஜனாதிபதி முயற்சிக்கிறார்.

ஆகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு சிறந்த ஆதரவை வழங்குவோம். அரசியல் கொள்கை என்று வரும்போது நாம் தனித்தனியே நின்று செயற்படுவோம்.

எனினும் ஜனாதிபதியும் நானும் நாட்டில் உள்ள மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு இரு தரப்பினருக்கும் இடையில் கொள்கைகளை கொண்டு வர முயற்சிக்கிறோம் எனவும் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

“ரணிலின் காரும் ஒரு இறாத்தல் பாணும்.”- அனுரகுமார திஸாநாயக்க சாடல் !

ஜனாதிபதி ரணிலின் வாகனத்திற்கு ஏற்பட்ட சேதம் பத்தொன்பது மில்லியன் என்றால் அந்த வாகனத்தின் பெறுமதி எவ்வளவு என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கு 205 மில்லியன் ரூபா சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அதில் 14 மில்லியன் ரூபா வீட்டிற்கு ஏற்பட்ட சேதம் எனவும் எஞ்சிய 191 மில்லியன் ரூபா வாகனத்திற்கு ஏற்பட்ட சேதம் எனவும் சுட்டிக்காட்டியுள்ள ஜே.வி.பி தலைவர் 191 மில்லியன் ரூபா பெறுமதியான வாகனம் என்றால் வாகனத்தின் பெறுமதி எவ்வளவு என கேள்வி எழுப்பியுள்ளார்.

“இன்று நாட்டு மக்கள் ஒருஇறாத்தல் பாணை முன்னூறு ரூபாய்க்கு வாங்க வேண்டியுள்ளது. அப்படிப்பட்ட நாட்டில் ஜனாதிபதியின் காரின் மதிப்பு எவ்வளவு? இப்படியான ஆட்சியாளர்கள் எப்படி மக்களின் துயர் உணர்வார்கள் என அனுர கேள்வி எழுப்புகின்றார் .

“வேலை செய்யாத அரச ஊழியர்கள் வீட்டுக்குச் செல்லுங்கள் என்று ரணில் கூறுகிறார். ஆனால் ரணிலின் ஊடகப் பிரிவின் எத்தனை இயக்குனர்கள்? டைரக்டர் மீடியா ஆலோசகர், மீடியா டைரக்டர் ஜெனரல், டெபுடி டைரக்டர்கள், மீடியா டைரக்டர்கள், வீடியோ எடிட்டிங் டைரக்டர்கள், எலக்ட்ரோரனிக் மீடியா டைரக்டர்கள், கிரியேட்டிவ் போட்டோகிராபி இயக்குனர்கள் இப்படி எத்தனை பேர் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்? இவர்களுக்கு சம்பளம் ஒரு இலட்சத்து எண்பதாயிரத்திற்கு மேல் . அதுதவிர அவர்களுக்கு வாகனங்களும் வழங்கப்படுகின்ற்றன.

இவர்களின் கடமைகள் குறித்து ரணில் விக்கிரமசிங்க அறிக்கை வெளியிட வேண்டும். ஒரு ஜனாதிபதிக்கு இவ்வளவு தேவையா? என அனுர கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியை தீர்க்க கூடிய தலைவர் யார்..? – வெளியானது மக்கள் கருத்துக்கணிப்பின் முடிவுகள் !

நாடு எதிர்நோக்கும் தற்போதைய நெருக்கடிக்கு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவால் தீர்வு காண முடியும் என அதிகளவிலான மக்கள் நம்புகின்றனர்.

பொருளாதார நெருக்கடியை யாரால் தீர்க்க முடியும்? : வெளியான கருத்துக்கணிப்பு !

மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் இந்தவிடயம் தெரியவந்துள்ளது.

தற்போதைய நெருக்கடிக்கு அனுரவினால் தீர்வு காண முடியும் என கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களில் 48.5 விகிதமானோர் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது 36.6 விகிதமானோர் நம்பிக்கை கொண்டுள்ள அதேவேளை 29.1% பேர் சஜித் பிரேமதாச மீது நம்பிக்கை கொண்டுள்ளனர்.

23.7% டலஸ் அழகப்பெருமவால் நெருக்கடியை தீர்க்க முடியும் என்றும் மேலும் 18.3% பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் முடியும் என்றும் வாக்களித்துள்ளனர்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் தற்போதைய நெருக்கடியை தீர்க்க முடியும் என 11.9% நம்புகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

“மக்கள் அரசாங்கத்தை மாற்ற மூன்று ஆண்டுகள் வேடிக்கை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.” – ரில்வின் சில்வா

மக்களுக்கு அரசாங்கத்தை மாற்றும் அதிகாரம் உள்ளது. அதற்காக மூன்று ஆண்டுகள் வேடிக்கை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே வெகு விரைவில் அரசாங்கத்தை விரட்டியடிப்பார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய அரசியல் செயற்பாடுகள் மற்றும் ஆட்சி மாற்றத்திற்கான நோக்கங்கள் குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் கருத்தை வெளிப்படுத்தும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் நிலையில், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் நிலையில், அத்தியாவசிய பொருட்கள், மருந்துகள் என எதுவுமே இல்லாது போகும் வேளையில், சகல பொருட்களையும் பெற்றுக்கொள்ள மக்கள் வரிசையில் நிற்க வேண்டும் என்ற நிலை உருவாகும் வேளையில் மக்கள் மேலும் மூன்று ஆண்டுகள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டார்கள்.

மக்களுக்கு அரசாங்கத்தை மாற்றும் அதிகாரம் உள்ளது. எனவே வெகு விரைவில் அரசாங்கத்தை விரட்டியடிப்பார்கள்.

ஆனால் இது கலவரமாக அமையாது, ஜனநாயக ரீதியில் மாற்றத்தை உருவாக்க முடியும். குறிப்பிட்ட சிலர் வீதியில் இறங்கினால் அரசாங்கத்தினால் அடக்குமுறையை கையாள முடியும். ஆனால் மக்கள் அலை வீதிக்கு இறங்கினால் அவர்களால் அடக்குமுறையை கையாள முடியாது.

இவ்வாறான நெருக்கடிகளில் மக்கள் பொறுத்துக்கொண்டு இருக்கப்போவதில்லை. எனவே ஜனநாயக ரீதியில் இந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என நாமும் கூறுகின்றோம்.

மக்கள் ஒன்றாக வீதிக்கு இறங்கி ஆட்சி மாற்றத்தை கேட்பது  ஜனநாயக செயன்முறையேயாகும். அதற்கான உரிமை மக்களுக்கு உண்டு. இதனை கிளர்ச்சி என அடையாளப்படுத்த வேண்டியதில்லை.

ஆட்சியை எமக்கு தாருங்கள் என நாம் கேட்கவில்லை, தலைமை ஏற்று சகலரும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுபோவோம் என்பதே எமது அழைப்பாகும்.

சகல தரப்பும் ஒன்றிணைந்தால் மட்டுமே நாட்டை கட்டியெழுப்ப முடியும். இந்த வேலைத்திட்டத்தில் இனம், மொழி பாகுபாடு இன்றி சகலரையும் இணைத்துக்கொண்டால் மட்டுமே மீள முடியும். அதற்கு சகல மக்களும் தயாராக உள்ளனர்.

தலைமைத்துவமும், சரியான வேலைத்திட்டமுமே தேவைப்படுகின்றது. அதனை வழங்க நாம் தயாராக உள்ளோம் என்றார்.