மகிந்தராஜபக்ஷ

மகிந்தராஜபக்ஷ

“அரசியல் தொடர்பான தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் நாட்டு மக்களுக்கு உண்டு.” – மகிந்தராஜபக்ச

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போட வேண்டிய தேவை கிடையாது. உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம்  என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

சபாநாயகர் தலைமையில் இன்று (21) காலை பாராளுமன்ற அமர்வு கூடிய போது எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் சபை பீடத்திற்கு வருகை தந்து உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சபாநாயகர் சபை நடவடிக்கைகளை நாளை காலை 09.30 மணிவரை ஒத்திவைத்தார்.

இதன் பின்னர் பாராளுமன்ற பிரதான கட்டத்தொகுதிக்கு வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம்  உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில்   ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒன்றும் பிற்போடப்பட்டவில்லை.அத்துடன் தேர்தலை பிற்போட வேண்டிய  தேவை ஏதும் தற்போது கிடையாது. உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம். அத்துடன் கட்சி என்ற ரீதியில் தேர்தலுக்கு தயாராக உள்ளோம்.

நெருக்கடியான காலக்கட்டத்திலும் தேர்தல்கள் பல நடத்தப்பட்டுள்ளன. ஆகவே தேர்தலுக்கு அச்சமடைய தேவையில்லை. அரசியல் தொடர்பான தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் நாட்டு மக்களுக்கு உண்டு என்ற நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் கிடையாது என்றார்.

“ராஜபக்சக்கள் என்னை மிகவும் பயங்கரமான முறைகள் – மிகவும் இழிவான விதத்தில் துன்புறுத்தினார்கள்.” – முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பகீர் !

“ராஜபக்சக்ளை அரகலய விரட்டியடித்தது மெய்சிலிர்க்க வைத்துள்ளது.” என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியுள்ளார்.

தி ஹிந்துவிற்கு அவர் அளித்த பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த பேட்டியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 

இலங்கையின் நிதிப் பேரழிவு இரண்டு ராஜபக்ச ஆட்சிகளின் ஊழலின் விளைவு. அவர்களை அரகலய விரட்டியடித்தது மெய்சிலிர்க்க வைத்துள்ளது. ராஜபக்சக்களை நம்பியிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் எவ்வாறு செயற்படுகிறார் என்பதை அவதானித்துக் கொண்டிருக்கிறோம்.

தற்போது நாம் திவாலாகி விட்டோம் என்பது ராஜபக்சவின் குடும்பம் மற்றும் அவர்களது கூட்டாளிகளின் ஊழலால் மட்டுமே. அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், அரச ஊழியர்களுக்கு மேலதிகமாக பூர்வீக அதிகாரங்களில் உள்ளவர்கள் என அனைவரையும் அவர்கள் மோசடி செய்பவர்களாக மாற்றினர். ஊழல் உச்சத்தில் இருந்து, எல்லா இடங்களிலும் பரவியது.

எங்கள் அமைப்புமுறை வீழ்ச்சியடைந்துள்ள போது வேண்டுமென்றே அழிக்கப்பட்டுள்ள போது நீங்கள் எப்படி நிலைமையை மாற்றுவீர்கள்? தேர்தலுக்குச் சென்றாலும், 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே மாதிரியான மோசடியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதனை மாற்றுவதற்கான ஒரே வழி ஒரு சமூக-அரசியல் எழுச்சி, ஒரு புரட்சி.

அரகலய உண்மையில் சிலிர்ப்பானது மற்றும் ஆக்கப்பூர்வமானது என்னவெனில், அவர்களிடம் ஒரு இலக்கு மற்றும் முன்னோக்கு இருந்தது. அவர்கள் வெறுமனே ராஜபக்சக்களை விரட்டியடிக்க வேண்டும் என்று கூறவில்லை. நேர்மையான அதிகாரிகள், தெளிவான நிர்வாகத்தை நாங்கள் விரும்புகிறோம் என்று அவர்கள் கூறினர். அவர்கள் ஒரு 10- அம்ச திட்டத்தை வெளியிட்டனர், அந்த திட்டத்தின் இயல்பான போக்கு அற்புதமாக இருந்தது.

மேலும் சர்வதேச சமூகத்தை அடிப்படையாக கொண்ட கடினமான முடிவுகளை இலங்கை எடுக்கவேண்டிய நிலை காணப்படலாம். வெளிஉதவி குறித்த பேச்சுவார்த்தைகளின் போது இந்த நிலை காணப்படலாம். ராஜபக்ச அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் மகிழ்ச்சியடையாததால் இந்தியா விலகியிருந்து காத்திருந்திருக்க கூடிய நிலை காணப்பட்ட போதிலும் இந்தியா எங்களுற்கு உதவ முன்வந்தது உதவிகளை வழங்கியது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.

ராஜபக்சக்கள் மீண்டும் வருவதற்கான சாத்தியக்கூறுகள் நிச்சயமாக உள்ளன. ராஜபக்சக்கள் என்னை மிகவும் பயங்கரமான முறைகள் – மிகவும் இழிவான விதத்தில் துன்புறுத்தினார்கள் – எப்படியிருந்தாலும் இந்த விடயங்கள் எனது தனிப்பட்ட அரசியல் முன்னுரிமைகளை பாதிப்பதில்லை,அவர்கள் நாட்டிற்கு செய்த விடயங்களிற்காக நான் அவர்களை வெறுக்கின்றேன்.

இதன் காரணமாக அரகலயவால் அவர்களை அமைதியான முறையில் துரத்த முடிந்தமை குறித்து நான் நிம்மதியடைந்துள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மாலைதீவில் அடைக்கலம் கோரிய மகிந்த..?

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, பொதுமக்களின் தீவிர போராட்டம் காரணமாக கடந்த 9-ந்திகதி பதவி விலகினார். அத்துடன் நாடு முழுவதும் வன்முறை மூண்டதால் அவரது பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதனால் ராஜபக்ச, தனக்கும், தனது குடுமபத்தினருக்கும் மாலைத்தீவில் அடைக்கலம் கேட்டதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன.

ஆனால் மாலைத்தீவிடம் மகிந்த ராஜபக்சே அடைக்கலம் கேட்கவில்லை என மாலைத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் மறுத்து உள்ளார். கொழும்புவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது போன்ற தவறான செய்திகள் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை சீர்குலைக்க சதி நடப்பதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘இது முற்றிலும் தவறான செய்தி. இந்த புனைக்கதைகளை வெளியிடும் சக்திகள் மாலைத்தீவுகளில் இருப்பது கவலையாக உள்ளது’ என்று கூறினார்.

இலங்கை பயணத்தின்போது மகிந்த ராஜபக்சேவை சந்திக்கவில்லை என்று கூறிய நஷீத், இந்த பொருளாதார நெருக்கடிக்கு மாலைத்தீவால் எவ்வாறு உதவ முடியும்? என்பது குறித்து ஆலோசிக்கவே இலங்கை வந்ததாகவும் தெரிவித்தார்.

“அரசாங்கத்தை விமர்சிப்பது மேல் நோக்கி பார்த்து எச்சில் துப்புவதை போன்றது.” – மகிந்த ராஜபக்ஷ

“அரசை விமர்சிப்போர் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதற்கு கதவுகள் திறந்தே இருக்கின்றது.” என பிரதமர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

அரசாங்கத்திற்குள் இருந்துக்கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பது மிகப் பெரிய அரசியல் தவறு. இதனால், அரசாங்கத்தில் இருந்து வெளியேறி அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு கதவுகள் திறந்தே இருக்கின்றது.

அரசாங்கத்தில் இருந்து கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பது மேல் நோக்கி பார்த்து எச்சில் துப்புவதை போன்றது. அதேபோல் ஊடகங்கள் மூலம் நடத்தப்படும் அரசியலுக்கு ஆயுள் குறைவு. நான் 50 வருடங்களாக அரசியலில் அனுபவங்களை பெற்றுள்ளேன். எனினும் எந்த சந்தர்ப்பத்திலும் அரசியல் கொள்கைகளில் இருந்து விலகிச் சென்றதில்லை எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

“இலங்கையின் கடன்களுக்கு மகிந்தராஜபக்ஷவே காரணம்.” – ஹர்ச டி சில்வா காட்டம் !

“இலங்கை இன்று செலுத்திக்கொண்டிருக்கும் ஒவ்வொரு கடனுக்கும் காரணம் மகிந்தராஜபக்ஸவே.” என  ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

தற்போதைய அரசாங்கம் வருடாந்தம் செலுத்திக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பில்லியன் டொலர் கடனும் கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்த சமயத்தில் பெற்றுக்கொண்டவை. சுற்றுலாத்துறை மூலம் இலங்கை  ஒருபோதும் 5 பில்லியன் டொலர்களை அந்நிய செலாவணியாக பெற்றுக்கொண்டதில்லை.

சுற்றுலாத்துறை மூலம் கிடைக்கப் பெறும் 5 பில்லியன் டொலர் தற்போது முற்றாக இல்லாமல் போயுள்ளதாக அரச தலைவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் சுற்றுலாத்துறையின் ஊடாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் 5 பில்லியன் டொலர் கிடைக்கப் பெற்றதில்லை. கடந்த 2018 ஆம் ஆண்டில் மாத்திரமே சுற்றுலாத்துறை ஊடாக 4.5 பில்லியன் என்ற அதிகபட்ச அந்நிய செலாவணி கிடைக்கப் பெற்றது. மாறாக ஏனைய வருடங்களில் சராசரியாக 2.4 பில்லியன் மாத்திரமே சுற்றுலாத்துறை ஊடாகக் கிடைக்கப் பெறும். இலங்கையின்  அந்நிய செலாவணி கிடைக்கப் பெறும் அதேவேளை இலங்கையர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது 1.6 பில்லியன் டொலர் செலவிடப்படுகிறது.

தற்போது சுற்றுலாத்துறை மூலமான அந்நிய செலாவணி வீழ்ச்சியடைந்துள்ளமைக்கான காரணம் கொவிட் தொற்று அல்ல. அரசாங்கத்தின் முறையற்ற நிர்வாகமேயாகும். கொவிட் தொற்றின் பின்னர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக இலங்கையில் 0.7 வீதமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏனைய நாடுகளில் 4.5 வீதமளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அது மாத்திரமின்றி தடுப்பூசி கொள்வனவு உள்ளிட்ட கொவிட் செலவுகளுக்காக உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்டவற்றிடமிருந்து நிதி உதவிகள் கிடைக்கப் பெற்றன.

கடந்த அரசாங்கம் பெற்றுக்கொண்ட கடன்களையே தற்போது தாம் செலுத்திக் கொண்டிருப்பதாக அரச தலைவர் கூறுவது உண்மைக்கு புறம்பானது. காரணம் கடந்த ஆண்டு செலுத்திய ஒரு பில்லியன் டொலர் 2010 இல் மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் பெற்ற கடனாகும். அதேபோன்று இவ்வாண்டு செலுத்திய ஒரு பில்லியன் டொலர் 2011 இல் மஹிந்த ராஜபக்ச பெற்றுக் கொண்டதாகும். இவ்வாண்டு ஜூலை மாதமளவில் பெற்றுக் கொண்ட ஒரு பில்லியனும் 2012 இல் தனது சகோதரன் பெற்றுக் கொண்ட கடன் என்பதை ஜனாதிபதி நினைவில் கொள்ள வேண்டும். நாடு தற்போது பாரிய அபாயத்தில் உள்ளது என்பதை அவர் உணர வேண்டும். தாம் ஒருபோதும் சர்வதேச நாணய நிதியத்தை நாடப் போவதில்லை என்றும், அஜித் நிவாட் கப்ரால் முஸ்லிம் நாடுகளிடம் கடன் பெறுவார் என்றும் அரச தலைவர் செயலர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இங்கு நீதி அமைச்சர் அலி சப்ரி பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார். அவ்வாறிருக்கையில் எவ்வாறு முஸ்லிம் நாடுகளிடமிருந்து உதவியை எதிர்பார்க்க முடியும் எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.